திருச்செங்கோட்டில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்த விஷ்ணுப்ரியா கடந்த 18/09/2015 அன்று தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். விஷ்ணுபிரியாவின் மரணமும் அவர் எழுதி வைத்தக் கடிதமும் பல சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றது. தன்னுடைய தற்கொலைக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அவர் எழுதி வைத்திருப்பதானது தற்செயலானதாக தெரியவில்லை. தன்னுடைய மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று அவர் எழுதி வைத்திருந்தால் அவர் தற்கொலையை நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. ஆனால் குறிப்பாக கோகுல்ராஜ் கொலைவழக்கிற்கும் தன்னுடைய தற்கொலைக்கும் சம்மந்தமில்லை என்று சொல்வதில் இருந்தே அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை யூகிக்க முடிகின்றது.

 vishnupriyaமேலும் விஷ்ணுப்ரியாவின் தோழியான கீழ்க்கரை துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரி கூறும் குற்றச்சாட்டுகள் அதை உண்மை என்பதை மெய்பிக்கின்றன. அவர், காவல்துறை உயரதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலே காரணம். அதனால் கோகுல்ராஜ் கொலை வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு வழக்குக்குத் தொடர்பே இல்லாத பலரைக் கைது செய்யும்படியும் அவர்கள் மீது குண்டாஸ் போடும்படியும் நெருக்குதல் கொடுத்ததாகவும், தான் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் விஷ்ணுப்ரியா தன்னிடம் கூறியதாக சொல்லியிருக்கின்றார். மேலும் கோகுல்ராஜ் கொலையின் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவன் யுவராஜ் தரப்பில் இருந்து பல்வேறு மிரட்டல்கள் விஷ்ணுப்ரியாவுக்கு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

 நாம் ஏற்கெனவே யுவராஜூக்கும், பரமத்தி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று 2011 சட்டபேரவை தேர்தலில் போட்டியிட்ட வென்ற கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ.தனியரசுவுக்கும் அவர் மூலமாக அ.தி.மு.க அதிகார வட்டத்தில் யுவராஜூக்கு உள்ள தொடர்பைப் பற்றியும் சொல்லிருந்தோம். இப்போதும் அதையேதான் சொல்கின்றோம். இந்தக் கொலை வழக்கில் யுவராஜ் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே அ.தி.மு.க அரசுதான். மாவீரன் தீரன் சின்னமலை பெயரில் கட்சி நடத்தும் இந்த பேடிப்பயல் எங்கோ ஒளிந்துகொண்டு அடிக்கடி வாட்ஸ்–ஆப்பில் செய்திகளை வெளியிட்டு கொண்டு இருக்கின்றான். உலகில் மிகச்சிறந்த காவல்துறை என சொல்லப்படும் தமிழக காவல்துறை இந்த மாவட்டத்தில் உள்ள கவுண்டர்சாதி வெறியர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. கவுண்டர் சாதிக்காரரான தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதையும் திருச்செங்கோட்டிற்கு மிக அருகில்தான் அவர் இருக்கின்றார் என்பதையும் இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

 தற்போதுகூட அந்த பேடி யுவராஜ் வாட்ஸ் – ஆப்பில் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி இருக்கின்றான். கோகுல்ராஜை கொலை செய்வதற்கு முன்னால் அவரையே தானாக தற்கொலை செய்துகொள்வதைப் போல பேசவைத்து அதை வாட்ஸ் – ஆப்பில் பதிவிட்ட இந்த கிரிமினல் தற்போது விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கிலும் தன்னிடம் முக்கிய சாட்சியங்கள் உள்ளதாக கூறியிருக்கின்றான். நிச்சயமாக விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்துகொண்டதற்கு இந்த யுவராஜும் அவனைக் காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள் என்ற போர்வையில் இருக்கும் கவுண்டர்சாதி வெறியர்களுமே முக்கிய காரணம்.

 பல்வேறு அரசியல் கட்சிகள் சி.பி.ஐ விசாரணை கோரி உள்ள நிலையில் தமிழக அரசு அவசர அவசரமாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்டதில் இருந்தே அதன் யோக்கியதையைத் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தையே உலுக்கி இருக்கும் இப்படிப்பட்ட முக்கிய பிரச்சினை பற்றி சட்டமன்றத்தில் பேசுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டு இருக்கின்றது. கொலைகாரர்கள் மீது அப்படி ஒரு பாசம் அ.தி.மு.க அரசுக்கு.

 தமிழகத்தில் காவல்துறையைச் சார்ந்தவர்களின் மரணம் என்பது பெரும் அளவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 2006 ஆண்டு முதல் 2013 வரை 216 போலீசார் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். சராசரியாக ஆண்டுக்கு 27 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது இந்திய அளவில் இரண்டாவது இடமாகும்.

 இவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய உயர் அதிகாரிகள் கொடுக்கும் மன அழுத்தமே ஆகும். நாட்டுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைத்து பல இளைஞர்கள் காவல்துறைப் பணியையும், இராணுவத்தையும் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் காவல்துறை என்பதும், இராணுவம் என்பதும் அதிகார வர்க்கங்களின் கூலிப்படை என்பதை வேலைக்கு சேர்ந்த பின்புதான் உணர்ந்து கொள்கின்றனர். இந்தத் துறையில் இருந்தால் ஒன்று அதிகார வர்க்கத்திடம் மண்டியிட்டு அவர்கள் போடும் எச்சில் காசை பொறுக்கிக் கொண்டு அவர்கள் இடும் கட்டளைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் பணம், பதவி எல்லாமும் கிடைக்கும். இல்லையா பேசாமல் காவல்நிலையத்தில் ஒரு மூலையில் கடைசிவரைக் கடைநிலை ஊழியராகவே இருந்துவிட்டு ஓடிவிட வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கும் நபர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படியாவது ஓட்டிக் கொள்கின்றார்கள்.

 ஆனால் இந்த இரண்டையும் தேர்ந்தெடுக்க முடியாத சில நல்ல அதிகாரிகள் தங்களது உயர் அதிகாரிகளைப் பகைத்துக்கொண்டு நேர்மையாக வேலை செய்ய முற்படுகின்றார்கள். விளைவு அடிக்கடி இடமாறுதல், துறையே மாற்றுதல், அந்த அதிகாரிகள் மீதே பொய்வழக்கு போட்டு அவர்களது எதிர்காலத்தையே முடக்கிவிடுவது போன்றவை சர்வசாதாரணமாக நடக்கின்றது. மதுரை மேலுரில் பி.ஆர்.பி நிறுவனம் நரபலி கொடுத்தாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற சட்ட ஆணையர் சகாயத்தை அதிகார வர்க்கம் என்ன பாடுபடுத்தியது என்பதை நாம் ஊடகங்களில் பார்த்தோம். இங்கு இதுதான் நிலை. ஆளும்வர்க்கத்தையும், அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து நிற்கும் மனதிடம் கொண்டவர்கள் நீதியைக் காப்பாற்ற தங்கள் உயிரையே பணயம் வைத்து போராடுகின்றர்கள். முடியாதவர்கள் தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கின்றார்கள்.

 நாம் சொல்ல வருவது இதைத்தான், இந்த சமூக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்குக் காவல்துறையும், இராணுவமும் ஒரு சரியான இடமல்ல. இதை வைத்துக்கொண்டு யுவராஜ் போன்றவர்களின் மயிரைக்கூட புடுங்க முடியாது. இந்திய சமூகத்தில் பணபலமும், அரசியல் பலமும், அதிகார பலமும் நிறைந்த கோடிக்கணக்கான யுவராஜ்கள் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்களை உங்களால் என்ன செய்துவிட முடியும்? உங்கள் உயிரைப் பணயம் வைத்து பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துவீர்கள் ஆனால் தத்துவும், குமாரசாமியும் உங்களைப் பார்த்து கைக்கொட்டி சிரிப்பார்கள்.

 நீதி, நேர்மை, நாணயம் போன்றவற்றைப் பேசுவதற்கான இடமோ, அதை செயல்படுத்துவதற்கான இடமோ இது அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனி சமூக மாற்றத்தை விரும்பும் எந்த இளைஞர்களும், காவல்துறையையோ, இராணுவத்தையோ தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். ஏனென்றால் அரசு என்பது எப்போதும் வரலாற்றில் ஓர் ஒடுக்குமுறைக்கருவிதான்.

- செ.கார்கி

Pin It