இன்னும் சில நாட்களே உள்ளன என சக சிறைவாசிகள் பேசிக்கொள்ளும் குறிப்புகள் அந்த நால்வரின் காதுகளையும், கண்களையும் எட்டுகின்றன. நல்லவேளை நாம் இஸ்லாமியர்களாகப் பிறக்கவில்லை என அந்நால்வரின் உள்ளங்களும் நினைத்திருக்கக்கூடும். கருணைமிகு ஜனாதிபதி அவர்களால் தங்களது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட செய்திகளும், தூக்குமேடை தயாராகி வருவது பற்றிய செய்திகளும் நேரலையாகப் பரவ நல்ல வேளையாக வீரப்பன் பின்லேடன் அல்ல. இந்த நால்வரின் உயிர்களும் காப்பாற்றப்படவேண்டும். இந்த அதிகாரத்திடம் மன்றாடிக் கேட்கிறேன். மண்டியிட்டு வேண்டுகிறேன்.

ஆனாலும் சிறிது நம்பிக்கையற்றவனாகவே நான் இருக்கிறேன். காரணம், காஷ்மீர் முதல்வர் சொன்னாரல்லவா: "அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட சம்பவம் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்பதை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும்" என்று. எங்களுக்கு அப்சலும் ஒன்று வீரப்பன் கூட்டாளிகளும் ஒன்று என்பதை அதிகாரம் மெய்ப்பிக்க தருணம் பார்த்திருக்கிறதோ என அஞ்சுகிறேன். நான்கு பேரும் அடுத்தடுத்தா அல்லது புதிதாக பெரிய விசாலமான கொட்டடி அமைக்கப்பட வேண்டுமா என்பது சிறை அதிகாரிகளின் கவலையாக இருக்கக்கூடும்.

உயிர்கள் மலினங்களாகப் போய்விட்ட ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறோம். ஒரு இளம்பெண்ணை பாலியல் அட்டகாசம் செய்த ஐந்து வல்லூறுகள் அவளைக் குதறி இறுதியில் கொன்றும் போட்டுவிட்ட அவலத்தைப் பார்த்தோம். காதலுக்கு மறுத்த இளம்பெண் அமில வீச்சால் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுங்கிப் போய்விட்டாள்! சாலைகளிலும், பேருந்துப் பயணங்களிலும் கொத்துக் கொத்தாக மரணங்கள். காவல்துறையின் வீரத்தைப் பறைசாற்றும் மோதல் கொலைகள். அரசியல் தொழில் கொலைகள். கொலைகளுக்கான தளங்கள் விரிந்துவிட்டன; காரணங்களும்கூட.

அறத்திற்கான அளவுகோல்களும் கூட மாறத் தொடங்கிவிட்டன. வெளியே சொல்லப்படும் கருத்துகள் வன்முறையை உருவாக்குகின்றன. நியாயங்கள் மறுவரையறை செய்யப்படுகின்றன. உப்புச் சத்தியாகிரகத்தில் போலீசாரிடம் அடிவாங்கியவர்தான் நாட்டின் முதல் பிரதமர். இவ்வுண்மையை மறந்துவிடவே அதிகாரம் விரும்புகிறது. நொடிக்கு நொடி மாறும் அதிகாரங்கள் அறத்தையும், தர்மத்தையும் உருத்தெரியாமல் போட்டுச் சிதைக்க முயற்சிக்கின்றன. அந்த அழிவின் விளிம்பிலிருந்தும் அறம் துளிர்க்கிறது. உலகத்தை ஒளி பெறச் செய்கிறது. அறமும், நீதியும், தர்மமும் அதிகார வர்க்கத்தின் வரையறைபடி வாழ்வதல்ல. அதன் சுவாசங்கள் சாசுவதமானவை; அவைகளின் கால்தூசிக்குப் பெறாதவை இந்த அரசுகளும், அதிகாரங்களும். உண்மையான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப திராணியற்றவை இந்த அதிகாரங்கள்.

வீரப்பனின் மனைவி என்னும் ஒரே காரணத்திற்காக முத்துலெட்சுமியை இன்னமும் தூக்கில் போடவில்லை. சந்தோசப்படலாம். அவரது மகள்களை இன்னமும் விட்டு வைத்திருக்கிறார்கள். மகிழ்ச்சியடையலாம். அவரிடம் தூது போன திரு.நெடுமாறனையும், திரு.நக்கீரன் கோபாலையும் தூக்கில் ஏற்றவில்லை. வீரப்பனிடம் பேரம் பேசிய அரசுகளை, அவன் வாழ்ந்த காடுகளை, அவனது துப்பாக்கிகளை, அவன் ஒவ்வொரு தடவையும் அனுப்பி வைத்த ஒலிநாடாக்களை தூக்கில் ஏற்றவில்லை. நிம்மதி பெருமூச்சு விடலாம்.

களைகளைக் களைந்த பின்பும் கூட்டு மனசாட்சியையும், பொதுமனசாட்சியையும் திருப்திப்படுத்த அதிகாரம் துடியாய் துடிக்கிறது. இதிலிருந்து அதிகாரம் பெறப்போகும் பலன் என்ன என்பதுதான் தெரியவில்லை. ஒருவேளை தனது அதிகாரத்தை மேலும் அது வலுப்படுத்திக் கொள்ளலாம். தனது கைகளில் இருக்கும் சாட்டையை இரும்பு சங்கிலியாக மாற்றிக் கொள்ளலாம். மனசாட்சியின் அதிகாரமும் வலுப்படலாம். ஆனால் இதெல்லம் யாருக்காக? நாடு என்ற ஒன்று யாருக்காக? அதிகாரத்தின் இருப்பு யாரைப் பாதுகாக்க?

- செ.சண்முகசுந்தரம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It