தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களும் அவர்களின் பெற் றோர்களும் அடுத்த கல்வி ஆண்டில் (2017-2018) மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நெறிமுறை என்ன வாக இருக்கும் என்ற வினாவுக்கு விடைதெரியாமல் பெரும் குழப்பத்திலும் மனக்கவலையிலும் இருக்கின்ற னர். மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பயிலும் மாணவர் களுக்கே இது பெரும் சிக்கலாக இருக்கிறது.
2016ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நடந்த 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத் தின்கீழ் 8,33,682 பேர் தேர்வு எழுதினர். மத்திய கல்வி வாரியப் பாடத் திட்டத்தின் (CBSE) கீழ் தமிழ் நாட்டில் தேர்வு எழுதியவர் எண்ணிக்கை 13,625 ஆகும். தமிழ்நாட்டு மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேருவதற்குத் தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வை (National Eligibility - cum - Entrance Test - NEET- நீட்) அடுத்த கல்வி ஆண்டில் எழுத வேண்டிய சூழ்நிலையே இருக்கிறது.
மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வின் வினாக்கள் மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்படுவதால் அப்பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் இந்திய அளவில் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்டத்தின்கீழ் பனிரெண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்கொண்டு எழுதுவதில் இயலா மைகள் இருக்கின்றன. மேலும் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்கும் என்பதால் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு மேலும் சிக்கலான நிலை ஏற்படுகிறது.
மத்தியப் பாடத் திட்டமும் மாநிலப் பாடத் திட்டமும் 65 விழுக்காடு அளவுக்கு ஒன்றாகவே இருக்கின்றன. இருப்பினும் மத்தியப் பாடத்திட்டத்தில் தேர்வுகளில், மாணவர்கள் பாடங்களை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற திறனை அளவிடும் தன் மையில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக ஒரு வினாவுக்கு ஒத்த தன்மையில் இருப்பது போன்ற நான்கு விடைகள் தரப்பட்டு, அதில் சரியான விடையை மாணவர் தேர்வு செய்ய வேண்டும் என்கிற நுண்ணிய வகையில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இதே தன்மையில்தான் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்விலும் வினாக்கள் அமைக்கப்படுவ தால், மனப்பாடக் கல்வியின் அடிப்படையில் தேர்வு களை எழுதிப் பழகிய மாநிலப் பாடத் திட்ட மாணவர் களால் புதிய தேர்வு முறைக்கு ஈடுகொடுக்க இயலாது என்பதைத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் உணரவில்லை.
நவம்பர் மாதம் தில்லிக்குச் சென்ற தமிழ்நாட்டு அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கான அமைச்சர் ம.பா. பாண்டியராசன் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “அடுத்த கல்வி ஆண்டில் தமிழ்நாட்டு மாண வர்களும் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். பொது நுழைவுத் தேர்வு எழுதும் நிலை ஏற்படாமல் தடுத்திட அரசு முயலும். ஆயினும் மாணவர் நலன் கருதி மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் பனி ரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான பயிற்சியை அரசு அளிக்கும்” என்று கூறினார்.
அமைச்சரின் இக்கூற்று பொது நுழைவுத் தேர்வுக் கான தமிழ்நாட்டு அரசின் எதிர்ப்பைக் கைகழுவி விட்டதையே காட்டுகிறது. அமைச்சர் குறிப்பிட்டுள்ளது போல் அரசு, பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற் சியை அளித்தாலும் அது எந்த அளவுக்குத் தரமான தாகவும் மாணவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக் கும் என்பது பெரிய கேள்விக்குறியாகும். தனியார் நடத்தும் பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மய்யங் களில் அதிக பணம் செலுத்தி மாணவர்கள் பயிற்சி பெறும் நிலை இப்போதே தொடங்கிவிட்டது. பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி பெறல் என்பதே பெரிய நகரங்களில் உள்ள மேல்சாதி-பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே பயன்பெற முடியும் என்பதைக் கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன. இதனால் நகரங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் வாழும் பிற்படுத் தப்பட்ட-தாழ்த்தப்பட்ட-பழங்குடி வகுப்புகளின் ஏழை மாணவர்கள் தரமான பயிற்சி பெற வாய்ப்பில்லாமல், அவர்களின் மருத்துவப் படிப்புக் கனவு கானல் நீராகி விடும்.
தமிழ்நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி உட்பட அரசு மருத்துவக் கல்லூரி கள் எண்ணிக்கை 24 ஆகும். அரசு மருத்துவக் கல் லூரிகள் அதிகம் உள்ள சில மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்றாகும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,450 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் 15 விழுக்காடு இடங்களை 1985 முதல் நடுவண் அரசுக்கு அளிக்க வேண்டும் என்ற கேடான நிலை இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி களும் நிகர்நிலைப் பல்கலைiக்கழகங்களும் சேர்ந்து 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 3,060 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருக் கின்றன. ஆகமொத்தம் தமிழ்நாட்டில் 6,510 மருத்து வப் படிப்புக்கான இடங்கள் உள்ளன.
இந்தியாவில் மொத்தம் 412 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 190 அரசுக் கல்லூரிகளில் 25,880 இடங்கள்; 222 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 26,835 இடங்கள் என மொத்தம் 52,715 இடங்கள் உள்ளன.
2010இல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு ஆட்சியில் இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என ஆணைப் பிறப்பிக்கப் பட்டது. அதனைப் பல்வேறு மாநில அரசுகளும் தனி யார் மருத்துவக் கல்லூரிகளும் எதிர்த்தன. உச்சநீதி மன்றத்தில் பலர் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக் கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொது நுழைவுத் தேர்வு அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று 2013 சூலையில் தீர்ப்பு அளித்தது.
மருத்துவக் கல்வி வேகமாக வணிகமயமாகி வரு வதைத் தடுக்கவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒளிவுமறைவு அற்ற மாணவர் சேர்க்கை நடக்கவும், மாணவர்கள் பல நுழைவுத்தேர்வுகள் எழுதும் நிலைமை ஒழிக்கவும் பொதுநுழைவுத் தேர்வு இன்றியமை யாதது என்று 2010இல் சொல்லப்பட்டது. இப்போதும் சொல்லப்படுகிறது. ஆனால் நடுவண் அரசின் உண் மையான நோக்கம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருப்பதைப் பறிப்பதே ஆகும்.
2014இல் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பா.ச.க. அரசு நுழைவுத் தேர்வை நடத்திட முடிவு செய்தது. அதற்காக உச்சநீதிமன்றத்தில் 2013 சூலை தீர்ப்பின்மீது சீராய்வு விண்ணப்பம் செய்தது. இந்த வழக்கை விசாரித்த அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 28.4.2016 அன்று வழங்கிய தீர்ப்பில் இந்தக் கல்வி ஆண்டிலேயே பொது நுழைவுத் தேர்வு மூலம் தான் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று ஆணையிட்டது.
தமிழ்நாட்டு அரசும் மற்றும் சில மாநில அரசு களும் இதை எதிர்த்தன. எனவே நடுவண் அரசு ஓர் அவசரச் சட்டத்தின்மூலம், இந்தக் கல்வி ஆண்டுக்கு மட்டும் மாநில அரசுக் கல்லூரிகளின் மாணவர் சேர்க் கைக்குப் பொது நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளித்தது. அதனால் இந்த ஆண்டு வழக்கம் போல் பனிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் தர வரிசைப் படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங் களுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசின் தொகுப்பு அளித்த இடங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 7,31,223 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4,09,477 பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதியைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 52,715 மருத்துவ இடங்களில் சேருவதற்கு 4,09,477 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பதே இதன் பொருள். எனவேதான் மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது தகுதிகாண் தேர்வு எனப்படுகிறது.
ஆனால் தேசிய தகுதிகாண் மற்றும் பொது நுழைவுத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை நடுவண் அரசின் மக்கள் நலவாழ்வு அமைச்சகமோ, இந்திய மருத்துவக் கல்விக் கழகமோ (MCI), மத்திய இடைநிலைக் கல்வி வாரிய மோ அறிவிக்கவில்லை.
பொதுநுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியிடப் பட்டதற்கு ஒரு கிழமைக்குமுன் நடுவண் அரசின் மக்கள் நலவாழ்வு அமைச்சர் பிரகாஷ் நட்டா மாநில அரசுகளுக்கு அனுப்பிய மடலில், மாநில அரசுகள் விரும்பினால் பொது கலந்தாய்வின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதன் அடிப்படையில் மத்தியப்பிரதேச மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி களில் உள்ள இடங்களுக்குத் தேசிய தகுதிகாண் பட்டியலின் அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்தும் உரிமையைப் பெற்றது. தமிழ்நாட்டு அரசும் தனியார், மருத்துவக் கல்லூரி களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க் கையை நடத்தும் என்று பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தமிழ்நாட்டு அரசு அத்திசை நோக்கிச் சிந்திக்கவும் இல்லை.
மருத்துவத் துறை உயர் அதிகாரிகள், “அவை தனியார் மருத்துவக் கல்லூரிகள்; அவற்றில் அரசு தலையிட முடியாது” என்று கூறினர். மேலும் ஒரு உயர் அதிகாரி, மாணவர் சேர்க்கைக்கான நெறிமுறைகளை வகுத் தளிக்க வேண்டியது மத்திய இடைநிலைக் கல்வி வாரியமாகும் என்று பிதற்றி உள்ளார். பொது நுழைவுத் தேர்வை நடத்துவது மட்டுமே தன் பொறுப்பு என்றும் மாணவர் சேர்க்கைக்கான நெறிமுறைகளை வகுப்பது தன் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முன்பே அறிவித்து விட்டது. எனவே நடுவண் அரசின் மக்கள் நலவாழ்வு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி விதிகளை வகுக்க வேண்டியது இந்திய மருத்துவக் கல்விக் கழகத்தின் கடமையாகும். இவ்விரண்டுமே தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டன.
அதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், எந்த நோக்கங் களுக்காக தேசிய தகுதிகாண் மற்றும் பொதுநுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதோ, அவற்றுக்கு நேர் எதிரான வகையில் - கடந்த ஆண்டு களில் இருந்ததைவிட இன்னும் கேடான முறையில் இந்நிறுவனங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து முடிந்திருக்கிறது. மருத்துவக் கல்வி வணிகமய மாவதைத் தடுத்தல், தனியார் மருத்துவக் கல்லூரி களில் ஒளிமறைவு அற்ற வகையிலான மாணவர் சேர்க்கை என்கிற நோக்கங்கள் தவிடுபொடியாக்கப் பட்டுவிட்டன. நடைமுறைக்குவந்த முதலாண்டிலேயே தேசிய தகுதிகாண் மற்றும் பொதுநுழைவுத் தேர்வு என்பது படுதோல்வி அடைந்துவிட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடக்க வில்லை. மாறாக ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித் தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. எந்தவொரு தனியார் கல்லூரியிலும் விண்ணப்பித்த மாணவர் களில் தகுதிகாண் தர வரிசைப் பின்பற்றப்படவில்லை. விண்ணப்பித்த மாணவர்களில் கல்லூரி நிர்வாகம் நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வெள்ளையிலும் நன்கொடையைக் கறுப்பிலும் செலுத்தத் தயாராக இருந்தோர் மட்டுமே தகுதியுள்ளவர்களாகக் கருதப் பட்டுச் சேர்க்கப்பட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரி களில் தகுதி திறமையை நிலைநாட்டுவதே பொது நுழைவுத் தேர்வின் நோக்கம் என்கிற கூப்பாடு காற்றில் கரைந்து போய்விட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவப் படிப்புக் கட்டணத்தைத் தமிழக அரசு நிர்ணயம் செய் கிறது. அதைப் போலவே நிகர்நிலைப் பல்கலைiக் கழகங்களின் மருத்துவப் படிப்புக் கட்டணத்தையும் தமிழக அரசே நிர்ணயிக்க வகை செய்யப்பட வேண்டும். இந்திய மருத்துவக் கல்விக் கழகத்திடம் ‘நிகர்நிலை’ எனும் தகுதியைப் பெற்றுவிடுவதாலேயே, இவை தமிழ்நாட்டு அரசின் தொகுப்புக்கு மருத்துவ இடங்களை அளிக்காமல் நடுவண் தொகுப்புக்கு 15 விழுக்காடு இடங்கள் அளித்தது போக 85 விழுக்காடு இடங்களை யும் ஏலத்தில் விட்டுக் கொள்ளையடித்து வருகின்றன. எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மருத்து வப் படிப்புச் சேர்க்கைக்குத் தரகராக இருந்துவந்த மதன் என்பவர் 123 பேரிடம் 50 இலட்சம் முதல் 80 இலட்சம் வரை கடந்த ஏப்ரல் மாதம் என ரூ.84.27 கோடி பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். அவர் 21.11.2016 அன்றுதான் கைது செய்யப் பட்டார். இராமச் சந்திரா மருத்துவக் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி போன்ற நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு ஒரு கோடி உருவா வரை பணம் வாங்கப்படுவது ஊரறிந்த உண்மையாகும்.
இந்த ஆண்டு தேசிய தகுதிகாண் மற்றும் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலி லிருந்து கேரள அரசும் கர்நாடக அரசும் தங்கள் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி களில் சேருவதற்கான மாணவர் பட்டியலைத் தயாரித்தன. அப்பட்டியலில் தங்கள் மாநிலத்தின் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்தன. தமிழக அரசு இந்த அளவில் கூட அக்கறை காட்டாமல், தனியார் மருத்துவக் கல்லூரி களின் முறைகேடுகளுக்கும் கல்விக் கொள்ளைக்கும் துணைபோனது வெட்கக்கேடாகும்.
அடுத்த கல்வி ஆண்டில் தேசிய தகுதிகாண் மற்றும் பொதுநுழைவுத் தேர்வின் அடிப்படையில் தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், தமிழக அரசும் - அ.தி.மு.க. ஆட்சியும் கீழ்க்கண்டுள்ள வினாக்களுக்கு என்ன விடை சொல்லப் போகிறார்கள்?
* பொதுநுழைவுத் தேர்வில் இந்திய அளவில் தர வரிசையில் முதலி டத்தில் உள்ள பிற மாநில - பிற மொழி பேசும் மாணவர்கள் தமிழ்நாட்டு அரசுக் கல்லூரிகளில் சேர்ந்திட விரும்பினால் அதைத் தடுக்க முடியுமா?
* பிற மாநில மாணவர்கள் தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேரும் நிலை யில் தமிழ்நாட்டு மாணவர்கள் தற்போது பெற்று வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின் நிலை என்னவாகும்? பிற மாநில மாணவர்கள் 69 விழுக் காடு இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்க அனு மதிக்கப்படுவார்களா?
* பிற மாநில மாணவர்களின் மருத்துவப் படிப்புக் காகத் தமிழ்நாட்டு அரசு, தமிழ்மக்களின் வரிப் பணத்தைப் பெருஞ்செலவு செய்து மருத்துவக் கல்லூரிகளை ஏன் நடத்த வேண்டும்?
* தமிழ்நாட்டில் பயிலும் பிறமொழி மாணவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவம் செய்யாமல் அவர்களின் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்க முடியுமா?
எனவே இனியும் அ.தி.மு.க. ஆட்சி தூங்கிக் கொண்டிருக்காமல், தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்க நினைக்காமல், தமிழ்நாட்டு அரசின் மருத்து வக் கல்லூரிகளில் இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது அரசியலமைப்பின் கூட்டாட் சிக் கோட்பாட்டின்படி மாநில அரசின் உரிமையாகும் என்பதை நிலைநாட்டிட சிறந்த வழக்குரைஞரைக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் வாதிட வேண்டும். இதற் காகத் தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத் தைக் கூட்டி, இதுகுறித்து ஒரு தீர்மானத்தை இயற்ற வேண்டும். 2017ஆம் ஆண்டின் பொதுநுழைவுத் தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலை யில் மேலும் காலம் தாழ்த்தாமல் உறுதியான, திட்ட வட்டமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.
மக்களவையில் 37 நாடாளுமன்ற உறுப்பினர் களை வைத்துக் கொண்டுள்ள அ.தி.மு.க. நடுவண் அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். மேலும் பொது நுழைவுத் தேர்வை எதிர்க்கும் மற்ற மாநில அரசு களுடனும் கட்சிகளுடனும் ஒருங்கிணைந்து, நடை முறைக்கு வந்த முதலாண்டிலேயே முழுமையாகத் தேர்வியடைந்துவிட்ட பொதுநுழைவுத் தேர்வை அடி யோடு ஒழித்திட வழிகாண வேண்டும். குறைந்தது, அரசுக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இது மாநிலங்களின் தலையாய உரிமையாகும். இத்துடன் கல்வியை 1976க்கு முன்h வரையில் இருந்ததுபோல் மாநில அதிகாரப் பட்டியலில் மீண்டும் கொண்டுவரும் வரை போராட வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் தேசிய தகுதிகாண் மற்றும் பொதுநுழைவுத் தேர்வு நீடிப்பதாயின், அக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில், ஒற்றைச் சாளர முறையில் நடத்தப்படுவதாக இருக்க வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி இதைச் சாதிக்கத் தவறினால், கல்வியில் இருந்துவரும் 69 விழுக்காடு இடஒதுக்கீடும் காலங்காலமாகத் தமிழகத்தில் இருந்துவரும் சமூக நீதிக்கோட்பாடும் புதைக்கப்பட்டுவிடும்.
தமிழ்நாட்டின் அரசின் மருத்துவக் கல்லூரிகளில் பிறமொழி மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் படிக்கும் நிலை ஏற்பட்டால் தமிழகமே தீப்பற்றி எரியும்! தமிழக அரசுக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும் விடுக்கும் எச்சரிக்கை இது!