யாரோ வீட்டின் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. கூர்ந்து கேட்டேன். ஒருவர் அல்ல, பலர் சேர்ந்து ஒரே சமயத்தில் ‘தட தட’ என்று தொடர்ந்து தட்டும் சப்தம். பொறுமையில்லாமல் தொடர்ந்து தட்டுபவர்கள் யாராயிருக்கும் என்று எரிச்சலுடன் வெகு வேகமாக வந்து கதவைத் திறந்தேன். என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. வாயிற்படியில் நான்கைந்து பூனைகள் நின்று கொண்டிருந்தன. உண்மையில் பூனைகள்தான். அவை நாய்களைப் போல பெரிய அளவில் இருந்தன. ஒரு பூனை கருப்பு நிறத்தில் மஞ்சள் நிறக் கண்களுடன் என்னையே கூர்மையாகக் கவனித்துக் கொண்டு நின்றிருந்தது. இன்னொரு பூனை கருப்பும் வெளுப்புமாய் நின்றிருந்தது. மற்றொரு பூனை வெள்ளை நிறத்தில். அவற்றைத் தொடர்ந்து இரு பூனைகள். அவை மட்டுமல்லாமல் வீட்டிற்கு வெளியில் உள்ள சாலையில் நூற்றுக்கணக்கான பூனைகள் நின்று கொண்டிருந்தன.

பூனைகள் என்றாலே எனக்குப் பிடிப்பதில்லை. நாம் இல்லாத நேரத்தில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து குழந்தைக்கு என்று பத்திரமாக வைத்துள்ள பாலைக் கூடத் தேடிக் கண்டு பிடித்துத் திருட்டுத்தனமாகக் குடித்து விட்டுச் சென்று விடும். தயிர் போன்ற பொருட்களை வீட்டில் வைக்கவே முடியாது. எல்லாவற்றையும் ருசி பார்த்து விடும். எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்து வீட்டில் வாந்தி பண்ணி வைக்கும். தூங்கும்போது கூட நிம்மதியாகத் தூங்க விடாது. படுக்கையில் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டு ‘குர் குர்’ என்று சப்தம் செய்து கொண்டு இருக்கும். அதனால்தான் அண்டை வீட்டுப் பூனை வந்தால் கூட அதை அடிக்காத குறையாகத் துடைப்பத்தை வைத்து மிரட்டி விரட்டி விடுவேன்.

கதவைத் திறந்ததும் என்னையே முறைத்துப் பார்த்து நின்று கொண்டிருந்த இந்தப் பூனைகளைப் பார்த்ததும் எனக்கு அடக்க முடியாத கோபம் வந்தது நியாயம்தான். உடனே உள்ளே சென்று துடைப்பத்தை எடுத்து வந்து அவற்றை விரட்டப் பாய்ந்தேன். ஆனால் அந்தப் பூனைகளோ பயந்து ஓடவில்லை. முன்னால் நின்றிருந்த நான்கைந்து பூனைகளும் தமது முன்னங்கால்களில் உள்ள கூர்மையான நகங்களை நீட்டிக் கொண்டு என் மீது பாய்வது போல என்னைச் சுற்றி நின்று கொண்டன. அதை விட ஆச்சரியம் அதில் ஒரு பூனை, “மானுடனே நில், அவசரப்படாதே! இல்லாவிட்டால் எங்கள் நகங்களும் பற்களும் உன்னைப் பதம் பார்த்து விடும். பிறகு நீதான் அவதிப்படுவாய்.” என மனிதக் குரலில் எச்சரித்தது. அதைக் கேட்டதும் எனக்கு ஒரு பக்கம் நம்ப முடியாத ஆச்சரியம், இன்னொரு பக்கமோ சொல்ல முடியாத பயம். என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. பயத்தில் என் உடல் நடுங்கியது. வார்த்தைகள் வாயிலிருந்து வெளி வர மறுத்தன. ஒரு சிறிது அசைந்தாலும் சுற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான பூனைகள் என்னைக் கிழித்துக் கூறு போட்டு விடும். பயத்தில் உறைந்து போனேன்!

“ம்... உள்ளே செல். பேசுவோம்” என்று ஒரு பூனை அதட்டியது. நான் எதுவும் பேசாமல் ஹாலுக்குள் சென்றேன். முதலில் நின்றிருந்த பூனைகள் மட்டும் என்னுடன் ஹாலுக்குள் வந்தன. ஹாலில் கிடந்த சோபாவிலும் நாற்காலிகளின் மீதும் பூனைகள் ஏறி அமர்ந்து கொண்டன. காலியாக் கிடந்த ஒரு நாற்காலியில் என்னை உட்காருமாறு கூறின. மற்ற பூனைகள் வெளியில் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு தங்களுக்குள் ‘கர் புர்’ என்று பேசிக் கொண்டிருந்தன.

சுற்றிலும் அமர்ந்திருந்த பூனைகள் என்னைக் குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கின.

‘மானுடனே, எதற்கு நீ எங்களுடைய இனத்தை வெறுக்கிறாய்?’

‘நான் உங்கள் இனத்தை வெறுக்கவில்லையே’ என்று துணிந்து பொய் கூறினேன்.

‘பொய் கூறாதே. நீ வெறுக்கவில்லையென்றால் எதற்காக உன் வீட்டில் இருந்த எம் இனத்தைச் சேர்ந்த மூன்று இளம் குட்டிகளை நேற்று வெளியில் தூக்கி எறிந்தாய்?’

‘உண்மையை மறைக்காதே. பொய் உன்னை அழித்து விடும்’ இது இன்னொரு பூனை.

பூனைகளை நான் எதற்காக வெறுக்கிறேன் என்ற எனக்கான நியாயத்தை அவற்றிற்குப் பொறுமையாக விளக்கினேன். அவற்றைக் கேட்டு அவை சமாதானம் அடைந்து விடும் எனக் கருதினேன். ஆனால் நிலைமை நான் நினைத்தது போல அவ்வளவு எளிதாக இல்லை.

‘ஒரு காலத்தில் நாங்கள் காட்டில் வாழும் விலங்குகளாக இருந்தோம். உங்களுடைய ஆதிக் குடிகள்தான் எங்களை வீட்டு விலங்குகளாக மாற்றினார்கள். எதற்காகத் தெரியுமா?’

நான் மவுனமாக இருந்தேன்.

‘அவர்களுக்கு நாங்கள் அப்பொழுது அவசியமாக இருந்தோம். வீட்டில் அவர்கள் சேமித்து வைத்திருந்த தானியங்களை எலிகள் தின்று சேதம் விளைவித்தன. அவற்றை வேட்டையாடிக் கட்டுப்படுத்த அப்பொழுது நாங்கள் தேவைப்பட்டோம்’.

‘இப்பொழுது எலிகளைக் கொல்ல எலி மருந்துகள் இருக்கின்றன. அதனால் நாங்கள் தேவை இல்லாமல் போய்விட்டோம். அப்படித்தானே!’

‘தேவை இல்லாப் பொருட்களுக்கும் உயிர்களுக்கும் இந்த உலகில் வேலை இல்லை என்பது உண்மைதான். இயற்கையையும் இங்குள்ள அனைத்து வளங்களையும் அனைத்து உயிர்களையும் எங்களுடைய நலன், எங்களுடைய தேவை என்ற அடிப்படையில்தான் பார்க்கிறோம். அது இயல்புதானே!’ என மெதுவாக வாய் திறந்தேன்.

‘எது தேவை, எது தேவையில்லை என்பதை உன்னுடைய சுய நலன் அடிப்படையில் தீர்மானிப்பது எவ்வாறு சரியாக இருக்க முடியும் மானுடனே!’ என அதட்டியது ஒரு பூனை.

‘உன்னுடைய சுயநலனுக்காக எங்களைப் போன்ற உயிர்கள் அழியத்தான் வேண்டுமா?’- இது இன்னொரு பூனை.

‘எனக்குப் பயனில்லாதபோது அதைத் தவிர வேறு வழியில்லை.’ என்றேன்.

‘இப்பூவுலகில் நீ தோன்றுவதற்கு முன்பே புல் பூண்டுகளும் மரம் செடி கொடிகளும் எங்களைப் போன்ற எண்ணற்ற உயிரினங்களும் தோன்றியிருந்தன. வரலாற்றின் ஓட்டத்தில் நீ அண்மையில்தான் தோன்றினாய். நீ இல்லாமல் எங்களால் வாழ முடியும். வாழ்ந்தும் இருக்கிறோம். ஆனால் எங்களை எல்லாம் அழித்து விட்டு நீ ஒரு நாள் கூட வாழ முடியாது என்பதை ஒரு கணமாவது எண்ணியிருப்பாயா?’

‘அதைப் பற்றி நான் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய இன்றைய நலன்தான் எனக்கு முக்கியம்’.

‘தொலைநோக்குப் பார்வையற்ற மூடன் நீ. அதனால்தான் உன்னுடைய இன்றைய நலன்களுக்காக எங்களைப் போன்ற உயிரினங்களையும் இயற்கையையையும் அழித்து வருகிறாய். அதன் மூலம் உனது அழிவை நீயே உருவாக்கிக் கொண்டிருக்கின்றாய். உன்னுடைய சுயநலன் எங்களை மட்டும் அழிக்கவில்லை. உன் சக மனிதர்களையும் அழித்து வருகிறது.

உன்னுடைய சுயநலன் சுருங்கிச் சுருங்கி வசதி படைத்த செல்வந்தர்களின், கோடீஸ்வரர்களின், முதலாளிகளின் சுயநலனாக மாறி விட்டது. உங்களுடைய ஒரு சிலரின் நலன்களுக்காகப் பிற உயிரினங்களையும் இயற்கையையும் மட்டுமல்ல, சக மனித இனத்தையும் கூட யுத்தங்கள் மூலம் அழிக்க நீங்கள் தயங்குவதில்லை. யுத்தங்கள் மூலம் இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கி நாடு விட்டு நாடு துரத்துகிறீர்கள். நீங்கள் மாட மாளிகைகளில் சொகுசாக வாழ்வதற்காக உங்கள் சக மனிதர்களைக் குடிசைகளில், சாக்கடை ஓரங்களில் அவல நிலையில் வசிக்க வைத்துள்ளீர்கள். நீங்கள் கோடிகளில் புரள்வதற்காக கோடிக்கணக்கான மக்களை வறுமையிலும் பட்டினியிலும் தள்ளியுள்ளீர்கள். உங்களுடைய ஆதிக்கத்தை எதிர்க்காமல் இருக்க அவர்களை இனம், மொழி, மத அடிப்படையில் பிளவுபடுத்தியுள்ளீர்கள். உங்களுடைய நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளவே அரசுகளையும், நாடுகளுக்கு இடையிலான எல்லைகளையும் உருவாக்கி வைத்துள்ளீர்கள். உயிர் பிழைக்கப் புகலிடம் நாடி வரும் அகதிகளுக்கும் கூட உங்கள் நாடுகளில் இடம் தர மறுத்து விரட்டுகிறீர்கள். மொத்தத்தில் உங்களுடைய சுயநலன் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே எதிராக மாறிவிட்டது.’

‘வலுத்ததுதான் வாழும்’ என்பதுதானே விதி’ என்று எனது அறிவின் மேதமையைக் காட்டினேன்.

‘அற்ப மானிடப் பதரே! இது விலங்குகள் உலகத்திற்கான விதி என்று உனது முப்பாட்டன் டார்வின் அன்று கூறினான். அதை மனிதகுலத்திற்கான விதியாக நீ இரக்கமின்றி மாற்றி விட்டாய். நீ இன்னும் மானுடனாக மாறவில்லை. விலங்கு நிலையில்தான் இருக்கிறாய். நீ சிந்திக்கத் தெரிந்த மிருகம். உன்னைப் போன்றவர்கள் இயற்கைக்கும் பிற உயிரினங்களுக்கும் மட்டும் அல்ல மனித குலத்திற்கே ஆபத்தான எதிரிகள். உன்னைப் போன்றவர்கள் இங்கு இனியும் வாழ்வதற்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை’. எனக் கூறிக் கொண்டே தமது கூறிய பற்களையும் நீண்ட கூரான நகங்களையும் காட்டிக் கொண்டு என் மீது அந்தப் பூனைகள் பாய்ந்தன.

 * * *

‘ஐயோ, அம்மா’ என அலறிக் கொண்டு எழுந்த நான் கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடப்பதைக் கண்டேன். ஜன்னல் கதவை ஒரு பூனை தன் நகங்களால் பிறாண்டிக் கொண்டு, ‘மியாவ், மியாவ்’ எனச் சப்தம் இட்டுக் கொண்டிருந்தது.

நேற்று அண்டை வீட்டுப் பூனை எங்கள் வீட்டில் போட்டிருந்த நான்கு பூனைக் குட்டிகளை எனது மனைவி குப்பை அள்ளுபவர் மூலம் வெளியில் கொண்டு போய் விட்டு விடக் கொடுத்தனுப்பியது எனது நினைவுக்கு வந்தது.

 - புவிமைந்தன்

Pin It