நவம்பர் 8 அன்று இரவு திடீரென்று இந்த நாட்டின் பிரதமர் நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த நாட்டில் ஊழலையும் கருப்புப் பணத்தையும், போலி நோட்டுக்களையும் ஒழித்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ரூ.500, ரூ. 1000 நோட்டுகளையும் இனி செல்லாது என்றும், இந்த நடவடிக்கை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் என்றும் பிரகடனம் செய்துள்ளார். இதைப் பா.ஜ.க. வினர் தங்களுடைய தலைவரின் வரலாறு அறியாத புரட்சி எனப் புகழ் பாடி வருகின்றனர். ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு பாராட்டி வருகின்றன. வரி ஏய்ப்பிலும், கறுப்புப் பணத்தைப் பதுக்குவதிலும் மிகவும் முக்கியமான புள்ளிகளாக இருப்பவர்கள் நடிகர்கள். ரஜினியும் கமலும் விஷாலும் தனுசும் குஷ்புவும் கூடப் போட்டி போட்டுக் கொண்டு பாராட்டுகின்றார்கள் என்றால் உண்மையில் மோடி செய்தது பெரிய புரட்சிதான்!
கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தங்களுடைய பணங்களை மாற்ற வங்கிக்கு வரும்போது பிடிபட்டு விடுவார்கள். இனி கருப்புப் பணம் அடியோடு ஒழிக்கப்பட்டு விடும் என நம்பிக் கொண்டு ஏமாந்து போக இங்கு யாரும் தயாராக இல்லை. பணத்தை அப்படியே பதுக்கி வைத்துக் கொண்டு அதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் சில பைத்தியங்கள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் எல்லோரும் பணத்தை அப்படியே வைத்திருப்பதில்லை என்பது படிக்காத பாமர மக்களுக்குக் கூடத் தெரியும்.
கருப்புப் பணம் என்பது வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து பதுக்கிக் கொள்ளும் பணம்தான். உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கு காட்டாத பங்கு 23.2 விழுக்காடாகும். அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் சுமார் நான்கில் ஒரு பங்கு கணக்கில் காட்டப்படாமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று அதன் மதிப்பு 47900 கோடி டாலர், அதாவது இன்றைய ரூபாய் மதிப்பில் 32,09,300 கோடி என கிரிஸில் (crisil) என்னும் அமைப்பு கூறுகிறது. இதன் உடைமையாளர்கள் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ரியல் எஸ்ட்டேட் உரிமையாளர்கள், கள்ளக்கடத்தல் பேர்வழிகள், போதை மருந்து கடத்தல் பேர்வழிகள், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் இங்குள்ள ஊழலில் ஊறிப் போன அதிகார வர்க்கமும், அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளும். கருப்புப் பணமும், ஊழலும் கை கோர்த்துச் செல்லக் கூடியவை. இரண்டும் நேர்விகிதத்தில் வளரக் கூடியவை.
கருப்புப் பணம் இன்று முழுமையாக சொத்ததாக மாற்றப்பட்டுள்ளது. கருப்புப் பணம் மாட மாளிகைகளாக மாறியுள்ளது. ஆடம்பரக் கார்களாக உலா வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பு கொண்ட பெரும் தோட்டப் பண்ணைகளாக மாறியுள்ளது. ரியல் எஸ்டேட்டுகளாக உருமாறியுள்ளது. தங்க நகைகளாகவும்,, வைரமாகவும், பிளாட்டினமாகவும் வடிவெடுத்துள்ளது. சுவிஸ், மொரிசியஸ் நாடுகளின் வங்கிகளில் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அது மீண்டும் இந்த நாட்டிற்குள்ளேயே வெள்ளையாக மாறி வருகிறது, தேர்தலில் அரசியல்வாதிகளுக்குத் தேவையான வாக்குகளைப் பெறுவதற்கு உதவும் தூண்டிலாகச் செயல்பட்டு வருகிறது. கள்ளக் கடத்தலிலும், போதை மருந்துகள் கடத்தலிலும் ஈடுபடுத்தப்பட்டு மென்மேலும் பெருகி வருகிறது.
எனவே மோடியின் இந்த அறிவிப்பால் கருப்புப் பணம் ஒழியப் போவதில்லை. தான் ஆட்சிக்கு வந்தால், வெளி நாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 இலட்சத்தைப் போடுவேன் என்று வாய்ச் சவடால் அடித்துப் பதவிக்கு வந்தவர்தான் இந்த மோடி. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் ஒரு சல்லிக் காசு கூட மக்கள் கணக்கில் வரவில்லை. சாயம் வெளுத்து விட்டது. இனியும் மக்கள் நம்பி ஏமாறப் போவதில்லை. அதற்குள் உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது. அதற்கு ஒரு அரசியல் ‘ஸ்டன்ட்’ தேவை. அதன் வெளிப்பாடுதான் கருப்புப் பணம் ஒழிப்பு நாடகம்.
இந்த முதலாளிய அமைப்பு நீடிக்கும் வரை இவர்களால் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை. அது வரையிலும் எத்தனை முறை ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக ஆக்கினாலும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது.
அடுத்து, போலி நோட்டுகளை ஒழிக்கப் போகின்றார்களாம்! போலி நோட்டுகளைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தி இந்த நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கின்றனர். எனவே போலி நோட்டுகளை ஒழிப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம் என்கிறார். உண்மை. போலி நோட்டுகள் ஆபத்தானவை. பயங்கரவாதிகள் மட்டுமில்லை, தேசப் பக்தர்கள் போல வேடமிடுபவர்கள் கூடப் போலி நோட்டுகளால் இலாபம் அடைந்து வருகின்றனர். இவர்கள் புதியதாகப் புழக்கத்தில் விடும் நோட்டுகள் போலி நோட்டுகளை ஒழித்து விடுமா? புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வந்ததும் புதிய போலி நோட்டுகளும் வருமே! அவற்றைத் தடுப்பது எப்படி?
இந்த அறிவிப்பால் கருப்புப் பணம் எதுவும் வெளி வரப் போவதில்லை. இதனால் இன்று பாதிக்கப்பட்டு வருபவர்கள் அன்றாடங் காய்ச்சிகளும், சிறு உற்பத்தியாளர்களும், சிறு வணிகர்களும், நடுத்தர வர்க்கங்களும்தான். இவ்வாறு நாட்டில் உள்ள மக்களை எல்லாம் பதற்றத்தில் தள்ளிய பெருமை மோடியையே சேரும். சங்கப் பரிவாரங்களின் இந்துத்துவ வெறிச் செயல்கள், தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், மோடி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள், நாள்தோறும் போர் வெறியைத் தூண்டும் பேச்சுகள் ஆகியவற்றுடன் இந்தப் பொருளாதாரத் தாக்குதலும் சேர்ந்து மக்களைப் பதற்றமடையச் செய்துள்ளது; நிலைகுலையச் செய்துள்ளது.
இந்த அறிவிப்பின் உண்மையான நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதோ, ஊழலை ஒழிப்பதோ அல்லது போலி நோட்டுகளை ஒழிப்பதோ இல்லை. கருப்புப் பண முதலைகளோடு கொஞ்சிக் குலாவி வரும் இந்த ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் அதைச் செய்வதும் சாத்தியமுமில்லை.
“ ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்து விடுமா? எனக் கேட்கின்றீர்கள். இது அந்த ஒரே நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது அல்ல...இந்த அறிவிப்பின் காரணமாகப் பணம் பெரும் அளவில் சந்தைக்கு வராது.” என டெல்லியில் ஊடகங்களின் பொருளாதாரத் துறை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெத்லி தொடக்கி வைத்த போது கூறியுள்ளார்.
இதன் உண்மையான நோக்கம் சிறு உடைமையாளர்கள், சிறு முதலாளிகள், நடுத்தர வர்க்கங்கள் ஆகியோரின் கையில் உள்ள கொஞ்ச நஞ்ச ரொக்கப் பணத்தையும் வங்கிகளுக்குக் கொண்டு வரச் செய்து, அதன் மூலம் பெரும் முதலாளிகளுக்கு நிதி ஆதாரங்களை உருவாக்குவதுதான்.
இந்தியத் தேசிய வங்கிகள் இன்று பெரும் நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. ஏழு இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது. அம்பானிகளும், அதானிகளும், எஸ்ஸார்களும், மிட்டல்களும், மல்லையாக்களும் இந்தியத் தேசிய வங்கிகளைக் கொள்ளையடித்து, அவற்றைப் போண்டியாகும் நிலைக்குத் தள்ளி உள்ளனர். “2013 க்கும் 2015க்கும் இடையில் மட்டும் 1.14 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலாளிகளின் கடனை 29 தேசிய வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. அது அதற்கு முந்திய ஒன்பது ஆண்டுகளில் தள்ளுபடி செய்ததை விடப் பன்மடங்காகும்.” என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
இந்திய மத்திய வங்கி பத்திரங்களை வாங்கிக் கொண்டு 2.1 இலட்சம் கோடி ரூபாயைக் வங்கிகளுக்கு அளித்தும் அவை நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை என பிசினெஸ் ஸ்டாண்டர்ட் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த பன்னிரண்டு மாதங்களில் மட்டும் சுற்றோட்டத்தில் உள்ள ரொக்கப் பணத்தின் அளவு 2.6 இலட்சம் கோடி அதிகரித்துள்ளதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது.
இவையனைத்தும் சேர்ந்து வங்கிகளை இன்று நெருக்கடியில் தள்ளியுள்ளன. முதலாளிகளுக்குக் கடன் கொடுப்பதன் மூலம்தான் வங்கிகள் இலாபம் ஈட்ட முடியும். வங்கிகளிடம் போதிய ரொக்கப் பணம் இல்லாததால் அவற்றால் முதலாளிகளின் நிதி மூலதனத் தேவையை நிறைவேற்ற முடியவில்லை. வங்கிகளால் இலாபமும் பெற முடியவில்லை. இந்த நிலையால் முதலாளிகளுக்கு நிதி மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே வங்கிகள் முதலாளிகளின் நிதி மூலதனத் தேவையை நிறைவேற்ற வேண்டுமானால் இன்று தமது ரொக்கப் பண இருப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி நாடு முழுவதும் சுற்றோட்டத்தில் மக்கள் கைகளில் உள்ள ரொக்கப் பணத்தை வங்கிகளுக்குக் கொண்டு வரச் செய்வதுதான்.
இன்று இந்தியாவில் பண வடிவில் 17 இலட்சம் கோடி ரூபாய் சுற்றோட்டத்தில் உள்ளது. அவற்றில் 88 விழுக்காடு 500 ரூபாய் நோட்டுகளும், 1000 நோட்டுகளும் ஆகும். பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு, ‘1650 கோடி 500 ரூபாய் நோட்டுகளும், 670 கோடி 1000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளதாக’ இந்திய மத்திய வங்கி அறிவித்துள்ளது. அவற்றின் மதிப்பு மட்டும் பதினைந்து இலட்சம் கோடி ரூபாயாகும். இந்த அறிவிப்பின் மூலம் இந்தப் பதினைந்து இலட்சம் கோடி ரூபாயும் ரொக்கப் பணமாக வங்கிகளுக்கு வந்து சேரும். நாட்டில் சுற்றோட்டத்தில் உள்ள பணத்தின் அளவு குறையும்.
நாட்டில் பணப் புழக்கம் குறைவதன் மூலம் பொருட்களின் விலை குறையும். அதனால் பண வீக்கமும் குறையும். பண வீக்கம் குறைந்தால் வங்கிகள் தமது வட்டி விகிதத்தைக் குறைக்கும். இவை இந்த நாட்டின் முதலாளிகளுக்குத் தொழில் வளர்ச்சிக்கான முதலீடு என்ற பெயரில் குறைந்த வட்டிக்குக் கடனாக வழங்கப்படும். மீண்டும் மக்கள் பணத்தை இந்த முதலாளிகள் கொள்ளையடித்து வங்கிகளைப் போண்டியாக்குவார்கள்.
பண வீக்கம் குறையாமல் இருக்கிறது என்ற ஒரே காரணத்தைக் காட்டித்தான் ரகு ராம் ராஜன் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தபோது வட்டி விகிதத்தைக் குறைக்க மாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தார் என்பதை நாம் இங்கு நினைவு கூர வண்டும். எனவே பண வீக்கத்தைக் குறைத்து, அதன் மூலம் வட்டி விகிதத்தைக் குறைத்து முதலாளிகளுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பது தான் இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம்.
குறைந்த வட்டிக்கு கடனைப் பெறும் முதலாளிகள் உற்பத்தித் துறையில் அதை முதலீடு செய்வதை விட அதிக அளவு பங்குச் சந்தைச் சூதாட்டத்திலும், ரியல் எஸ்டேட் வணிகத்திலும், நுகர்வுப் பொருட்களை விற்கும் சேவைத் துறையிலும் முதலீடு செய்து மென்மேலும் கொள்ளையடிப்பார்கள். மென்மேலும் கறுப்புப் பணத்தை உற்பத்தி செய்வார்கள்; ஊழலையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ப்பார்கள்.
எனவே கருப்புப் பண ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, கள்ளப்பண ஒழிப்பு என்ற பெயரில் பெரும்புரட்சி செய்துள்ளதாக நாடகமாடும் மோடி அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் மக்கள் பணத்தை முதலாளிகள் மேலும் கொள்ளையடிக்க வழி வகுப்பதுதான்!
- புவிமைந்தன்