ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 22 வது ஆண்டுக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் உலகத்தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீர்மானத்தின் வாசகங்களில் பெரும் அதிசயங்கள் ஏதும் ஏற்படவில்லை. நாம் எதிர்பார்த்த அதிசயம் என்ன? ராஜபக்சவின் கூட்டத்தை போர்க்குற்ற விசாரணை செய்வதற்காக சர்வதேச விசாரணை நடைமுறைகள் தொடங்கப்படவேண்டும். இது நடந்திருந்தால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்கவேண்டும். நடக்காது என்பது நமக்கு நன்கு தெரியும். இந்த உப்புச்சப்பில்லாத தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்றுதான் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தளுதளுத்தார்கள், ஆவேசப்பட்டார்கள், கொதித்தார்கள்.

உண்மையில் அவர்கள் முதலில் கட்சிக்காரர்கள், பிறகு கூட்டணிக்காரர்கள், பிறகு தமிழர்கள், கடைசியில்தான் மனிதாபிமானிகள். அவர்கள் அனைவரும் மனிதாபிமானிகளா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் அனைவரும் முதலில் மனிதாபிமானிகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் தமிழக உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஜந்தர்மந்தரில் காலவரையற்ற உண்ணாநோன்பினை ஆரம்பித்திருப்பார்கள். ஈழத்தமிழர்களின் உயிரையும், மானத்தையும் காப்பாற்றவேண்டிய பெரும் பொறுப்பு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தான் சாரும். ஆனால் அவர்கள்தான் மனிதாபிமானிகள் இல்லையே. அவர்கள் வெறும் கட்சிகளின் உறுப்பினர்கள்தான். அதனால்தான் லயோலா கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கவேண்டியதாயிற்று. அப்போராட்டத்தில் ஒரு மாணவர் மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு ஒரு உண்மையை பேசினார். 'எங்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சியின் வழிகாட்டுதலும் தேவையில்லை. எங்கள் வழியை நாங்கள் பார்த்துக்கொள்வோம்'. அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் அரசால் முறியடிக்கப்பட்டாலும் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரத்தை எட்டியிருக்கின்றன.

 இந்நேரம் வாக்கெடுப்பு முடிந்திருக்கும். தீர்மானமும் வெற்றி பெற்றிருக்கலாம். ஐ. நா. வின் மனித உரிமைப்பேரவையின் ஆரவாரங்களும் அடங்கியிருக்கலாம். ஈழத்தமிழர்கள் என்ற பகடைக்காய்கள் மட்டும் அவ்வரங்கின் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும், ஈழத்தமிழர்கள் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் இருப்பதைப் போல. சென்ற ஆண்டும் சரி, இவ்வாண்டும் சரி மனித உரிமைப் பேரவைக்கூட்டங்கள் உலகத் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் நம்பிக்கைக் கீற்றுகளை உருவாக்கின. உருவாக்குகின்றன. ஆனால் நீதி எப்போது வழங்கப்படும், அறம் என்று விழித்தெழும்? இப்போதைக்கு பதில் சொல்லத்தெரியவில்லை. யாருக்கும் தெரியாது என்றே நினைக்கிறேன். ஆனால் மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்கள் என்னும் பெயரில் அரங்கேறும் கேலிக்கூத்துகளை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். இராக்கையும், ஆப்கானிஸ்தானத்தையும் நிர்மூலமாக்கிய அமெரிக்கா ஈழத்தமிழர்களின் மீது அளவற்ற கருணை கொண்டு இலங்கைக்கு எதிராக நவயுக ராமனாக மோடியே பொறாமை கொள்ளும் அளவுக்கு வலம் வருகிறது.

2009 மே, முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போர் நடந்துகொண்டிருந்தபோது இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்பியவர்கள், பூகோள அரசியல் பேசியவர்கள், இந்தியா என்ன நினைக்குமோ என்று தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்தவர்கள் இதே அமெரிக்கர்கள். இன்றைக்கு ரட்சகர்கள். அது போகட்டும். அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று ஏராளமான கூச்சல்கள் நாடாளுமன்றம் தொடங்கி தெருக்கோடி வரை. இந்தியாவும் அத்தீர்மானத்தை இந்நேரம் ஆதரித்திருக்கும். முள்ளிவாய்க்கால் இறுதி இன அழிப்புப்போரில் இலங்கைக்கு ஏராளமான ஆயுத உதவிகளையும், பொருளுதவிகளையும் செய்தது இந்தியா. இந்தியாவின் உதவியின்றி தன்னால் இறுதிப் போரில் வெற்றியடைந்திருக்கமுடியாது என்று ராஜப‌க்சவே ஒரு கட்டத்தில் ஒப்புக்கொண்டார். இந்திய அரசுக்கு அப்போதிருந்த ஒரே எண்ணமெல்லாம் பிரபாகரன் கூண்டோடு அழிக்கப்படவேண்டும் என்பதுதான். எத்தனை தமிழ் உயிர்கள் போனாலும் பரவாயில்லை என்ற திடச்சித்தம் அப்போது இந்தியாவுக்கு இருந்தது. 

ஈழத்தமிழர்களின் உயிர், உடைமை, நிலம், கற்பு, கலாச்சாரம் எல்லாம் பறிபோய்க்கொண்டிருக்கிறது. அங்கு தமிழ் இனம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது. போருக்குப் பின்னர் பல லட்சக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களில் சிக்கி மிருகத்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததைக் கண்ணுற்றும்கூட நாடாளுமன்றக் குழுவை அனுப்புகிறேன், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அனுப்புகிறேன் என்று கண்கட்டு வித்தை காண்பித்தது இந்தியா. அத்தகைய இந்தியா இத்தீர்மானத்தை ஆதரித்து இந்நேரம் வாக்களித்திருக்கும். தன் பாவத்தைக் கொஞ்சமாவது அது கழுவும் என்ற மனநிலை அதற்குக் கொஞ்சம் கூட கிடையாது. முன்னாள் முதல்வரை மூலைச்சலவை செய்து தங்கள் காரியத்தை முடித்தோமே, அவர் இன்னும் ஒரு நாள் உண்ணாவிரதத்தை நீட்டித்திருந்தால்கூட‌ நம்முடைய குறிக்கோள் நிறைவேறியிருக்காதே. அந்த முன்னாள் முதல்வர் இப்போது புலம்புகிறாரே, போனால் போகட்டும் ஆதரித்து வாக்களிப்போம் என்ற மனநிலைதான் ஆளும் காங்கிரஸின் மனநிலை.

 சர்வதேசியம் பேசும் கம்யூனிச அரசுகளான சீனாவும், கியூபாவும், வெனிசுவேலாவும் கூட தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருப்பார்கள். ஏனென்றால் ராஜபக்ச நிர்வாணமாய்த் திரிவது பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. அமெரிக்காவை நிர்வாணமாக்கிடவேண்டும் என்பதுதான் இவர்களது துடிப்பெல்லாம். மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் தீர்க்கப்படாத தேசிய இனப்பிரச்னைகள் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை. இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையும், இலங்கையின் ஈழத்தமிழர் பிரச்னையும், திபெத்தில் சீனாவின் ஆதிக்கமும் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்னைகள்தான். இப்பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச கம்யூனிசத் தலைவர்கள் மாவோவையும், லெனினையும், ஸ்டாலினையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தீர்மானம் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேறினால் ராஜபக்சேவுக்கு என்ன வந்துவிடப்போகிறது? ராஜபக்சவுக்குத் தெளிவாய்த் தெரியும் அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் எல்லோரும் இலங்கையில் ஏதாவது கான்ட்ராக்ட் வேலைகள் கிடைத்தால் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டும், வாலை ஆட்டிக்கொண்டும் ஓடி வருபவர்கள் என்று. உலகச் சந்தையில் இந்நால்வரும் விலைபோய்விடுவார்கள் என்பதும் ராஜபக்சவுக்குத் தெரியும். ராஜபக்சவுக்கும், அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் வரும் கருத்து மோதல்கள் எல்லாம் டாஸ்மாக்கில் நண்பர்களுக்குள் வரும் அடிதடி சண்டைகள் மாதிரிதான். ஐ. நா. மனித உரிமைப் பேரவை என்னும் கடையைவிட்டு வெளியே வந்தபின்பு மீண்டும் நண்பர்கள்தான்.

 கடந்த முறை மார்ச் 22, 2012 அன்று மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் என்ன சொன்னது? . நீதியை நிலைநாட்டுவதற்கும், பொறுப்பேற்றுக் கொள்வதற்குமான சட்டப்பூர்வ கடமைகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். க‌ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் செயல்வடிவம் பெற்றிட முழுமையான செயல்திட்டம் ஒன்றினைத் தந்திடவேண்டும். சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதற்குப் பிந்தைய நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இத்தீர்மானத்தின் படி இலங்கை கடந்த ஒரு வருடகாலமாக ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதா? யாராவது ஒரு ராணுவ வீரன் போர்க்குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருக்கிறானா? அல்லது தமிழ் கூலிப்படைகளைச் சேர்ந்த யாராவது ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்களா? இலங்கையில் காணாமல் போதல் என்பது மிகநீண்டகாலப் பிரச்னைகளில் ஒன்று. காணாமல் போதல் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது இறுதி அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

 “பரிந்துரை 9. 46 : கடத்தல்கள், பலவந்தமாக அல்லது தன்னிச்சையாக காணாமல் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படவேண்டும், இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்"

"பரிந்துரை 9. 51: குற்றம் சாட்டப்பட்ட காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் தேவையேற்படும்போது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் தலைமை வழக்கறிஞருக்குத் தேவையான சான்றுகளை வழங்குவதற்கும் சிறப்பு விசாரணை ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும்"

 ஆனால் எல். எல். ஆர். சி. யின் பரிந்துரைகள் எவ்வளவு தூரம் செயல்படுத்தப்பட்டுள்ளன என்ற ஆய்வை இலங்கையைச் சேர்ந்த சமூக சிற்பிகள்(The Social Architects) என்னும் அமைப்பு மேற்கொண்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்கள‌ப்பு, அம்பாறை மற்றும் நுவரெலியா போன்ற ஒன்பது மாவட்டங்களில் உள்ள 244 கிராமங்களைச் சேர்ந்த 2000 வரையிலான குடும்பங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 25 சதவீதமான குடும்பங்களில் ஒவ்வொருவர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமது குடும்பங்களுக்கான பிரதான உழைப்பாளிகள்.

 பரிந்துரை 9. 58: தமது அன்புக்குரியவர்கள் தொடர்பாக எவ்வித தகவலும் அறியாது வடுக்களைச் சுமந்து வாழும் குடும்பங்களின் மனங்கள் ஆற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இவ்வாறு காணாமல் போன குடும்பத்தலைவர்களின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகள் வழங்கப்படவேண்டும். அவசியமானவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகள் வழங்கப்படவேண்டும்"

 இப்பரிந்துரையையும் கூட இலங்கை அரசு பாதிக்கப்பட்ட எந்தவொரு கிராமத்திலும் நிறைவேற்றவில்லை என்பது சமூக சிற்பிகள் அமைப்பின் ஆய்வு முடிவு. இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 90 சதவீதமானவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தவேண்டிய தேவைகள் இருந்தபோதிலும்கூட இவர்கள் இன்னமும் இதைப் பெறவில்லை.

 மொழி உரிமை தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பின்வரும் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன:

 " பரிந்துரை 9. 41: மொழி தொடர்பான கோட்பாடுகளை உத்தியோகப்பூர்வமாக உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்தும்போது தமிழ்பேசும் மக்களும் பிராந்தியங்களும் போதிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவேண்டும். மொழிக்கோட்பாடு முழுமையாக அமுலாக்கப்படும்போது அடிமட்ட சமூகத்தைச் சென்றடையக்கூடியவாறு செயல்திட்டம் வரையப்படவேண்டும்"

 "பரிந்துரை 9. 47: அரசாங்க அலுவலகங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் தமிழ் பேசும் அதிகாரிகள் இருப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். இது கட்டாயமாகச் செய்யப்படவேண்டும். இலங்கையின் காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் இரு மொழிகளையும் பேசவல்ல அதிகாரிகள் கடமையில் இருக்கவேண்டும். காவல்நிலையங்களில் மக்கள் முறையிடச் செல்லும்போது இவர்களின் முறையிடல்கள் அவர்கள் விரும்பும் மொழியில் எடுக்கப்படுவதற்கான உரிமை வழங்கப்படவேண்டும்"

 இவ்வாறான மொழிசார் உரிமைக்கான நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை என்பதை சமூக சிற்பிகள் அமைப்பின் ஆய்வு அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

 இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ராணுவம் சமமாக நடத்தவில்லை. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மலைப்பிரதேசங்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் 53 சதவீதமானோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் வாழிடங்கள் மற்றும் கட்டிடங்கள் ராணுவத்தால் இன்னமும் ஆக்கிரமிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் வாழிடங்களுக்கு மிக அருகிலேயே ராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் சமூக சிற்பிகள் அமைப்பு தனது ஆய்வு முடிவில் தெரிவிக்கிறது.

"பரிந்துரை 9. 223 : கிராம மக்களின் பங்களிப்புடன் அவர்களின் ஆலோசனையையும் பெற்று வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்"

"பரிந்துரை 9. 227: வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்வில் இது செல்வாக்கு செலுத்தப்படவேண்டியது மிக முக்கியமானதாகும். இங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் திரும்பப்பெறப்படவேண்டும்".

 மேற்சொன்ன பரிந்துரைகளையும் இன்னும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இனியும் அது நிறைவேற்றப்போவதில்லை. ஏனென்றால் எல். எல். ஆர். சி. என்பதே தன்னுடை போர்க்குற்றச் செயல்பாடுகளிலிருந்து தன்னையும், தனது ராணுவத்தையும் உலக நாடுகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ராஜபக்ச மேற்கொண்ட ஒரு ஏமாற்று உத்தி மட்டுமே. சென்ற மனித உரிமைப் பேரவைக் கூட்டத்திற்கும், இவ்வாண்டுக் கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில்தான் ராஜபக்ச இந்தியா வலியுறுத்தும் 10வது அரசியல் சாசனத்திருத்தத்தை நிராகரித்திருக்கிறார். தமிழர்களின் அரசியல் உரிமைகளை ஏற்க மறுத்திருக்கிறார்.

 ராஜபக்சவை ஐ. நா. அகற்றப்போகிறது, விசாரணை செய்யப் போகிறது என்பதெல்லாம் வெறும் மாய்மாலம். லட்சக்கணக்கான மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டுள்ளார்கள் என்ற ஒன்றே போதும் ஐ. நா ஈழப் பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு. அதற்குத் தேவை தார்மீக பலம் மட்டுமே. ஆனால் இன்று ஐ. நா. அறத்தை இழந்து இலங்கையின் கண்துடைப்பு எல். எல். ஆர். சி. யையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவோ, இந்தியாவோ எதுவும் செய்துவிடப்போவதில்லை. ஒருவேளை தெற்கிலங்கை சிங்களமக்கள் கொதித்தெழுந்து ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றினால் மட்டுமே உண்டு. ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால் விசாரணை நடத்த நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆனால் பெரும்பாலான சிங்கள மக்கள் ‘ராஜபக்ச போதை’யில் ஆழ்ந்திருக்கிறார்கள். அது மதுவின் போதையைவிட கொடியது என்பது ஒரு நாள் அம்மக்களுக்குத் தெரிய வரும்போது ராஜபக்ச காணாமல் போகக்கூடும். ஆனால் அதுவெல்லாம் சமீபத்தில் நடக்காத வேலை.

ஒரு சம்பவத்தை நான் குறிப்பிடவேண்டும். 2012 இறுதியில் T-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை தோற்றுபோனபிறகு கோத்தபய ராஜபக்சவிடம் அத்தோல்விக்கான காரணம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது கோத்தபய சொன்னார்:"நமது பையன்களுக்கு தலைமைத்துவப்பயிற்சி (Leadership Training)இல்லாமல் போய்விட்டது. அதுதான் காரணம்". பல்கலைக்கழக மாணவர்களுக்கான முதலாவது தலைமைத்துவப் பயிற்சித்திட்டத்தை கொழும்பில் துவக்கி வைத்துப் பேசிய அதிபர் ராஜபக்ச "உடல், மன, திட சித்தத்தோடு நேர்மறை எண்ணத்துடன் கூடிய நாட்டுப்பற்றுமிக்க குடிமக்களை உருவாக்குவதே நமது லட்சியம்"என்று கர்ஜித்தார். குஜராத் படுகொலைகளுக்குப் பின்னர் சமீபத்தில் பேசிய மோடி நாட்டுப்பற்றுதான் மிகமிக அவசியம் என்று ஆர்ப்பரித்தார். நாட்டுப்பற்று என்னும் போர்வையில் படுகொலைகளை கட்டவிழ்த்துவிடும் தலைவர்கள்தான் 21 ம் நூற்றாண்டின் ஆற்றல் மிக்க தலைவர்கள் போலும்.

 தென்பகுதி சிங்கள மக்களை எப்படி நடத்தவேண்டும் என்பது ராஜபக்சேக்களுக்குத் தெரியும். எதிர்க்கருத்துகளை உருவாக்கும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களை, மாணவர்களை, முதல்வர்களை தலைமைத்துவப் பயிற்சிகள் எடுக்கச் செய்து தங்கள் வழிக்குக் கொண்டுவர ராஜபக்சேக்களுக்கு தெரியாதா என்ன? இலங்கை ராணுவத்தினரால் நடத்தப்படும் இத்தகைய "தலைமைத்துவப்பயிற்சிகள்" செய்யும் மூளைச்சலவை வெகு பிரமாதம். இப்போது இலங்கை ராணுவமயப்பட்டுக்கொண்டிருக்கிறது. ராணுவமோ ராஜபக்சமயமாகிக் கொண்டிருக்கிறது. இலங்கை ராணுவத்தை சர்வதேச மனித உரிமை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் பெரும் பொறுப்பை ராஜபக்சேக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை ஜனநாயகத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? ராணுவம் அங்கு எந்த நிலைமையிலும் ஆட்சியைக் கைப்பற்றியது இல்லை. அவ்வாறு கைப்பற்ற நினைத்த ஒரே ஒரு ராணுவ தளபதியின் நிலையையும் நாம் அறிவோம். ஆட்சி அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு மனப்பூர்வ அடிமையாக அது விளங்கும். ஆனால் இன்று அதன் நிலை வேறாக உள்ளது. இலங்கை நாடே இப்போது ராணுவத்தின் வழியாகத்தான் சுவாசம் செய்துகொண்டிருக்கிறது. விளையாட்டில், வளர்ச்சித்திட்டங்களில், கல்வியில், பொருளாதாரத்தில் இப்படி எல்லா துறைகளிலும் ராணுவம் மூக்கை நுழைக்கும்போது சிவில் சமூகம் தனது சுதந்திரத்தை இழக்கிறது. அதன் ஜனநாயக உட்கூறு கொஞ்சம் கொஞ்சமாக அழுகிக் கொண்டிருக்கிறது.

 முள்ளிவாய்க்கால் இறுதி இன அழிப்புப் போரின்போதும், அதன் பின்னரும் தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தின் கைகளில் பட்ட துன்பங்களை மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் 142 பக்க அறிக்கை விவரிக்கிறது. தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் பாலியில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். எல்லாவற்றையும் எழுத பேனா கூசுகிறது. படிக்க படிக்க இதயம் விம்முகிறது. கண்கள் பொழிந்துகொண்டே இருக்கின்றன. நான் வாழும் சமகாலத்தில் எனக்கு அருகாமையிலேயே இவ்வளவு பெரிய துன்பக் கடலா? இலங்கைக்கு இது ஒரு உள்நாட்டுப் பிரச்னை. இந்தியாவுக்கு இது ஒரு அரசியல், அமெரிக்காவுக்கு இது ஒரு உதட்டளவு மனிதாபிமானப் பிரச்னை. ஐ. நாவுக்கு ஒரு பொழுது போக்கு. ஆனால் ஈழத்தமிழனுக்கு இழப்பதற்கு இனி எதுவுமே இல்லாத கொடிய உயிர்வாழ் பிரச்னை.

 சரி. இனியும் நீதி வழங்கும் அமைப்பாக ஐ. நா. செயல்படமுடியுமா? அமெரிக்கா மனித உரிமைத் தீர்மானங்களைக் கொண்டுவரத் தகுதியானதுதானா? அதை ஆதரிப்பதற்கு இந்தியாவிற்குத் தகுதி உண்டா? இன்று வரை இக்கேள்விகளுக்கு இல்லை என்றுதான் பதில் சொல்லமுடியும். முதல் உலகப்போரின் போது தோற்றுவிக்கப்பட்ட சர்வதேசச் சங்கத்தின் நீதியற்ற, நேர்மையற்ற செயல்திறன்களினால் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டது. போர் முடிந்தபிற்பாடு உலக அமைதி நிலைத்து நிற்க, மனித உரிமைச் சட்டங்களை உலகம் முழுவதும் அமுல்படுத்த ஐ. நா ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று ஐ. நா. வல்லரசுகளின் கட்டப்பஞ்சாயத்தாக மாறிவிட்டது. இந்தியா போன்ற புதிய கட்டப்பஞ்சாயத்தார்களும் அதில் இடம்பெற முனைந்து கொண்டிருக்கும்போது அவ்வமைப்பு நீதியையும், அறத்தையும் நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கமுடியுமா? தன்னுடைய காஷ்மீர் பிரச்னை பற்றி பேசாமல் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவால் அறரீதியாக உதவமுடியுமா? ஒவ்வொரு திபெத்தியனையும் தற்கொலைக்குத் தூண்டிவிட்டுக்கொண்டே சீனா நீதி, நியாயம் பேசமுடியுமா? ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஐ. நா. செயலிழந்து போனது. ஐ. நா. இழைத்த தவறுகள் வெளிச்சத்திற்கு வந்தவண்ணமிருக்கின்றன. எல்லா நீதியும், நியாயங்களும் ஐ. நாவின் அடியில் குழி தோண்டி புதைக்கப்பட்டன, நந்திக்கடலில் ஈழத்தமிழர்கள் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதைப்போல.

 இலங்கைப் போர்க்குற்றம் குறித்து விசாரித்து தீர்ப்பு சொல்ல புதிய சர்வதேச சிறப்பு நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும். குற்றமிழைத்த அனைத்து மனிதர்களும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும். நியாயமான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இலங்கைத் தமிழர்கள் (உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் உட்பட) பங்கு கொள்ளும் வகையில் சிறப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்கள் விரும்பும் வகையில் ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். நீதியில் நம்பிக்கை கொண்டு இன்னமும் அதைக் கடைபிடித்துவரும் உலகத்தலைவர்கள் சிலரின் மேற்பார்வையில் இவை அனைத்தும் நடைபெற வேண்டும். ஒவ்வொரு வருடமும் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தை எதிர்பார்த்து ஏமாறுவதற்குப் பதிலாக மேற்சொன்ன நடவடிக்கைகளை மனிதாபிமானிகள் முன்னெடுப்பார்களானால் ஈழத்தமிழர்களுக்கு விடிவு ஒரு நாள் வராமல் போய்விடுமா என்ன? 

(நன்றி : குமுதம், தீராநதி, ஏப்ரல்-2013)

- செ.சண்முகசுந்தரம்

Pin It