குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் நமது இந்திய தேசம் வகுப்புவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அதிகார மமதையில் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக செய்துவருகிறது. இவற்றைக் கண்டித்து எதிர்வினையாற்றும் ஜனநாயக சக்திகளை முற்றாக ஒழித்துக்கட்டவும் அது தீவிரம் காட்டுகிறது.

jnu protest

2001 நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டி, கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தூக்கிலிடப்பட்ட அஃப்சல் குருவிற்கு 09.02.2016 அன்று மூன்றாமாண்டு நினைவுக் கூட்டம் ஒன்றை ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சில மாணவர் அமைப்புகள் ஏற்பாடு செய்தன. இந்தக் கூட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக முழக்கங்கள் எழுந்ததாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஸ்மிருதி இராணியின் தலையீட்டினால், ஜே.என்.யூ. மாணவர்கள் 6 பேர் மீது தேச துரோக வழக்கும், இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் வழக்கும் போடப்பட்டன. உண்மையில், இந்த வழக்கு போடப்பட்டதற்கு எந்தவொரு முகாந்திரமும் கிடையாது.

இதையடுத்து, ஜே.என்.யூ. பல்கலைக் கழகமே ஒருவகையான பதட்டமான சூழலுக்குத் தள்ளப்பட்டது. அந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டார். வழக்கு போடப்பட்டிருக்கும் 6 மாணவர்களில் உமர் காலிதும் அவருடைய நண்பர்களான அனிர்பன் பட்டாச்சார்யா, ராம நாகா, அசுதோஷ் குமார், அனந்த் குமார் ஆகியோரும் சங்கப்பரிவாரங்களின் தாக்குதலுக்கு அஞ்சி 12ஆம் தேதி முதல் தலைமறைவாகினர். இதையொட்டி, தேசம் முழுவதும் மாணவர்கள் வீதியில் இறங்கி நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 17ஆம் தேதி பாட்டியாலா உயர்நீதிமன்றத்தில் கண்ணையா ஆஜர்படுத்தப்பட்டபோது, வழக்கறிஞர்கள் உடையணிந்திருந்த சங்கப்பரிவார கும்பல் கண்ணையாவையும் செய்தி சேகரிப்பவர்கள் உட்பட பலரை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். பாஜக-வின் சட்டமன்ற உறுப்பினரான ஓ.பி. ஷர்மா கண்ணையாவைத் தாக்கிய படங்களும் ஊடகத்தில் வெளியாகின.

ஆராய்ச்சி மாணவரான உமர் காலித் பாகிஸ்தானுக்கு சென்றுவந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 'என்னிடம் பாஸ்போர்ட்டே இல்லை. நான் இரு முறை பாகிஸ்தான் சென்று வந்திருக்கிறேனாம்..' என்று உமர் காலித் எள்ளல் தொனியில் கேள்வி எழுப்பியிருந்தார். சங்கப் பரிவாரங்கள் காலிதின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டலும், அவரது சகோதரிக்கு பாலியல் பலாத்கார மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறினார்.

இந்தப் பிரச்னை தொடங்கியபோது, இடதுசாரிகளே அஃப்சல் நினைவுக் கூட்டத்தில் தேசவிரோதமான கோஷங்களை எழுப்பியதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. பின்னர் ஆம்ஆத்மி வெளியிட்ட வீடியோவின் மூலம், "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என முழங்கியவர்களே ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.தான் என்பது புலப்பட்டது. அந்த விஷயத்தில் சுதிர் சவுத்ரி என்பவரின் பெயரும் வெளியானது. ஒரு மாநிலத்தில் பல்கலைக் கழக வளாகத்தில் நடக்கும் ஒரு நிகழ்வில் இந்துத்துவ இயக்கங்கள் நுழைந்து, அரசை பக்கபலமாக வைத்துக்கொண்டு, தமது 'தேச பக்தியை' வெளிப்படுத்த இப்படியான ஈனச்செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன.

ஜே.என்.யூ மாணவர்களின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிதற்றினார். ட்விட்டரில் ஹஃபீஸ் சயித் ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானியர்கள் இருக்கவேண்டும் என நிலைத்தகவல் வெளியிட்டதாக கூறினார்கள். இறுதியில் அதுவும் போலியானது என்பது நிரூபணமானது.

இருப்பினும் மாணவர்களை பாகிஸ்தானோடு தொடர்புபடுத்தியே சங்கப்பரிவாரங்கள் தமது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. சுருக்கமாக பா.ஜ.க-வின் நகர்வுகளைச் சொல்வதானால், பா.ஜ.க வின் தேச பக்தியைப் பறைசாற்றுவதற்கு அவர்களுக்கு எதிரி அவசியமாகிறது. அதற்கு பாகிஸ்தானும் இந்திய முஸ்லிம்களும் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி தனது அதிகாரத்தை பா.ஜ.க தக்கவைத்துக் கொள்கிறது. அத்தோடு, தன் ஆட்சியின் தோல்வியை மூடி மறைக்கின்றது. 

ஜே.என்.யூ. விவகாரத்தில், தலைமறைவான உமர் காலித் உட்பட 5 மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை (21.02.16)) இரவு பல்கலைக்கழகத்துக்கு திரும்பினர். JNU வளாகத்தில் இருந்த இம்மாணவர்களைக் கைது செய்வதற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் அனுமதிக்கவில்லை. வளாகத்தினுள் நுழைந்து கைது செய்வதற்கான அனுமதியும் போலீசுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், காலீத் மற்றும் அனிர்பன் ஆகிய இரு மாணவர்களும் புதன்கிழமை வரை கைது செய்ய தடை விதிக்குமாறும், சரணடையும்போது போலீஸ் பாதுகாப்பு கொடுக்க உத்தரவிடுமாறும் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

புதன் கிழமை தாங்கள் விரும்புகிற இடத்தில் சரணடையலாம், அதற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிடவே, உமர் காலீதும் அனிர்பனும் செவ்வாய் இரவே வளாகத்திலிருந்து வெளியாகி போலீஸாரிடம் சரணடைந்தனர். இந்த இருவரைத் தவிர அசுதோஷ் குமார், அனந்த் பிரகாஷ், ராமா நாகா ஆகிய மாணவர்கள் ஜே.என்.யூ வளாகத்திலேயே இருக்கின்றனர். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என அந்த மாணவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த காலத்தில் கல்வி நிறுவன வாளங்களில் பா.ஜ.க. அரசின் நேரடித் தலையீட்டில் எழுந்த பிரச்னைகள் இங்கே நினைவுகூரத்தக்கன.

கடந்த ஆண்டு மே மாதம் ஆதிக்க சாதியினரின் கோட்டையான சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இயங்கிய அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்திற்கு (APSC) ஐ.ஐ.டி. நிர்வாகம் தடை விதித்தது. மோடி அரசின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்தார்கள் என்பதே இவர்களின் மீதான குற்றச்சாட்டு. இந்தி மொழி திணிப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை போன்றவற்றை APSCயைச் சார்ந்தவர்கள் எதிர்த்தனர். மேலும், அம்பேத்கர், பெரியாரின் சிந்தனைகளை மாணவர்களிடம் கொண்டுசென்றனர். 

இதனிடையே, மோடிக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் அ.பெ. படிப்பு வட்டத்தினர் ஈடுபடுவதாகச் சொல்லி, ஒரு மொட்டைக் கடுதாசி ஒன்று பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு வந்ததின் பேரில், APSCக்குத் தடை விதிக்கப்பட்டது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கொடுத்த அழுத்தத்தினாலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த விவகாரத்தில், APSC மீதான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதிலும் உள்ள ஜனநாயக சக்திகளும், குறிப்பாக பல்வேறு மாணவர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, APSC மீதான தடை நீக்கப்பட்டது. இருப்பினும், இனிமேல் அங்கே மாணவர் அமைப்புகள் முன்பைப் போல் சுதந்திரமாக இயங்க இயலாது என்பது உண்மை.

இதே போல், புனே திரைப்படக் கல்லூரியின் (FTII) இயக்குநராக தீவிர இந்துத்துவாவாதியான கஜேந்திர சவுகானை நியமித்தது மோடி அரசு. நிர்வாகக் குழுவிலும் தனக்குச் சாதமானவர்களைக் கொண்டுவந்தது. இதை எதிர்த்து புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கடுமையாகப் போராடினர். இறுதியில், போலீசின் தடியடியே அவர்களுக்குப் பலனாகக் கிடைத்தது. கஜேந்திர சவுகான் பதவிக்கு வருவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

கஜேந்திர சவுகான் அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் தருமன் வேட மேற்று நடித்ததைத் தவிர, திரைப்படத் துறையில் எந்தவொரு சாதனையும் நிகழ்த்திடவில்லை. 1989ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆபாசத் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இராமாயணத்தில் நடித்ததைத் தவிர வேறு எந்தத் தகுதியும் திறமையும் இல்லாதவரை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக பா.ஜ.க அமர்த்தி இருக்கும்போது, கஜேந்திர சவுகானை FTII இயக்குநராக்கியதில் வியப்பேதுமில்லை.

கடந்த ஜனவரி 17ஆம் நாள் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவன் ரோஹித் வெமுலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலைக்கு பின்னணியிலும் பா.ஜ.க அரசு தான் இருந்தது!

அரசின் ஜனநாயக விரோதமான அத்துனை செயல்பாடுகளையும் கண்டித்துவந்த ரோஹித், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு (ASA) எனும் மாணவர் அமைப்பில் செயல்பட்டு வந்தார். சாதிக் கொடுமைகள், மதவாதம், மரண தண்டனை, மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அநீதிகளுக்கெதிராக இந்த அமைப்பு தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தது. 

ஆர்.எஸ்.எஸ்.-இன் வகுப்புவாத கருத்துகளை பல்கலைக்கழக வளாகத்தில் பரப்பும் ஊதுகுழலான ஏ.பி.வி.பி.-இன் சுஷில் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ASA பற்றி அவதூறுகளை பதிவு செய்தார். ASA அமைப்பினர் இதைக் கண்டித்த பிறகு அந்தப் பதிவை நீக்கியிருக்கிறார். பின்னர், ASA அமைப்பினர் தன்னை கடுமையாகத் தாக்கியதாக கல்லூரி நிர்வாகத்திலும் காவல் துறையிலும் புகார் அளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து ரோஹித் வெமுலாவையும் அவரது நண்பர்களையும் பல்கலைக் கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

இறுதியில், ஏ.பி.வி.பி. கூறிய குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என்பது நிரூபணமான பிறகும் அந்த அமைப்பினரின் மீது நடவடிக்கை எடுக்காமல் ASAவை சார்ந்த மாணவர்களுக்கே நிர்வாகம் தொந்தரவு கொடுத்தது. காரணம், அங்கே துணை வேந்தராக இருந்த அப்பாராவ் பா.ஜ.க-வின் கைப்பாவையாகவே செயல்பட்டார். மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு அறிவுருத்தியதின் விளைவால் ரோஹித் வெமுலாவும் அவனுடைய தோழர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, விடுதியை விட்டே விரட்டப்பட்டனர். மேலும் அவர்கள் வகுப்பறையைத் தவிர வேறெங்கும் அனுமதிக்கப்படவில்லை. இப்படி ஆளும் வர்க்கம் கொடுத்த நெருக்கடியால் ரோஹித் வெமுலா தூக்கிட்டுக் கொண்டார். இதை ஒரு நிறுவனக் கொலைதான் என்று மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலர் உறுதியாகவும் சரியாகவும் சுட்டிக்காட்டினர்.

பாசிச நடவடிக்கைகளையும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்போது அதற்கெதிராக மாணவர்களால் கருத்துரைக்கக்கூட முடிவதில்லை. அதிகார பலத்தைக் கொண்டு மாணவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். கல்வி நிறுவன வளாகங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தங்களுக்குத் தகுந்த அமைவிடமாக மாற்றவேண்டும் என அது கணக்குப் போடுகிறது. இந்த அரசியல் செயல்திட்டங்களுக்கு பெரும் இடையூறாய் இருக்கும் மாணவர்களுக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் பல்வேறு கெடுபிடிகளைக் கொடுத்துவருகிறது.

ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கும் தைரியத்தில் கல்வி நிறுவன வளாகங்களில் ஏ.பி.வி.பி.-யின் அட்டுழியங்கள் அதிகரித்துவிட்டன. சமீபத்தில், JNU மாணவர்களுக்கு ஆதரவாக லக்னோவில் ஜனநாயக ரீதியில் கையெழுத்துப் பிரச்சாரம் நடத்திய இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்த தாரிக் அமீன் என்ற மாணவனைக் கொலைவெறியுடன் ABVPயினர் தாக்கியுள்ளனர்.

சென்னை IITஇல் APSCக்கு தடை, புனே திரைப்பட கல்லூரி விவகாரம், ரோஹித் வெமுலா தற்கொலை முதலிய எல்லாவற்றிலும் மத்திய அரசின் தலையீடு இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் எனும் இந்துத்துவ அடிப்படைவாத இயக்கத்தின் மறைமுகமான செயல்திட்டங்களை முன்னெடுக்கும் கருவியாகவே தற்போதைய மத்திய அரசு செயல்படுகிறது.

கல்வித் துறையையே காவிமயமாக மத்திய அரசு மிகவும் முனைப்புடன் செயல்படுகிறது. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுத் (NCERT) தலைவராக, இந்துத்துவவாதியான தீனநாத் பத்ராவை நியமித்ததும், இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்திற்கு (ICHR) ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சுதர்சன ராவ்வை அமர்த்தியதும் இதற்கோர் உதாரணம். 

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய காய் நகர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. உண்மையில், அடித்தள மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுவந்த இந்திய மரபில் அவர்களுக்குக் கல்வி வழங்கியது சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள்தான். பா.ஜ.க ஆட்சியில் அவை குறிவைக்கப்படுகின்றன. மேற்கண்ட இரு பல்கலைக் கழகங்களின் சிறுபான்மை அந்தஸ்தை நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறியவுடன், எதிர்க் கட்சி எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. ஆட்சி, பதட்டமான சூழலுக்கு இந்தியாவை கொண்டுவந்துள்ளது. தீவிர வலதுசாரி, எதேச்சதிகாரப் போக்கை அரசு மேற்கொள்கிறது. தேச பக்தி எனும் முகமூடியைப் போட்டுக்கொண்டு, தனது மக்களுக்கு எதிரான நகர்வுகளை அது மேற்கொள்கிறது. சமீபத்தில் சேவை நிறுவனங்களைப் பன்னாட்டு பெருமுதலைகளுக்குத் தாரை வார்க்கும் காட்ஸ் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இதில் கல்வித் துறையும் பறிபோயுள்ளது.

எதிர்கால தலைமுறையினருக்குப் பெரும் ஊரு விளைக்கும் அரசின் செயல்பாடுகளை எதிர்த்து, மாணவர்கள் போராடி வருகின்றனர். ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்திற்கே விரோதமாக அரசின் செயல்பாடுகள் இருப்பதால், மாணவர் போராட்டம் வலுவடைந்துள்ளது.

நாகூர் ரிஸ்வான் 

Pin It