மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும்போது தான் அவனுடைய வாழ்க்கை முழுமையடைகிறது. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவற்றுடன் அடிப்படைத் தேவைகள் முடிந்துவிடுவது இல்லை. இவைகளோடு மிகவும் தொடர்புடையது தான் சுகாதாரம். சுத்தம் சோறு போடும் என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப இன்று சுத்தமும் சுகாதாரமும்தான் தனிமனித ஒழுக்கத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்திய மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஏன் ஆட்சியாளர்களுக்கும் கூட தெரியவில்லை போலும் சுகாதாரம் என்பது வளர்ச்சிக்கான திட்டம் அல்ல; மாறாக இது ஒரு கலாச்சாரம் என்பது. காந்திஜி கூட, “சுகாதாரமே நாட்டின் விடுதலையைக் காட்டிலும் சிறந்தது. சுகாதாரம் தான் தனி மனித ஒழுக்கத்தையும், சுயமரியாதையையும் நிலைநாட்டும்” என்று கூறியிருப்பார். கலாச்சாரம் என்ற அடிப்படையில் இன்றுவரை திறந்தவெளியில் மலம் கழித்து ஒட்டுமொத்த சமூகத்தின் சுகாதாரத்தை சீர்குலைப்பதுதான் சிறந்த கலாச்சாரமா என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். காலை விடிந்தும் விடிவதற்குளாகவே கூட்டம் கூட்டமாக மலம் கழிக்க இடம்தேடும் நம் மக்கள் ஏன் இதை உணரவில்லை? செய்வது தவறு என்பதையும், அதன் பாதிப்பு நம்மை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தின் சுகாதாரத்தையுமே பாதிக்கும் என்பதை ஏன் நம் மக்கள் உணரவில்லை?

      உலக அரங்கில் இந்தியாவின் சுகாதாரம் எள்ளி நகையாடும் அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது என்பதற்கு எனது பேராசிரியரிடம் கலந்துரையாடியபோது கிடைத்த ஓர் உதாரணம்… பேராசிரியர் ஒருமுறை பணிநிமித்தமாக சில மாதம் ஜெர்மனி சென்றிருந்தாராம். அப்போது தங்குவதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார். வீட்டின் உரிமையாளர் அவரிடம் வீட்டில் உள்ள அனைத்து வசதிகளையும் கூறிவிட்டு கடைசியாக கழிவறையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எவ்வாறு சுத்தம் செய்வது முதலியவற்றை அவருக்கு கூறியிருக்கிறார். பதிலுக்கு பேராசிரியரோ, “கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறினால் மட்டுமே போதுமானது. மாறாக இவ்வளவு விளக்கம் தேவையில்லையே” என்று கூறியிருக்கிறார். அதற்கு வீட்டின் உரிமையாளரோ “நீங்கள் ஒரு இந்தியர், இந்தியா கழிப்பறைக் கலாச்சாரம் இல்லாத நாடு. ஆகையால்தான் பொது இடத்தில் மக்கள் மலம் கழிக்கின்றனர். இதை முடிவுக்கு கொண்டுவர திட்டங்கள் போட்டு கழிப்பறையை கட்டுகிறீர்கள். அப்படி கட்டப்பட்ட கழிவறைகளை எப்படி பயன்படுத்துவது என்பது கூட உங்கள் மக்களுக்குத் தெரியவில்லையே. திறந்தவெளியில் மலம் கழிப்பதையே கலாச்சாரமாக உங்கள் மக்கள் பின்பற்றுகின்றனர்” என்று கூறியிருக்கிறார். இந்த கேள்விக்கு பேராசிரியரால் பதில் கூற முடியவில்லையாம். அதற்குக் காரணம் சுகாதாரம் சார்ந்த கலாச்சாரத்திற்கு இன்னும் நம் மக்கள் முழுமையாக மாறவில்லை, ஆகவே சில நேரங்களில் உண்மையும் சுடும் என்று கூறுவது உண்மை தான்.

சமீபத்தில் உலக நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தை பாதுகாப்பு அமைப்பும் இனைந்து நடத்திய ஆய்வில், இந்தியாவில் 394 மில்லியன் மக்கள் அதாவது மொத்த மக்கள் தொகையில் 31% பேர் இன்றுவரை திறந்தவெளியில் மலம் கழிப்பதாகவும், இந்திய மக்கள் தொகையில் 70% மக்கள் கிராமப்புறத்தில் வசிக்கின்றனர், இதில் 65% மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாகவும் கூறுகிறது. அதே போல அண்மையில் மத்தியில் செயல்படும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் 2014 ஆண்டு அறிக்கையிலும், திறந்த வெளியில் மலம் கழிப்பது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளிவிட்டது, அதில் 1200 பேர் இருக்கும் ஓர் மாதிரி கிராமத்தில் அனைவரும் திறந்த வெளியில் மலம் கழிக்கும்போது. சராசரியாக ஒருவர் 300கி.கி அளவுள்ள கழிவை வெளியேற்றினாலும் கூட கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த நீர்நிலைகளும், காற்றும் மாசுபடுகிறது. கிராம மக்கள் வெளியேற்றும் கழிவுகளில் 1% அதாவது 30கிராம் கழிவுகளை அவர்கள் உணவுப் பொருட்களின் மூலமும் குடிதண்ணீர் மூலமும் உட்கொள்ளும் நிலையில்தான் நமது கிராம மக்கள் உள்ளனர் என்ற அதிர்ச்சி ஆய்வு அறிக்கையை வெளியிட்டு இந்திய கிராம மக்களின் சுகாதாரத்தின் உண்மை நிலையை பட்டவர்த்தனமாக்கியது.

மத்திய அரசு 1999-ல் முழுச்சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் மூலம் முழுச்சுகாதாரத்தை கொண்டுவர வீட்டுக்கழிப்பறை மற்றும் சுகாதார வளாகம் கட்டவும் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கியது. பின்பு இத்திட்டத்தை 2012-ல் நிர்மல் பாரத் அபியான் என்று மாற்றியது மத்திய அரசு. இத்திட்டத்தின் முதல் நோக்கம் 2017-ம் ஆண்டிற்குள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் சமூகத்தில் இருந்து நீக்கவேண்டும். அதற்காக சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வுக் கல்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று செயல்படுகிறது. தனிமனித கழிப்பறை, பொதுச் சுகாதார வளாகம், பள்ளிகளில் கழிவறை கட்டுதல் மற்றும் அங்கன்வாடிகளில் கழிவறை கட்டுவது என்று பல கோணங்களில் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டுள்ளது. இந்த முழுச் சுகாதாரத் திட்டச் செயல்பாட்டை கண்காணிப்பது பஞ்சாயத்து அமைப்புகளின் கடமை. இந்தியாவில் 250000 கிராம பஞ்சாயத்து அமைப்புகள் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள பரவலாக்கப்பட்ட அதிகார அமைப்புக்கள். பஞ்சாயத்து அமைப்புகளின் அடிப்படை கடமைகளில் சுகாதாரமும் ஒன்று. இன்றும் பல கிராமப் பஞ்சாயத்துகளின் எல்லைக்குள் கட்டப்பட்டுள்ள பல பொது சுகாதார வளாகங்கள் இன்றுவரையிலும் செயல்பாட்டிற்கே வராத நிலையிலும், மக்கள் பயன்படுத்த அடிப்படை வசதி செய்து தராமலும் உள்ளன.

இதில் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் தனிமனித சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த சுற்றுப்புறக் கல்வியை வெறும் பாடப் புத்தகத்தில் மட்டும் பாடமாக கற்பிக்க ஆசைப்படும் அரசுக்கு ஏன் தெரியவில்லை பல பள்ளிகளில், போதிய கழிவறை வசதி செய்து தரப்படாததால் திறந்தவெளியை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று. பின்பு சுகாதாரம் சார்ந்த கல்வியை கற்பித்து என்ன பயன்? கல்வி உரிமைச் சட்டம் 2005-ன் படி அனைத்துப் பள்ளிகளும் மாணவ, மாணவிகளுக்கு போதுமான கழிப்பறை வசதிகளை கட்டாயமாக செய்து தரவேண்டும் என்று கூறுகிறது. எழுதப்பட்ட சட்டம் எழுதப்பட்டதாகவே இருக்குமேயானால் அரசு எதற்கு, அரசு அதிகாரிகள்தான் எதற்கு என்று எண்ணத் தோன்றுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம் சார்ந்த கல்வியையும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை பள்ளிப்பருவத்திலேயே உணர்வுப்பூர்வமாக கற்பிப்பதன் மூலம் அவர்களின் குடும்பத்திற்கு மாணவர்கள் மூலம் சுகாதாரக் கல்வியை கொடுக்கவும் முடியும். அதன் மூலம் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை ஒவ்வொரு குடும்பத்துக்கும் தரமுடியும். இளமையில் கல் என்பதற்கு ஏற்ப அங்கன்வாடி பருவம் முதலே குழந்தைகளுக்கு கழிப்பறையைப் பயன்படுத்த கற்றுத்தரும் பட்சத்தில், குழந்தைகளிடம் சுகாதாரம் சார்ந்த கல்வியை உணர்வுப்பூர்வமாக கொடுக்க முடியும். இதன்மூலம் எதிர்காலத்தில் எல்லா வீடுகளிலும் கழிவறை கட்டப்பட்டு சுகாதார கலாசாரம் மேலோங்கி, பொது இடத்தை கழிப்பறையாகப் பயன்படுத்தும் மக்கள் இல்லை என்ற நிலைவரும். இத்தகைய மாற்றத்தை எதிர்கால சந்ததிகளான குழந்தைகளிடம் இருந்துதான் உருவாக்க முடியும்.

       2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 32.67% கிராமங்கள் மட்டுமே முழு சுகாதாரம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் 26.73% மட்டுமே சுகாதாரம் பெற்ற கிராமங்களாக மாறியிருக்கிறது என்கிறது ஆய்வு. முழுச்சுகாதாரம் மற்றும் நிர்மல்பாரத் அபியான் போன்ற பல சுகாதாரத் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்ட பல லட்சம் பொது கழிப்பறைகள் இன்று வெறும் கட்டிடங்களாகவே தான் காட்சி அளிக்கின்றதே தவிர சமூக மற்றும் தனி மனித சுகாதாரத்தையும் காக்கும் கழிவறைகளாக அல்ல என்பதுதான் இந்திய சுகாதார திட்டங்களின் எதார்த்த நிலை. சுகாதாரத்திற்கான திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தாமலும் அதை முறைப்படுத்தாமலும் மக்கள் பணம் பல ஆயிரம் கோடிகள் விரயம் செய்யப்படுகிறது.

சட்டங்களும் திட்டங்களும் புதிது புதிதுதாக வந்தவண்ணம் இருக்கிறதே தவிர சமூக சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை ஏன் அரசும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. அரசு கொண்டுவரும் திட்டங்கள் நமக்குத்தான் என்பதை ஏன் இந்த மக்களும் உணரவில்லை. அரசுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி என்ன என்பதை கண்டறிய வேண்டி ஓர் சிறு ஆய்வை மூன்று கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 15 கிராமங்களில் மேற்கொண்ட போது 80% மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கான காரணத்தை கண்டறிய முற்பட்டபோது, மக்கள் கூறும் பதில், பொதுக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அதை முறையாக பஞ்சாயத்துக்கள் பராமரிப்பதில்லை, தண்ணீர் வசதியில்லாமல் அவை மூடப்பட்டுள்ளன என்றும், சில பொது சுகாதார வளாகங்கள் கட்டிமுடித்து பல நாட்களாகியும் பயன்பாட்டுக்கு வராத நிலையிலும், மக்கள் குடியிருப்புக்கு வெகு தொலைவில் இருப்பதையுமே காரணங்களாகக் கூறினர்.

மக்கள் கூறிய அனைத்துக் காரணங்களையும் களைவது பஞ்சாயத்து அமைப்புக்களின் முதற்கடமை. ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட பஞ்சாயத்துக்கள் 40% குடும்பங்களுக்கு தனிநபர் கழிப்பறை வசதியை செய்து கொடுத்துள்ளதாக கூறியிருக்கிறது. இதில் 20% குடும்பங்கள் மட்டுமே கட்டப்பட்ட கழிவறைகளை முறையாகப் பயன்படுத்துகின்றன. மற்ற குடும்பங்கள் திறந்தவெளிகளையே கழிவறைகளாகப் பயன்படுத்துகின்றனர். சுகாதார விழிப்புணர்வு இல்லை, பஞ்சாயத்துக்களும் அதற்கான விழிப்புணர்வை கொடுத்ததாகத் தெரியவில்லை. இச்சுகாதாரத்திட்டங்கள் யாரை முதன்மைப்படுத்தி, எந்த மக்களின் பதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டுவரப்பட்டதோ அந்தப் பெண்களே கழிவறைகளைப் பயன்படுத்துவது குறைவு என்பது தான் இந்த சிறு ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை. இப்படியாக மக்களுக்கான சுகாதாரத் திட்டங்களும் சட்டங்களும் முழுமையாக மக்களை சென்றடைவதில்லை, சென்றடையும் சிலவும் மக்கள் பயன்படுத்தும் நிலையில் இல்லை.

மக்களுக்கு கழிப்பறைக் கட்டித்தருவது அரசு கையாளும் ஒருவகை உத்தி என்றால், அரசால் இலவசமாகவும், நமக்கு நாமே திட்டங்கள் மூலமும் கட்டப்பட்ட கழிவறைகளை பயன்படுத்தவும், அதை முறைப்படுத்தவும், மக்களுக்கு சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை தரவும் அரசு முன்வர வேண்டும். பொது சுகாதார வளாகத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் சில பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உள்ள முரன்பாடுகளைக் களையவும் அது முடியாத பட்சத்தில் தனிநபர் கழிப்பறைக் கட்டுவதற்கான திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் மானியத்துடன் கழிப்பறை கட்ட திட்டம் செயல்படுத்த அரசு முன்வருமேயானால், சிலவருடங்களில் தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே சமூக மற்றும் தனிநபர் சுகாதாரத்தில் தன்னிறைவு பெறமுடியும். பின்பு சுகாதாரத்திற்கான சட்டம் தேவையில்லை; திட்டமும் தேவையில்லை. சுகாதாரம் என்பது கலாச்சாரமாக மாறிவிடும். அதனால் சுகாதாரம் ஒரு கலாச்சாரமாக உருப்பெறுவதும் கடைசிவரை திட்டமாகவே இருப்பதும் அரசும், அரசு இயந்திரமும் சுகாதாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவதையும், மக்களுக்கு கொடுக்கும் விழிப்புணர்வையும் பொருத்தது. அதுமட்டுமின்றி மக்களும் தங்கள் சுகாதாரத்தை பேண முழுக்க முழுக்க அரசையும் அரசு தரும் மானியத்தையும் கொண்டுதான் கழிப்பறைக் கட்டவேண்டும் என்ற எண்ணதை மாற்றவேண்டும்.

மக்கள் அனைவரும் தனிமனித மற்றும் சமூக சுகாதாரத்தில் அக்கறை கொண்டு பொது இடங்களில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிவறைகளைப் பயன்படுத்தும் எண்ணம் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு வருமேயானால், இந்தியா சுகாதாரத்தில் தன்னிறைவைப் பெற்று உலக அரங்கில் இந்தியாவிற்கு இருக்கும் அவப்பெயரைக் களைந்து இந்தியர்களும் சுகாதாரத்தில் மேம்பாடு அடைந்துவிட்டனர் என்ற நிலையை அடையும். நாம் அனைவரும் அவரவர் வீடுகளில் கழிவறைகளை அமைத்து சிறியவர் முதல் பெரியவர் வரை கழிவறைகளை முறையாகப் பயன்படுத்த அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். அத்தோடு நில்லாமல் கழிவறையைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை முடிந்தவரை என் ஊரிலோ, நான் வசிக்கும் இடத்திலோ, என் நண்பர்களில் ஒருவரையேனும் மாற்றி காட்டுவேன் என்றும், திறந்த வெளியை கழிவறைகளாகப் பயன்படுத்தமாட்டேன் என்றும் உறுதி ஏற்கவேண்டும். இப்படியாக தனிமனிதன் ஒருவனிடம் உண்டாகும் ஒரு சிறு மாற்றம்தான் ஒட்டுமொத்த சமூகத்தையுமே மாற்றும். நாளைய சமூகத்தில் சுகாதாரம் ஒரு கலாச்சாரமாக உருவாக வேண்டுமேயானால் நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதைவிட நான் எவ்வாறு இருக்கிறேன் என்பதை சிந்தித்து, சுகாதார மாற்றத்திற்கு அடிகோலிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதையும் நாம் அனைவரும் மறந்துவிடக் கூடாது.

ஞா.ஜார்ஜ்

Pin It