கல்வித்துறையை காவிமயமாக்குவது என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்த அடிப்படையிலான ஒன்றாகும். கல்வித்துறையை காவியமாக்குவது என்றால் என்ன என்ற கேள்வி எழலாம். இந்துத்துவ சித்தாந்தத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களை கொண்டு வருவதே காவிமயம். சாதீய அடிப்படையிலான கல்வித்திட்டமே இந்துத்துவவாதிகளின் நோக்கமாகும்.

ஆர்.எஸ்.எஸ். என்ன செய்கின்றது?

ஒரு சமூகத்தை மற்ற மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்றால், அந்த சமூகத்தின் கடந்த கால வரலாற்றை அழித்தால் அல்லது அதில் திணிப்புகளை ஏற்படுத்தினாலே போதும். நாம் எந்த சமூகத்தை தனிமைப்படுத்த நினைக்கின்றோமோ அதை ஒரு சில ஆண்டுகளில் செய்ய முடியும் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நல்ல உதாரணமாக திகழ்கின்றது.

ஆர்.எஸ்.எஸ். ஆரம்பிக்கப்பட்ட 1925ம் ஆண்டில் இருந்து, இன்றுவரை பல வரலாறுகளை அழித்திருக்கின்றது; திணித்திருக்கின்றது. உதாரணத்திற்கு, நம் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் திப்பு சுல்தானை அறிந்திருப்போம். ஆங்கிலேயருக்கெதிரான அவர் செய்த போராட்டம் இன்றும் நம்முடைய மனக்கண்ணில் வந்தால், அடுத்த சுதந்திரப் போராட்டத்திற்கு எப்பொழுது தயாராவாய் என்று நம்முடைய நரம்புகள் கேள்வி கேட்கும். அந்தளவுக்கு போராட்ட குணம் கொண்டவர் திப்பு சுல்தான்.

அவர் வீரத்தில் மட்டுமல்ல, மற்ற சமூக மக்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு நன்கொடை வழங்குவதிலும், மதச்சார்பற்ற தன்மையை பேணிப் பாதுகாத்ததிலும் முக்கியமானவர்.

அந்தளவுக்கு போற்றப்படக் கூடியவரான திப்பு சுல்தானைப்பற்றி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எவ்வாறு பதிவு செய்துள்ளது தெரியுமா?

“திப்பு சுல்தான் 3,000 பிராமணர்களை இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றம் செய்திட முயற்சித்தபோது அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டார்கள்” என்று 1972ல் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஜுனியர் ஹைஸ்கூல் மாணவர்களுக்கான பாடநூலில் எழுதப்பட்டுள்ளது.

இப்படி வரலாறுகளில் அவர்கள் செய்த திணிப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். அவர்கள் ஆட்சியில் இருக்கும் காலங்களில், கல்வித்துறையில் என்னவெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமோ அதையெல்லாம் தங்களுக்கு கீழ் உள்ள துறைகளை வைத்து செய்து விடுவார்கள்.

தற்பொழுது ஆட்சியில் இருப்பதினால் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டது. மூன்று முக்கிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டி, அதற்கான செயல்பாடுகளில் இந்துத்துவாவினர் இறங்கியுள்ளனர். கல்வித்துறை, பண்பாட்டுத்துறை, தொலைத்தொடர்புத்துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் செப்டம்பர் 14 அன்று நடைபெற்றது.

இதில் சங்பரிவார்களின் கீழ் இயங்கக்கூடிய பாரதிய சிக்ஷா மண்டல், அகில பாரதிய சிக்ஷா மஹாசங்க், வித்யா பாரதி, ஏ.பி.வி.பி., இதிகாஸ் சங்கலன் சமிதி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும் பாரதிய ஜனதா அமைப்பின் முக்கிய தலைவர்களும், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் சிலரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.ன் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் கலந்து கொண்டு, கல்வித்துறையை காவிமயப்படுத்துவதற்கான திட்டங்களையும் செயல்பாடுகளையும் வகுத்துக் கொடுத்தார்.

அதில் முக்கியமான ஃபார்முலாக்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். புதிய கல்விக் கொள்கைகளை உருவாக்குதல், இளம் தலைமுறையை பயிற்றுவித்தல், இந்துத்துவா சிந்தனையை எஸ்.சி., எஸ்.டி. மாணவிகளிடம் சேர்த்தல், படித்த வேலையில்லாத இளைஞர்களைப் பயன்படுத்துதல் இந்த திட்டத்திற்கு பயன்படுத்துதல், அம்பேத்கரின் ஆதரவாளர்கள் போன்று செயல்படுதல், ஹிந்துத்துவா அடையாளங்களை பிரபலப்படுத்துதல், சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிகளை ஊக்குவித்தல் போன்றவைகள் முக்கியமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கட்டளையிட்டுள்ளார்.

தமிழகத்திலும் இதற்கான தொடர்ச்சி தென்படுகின்றது. கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பண்பு மற்றும் கலாச்சார முனைவு மைய அறக்கட்டளை சார்பாக, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் உயர்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த நிகழ்வில் முதலில் பொதுவான கருத்துக்களைப் பேசியுள்ளனர். அடுத்தடுத்த வகுப்புகளில் மத துவேஷத்தை தூண்டும் விதமாக, கருத்துக்களை கூறியுள்ளனர். மாடுகளை அறுக்கக்கூடாது, சமஸ்கிருதத்தை கற்க வேண்டும், யோகாசனம் செய்ய வேண்டும் என்றும், இதையெல்லாம் மாணவர்களுக்கும் போதிக்க வேண்டும் என்றும் அந்த வகுப்புகளில் கூறியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்.ன் சிந்தனைவாதிகளில் ஒருவரான ஆடிட்டர் குருமூர்த்தியும் அந்த பயிற்சி முகாமில் பேசியுள்ளார்: ‘இந்தியாவோட ஒற்றுமை நமக்கு முக்கியம். அதற்கு இந்து மத கலாச்சாரம்தான் சரியாக இருக்கும். வெளிநாட்டுக் கலாச்சாரங்கள் ஒத்துவராது. விவேகானந்தர், பரமஹம்சர் கொள்கைகளை கடைப்பிடிக்கணும். பாரதநாடு, பாரத மாதாவைப் போற்றணும்” என்பது போன்ற கருத்துக்களை கூறியுள்ளார்.

வடமாநிலங்களில் கல்வித்துறையில் ஏற்படுத்திய தாக்கங்களை தமிழகத்திலும் ஏற்படுத்துவதற்குண்டான வேலைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்லக்கூடிய ஆளும் அ.தி.மு.க. அரசு கவனத்தில் கொண்டு, ஆர்.எஸ்.எஸ்.சின் இதுபோன்ற பயிற்சி முகாம்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

- நெல்லை சலீம்

Pin It