கல்வி மறுக்கப்பட்ட நம் சமூகத்தில், கடந்த சில பத்தாண்டுகளில்தான் பார்ப்பனர் அல்லாதாரில் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் உருவாகி இருக்கின்றனர்.

பார்ப்பனச் சமூகமடைந்த முன்னேற்றத்தை, வளர்ச்சியை எட்ட இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்பட்டது, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் கொண்டுவரப்பட்டது, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படுவது என்று தொடர்ந்து பார்ப்பனர் அல்லாதாருக்கானக் கல்வி வாய்ப்பு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்த வரிசையில் இன்னும் ஒரு மிகப்பெரும் சோதனை கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஏழை எளிய கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கின்ற குறிக்கோளின்றி தட்டுத் தடுமாறி படித்துக் கொண்டிருக்கின்றனர்.

மாணவர்கள், இளைஞர்கள் இப்படி போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்கவே தமிழக அரசு பெரும் கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேபோல் இணைய வழியில் சூதாட்டத்திற்கு அடிமையாகிப் பல்வேறு மாணவர்கள், கல்வியிலிருந்து கவனச்சிதறல் பெற்றுக்கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இதில் பலர் தற்கொலை செய்து கொள்ளும் செய்தியையும் நாம் அண்மைக் காலங்களில் பார்த்து வருகிறோம். இதில் மிகப் பெரும்பான்மையாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர் இதற்கானத் தரவுகள் ஏதும் இன்னும் திரட்டப்படவில்லை. அரசு இந்த நிலையை அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் ஆராய்ந்து மாணவர்களின் கல்விக்கண் மீண்டும் மூடிவிடாது காத்திட வேண்டும்.

அவரவர் குலத் தொழிலைச் செய்ய வழிவகை செய்யும் புதிய கல்விக் கொள்கையை நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிற இயக்கம் வேளையில், கல்வியை கற்க முடியாமல் போதை பழக்கத்தாலும் சூதாட்டத்தாலும் வேறு வழியின்றி குலத் தொழிலுக்கே செல்லும் அவல நிலை இங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் அதிக கவனம் செலுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கல்வித்திட்டம் என்பது மாணவர்களைப் பகுத்தறிவு ரீதியாக சிந்திக்கத் தூண்டுவதாகவும், கேள்வி கேட்கும் திறனையும், அறிவியல் மனப்பான்மையையும், வளர்க்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதற்கு, மதம் சொல்லிக் கொடுக்கும் பழக்கவழக்கங்களும் சடங்குகளும் திணிக்கப்படுகின்றன. சிந்திக்கும் திறன் முளையிலேயே மழுங்கடிக்கப்பட்ட நிலையில், சிறந்த அறிவார்ந்த சமூகம் உருவாக கல்வியே நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம்.

எனவே ஒன்றிய அரசின் மதம் சார்ந்த கல்விக் கொள்கையை நாம் ஒருபுறம் எதிர்க்கும் வேளையில், இன்னொரு புறம் நம்முடைய மாநிலக் கல்விக் கொள்கை மாணவர்களின் இன்றைய நிலையை ஆய்வு செய்து அவர்களுடைய இளமைப்பருவப் பிரச்சனைகளைத் தெளிவுடன் அணுகக் கற்றுக் கொடுப்பதாகவும், கல்வியின் மூலம் அறிவியல் மனப்பான்மையும், பகுத்தறிவுப் பார்வையும் உண்டாகும் வகையில் அமைக்கப்பெற்று விரைந்து நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் புதிய மத-போதையின் கல்விக் கொள்கையின் ஆபத்தை உணர்ந்து, எதிர்காலச் சந்ததியினரின் கல்விக்கண் மூடிவிடாது காத்திடப், பணியாற்றிட வேண்டுவது கடைமையாகும்!

- மா.உதயகுமார்

Pin It