பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை டாக்டர் அம்பேத்கரின் 125 வது பிறந்தநாளை இந்த ஆண்டு நாடு முழுவதும் கொண்டாடுவது என்று முடிவு செய்திருக்கிறது.

அம்பேத்கர் தபால்தலை வெளியீடு, மும்பையில் 250 அடி உயர சிலை, அவரது படைப்புகளை அரசே அச்சிட்டு மலிவு விலையில் விநியோகம், பல்கலைக் கழகங்களில் சிறப்புப் பாடம், ஆய்வு மையங்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்தல் என்று பல கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிஹார் தேர்தல் களத்தில் பாஜக அணியினர் தலித் மக்களின் வாக்குகளை சேகரிக்க அம்பேத்கர் புகழ் பாடுதலை ஒரு முக்கிய யுக்தியாக கையாண்டு வருகிறார்கள். பாஜக என்றால் அது உயர்சாதி இந்துக்களின் கட்சி, ஆதிக்க சாதியினரின் கட்சி என்ற பிம்பத்தை உடைக்க வேண்டிய அரசியல் அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அம்பேத்கர் படைப்புகளில் புலமை வாய்ந்த குஜராத்தி மொழி அறிஞர் டாக்டர் பி.ஏ.பார்மர் எழுதித் தயாரித்த “தேசத்தின் பெருந்தலைவர் பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர்" (ராஷ்ட்ரிய மகா புருஷ் பாரத் ரத்னா டாக்டர் அம்பேத்கர்) என்ற புத்தகம் குஜராத் மாநிலத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு 2015ம் ஆண்டு ஜூன் மாதம் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் புத்தகத்தை படித்துப் பார்த்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும், அறிவுஜீவிகளும் அரண்டு, மிரண்டு போனார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் உத்தரவுப்படி 2015 செப்டம்பர் 15ம் நாள் மேற்கண்ட “அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு” புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மாநில அரசே விநியோகம் செய்த நான்கு லட்சம் புத்தகங்களை மாணவர்களிடமிருந்து உடனே பறிமுதல் செய்யும்படி சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாநில கல்வி அமைச்சகம் அவசர சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

இளம் மாணவர்கள் படிப்பதற்கு தடை செய்யப்பட்ட வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் இறுதிப் பாகத்தில் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த 22 உறுதிமொழிகளை மாணவர்கள் படித்தால் “இந்து மதத்தின்மீது வெறுப்பும், இளம்மாணவர்களின் நெஞ்சங்களின் வேற்றுமை உணர்வும் பெருகும்” என்று அஞ்சுவதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.

டாக்டர் அம்பேத்கர் 1956ம் அக்டோபர் 15ம் நாள் நாகபுரி நகருக்கருகில் தீட்சா பூமியில் 5 லட்சம் தொண்டர்களுடன் புத்தமதத்தை தழுவியதை நாமறிவோம். மதமாற்ற நிகழ்ச்சியின்போது அம்பேத்கர் தன் கைப்பட எழுதித் தயாரித்த 22 உறுதிமொழிகளை மேடையில் ஒவ்வொன்றாக படிக்கப் படிக்க, 5 லட்சம் தொண்டர்களும் வானமதிர திருப்பிச் சொல்லி புத்தமதத்தில் சேர்ந்தார்கள் என்பது வரலாறு.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகள் அஞ்சி நடுங்கிய அம்பேத்கரின் அந்த 22 உறுதிமொழிகள்தான் என்ன?

1. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை கடவுள்களாக நம்பி நான் வணங்கமாட்டேன்.

2. ராமனையும், கிருஷ்ணனையும் கடவுள்களாக நம்பி நான் வணங்கமாட்டேன்.

3. பார்வதி, கணபதி என்ற கடவுள் உருவங்களையும் நான் வணங்கமாட்டேன்.

4. இந்த பூமியில் ஆண்டவன் என்றொருவன் பிறக்கமுடியும் என்பதையும், அவதாரமாக வருவார் என்பதையும் நான் நம்பவில்லை

5. “புத்தர் விஷ்ணு கடவுளின் அவதாரம்” என்ற பொய்யான கட்டுக் கதையை நான் நம்பவில்லை.

6. இறந்த முன்னோர்களுக்கு பிண்டங்கள் வைத்து சிரார்த்தம் செய்யும் சடங்கை நான் இனிமேல் செய்யமாட்டேன்.

7. புத்தமதத்தின் அடிப்படை கோட்பாடுகள், கொள்கைகளுக்கு எதிராக நான் செயல்படமாட்டேன்.

8. பார்ப்பனர்கள் மூலம் எந்த விதமான மதச்சடங்குகளையும் (சமஸ்கார்) செய்யமாட்டேன்.

9. மக்கள் அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் ஏற்று நடப்பேன்.

10. மக்களிடையே ஒற்றுமையையும், சமத்துவத்தையும் ஏற்படுத்த நான் பாடுபடுவேன்.

11. புத்தர் போதித்த எட்டு தர்மநெறிகளை நான் ஏற்று நடப்பேன்.

12. புத்தர் போதித்த பத்து அறவழிகளைப் பின்பற்றி நடப்பேன்.

13. உயிர்வாழ் இனங்கள் அனைத்தின் மீதும் அன்பு செலுத்துவேன்.

14. பொய் சொல்லமாட்டேன்.

15. அடுத்தவர்களுக்கு சொந்தமான பொருளைத் திருடமாட்டேன்.

16. ஒழுக்கக்கேடான பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன்.

17. மது மற்றும் போதையூட்டும் பொருட்கள் எதையும் தீண்டமாட்டேன்.

18. புத்தர் போதித்த கருணை, அன்பு மற்றும் பகுத்தறிவு வழிகளில் எனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன்.

19. பார்ப்பனர்களே உயர்ந்த முதல் சாதி என்று வலியுறுத்தும், மனிதர்களுக்கிடையே சமத்துவமின்மையைப் போதிக்கும் மற்றும் மனிதகுல விடுதலைக்கு எதிரான இந்துமதத்தை இன்றோடு கைகழுவி, நான் புத்தமதத்தில் என்னை இணைத்துக் கொள்கிறேன்.

20. புத்த மதமும், தர்மமும் இந்த மண்ணில் சிறந்தது என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்.

21. இன்றுதான் நான் புதியபிறவி எடுத்திருப்பதாக உணர்கிறேன்.

22. இன்று முதல் புத்தர் காட்டிய வழியில் நான் உறுதியாக நடப்பேன்.

22 உறுதிமொழிகளைப் படித்து முடித்ததும் அம்பேத்கர் உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே கண்ணீர் வடித்தார் என்று அவரைப்பற்றி 60 ஆய்வுக்கட்டுரைகளையும் மூன்று புத்தகங்களையும் எழுதியிருக்கும் அமெரிக்காவின் மினிசோட்டா பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியை டாக்டர் எலினார் ஜெல்லியாட் பதிவு செய்திருக்கிறார்.

சமூகப் புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்க்கையில் உச்ச கட்ட இறுதிச்சம்பவம் அவர் புத்த மதத்திற்கு மாறிய நிகழ்ச்சிதான். இந்து மதத்தின் மீது அவருக்கிருந்த கண்ணோட்டத்தையும், கடுமையான விமர்சனத்தையும் யாராலும் மறைக்க முடியாது – மாற்ற முடியாது.

குஜராத் ஆரம்பப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டதிலிருந்து மேற்சொன்ன அம்பேத்கரின் உறுதிமொழிகள் நீக்கப்பட்டிருக்கலாம். ராமர் இல்லாமல் ராமாயணம் ஏது? பஞ்சபாண்டவர்கள் இல்லாமல் மகாபாரதக் கதை ஏது? அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறும்போது அவர் முழங்கிய 22 உறுதிமொழிப் பிரகடனமில்லாமல் அவரது வாழ்க்கை வரலாறு ஏது?

அம்பேத்கர் படைப்புகளை அரசு செலவில் அச்சிட்டு அனைவருக்கும் வழங்குவோம் என்று மோடி தலைமையில் அமைச்சரவை கூடி எடுத்த முடிவை அமுல்படுத்த போகிறார்களா? 22 உறுதிமொழிகளையும் அச்சிட்டு நாடு முழுவதும் வழங்கப் போகிறார்களா?.

சொந்தக்காசில் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ள அவர்களுக்கென்ன பைத்தியமாக பிடித்திருக்கிறது.

- கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்

Pin It