மோடி ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுது “எனது அரசு சாமான்ய மக்களுக்கான அரசு” என்று சொன்னார். ஆனால் கலவரக்காரர்கள், கொலைகாரர்கள் மற்றும் ​இந்தி மொழியை இந்தியாவின் தேசிய மொழி போல் அறிவிக்கும் அரசாகத்தான் செயல்படுகிறது. மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ 2014 ஜூன் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது ​இந்தி நமது ஆட்சி மொழியாகும். மேலும் நமது நாட்டின் தேசிய மொழியாகும் என்று தெரிவித்தார். ​இந்தி இந்தியாவின் அலுவல் மொழி தானே தவிர அது தேசிய மொழி ​அல்ல. இது கூடத் தெரியாமல் ஒரு மத்திய உள்துறை இணையமச்சர் இருக்கிறார்​ என்று சமூக வலைதளங்களில் பிரித்து மேய்ந்தார்கள்.

Modi Sushmaமத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிதி ராணி, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை இனி ‘குரு உத்சவ்’ என்று அழைக்க வேண்டுமென்று கூறியதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்தன. "வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது பாஜக" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும், "தூங்கும் வேங்கையை இடறுவது போன்றது" என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோவும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
​​
மத்திய உள்துறை அமைச்சகமும், அரசும், அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று தெரிவித்த கருத்து மீண்டும் இது இந்தி திணிப்பு முயற்சி என்று கடும் கண்டனத்துக்கு உள்ளானது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணி புரிந்து வரும் அலுவலர்கள் இனி​ ​இந்தியில் கையெழுத்து போட வேண்டும் என்று கூறியது இந்தியைத் திணிக்க மறைமுக முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் ஜெர்மன் பாடத்துக்கு பதிலாக, சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுக்க பாஜக அரசு முடிவெடுத்தபோது அதிருப்தியும் கண்டனமும் பதிவானது. ​வெறும் 14 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு சமஸ்கிருத வாரம் கொண்டாட​ மத்திய அரசு ​​​உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.​

ஆகஸ்ட் 2015 அன்று லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ​"​அறிவியல் தொழில்நுட்பத்துக்கு மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம்தான்​"​ என்று பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்று​ பாஜகவின் மூத்த தலைவரும், வெளியுறவு அமைச்சருமான ​சுஷ்மா ஸ்வராஜ்​​ கூறினார். கீதையை தேசிய நூலாக அறிவிப்பதை கைவிட்டு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் ​கேட்டுக்கொண்டார்.

இப்பொழுது மீண்டும் புது சர்ச்சையில் சிக்கி இருப்பவர் 'மனிதாபிமான' புகழ் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா.வில் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டு வர முயற்சிப்பதாக கூறியுள்ள கருத்து. இது இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளை மட்டம் தட்டும் ஏற்பாடு​ ​மற்றும் இந்தித் திணிப்பு என்பதை தவிர வேறென்ன? சோனியா காந்தி பிரதமரானால் நான் என்னுடைய தலைமுடியை முற்றிலுமாக மழித்துக் கொள்ளுவேன் என்று கூறியவர்தான் சுஷ்மா ஸ்வராஜ்​ என்பது கூடுதல் தகவல்.​

எண்ணிக்கையின் அடிப்படையில் ​இந்தி பேசுவோர் அதிகம் என்பதால் ​இந்தி தான் தேசிய மொழி என்ற சர்ச்சை எழுந்த போது ​"​எண்ணிக்கையின் அடிப்படையில் புலியை விட எலி அதிகம் என்பதால் எலி தான் தேசிய விலங்கு​"​ என்று அறிஞர் அண்ணா அன்றே சட்ட சபையில் ​கூறினாரே. ​இந்திக்கு பதிலாக உலகின் மூத்த மொழி​யான​ தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க முயற்சி எடுப்பாரா வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்​​? ​இப்படி மாற்றான் தாய் மனப் பான்மையுடன்​ நடந்து கொள்வது கடும் ​​​கண்டனத்துக்குரியது.​

​பின்வரும் இரண்டு கேள்வி-பதில்களும் வாட்ஸ் அப்-ல் வந்தது.

கேள்வி 1: மொழியறிவு என்றால் என்ன?

தன்னுடைய தாய்மொழியான தமிழ் பிரதமருக்கு தெரியாது என்ற காரணத்தால், அவரிடம் அவருக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட நெல்லை மாணவிக்கு இருந்ததே மொழியறிவு.​​

கேள்வி 2: மொழித்திணிப்பு என்றால் என்ன?

ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட மாணவியிடம், அவருக்கு ​இந்தி தெரியுமா தெரியாதா என்று கூட கவலைப்படாமல் பிரதமர் மோடி ​இந்தியில் பதிலளித்​தாரே ​அதுதான் மொழித்திணிப்பு.​

(தொடரும்)

- தங்க.சத்தியமுர்த்தி​

Pin It