தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை ஊருக்கு உரைக்கும் பொருட்டு தகவல்களை வெளியிட்ட சூழலியல், மனித உரிமைப் போராளி தோழர் முகிலன் இப்போது எங்கோ மறைக்கப்பட்டிருக்கிறார்.
பிப்ரவரி 15 இரவு அவர் காணொளியை வெளியிட்டார். பின்னர் அவர் காணாமல் போய்விட்டார்.
இப்போது பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் தோழர் முகிலனை மீட்கப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் ஆகியோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கமளிக்கக் காவல் துறையினருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, “அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் “தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டக் கூடாது” என்றும் பேசியிருப்பது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இப்படி ஒரு பதிலைச் சொல்வதற்கா இங்கு ஒரு முதலமைச்சர்?
இவர்கள் யாருடைய கைப்பாவைகள் என்பதும் இங்கே தெளிவாகிக் கொண்டே இருக்கிறது.
“இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே... அவர் “அனைத்தும்” அறிவாரடி ஞானத்தங்கமே.”
இந்தப் பாடல் வரிகளிலேயே அனைத்துக்குமான விடை அடங்கியிருக்கிறது.
சமூகவிரோத சக்திகளை நாட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு வெளியில் தேடுவது போல் தேடுகிறது இந்த அரசு.
ஒருபக்கம் ஏதோ அநீதி இழைக்கப்பட்டு விட்டதைப் போல, தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம், தற்போது உயர்நீதிமன்றம் என்று நீதிப் போராட்டம் நடத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் நிறுவனம் இன்னொரு பக்கம் களப் போராளிகளைக் குறிவைத்து அச்சுறுத்துகிறது. அதற்கு அரசும், அரசைக் காக்கும் காவல் துறையும் துணை போகின்றன.
நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற சமூக செயற்பாட்டாளர்களைச் சுட்டுக் கொன்றனர். இன்று முகிலனைச் சுருட்டிச் சென்றுள்ளனர். நாட்டிற்குள் இத்தனை கொலைகள் கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? தீவிரவாதிகள் நாட்டிற்கு வெளியில் மட்டுமா இருக்கிறார்கள். வெளியில் இருக்கும் தீவிரவாதிகளை அழிக்க விமானத் தாக்குதல் நடத்தும் அரசு உள்ளிருக்கும் தீவிரவாதிகளோடு மட்டும் உறவாடுகிறது.
நாட்டைக் காக்கும் இராணுவ வீரர்களுக்கே இங்கு பாதுகாப்பில்லை, நாட்டில் நடக்கும் சுரண்டல்களைக் கேள்வி கேட்கும் கொள்கை வீரர்களுக்கு எப்படிப் பாதுகாப்பு இருக்கும்.
இராணுவ வீரர்களின் உயிர், போலி தேசபக்தியை வளர்க்க; சமூக செயற்பாட்டாளர்களின் உயிர் அப்போலி தேச பக்திக்குச் சேதம் ஏற்படாமலிருக்க.
இன்று ஒரு முகிலனைக் காவி முகில்களும், கார்ப்பரேட் முகில்களும் மறைக்கலாம். ஆனால் இந்தக் காவி முகில்களையும் கார்ப்பரேட் முகில்களையும் ஒளிக்கதிர்களால் சுட்டெரிக்கும் ஆயிரம் ஆயிரம் சூரியன்களை, பகுத்தறிவுப் பகலவனின் மண் தோற்றுவிக்கும்.