இந்தக் கட்டுரையை எழுதும் நான் முதலில் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சிறு வயதிலிருந்தே ஆத்திகம் திணிக்கப்பட்டு விட்டதால் அதிலிருத்து வெளி வர முடியாமல் தவிக்கும் ஒருவன் நான். ஆனாலும் பார்ப்பனியம் பற்றி புரிதல் வந்த பிறகு பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். நண்பர்களோடு சென்றாலும் கோவிலைச் சுற்றிப் பார்த்து வந்துவிடுவேன். பூணூல் மாட்டிக்கொண்டு அவர்கள் தம்மை உயர்சாதியாகக் காட்டிக் கொள்கிறார்கள். எனக்கு அந்நியமாகத் தெரிகிறார்கள். அவர்கள் கையால் திருநீறு வாங்கினால் நான் அவர்களை ஏற்றுக் கொண்டாதாக ஆகிவிடும். நான் கீழ்சாதி என்று நானே ஏற்று கொண்டதாக ஆகிவிடும். அது என் சுயமரியாதைக்கு அழகல்ல என்ற எண்ணம் ஓங்குகிறது.

vinayaga statueமாரியம்மன், முத்தாரம்மன், கருப்பசாமி, சுடலைமாடன் நம்மூர் கோவில்களுக்கு மட்டுமே செல்வதை விரும்புகிறேன். அங்கும் அவாள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீமாரியம்மன் என்று மாற்றுகிறார்கள். திருவேற்காடு மாரியம்மன் கோவிலில் பார்ப்பன ஆதிக்கம் தூக்கலாக இருக்குது. நாம் விட்டாலும் பார்ப்பனியம் நம்மை விடாது போல..

சரி கட்டுரைக்கு வருவோம்.

பிள்ளையார் சதுர்த்தி என்னும் இந்துத்வ நிகழ்ச்சி நிரல் பற்றி முழுமையாக அறியாமல் அதனைக் கொண்டாடி வருகிறார்கள் சில தமிழர்கள். சென்னையில்தான் அதிகம் காண முடிகிறது. தென் மாவட்டங்களிலும், கிராமங்களிலும் அதிகம் கிடையாது.

பிள்ளையார் சதூர்த்தி கொண்டாடும் தமிழ் நண்பர்களுக்கு சில கேள்விகள்:

1. பூணூல் என்பது உயர்சாதிக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. களிமண் சிலையில் கூட பிள்ளையாருக்கு பூணூலை வரைந்து விடுகிறார்கள். அப்படியானால் பிள்ளையார் பார்ப்பனரா? பார்ப்பனப் பிள்ளையாரை சூத்திரத் தமிழர்கள் ஏன் சுமக்க வேண்டும்?

2. பிள்ளையார் சிலை ஊர்வலங்களில் இந்தியக் கொடி பயன்படுத்தப்படுகிறதே! பிள்ளையாருக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்?

3. தூய்மை இந்தியா, கிளீன் இந்தியா என்று கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து அதனை சாதனையாகச் சொல்கிறார்கள். ஆனால் ரசாயனப் பிள்ளையார் சிலைகளை ஆற்றிலும், கடலிலும் கரைத்து மாசுபடுத்துகிறார்கள். இதை ஏன் சிந்திக்க மறுக்கிறோம்? ஆக தூய்மையை விட பிள்ளையார் என்னும் கற்பனைக் கதாபாத்திரமும், மதமும்தான் முக்கியமா?

4. பிள்ளையார் சிலைகளை அவரவர் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமே! ஏன் நீரில் கரைக்க வேண்டும்? யார் கரைக்கச் சொன்னது?

5. பிள்ளையார் சிலையை உதாரணம் காட்டி 'அறுவை சிகிச்சை மருத்துவம் இந்து மதத்தில் தோன்றியது' என்று முட்டாள்தனமாக அறிவியல் மாநாட்டில் மோடி பேசியதும், பின்னர் உலக அறிவியலாளர்களின் எதிர்ப்பை வாங்கிக் கட்டிக்கொண்டதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மனித உடலோடு யானை தலை எப்படி பொருந்தும்? என்கிற கேள்விக்கு இன்னும் விடை இல்லையே!.

6. செல்பி விநாயகர், பாகுபலி விநாயகர், பத்து கை விநாயகர், ஆர்.எஸ்.எஸ் உடை அணைந்த விநாயகர் என பல விநாயகர்கள் வருடா வருடம் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். ஏன்? எதற்கு? என்னதான் நோக்கம்? ஆக ஒரு விளையாட்டுப் பொருளாகத்தானே பயன்படுத்தப்படுகிறார் பிள்ளையார்!! இதில் என்ன ஆன்மிகம் இருக்குது? அதனை ஒப்புக் கொள்ள என்ன தயக்கம்?

7. தமிழர் பிரச்சினை சார்ந்த போராட்டங்களுக்கோ, அல்லது நம்மூரு மாரியாத்தா கோவில் கூழ் ஊற்றும் நிகழ்வுக்கோ நிதி கேட்டால் பத்து பைசா தருவானா மார்வாடி?? ஆனால் பிள்ளையார் சதுர்த்தி நிகழ்வுக்கு சென்னையில் உள்ள மார்வாடிகள் தாமே முன்வந்து அதிக நிதி தருகிறார்கள். எவ்வளவு நுட்பமாக அவர்கள் கலாச்சாரத்தையும், அரசியலையும் நம் மீது திணிக்கிறார்கள்.. இதனை உணர மறுப்பது ஏன்?

இவ்வாறு பல கேள்விகள் உள்ளன. உருப்படியாக ஒரு பதிலும் இல்லை. ஏன் என்று ஒருமுறையாவது சிந்திக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பக்தியின் பெயரால் பகுத்தறிவை இழக்கலாமா? ஆட்டுமந்தை கூட்டமாக நாம் இருக்கக் கூடாது.

நாம்தான் பக்தி, ஆன்மீகம், வழிபாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நமக்குத் தெரியாமலேயே நம்மை ஒரு முதலீடாகப் பயன்படுத்திக் கொண்டு இங்கே இந்துத்துவ அரசியல் வளர்த்தெடுக்கப்படுகிறது. மசூதிகள் இருக்கும் தெருக்கள் வழியாகத்தான் ஊர்வலம் செல்லுவோம் என்று இந்து முன்னணி ராமகோபாலன்கள் அடம்பிடிக்கும்போதே நமக்குத் தெரிய வேண்டாமா, இதன் பின்னால் உள்ள அரசியல்?

வெறும் வழிபாடுதானே என்று நீங்கள் சொல்லலாம். கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவதோடு முடிந்திருந்தால் பிள்ளையார் சதூர்த்தி மீது எந்த விமர்சனமும் வந்திருக்காது.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? நம்மிடம் நிதி சேகரிக்கிறார்கள்.. சிலைகளை எடுத்துச் செல்லும் வழி முழுக்க மதவாத கோஷங்களையும், வெறுப்பு அரசியலையும் எழுப்புகிறார்கள். இதுதான் ஆன்மீகமா?

"ஏன் இந்து மதத்தையே விமர்சிக்கிறீர்கள்? ரம்ஜானையோ அல்லது கிறிஸ்துமஸ் நிகழ்வையோ விமர்சிக்க வேண்டியதுதானே?" என்று பழைய கேள்வியையே நீங்கள் எழுப்பலாம். ரம்ஜான் அல்லது கிறிஸ்துமஸ் பெயரால் இங்கு வெறுப்பு அரசியல் விதைக்கப்பட்டால் அதனையும் கடுமையாக எதிர்ப்போம். மதவாதம் தமிழ் மண்ணில் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம்.

பிள்ளையார் சதூர்த்திக்குப் பின்னால் உள்ள இந்துத்துவ அரசியல் பற்றி அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!.

கீற்று, வினவு போன்ற இணையதளங்களில் இது பற்றி அதிகக் கட்டுரைகள் உள்ளன. படித்து தெளிவு பெறுங்கள்.

- குருநாதன் சிவராமன்

Pin It