ration shop tamilnadu

ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் மோடி அரசு WTOவில் கையெழுத்திட்டு விட்டதை அம்பலப்படுத்தி கடந்த மே மாதம் மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மே பதினேழு இயக்கத்தின் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் பெருமளவில் சென்று சேர்ந்ததால், பாஜகவின் வர்த்தகத் துறை அமைச்சரவையிலிருந்து நிர்மலா சீத்தாராமன், ரேசன் கடைகளை மூட கையெழுத்திடவில்லை என பொய் அறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பினார்.

நிர்மலா சீத்தாராமன் சொல்வது பொய் என்று அனைத்து ஊடகங்களிடமும் பேசி ஆதாரங்களை அனுப்பி வைத்தோம். ஆனால் நிர்மலா சீத்தாராமனின் அறிக்கையை வெளியிட்ட ஊடகங்களுக்கு நாங்கள் அனுப்பியதை வெளியிடும் நேர்மை வரவில்லை.

இன்று பல ஊர்களில் ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், ரேசன் கடைகளிலும் இந்த விண்ணப்பப் படிவத்தினை மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் 10000 ரூபாய் உங்கள் Account-க்கு கொடுப்போம் என்று வதந்திகளை பரப்பி விட்டு ஏமாற்றி மக்களை கூட்டம் கூட்டமாக வரிசையில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

எதற்காக இந்த படிவம் கொடுக்கப்படுகிறது என்பது கூட தெரியாமல் தங்கள் ஆதார் அட்டைகளை Xerox எடுக்க மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து ஆதார் கார்டு எண்களையும் வங்கிக் கணக்கோடு இணைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த படிவத்தில் Bullet Mark ல் இருக்கிற இரண்டாவது Point ன் படி,

"Have the Aadhar Number mapped with my bank account at NPCI to enable me to Receieve Direct Benefit Transfer from Govt Of India/ State Government through my account subject to eligibility."

அதாவது Direct Benefit Transfer ன் மூலமாக இந்திய அரசு/மாநில அரசு பணத்தை நேரடியாக என் வங்கிக் கணக்கில் அளிக்குமாறு கோரி மக்களே எழுதிக் கொடுப்பது.

இந்தியா போன்ற ஏழை நாடுகளில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரி பொருட்கள் போன்றவற்றை அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்தியாவின் ஏராளமான மக்களை பசியிலிருந்து காத்து வருவது நியாய விலைக் கடைகள்தான்.

Direct Benefit Transfer என்பது ரேசன் கடையில் வழங்கப்படும் அந்த நியாய விலைப் பொருட்களை நிறுத்தி விட்டு, அந்த பொருட்களுக்கான மானியத்தை உங்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துகிறோம். பொருட்களை நீங்கள் வெளிச் சந்தையில் முழு விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்பது.

இன்னும் சில காலத்தில் அரசு நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு எந்த பொருளையும் வழங்காது. நம்மிடமிருந்து நாம் பயன்படுத்துகிற அனைத்துப் பொருட்களுக்கும் வரியைப் பிடுங்கிற அரசு, இந்த அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு வழங்கியாக வேண்டும் என்பது நமது உரிமை. நமது உரிமையை சலுகையாக பார்க்கிற மனநிலைக்கு அரசு நம்மைத் தள்ளியுள்ளது. 

வங்கிக் கணக்கில் கொடுக்கப்பட உள்ள மானியமும் பொருளாதார சரிவு என்று நீலிக் கண்ணீர் விட்டு ஒருநாள் முழுமையாக நிறுத்தப்படும். அதுவும் Subject to eligibility என்ற வார்த்தைகளை கவனிக்கவும். 500, 1000 தடை என்பதன் வாயிலாக எளிய மக்களின் மீது மோடி அரசு தொடுத்த போர் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. தங்கள் இத்தனை கால சேமிப்பினை எடுத்துப் போய் வங்கிக் கணக்கில் சேர்த்த மக்களிடம் அந்த Account ல் இருக்கும் பணத்தையே காரணம் காட்டி மானியங்கள் மறுக்கப்படும். ரேசன் கடைகள் மட்டுமல்ல, விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாயக் கருவிகள், மின்சாரம், இடுபொருட்கள் போன்றவற்றின் மானியங்களும் நிறுத்தப்பட உள்ளது.

may 17 agitationதடையற்ற வெளிநாட்டு கம்பெனிகளின் இறக்குமதிக்கும் அனுமதியளித்தே WTO வில் இந்தியா கையொப்பமிட்டிருக்கிறது. அதாவது வெளிநாட்டு உணவு நிறுவனங்கள் நேரடியாக உணவுப் பொருட்களை நமது சந்தையில் இறக்குமதி செய்யும்.

முன்பு இப்படி வெளிநாட்டு உணவு நிறுவனங்கள் நம் சந்தைக்குள் நுழைய வேண்டுமென்றால் அவர்களுக்கு அதிக வரிவிதிப்பு உண்டு. உள்நாட்டு சிறு விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்படாமல் இருக்க வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்களின் மீது அதிகபட்ச வரியினை விதித்து அந்த கார்பரேட் பூதங்களிடமிருந்து நம்மவர்களை அரசு காப்பாற்றி வந்தது. இப்போது அந்த வரிவிதிக்கும் முறையினை தகர்த்துத்தான் WTO (World Trade Organisation) வில் கையெழுத்திட்டிருக்கிறது இந்திய அரசு.

Walmart-ம், கடனை வாங்கி தூக்கில் தொங்கும் நம் விவசாயியும் ஒன்றாகப் போட்டி போட வேண்டுமென்று மோடியின் சமூக நீதி சொல்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுக்கிற கவர்ச்சிகர விளம்பரங்களுக்கும், Exclusive Day by Day Offer-களுக்கும் மயங்கி, மோடி அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் Cashless Transaction மூலமாக Visa காரனுக்கும், Mastercard காரனுக்கும் ஒரு Service chargeஐ செலுத்தி விட்டு நாமெல்லாம் வெளிநாட்டு Showroom களில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதுதான் திட்டம்.

மண்ணெண்ணெய் இனி ரேசன் கடைகளில் வழங்கப்படாது என்றும், மானியம் Direct Benefit Transfer முறையில் தான் வழங்கப்படும் என்றும் கடந்த மாதம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். முதல்கட்டமாக 9 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த இலக்கு உணவுப் பொருட்கள்தான். இந்தியாவின் 31 சதவீத வீடுகளில் மின்சார இணைப்பு என்பது கிடையாது. அவர்கள் அனைவரும் மண்ணெண்ணெய் விளக்குகளை நம்பித்தான் வாழ்கிறார்கள். அதாவது 30 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களின் எதிர்காலம் மண்ணெண்ணெய் விளக்குகளில்தான் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ஏராளமான வீடுகளில் எரிபொருளாகவும் மண்ணெண்ணெயைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் எதிர்காலத்தில்தான் முதல்கட்டமாக இந்திய அரசு கையை வைத்திருக்கிறது.

ரேசன் கடைகளை மூடுகிறோம் என சொன்னால் மிகப் பெரிய எதிர்ப்பை மக்களிடம் சந்திக்க நேரிடும் என்பதால், Direct Benefit Transfer என்ற கவர்ச்சியான பெயரைச் சொல்லி ஏமாற்றி இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டிய மக்களை வரிசையில் நிறுத்தியிருக்கிறது.

எதற்காக இந்த Form ஐ எழுதிக் கொடுக்கிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல், ஏதோ பணம் வரப் போவதாக நினைத்துக் கொண்டு மக்களும் Xerox கடைகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண உழைக்கும் மக்களுக்கு புரிந்துவிடக் கூடாது என்பதால்தான் இந்த Form வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.

மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து, மக்களை வெளிநாட்டு நிறுவனங்களின் அடிமையாக மாற்றிக் கொண்டிருக்கும் மோடி அரசின் சதிகளை தெரிந்திருந்தும் மக்களிடம் அம்பலப்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது தொழிலாளர்களின் நண்பன் என சொல்லிக் கொள்ளும் சிபிஎம் கட்சி.

500, 1000 ரூபாய் தடை செய்யப்பட்டதின் பின்னணியில் சதித் திட்டங்களை அம்பலப்படுத்தாமல், ரேசன் கடைகள் மூடப்படப் போவதையும் அம்பலப்படுத்தாமல், விவசாய மானியங்கள் நிறுத்தப்படப்போவதையும் அம்பலப்படுத்தாமல் வெறுமனே மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று போலிப் போராட்டங்களை சிபிஎம் கட்சி மற்ற எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து நடத்தி வருகிறது.

Direct Benefit Transfer என்று சொல்லப்படக்கூடிய அயோக்கியத்தனத்திற்காகத் தான் ஆதார் கார்டு கொண்டுவரப்பட்டது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திருட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேசன் கடைகள் மூடப்படும் அயோக்கியத்தனத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்ட முற்போக்கு, ஜனநாயக இயக்கங்கள் தயாராக வேண்டும். மிகப் பெரிய மக்கள் விரோத நடவடிக்கையை சத்தமே இல்லாமல் மோடி கும்பல் உலக வங்கி, IMF, WTO போன்ற முதலைகளுடன் சேர்ந்து நிறைவேற்றி வருகிறது. இதை எதிர்க்காமல் Fidel Castro க்கு வீரவணக்கம் மட்டும் சொல்லிவிட்டு கடந்து செல்வதால் எந்த மாற்றமும் வராது.

அனைத்து கட்சிகளுக்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கை 

ரேசன் கடைகளை மூடப் போகிறார்கள் என்று எல்லோரிடமும் சொன்னோம். பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து விளக்கினோம்.


மோடியின் தமிழக வருகையின் போது ரேசன் கடை ஒப்பந்தத்திற்காக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இந்தியாவை உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து வெளியக்ச் சொல்லி மே 7 ம்தேதி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழமை இயக்கங்களை அழைத்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.

தமிழகத்தின் அத்தனை பெரிய கட்சிகளும் மிகப் பெரும் அமைதியைக் காத்தன. இன்று மோடி அரசு அந்த வேலையை துரிதமாக நடத்திக் கொண்டிருக்கிறது. எதற்காக form கொடுக்கிறோம் என்று கூட சொல்லாமல் 10000 ரூபாய் கொடுக்கப் போவதாக வதந்திகளை திட்டமிட்டு பரப்பி விட்டு சுய உதவிக் குழுக்கள் மூலமாக மக்களின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருகிறார்கள்.

மக்களும் தங்கள் மானியங்கள் பறிபோய், ரேசன் கடைகள் மூடப்படுவதற்கான படிவம்தான் அது என்று தெரியாமல் படிவத்தை நிரப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். Direct Benefit Transfer என்பதன் உண்மை அர்த்தம் மக்களுக்கு சொல்லப்படாமலேயே இந்த சதி வேலை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பல கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் சோற்றில் மண் விழப் போகிறது. சோற்றுக்காக வெளிநாட்டு உணவுக் கம்பெனியிடம் நம் மக்களை பிச்சை எடுக்க அயோக்கிய மோடி அரசு துணிந்து விட்டது.

தமிழகத்தின் தேர்தல் அரசியலில் பங்கேற்கிற பெரிய கட்சிகள் இதை அமைதியாக கடந்து செல்வது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

பொது விநியோகத் திட்டம், நியாய விலைக் கடைகள், விவசாய மானியம் என்று இந்திய உழைக்கும் மக்களின் ரத்த நாளத்தை அறுத்துக் கொண்டிருக்கிறது இந்திய பாஜக அரசு. இனிமேலும் இந்திய அரசின் இந்த அயோக்கியத்தனத்தினைக் கண்டிக்காமல் அமைதி காக்கும் தமிழகத்தின் கட்சிகளும், இந்திய இடதுசாரிக் கட்சிகளும் மவுனம் கலைய வேண்டும்.

அனைத்து மக்களையும் எந்த அதிகாரப்பூர்வ இணைப்பு எண்ணும் இல்லாத Xerox படிவங்களை கொடுத்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறது இந்திய மோடி அரசு. 

தமிழக கட்சிகளே! இந்திய இடதுசாரிக் கட்சிகளே!

அதிமுக, திமுக முதற்கொண்டு சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், பாமக, மதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்திய அரசின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராக குரல் கொடுக்க முன்வாருங்கள். மவுனம் கலையுங்கள்.

மக்களிடம் உண்மையை அம்பலப்படுத்த வேண்டியது உங்கள் கடமை. இந்த கோரிக்கையை மே பதினேழு இயக்கம் உங்கள் முன் வைக்கிறது.

-       மே பதினேழு இயக்கம்

Pin It