நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் சில தினங்களுக்கு முன்னால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்து பதற்றம் அடங்குவதற்குள் சேலம் மாவட்டம் இடங்கணசாலையைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற ஆசிரியை பேஸ்புக்கில் தன்னுடைய படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதால் அவமானம் அடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு சம்பவங்களும் மிகவும் கண்டிக்கத்தக்கவை என்ற போதிலும் இரண்டு சம்பவங்களிலும் காவல்துறையும் அரசு இயந்திரமும் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாய் உள்ளது.
சுவாதி இறந்தபோது அதுவரை அமைதியாக இருந்த காவல் துறை மற்றும் அரசு இயந்திரம் தன்னுடைய உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்து கொதித்தெழுந்தது. தமிழ்நாட்டில் என்ன இழவு விழுந்தாலும் வாயே திறக்காத தமிழசை அறச்சீற்றம் அடைந்து கத்தினார். ஏன் தமிழக முதல்வர் சுவாதியின் மரணத்திற்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று கண்டனம் செய்தார். புதிய தலைமுறையில் தோன்றிய வானதி சீனிவாசன் பெண்ணுரிமை எல்லாம் பேசினார். தமிழ்நாட்டில் தினம் தினம் சாதி ஆணவ கொலைகள் நடக்கும் போதெல்லாம் வாயே திறக்காத இந்த கொலைகாரக் கூட்டம் என்னடா திடீர் என்று அறச்சீற்றம் அடைகின்றது என்று ஆச்சரியமாக இருந்தது. பின்புதான் தெரிந்தது கொலை செய்யப்பட்ட சுவாதி ஒரு பார்ப்பனப் பெண் என்று.
நாம் சுவாதியின் கொலையைக் கடுமையாகக் கண்டிக்கும் அதே வேளை இந்த அற்பப்பிறவிகளின் அசிங்கம் பிடித்த சாதிப்பாசத்தை அம்பலப்படுத்த வேண்டி உள்ளது. தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என பெரும்பாலான அரசியல் கட்சிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அதை எல்லாம் மயிர் அளவுக்குக் கூட மதிக்காத இந்த ஆளும் வர்க்கம் சுவாதி என்ற பார்ப்பனப் பெண்ணின் கொலையைப் பார்த்துத் தானாகவே முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்துள்ளது. உடுமலைப் பேட்டை சங்கர் நடு ரோட்டில் சாதிவெறியர்களால் வெட்டிக் கொல்லப்படும் போது பொது மக்களின் உயிருக்கு உத்திரவாதம் என்ன? என்று கேட்கத் தோன்றாத நீதிபதி என்.கிருபாகரனுக்கு சுவாதி கொலை செய்யப்படும் போதுதான் கேட்கத் தோன்றுகின்றது. இங்கே சமூகத்தின் பொது மனசாட்சியை உலுக்குவதற்குக்கூட கொலை செய்யப்பட்டவர் என்ன சாதி என்பது முக்கியமாக இருக்கின்றது.
கொலை செய்யப்பட்ட சுவாதி ஒரு பார்ப்பனப் பெண் என்று தெரிந்தவுடன் இத்தனை நாளாய் தமிழ்நாட்டில் நடந்த எந்த ஒரு கொலைக்காகவும் கருத்து தெரிவிக்காத கழிசடைகள் எல்லாம் இப்போது வரிசையாக கருத்து சொல்ல ஆரம்பித்து இருக்கின்றன. சுவாதியின் கொலைக்கு ‘அந்தணர் முன்னேற்றக் கழகம்’ தன்னுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து இருக்கின்றது. தமிழ்நாட்டில் நடந்த எந்த சாதிய ஆணவக்கொலைக்கும் கண்டனம் தெரிவிக்காத இந்த அயோக்கியர்களுக்கு இப்போது மட்டும் கோபம் பொத்துக்கொண்டு வருகின்றது. இன்னும் ஒரு படி மேலே போய் ஒய்.ஜி. மகேந்திரன் என்ற பார்ப்பன வெறிபிடித்த நாய், சுவாதி என்ற பார்ப்பனப் பெண்ணைக் கொன்றது பிலால் மாலிக் என்று தெரிவித்து இருக்கின்றான். அத்தோடு நிற்காமல் தலித் இயக்கங்களையும், திராவிட இயக்கங்களையும், கம்யூனிஸ்ட் இயக்கங்களையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கின்றான். கொலை செய்யப்பட்ட சுவாதி யார் என்று கூட தெரியாமல் இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் இந்த முட்டாள் பயலை காவல்துறை இன்னும் கைது செய்யாமல் இருக்கின்றது.
இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பேஸ்புக்கில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பதிவிட்டதால் அவமானம் தாங்க முடியாமல் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்ட வினுப்பிரியா வழக்கு தமிழக காவல்துறையின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தி உள்ளது. பேஸ்புக்கில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அந்தப் புகைப்படத்தை நீக்கக் கோரியும், வினுப்பிரியாவின் தந்தை அண்ணாதுரை காவல்துறையை நாடி இருக்கின்றார். வழக்கம் போல காவல்துறை எவன் எக்கேடு கெட்டு நாசமாய் போனால் எனக்கென்ன என்னுடைய பணி இழவு வீட்டில் கூட பொறுக்கித் தின்பதுதான் என்ற அடிப்படையில் செயல்பட்டு இருக்கின்றது. வழக்கை பதிவு செய்யாமல் அவரை அலைய வைத்தது மட்டும் இல்லாமல் அவரிடம் இருந்து இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும், ஒரு செல்போனையும் லஞ்சமாக வாங்கி இருக்கின்றது மானமுள்ள தமிழ்நாடு காவல்துறை. பேஸ்புக்கில் இருந்து அந்த ஆபாச படத்தை நீக்குவதற்கு 20 நாட்களுக்கு மேல் ஆகும் என்று காவல்துறை சொன்னதால் தான்,வினுப்பிரியா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். ஆனால் வினுப்பிரியா இறந்த சில மணி நேரங்களில் அந்தப்படம் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் ஒரு 20 நாட்களுக்கு அண்ணாதுரையிடம் இருந்து பிச்சை எடுப்பதற்குக் காவல்துறையினர் திட்டமிட்டு இப்படி ஒரு பொய்யைச் சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட உடன் எங்கே தான் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அந்தப் படத்தை நீக்கி இருக்கின்றார்கள்.
ஒரு பக்கம் ஒரு பார்ப்பன சாதிப் பெண்ணின் கொலைக்காக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும் அரசின் அனைத்துக் கட்டுமானங்களும் இன்னொரு பக்கம் பார்ப்பன சாதி இல்லாத மற்றொரு பெண்ணை கொன்று போட்டிருக்கின்றது. சுவாதியின் கொலைக்கு என்ன காரணம் என்று நமக்குத் தெரியாது. ஆனால் வினுப்பிரியாவின் தற்கொலைக்கு இந்தக் காவல்துறையும், அரசுமே பொறுப்பு. காவல்துறை ஆறுதலாக ‘நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் நீ பயப்படதே’ என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் கூட அந்தப் பெண் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டார். இப்படி ஒரு சிக்கலான பிரச்சினையில் மாட்டிக் கொண்ட அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் சொல்ல துப்பில்லாத காவல்துறை வெட்கமானமே இல்லாமல் பொறுக்கித் தின்பதற்கு மட்டும் கூச்சம் இல்லாமல் கேட்டிருக்கின்றது.
மனித விழுமியங்கள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுச் இந்தச் சமூகம் நிற்கின்றது. உடுமலைபேட்டை சங்கரை நடு ரோட்டில் சாதிவெறியர்கள் வெட்டியபோது சாவகாசமாக நின்று வேடிக்கை பார்த்த அதே கூட்டம் தான் இன்று சுவாதியைக் கொன்ற போதும் வேடிக்கை பார்த்தது. சங்கர் கொடுத்த புகாரை மயிர் அளவுக்குக் கூட மதிக்காமல் நடந்ததால்தான் அவர் அநியாயமாக தேவர்சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார். வினுப்பிரியாவின் தந்தை கொடுத்த புகாரை அலட்சியப்படுத்தியதால்தான் இன்று வினுப்பிரியாவும் இறந்திருக்கின்றார். மனித உயிர்களை மிகக் கீழ்த்தரமாக பார்க்கும் போக்கு நம் சமூகத்தில் அதிகரித்துள்ளது.
ஒரு பக்கம் பெண்களை உடைமையாய்ப் பார்க்கும் ஆணாதிக்க சமூகம் அவர்கள் தனக்குக் கிடைக்காத போது பழி தீர்த்துக் கொள்கின்றது. ஒரு பெண்ணின் முழு வாழ்வும் தனக்குக் கட்டுப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்று அந்த ஆணாதிக்க மனோபாவம் நினைக்கின்றது. அவள் உடலை நுகர வேண்டும்; இல்லையா வெட்டி வீழ்த்த வேண்டும் அதுவே ஆண்மைக்கு அழகு என்று அது காலம் தோறும் கற்பித்துவருகின்றது. சாதியும் மதமும் அதற்கு அங்கீகாரம் வழங்குகின்றது. அரசு கட்டுமானங்களும் இந்த அடித்தளத்தின் மீதே செயல்படுகின்றன. இதற்கு எதிரான தொடர்ச்சியான சமூக பரப்புரை இல்லாமல் இந்த அவலங்களை நம்மால் முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்று தோன்றவில்லை.
- செ.கார்கி