Thalamuthu Natarasan

நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் வியாபம் ஊழல் விவகாரம் குறித்து அவர் தொடர்ந்து மவுனம் காக்கிறார். ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள அனைத்து கருப்புப் பணத்தை மீட்டு நாட்டின் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று வாக்குறுதி அளித்தார். கொடுத்த வாக்குறுதியை விட இவர்களின் ஹிடன் அஜெண்டாவை "(Hidden Agenda)" நிறைவேற்றுவதில் மிக மிக வேகமாக செயல்படுகிறார்கள்.

​ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இவ்வாறு சொல்கின்றார், இந்த நாடு இந்து நாடு; இங்கே உள்ளவர்கள் அனைவரும் இந்துக்கள்; ஒருவர் முஸ்லீமாகவோ கிறித்தவராகவோ இருக்கலாம். அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் இந்த நாட்டில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே; அவர்கள் இந்துக்களின் வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்.

அமித் ஷா பேசும்போது “முசாபர் நகரில் கொல்லப்பட்ட இந்துக்களுக்கு நியாயம் கிடைக்க பா.ஜ.கவிற்கு வாக்களியுங்கள்” என்றார். அதே போல பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிரிராஜ்சிங் "இந்துக்கள் அனைவரும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும். மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிடவேண்டும்” என்றார்.

போபாலில் நடந்த உலக இந்தி மாநாட்டில் ஆங்கில சீன மொழிகளுக்கு நிகராக இந்தி மொழியும் எதிர்கால டிஜிட்டல் உலகில் ஆதிக்கம் படைக்கும் என்றும், மேலும் மாநாட்டை தொடங்கி வைத்து மோடி பேசுகையில், உலகம் முழுவதும் 6,000 மொழிகள் பேசப்படுகிறது. அதில் 90 சதவீத மொழிகள் மெதுவாக மங்கி வருகிறது. இந்தியை மறப்பது இந்தியாவுக்கு பெரிய இழப்பு ஏற்படுத்தும். நான் பயணம் மேற்கொண்ட வெளிநாடுகளில் உள்ள பலரும் இந்தி மீது மிகுந்த ஆர்வம் காட்டியது என்னை வியக்க வைத்தது என்று குறிப்பிட்டு பேசுகிறார்.​

உ.பி.யைச் சேர்ந்த ஒரு டீ வியாபாரியிடமிருந்துதான் நான் இந்தி மொழியை கற்றுக்கொண்டேன். அனைத்து மாநிலங்களையும் ஒன்று சேர்க்க இந்தியைப் பயன்படுத்தினால் பிற மொழிகள் பலப்படும். வங்காளம், தமிழ் உள்ளிட்ட மொழி வார்த்தைகளை இந்தியில் சேர்க்க கருத்தரங்கம் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது தாய் மொழி குஜராத்தி என்றாலும் எனக்கு இந்தி தெரியாவிட்டால் என்ன நேர்ந்திருக்கும் என நினைத்து வியப்படைந்திருக்கிறேன். இந்தி திரைப்படத் துறை இன்றைக்கு ஐரோப்பா மத்திய ஆசிய நாடுகளில் மகத்தான பணியை செய்துவருகிறது என்று பேசி இருக்கிறார்.

சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள முடியாமல் போனதற்காக நான் வெட்கப்படுகிறேன். சமஸ்கிருதம் படிக்காததால் அந்த மொழியை என்னால் பேச முடியவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருத்தப்படுகிறார். "தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும். ஐ.நா. சபையில் இந்தியும் ஒரு அலுவல் மொழியாக ஏற்கப்பட்டால் அது 121 கோடி மக்களுக்கு கிடைக்கும் பெருமையாகும்" என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.

இந்தி திணிப்பு விவகாரத்தில் காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. பாஜக ஆட்சியில் இந்தி திணிப்பு திரும்புகிறது. இந்தி மற்றும் வட இந்திய கலாச்சாரத்தை பாஜக திணிக்க முயல்கிறது.

தாளமுத்து, நடராசன் என்பது வெறும் பெயர்கள் அல்ல. முதலமைச்சராக ராஜாஜி ஆறு ஏழு மற்றும் எட்டு வகுப்புகளில் இந்தியை கட்டாயப் பாடமாக ஆக்கியதை எதிர்த்து 1937இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் முதன்முதலாக உயிர்விட்ட போராளிகள் இவர்கள். கட்டாய இந்தித் திணிப்பைக் கண்டு கொதித்த நடராசன் இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில் கலந்துகொண்டு சிறை சென்றவர். சிறையில் இருந்தபோது வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இரண்டாவது நாளில் தண்டனைக் கைதியாகவே உயிர் துறந்தார். இதே போன்று தாளமுத்துவும் இறந்து போனார். இவர்களின் நினைவாகத்தான் தமிழக அரசு கட்டடத்திற்கு தாளமுத்து நடராசன் மாளிகை என்று பெயர் சூட்டியுள்ளது.

நடராசனின் இறுதி ஊர்வலத்தில் அறிஞர் அண்ணா இப்படி உரையாற்றினார்: “...அதோ அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவருடைய ரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால், அவருடைய முகத்தைப் பாருங்கள். தன்னுடைய கலாச்சாரத்துக்காகவும் விடுதலைக்காகவும் போராடி அப்போரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம். பல்லாயிரக் கணக்கில் கூடிய நீங்கள், ஓர் உறுதிமொழியினைத் தருவீர்களா? நாம் விரும்பாத ஒரு மொழியை எதிர்த்துப் போரிட்டு ஐயகோ நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை நாங்களும் பின்பற்றுவோம் என்று உறுதிகொள்வீர்களா?”

இந்தி திணிப்பு தொடர்ந்தால் கண்டனங்களும் தொடரும்..!!

இது தொடர்பான முந்தைய பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும் (http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29125-2015-09-07-04-16-05)

- தங்க.சத்தியமுர்த்தி

Pin It