1917ஆம் ஆண்டு இரஷ்யாவில் நடந்த அக்டோபர் புரட்சி வரலாற்றில் நிலையான இடம்பெற்றுவிட்டது. அதுபோல் தமிழ்நாட்டில் 2017இல் மாணவர்கள் - இளைஞர்கள் நடத்திடிய ‘தைப்புரட்சி’யும் தமிழக உரிமை மீட்பு வரலாற்றில் நிலையானதோர் இடத்தைப் பெறும்.

பாரதிய சனதா, காங்கிரசு ஆகிய தேசிய அரசியல் கட்சிகளும், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும் வெறும் ஏழு நாள்கள் மட்டும் நடந்த போராட்டமாக இதை ஒதுக்கிவிடமுடியாது. ஏனெனில், தில்லியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது காங்கிரசும், பாரதிய சனதா கட்சியும் தமிழர் களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் எதிராக வஞ்சகமாகச் செயல்பட்டதையும், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வெறும் வாய்வீரம் பேசிக்கொண்டு தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்கத் தவறியதையும் ஏழு நாள் போராட்டக் காலத்தில், இளைஞர்கள் அம்பலப்படுத்தினார்கள். கட்சி அரசியல் என்கிற குறுகிய வட்டத்தை உடைத்தெறிந்து, மக்களுக்கான அரசியலுக்காகத் தமிழர்கள் அணிதிரள வேண்டும் என்கிற உரத்த சிந்தனையை விதைத்திருக்கிறார்கள்.

marina police attack

1965இல் மாணவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது. சுதந்தரம் பெற்றது முதல் ஆட்சியில் இருந்த காங்கிரசுக் கட்சி மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. 2017 தைப்புரட்சி அரசியலில் வெளிப்படையான மாற்றங்களை உண்டாக் காவிட்டாலும், ஓர் உள்ளுறை ஆற்றலாக அரசியலை வழிநடத்தும் என்பது உறுதி.

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் ஒரு குறிப்பிட்ட கொதி நிலையில் தன்மீது மூடப்பட்டுள்ள தட்டைத் தூக்கி எறியும். ஆனால், சமூகத்தில் மக்கள் மனங் களில் அழுத்தம் பெற்றுவரும் உணர்வுகள் எப்போது வெடித்துக் கிளர்ந்தெழும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஆயினும், பெரிய நீர்த்தேக்கத்தின் அணையில் ஓரிடத்தில் ஏற்படும் சிறு பிளவால், அணையை உடைத் துக் கொண்டு நீர் பெருவெள்ளமாய்ப் பாய்கிறது. அதுபோல், பல ஆண்டுகளாகத் தமிழர்களின் உணர்வு கள் நசுக்கப்பட்டதாலும், உரிமைகள் பறிக்கப்பட்ட தாலும் படிப்படியாகப் பெருகிவந்த உள்ளக் குமுறல்கள், வாடிவாசலில் சல்லிக்கட்டுக் காளைகள் சீறிப் பாய்வது போல், சல்லிக் கட்டுக்கான தடையை நீக்கு என்கிற போராட்டத்தின் வாயிலாக வீறுகொண்டு வெளிப்பட்டன.

பீட்டா அமைப்புத் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் 2014 மே 7 அன்று தமிழ்நாட்டில் சல்லிக் கட்டு நடத்துவதற்குத் தடைவிதித்தது. அப்போதுதான் நரேந்திர மோடி தலைமையில் நடுவண் அரசில் பா.ச.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக 2015, 2016 ஆம் ஆண்டுகளில் தை மாதத் தில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூரிலோ வேறு எந்த இடத்திலோ சல்லிக் கட்டை நடத்த முடியவில்லை.

எனவே 2016ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே நடுவண் அரசும், மாநில அரசும் உச்சநீதிமன்றம் சல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கிட உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நடுவண் அரசில் துணை அமைச்சராக உள்ள பொன். இராதாகிருட்டிணன் 2017 தை மாதம் சல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என்று உறுதிமொழி அளித்துவந்தார். முன்னாள் முதலமைச்சர் செயலலிதா வின் மறைவுக்குப்பின் முதலமைச்சரான ஓ. பன்னீர் செல்வமும் சல்லிக்கட்டு நடைபெறும்; நம்பிக்கையுடன் இருங்கள் என்று கூறி வந்தார்.

ஆனால் நடுவண் அரசும், தமிழக அரசும் சல்லிக் கட்டு நடைபெறுவதற்கான திட்டவட்டமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. தாம் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்த மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் மக்கள் தடையை மீறி, 16.1.2017 திங்கள் கிழமை அன்று சல்லிக்கட்டு நடத்திட திரண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் மக்கள் அங்கு சென்றனர். அலங்காநல் லூரில் சில காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தடையை மீறிச் சல்லிக்கட்டு நடத்தியதற்காக அலங்காநல்லூரில் 224 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இச்செய்தி இணையதளம் மூலம் இளைஞர்களிடையே காட்டுத் தீயாகப் பரவி அவர்களைக் கொந்தளிக்கச் செய்தது.

அதன் விளைவாக, அடுத்த நாள் 17.1.2017 செவ்வாய்க்கிழமை காலையே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், சேலம், வேலூர் என தமிழகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். தன்னெழுச்சியாக உருவான இப்போராட்டத்தில் சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கவும், பீட்டா அமைப்புக்குத் தடைவிதிக்கவும் முழக்க மிட்டனர். ஒருநாள் போராட்டமாக ஓய்ந்துவிடும் என்று அரசு நினைத்தது. ஆனால் மாணவர்களும் இளை ஞர்களும் இரவு பகலாக அங்கேயே தங்கினர். சல்லிக் கட்டு நடத்துவதற்கான சட்டம் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று அறிவித்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் 17.1.2017 அன்று இரண்டாயிரம் பேருடன் தொடங்கிய போராட் டத்தில் அடுத்த நாளே இலட்சக்கணக்கில் இளைஞர்கள் குழுமினர். மெரினா கடற்கரையில் மட்டுமின்றி, சென்னையில் பல்வேறு இடங்களில் சல்லிக்கட்டுக் கான தடையை நீக்கக் கோரி போராட்டங்கள் நடந்தன. எல்லா மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்தது. எனவே முதலமைச்சர் பன்னீர்செல்வம் 18.1.2017 புதன்கிழமை அன்று மாலை தில்லி சென்றார்.

19.1.2017 அன்று பிரதமர் மோடியைச் சந்தித்து நடுவண் அரசு அவசரச் சட்டம் இயற்றுமாறு கோரினார். உச்சநீதிமன்றத்தில் சல்லிக்கட்டு தொடர்பான வழக்கு இருப்பதால், நடுவண்அரசு அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது என்று கூறி தன் பொறுப்பைத் தட்டிக் கழித்தார். உச்சநீதிமன்றம், காவிரி வழக்கில் நடுவண் அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய போது, அவ்வாறு கூறுவதற்கு உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறியவர்தான் இந்த மோடி.

ஆயினும் மோடி, தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு நடுவண் அரசு துணை நிற்கும் என்று முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தார். அன்று மாலையே நடுவண் அரசின் ஒப்புதலுடனும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடனும் தமிழ்நாடு அரசே சல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. 20.1.2017 அன்று அவசரச் சட்ட வரைவு நடுவண் அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப் பப்பட்டது. 21.1.2017 சனிக்கிழமை மாலை தமிழக ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

இதற்கிடையில், சென்னை மெரினா கடற்கரையில் 19.1.2017 அன்று 5 இலட்சம் மக்கள் திரண்டனர்; அதற்கு அடுத்த நாள் இந்த எண்ணிக்கை 7 இலட்ச மாக உயர்ந்தது. தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 20.1.2017 வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் கூடினர். இலட்சக்கணக்கில் குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரையில் திரண்டனர். இப்போராட்டத்தின் மய்யக் களமாக மெரினா கடற்கரை விளங்கியது.

சல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தியே இதுவரை தமிழகம் கண்டிராத அளவில் மக்கள் போராட்டக் களத்தில் திரண்டனர் என்பது பொதுவான உண்மையாகும். 1930இல் காந்தியார் உப்பை மய்யப்படுத்தி மக்களை அணிதிரட்டினார். அதன் நோக்கம் ஆங்கில அரசுக்கு எதிரான சுதந்தரப் போராட்டமாக இருந்தது. அதுபோல் சல்லிக்கட்டை மய்யப்படுத்தி மக்கள் திரண்டபோதிலும், பல ஆண்டுகளாக நடுவண் அரசு தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணித்தது, தமிழர்களின் - தமிழ் நாட்டின் உரிமைகளைப் பறித்தது குறித்து மக்களிடம் கனன்று கொண்டிருந்த சினம் சல்லிக்கட்டுப் போராட் டத்தினூடாக வெடித்துக் கிளம்பியது.

2009இல் இந்தியப் படையின் துணையுடன் ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சம் ஈழத் தமிழர் சிங்களப் படையினரால் படுகொலை செய்யப் பட்டமையும், அதற்குப் பின்னரும் சிங்களப் பேரின வாத அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட்ட மையும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மீத்தேன், கெயில் முதலான பிரச்சனைகளில் தமிழர் களின் நலன்களை நடுவண் அரசு புறக்கணித்தமை யும், 2014இல் மோடி ஆட்சிக்கு வந்தபின் கூர்மைப் படுத்தப்பட்ட இந்தி ஆதிக்கம், சமற்கிருத திணிப்பு, இந்துத் துவ ஆதிக்கம், புதிய கல்விக் கொள்கை, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை முதலானவை நடுவண் அரசின் மீது தமிழர்கள் மனக்கொதிப்படையச் செய்திருந்தன. எனவே மெரினா போராட்டக் களத்தில் மோடிக்கு எதிராகவும், நடுவண் அரசின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் முழக் கங்கள் எழுப்பப்பட்டன. தமிழர்களை இனி அடக்கி ஒடுக்க முடியாது என்பதன் வெளிப்பாடாக “தமிழன்டா”, “தமிழச்சிடா” என்கிற கொடிகள் பறந்தன; இவையே முழக்கங்களாக ஒலித்தன. தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க முடியாத நிலையில் இந்திய ஆட்சியில் ஏன் இருக்க வேண்டும்? தமிழ்நாடு தனிநாடாகிட வேண்டும் என்றும் பேசினர்.

அதேபோன்று ஆதரவளிக்க வந்த தமிழக அரசியல் கட்சிகளையும் தவிர்த்தனர். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இப்போராட்டத்தை முன்னெடுத்தால் தான் அனைத்துத் தரப்பு மக்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்று போராட்டக்கள இளைஞர்கள் கருதினர். மேலும் தமிழர்களின், தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் மீதும் வெறுப்பு கொண்டிருந்தனர்.

ஆயினும் மெரினா கடற்கரையில் பல இலட்சம் மக்கள் ஆர்த்தெழுந்து திரண்ட போதிலும், இளைஞர் கள் இப்போராட்டத்தை அமைதியான முறையில், கண்ணியம் கட்டுப்பாடுடன் உலகமே வியக்கும் வண்ணம் நடத்தினர். எல்லா வகையிலும் தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக் கொண்டனர். ஆண், பெண் என இளைஞர்கள் தோளோடு தோள் நின்று இரவும் பகலுமாகப் போராட்டக் களத்தில் கூடியிருந்த நிலையிலும் பாலியல் தொடர்பான நெறிபிறழ்ந்த சிறு நிகழ்வும் உண்டாகாமல், தோழர்களாகவே இருந்தனர். திருட்டு என்பதே நடக்கவில்லை. மது அருந்திய ஒரு இளைஞன்கூட களத்தில் இல்லை. போதிய கழிப்பறை வசதிகள் இல்லை என்பதையும் பொருட்படுத்தாது கடுங்குளிரையும் வெய்யிலையும் இன்னல் எனக் கருதாது, இளைஞர் பட்டாளம் போராடியமை பொது மக்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. வாக்கு வங்கி அரசியல் கட்சிகளையோ அதிர்ச்சியில் உறைய வைத்தது.

21.1.2017 சனிக்கிழமை மாலை சல்லிக்கட்டை நடத்துவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளிவந்தது. போராட்டக் களத்தில் இருந்த இளைஞர்களிடம் இந்த அவசரச் சட்டம் தற்காலிகமான தாக இருக்குமோ என்கிற எண்ணம் எழுந்ததால், நிரந்தரத் தீர்வு வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்தனர்.

அய்ந்து நாள்களாக அல்லும் பகலும் பேரெழுச்சி யுடன் போராடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம், இந்த அவசரச் சட்டம் சல்லிக்கட்டு நடத்துவதற் கான தடைகளை எவ்வாறெல்லாம் தகர்த்துள்ளது என்று தமிழக அரசு விளக்கிக் கூறத் தவறிவிட்டது. குறைந்தது முதலமைச்சர் பன்னீர்செல்வம் காணொளிப் பதிவு மூலம் விளக்கியிருக்கலாம். அவ்வாறு செய் திருந்தால் போராட்டம் அமைதியான முறையில் முடிவுக்கு வந்திருக்கும்.

மாறாக, சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்திற்கான புகழையும் பெருமையையும் அ.தி.மு.க. ஆட்சி தனக்கு மட்டுமே உரியதாக்கிக் கொள்ள முனைந்தது. அவசரச் சட்டத்தின் கூறுகளைக்கூட தமிழக அரசு வெளியிடாமல் கமுக்கமாக வைத்திருந்தது. சனிக் கிழமை மாலை அவசரச் சட்ட அறிவிப்பு வெளியான வுடன் முதல மைச்சர் பன்னீர்செல்வம் ஞாயிறு (22.1.2017) காலை அலங்காநல்லூரில் சல்லிக்கட் டைத் தொடங்கி வைக்கப் போவதாகவும், காளை கள் துள்ளிக்குதிக்கும் என்று செய்தியாளர்களிடம் கூறிவிட்டு மதுரைக்குப் பறந்தார். அதேபோன்று ஞாயிறு காலை பல்வேறு இடங்களில் அமைச் சர்கள் சல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக் கவும் அரசும், அ.தி.மு.க.வினரும் ஏற்பாடுகளை விரைந்து செய்தனர்.

இளைஞர்களின் வீறார்ந்த போராட்டத்தின் அழுத் தத்தின் காரணமாகத்தான் தமிழக அரசும் நடுவண் அரசும் நெருக்கடிக்குள்ளாகி, ஒரே நாளில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முடிவை எடுத்தன. ஆனால் இந்த வெற்றிக்கனியை அ.தி.மு.க. அரசு தட்டிப்பறித்துத் தனதாக்கிக் கொள்ள முனைந்தது. அதனால் அ.தி.மு.க. அரசின் இந்த அடாவடித்தனத்தை முறியடிக்கும் வகையில், அலங்காநல்லூரில் முதல மைச்சர் பன்னீர்செல்வம், நத்தம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், புதுக் கோட்டை மாவட்டத்தில் ராப்பூசலில் அமைச்சர்கள் விசயகுமார், பாண்டியராசன், ஆத்தூர் கூலமேட்டில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைப்பதாக இருந்த சல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைப் போராட்டக்காரர்களும் பொது மக்களும் ஒன்றுதிரண்டு நடக்கவிடாமல் செய்துவிட்டனர். இதைத் தனக்கும் அமைச்சர்களுக்கும் நேர்ந்த அவமானமாகக் கருதிய முதலமைச்சர் பன்னீர்செல்வம் 22.1.2017 ஞாயிறு இரவு, தமிழகம் முழுவதும் ஆறு நாள்களாக அமைதி யாக இளைஞர்களால் நடத்தப்பட்டு வந்த போராட் டத்தைக் காவல்துறை மூலம் வன்முறையை ஏவி ஒடுக்குவது என்று முடிவு செய்தார்.

அத்திட்டத்தின்படி 23.1.2017 திங்கள்கிழமை விடியற்காலை சென்னை மெரினா கடற்கரையில் பத்தாயிரம் காவல் துறையினர் குவிந்தனர். மெரினா கடற்கரைக்கு எவரும் வரமுடியாதபடி வழிகள் அனைத் தும் அடைக்கப்பட்டன. இரவில் சில ஆயிரம் பேர்களாகத் தங்கி இருந்த இளைஞர்களிடம் காவல் துறையினர், “அவசரச் சட்டம் சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி விட்டது; அதனால் உடனே கலைந்து செல்லுங்கள்” என்று ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தனர். அமைச் சர்கள் செய்ய வேண்டிய வேலையைக் காவல்துறை அதிகாரிகள் கையில் எடுத்துக் கொண்டனர். வழக்கறி ஞர்கள், மற்றவர்களுடன் கலந்துபேசி முடிவு எடுக்க எங்களுக்கு நான்கு மணிநேரம் இடைவெளி கொடுங்கள் என்று மாணவர்கள் கேட்டனர். பிறகு இரண்டு மணி நேரமாவது கொடுங்கள் என்று காவல்துறை உயர் அதிகாரியிடம் கூறினர். காவல் துறை ஆணவத்துடன் இதை ஏற்க மறுத்து அவர்களை விரட்டியடித்தது. ஒரு பகுதி இளைஞர்கள் கலைந்து சென்றனர்.

இதன் எதிர்வினையாக ஐஸ்அவுஸ் காவல் நிலையம் முன் இருந்த இருசக்கர வாகனங்கள் தீயிட்டு எரிக்கப் பட்டன. அதன்பின் சென்னையின் பல்வேறு பகுதி களில் இளைஞர்களும் பொதுமக்களும் சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட் டத்தை ஒடுக்குவது என்ற பெயரில் பொதுமக்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினர்; தீயிட்டுக் கொளுத்தினர். காவல் துறையினரின் அட்டூழியச் செயல்கள் வீடியோக் காட்சிகள் மூலம் அம்பலமாயின. மெரினா கடற்கரையில் உள்ள நடுக்குப்பம் மீனவர்கள் திங்கட்கிழமை போராடிக் கொண்டிருந்த இளைஞர் களுக்குத் தண்ணீரும் உணவும் கொடுத்தார்கள் என்ற காரணத்தால், நடுக்குப்பத்தில் மீன் சந்தையின் 150 கடைகளையும், வீடுகளையும் காவல்துறையினர் எரித்துச் சாம்பலாக்கினர். வீடுகளுக்குள் புகுந்து பெண் களைக் கண்மூடித்தனமாகத் தாக்கினர். ஆண்களைக் கைது செய்தனர்.

இளைஞர்களின் போராட்டத்தை அரசு வேண்டு மென்றே திட்டமிட்டு வன்முறை மூலம் ஒடுக்க முனைந் ததன் நோக்கம், மாணவர்களோ, இளைஞர்களோ இனி எதிர்காலத்தில் போராடுவதற்குப் அஞ்சக்கூடிய மனநிலையை உண்டாக்குவதே ஆகும்.

திங்கள் மாலை ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மெரினா கடற்கரையில் இருந்த சில ஆயிரம் போராட்டக்காரர்களிடம் அவசரச் சட்டம் குறித்து விளக்கிப் பேசிய பின் பெரும்பாலானவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்கள் - இளைஞர்களின் தொடர் போராட்டத்தின் நெருக்கடி காரணமாக 25.1.2017 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுவதாக இருந்த அவசரச் சட்டம் 23.1.2017 திங்கள் மாலை 5 மணிக்குச் சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

23.1.2017 திங்கள் கிழமை மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் காவல்துறையினரின் விளக்கத்தை ஏற்று, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆனால் மதுரை, கோவை, ஈரோடு போன்ற இடங்களில் காவல்துறை வன்முறையை ஏவியும், கைது செய்தும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஏழு நாள்கள் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர்களின் போராட்டத்தைத் தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வராமல், காழ்ப்புணர்ச்சியுடன் காவல்துறையின் வன்முறை மூலம் ஒடுக்கியது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட அனை வரையும் விடுதலை செய்ய வேண்டும். நடுக்குப்பத் தில் காவல்துறை எரித்த மீன் கடைகளை அரசே கட்டித்தர வேண்டும். நடுக்குப்பம் மற்றும் அம்பேத்கர் பாலம் பகுதிகளில் வீடுகள் தாக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.

எது எப்படியாயினும் வரலாற்றில் இடம்பெற்று விட்ட இளைஞர்களின் வீறார்ந்த இந்த மாபெரும் போராட்டம் தமிழர், தமிழர் உரிமை என்கிற சிந்தனையை மக்களிடம் கொழுந்து விட்டெரியச் செய்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது.