இந்தியாவின் முதுகெலும்பான விவசாய கிராமங்கள் பரபரப்புடன் காணப்படும். தெருவின் மூலைகளில் பெரிய ஓலைப் பொட்டியுடன் போண்டாக்களும், வடைகளும் சப்ளை செய்யப்படும். காசுகள் கேட்க மாட்டார்கள். சூரியனுக்கு போட்டுரு, இரட்டை இலைக்கு போட்ரு என்று அறிவுரைகள் வழங்குவர் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும். வாக்குப்பதிவு அன்று வயல்களுக்கோ, பிற வேலைகளுக்கோ பெரும்பாலும் தவிர்த்துக் கொள்ளும் விவசாயப் பெருங்குடிகள் தங்கள் பிள்ளைகளுக்கான இந்தப் பலகாரங்களை ஓட்டுபோட்டுவிட்டு வாங்கி வருவர். 90 களில் நடந்த தேர்தல் நிலவரங்கள் இவை. இன்றைக்கு அவையெல்லாம் மலையேறிவிட்டன. போண்டாக்களையே கூச்சத்தோடு வாங்கும் மனிதர்களை ஓட்டுக்கு காசு கேட்டு போராடச் சொல்ல வைத்த பெருமை அரசியல் கட்சியையும், தேர்தல் ஆணையத்தையுமே சாரும்.

Amit Shah 350அரசியலின், தேர்தலின் பரிணாம வளர்ச்சி அபரிமிதமானது. பணத்தை புழக்கத்தில் விட்டனர். இலவசங்களை அறிக்கைகளாக விட்டனர். மதுவை ஆறாக்கி வாக்காளர்களின் வாய்களில் பாய்ச்சினர். மங்கையர்களை காட்சிப் பொருளாக்கி ஓட்டுக்களை பொறுக்கினர். இவை எல்லாவற்றையும் விட தற்போதைய தேர்தலின் பரிணாம வளர்ச்சி ஆபத்தானதாக உள்ளது. பணங்கள் புழக்கத்தில் விடும் வழக்கம் போய் பிணங்களை புழக்கத்தில் விடும் கொடூரமான அரசியல் முறை தற்பொழுது துளிர் விட்டிருக்கிறது.

இந்தியாவின் மதச்சான்பின்மையை உலுக்கக்கூடிய சித்தாந்தங்களை நிறுவுவதற்கு இத்தகைய அரசியல் குஜராத்தில் பயன்பட்டது. கலவரங்கள், களேபரங்கள், கற்பழிப்புகள் என அவை தொடர்ந்து சித்தாந்தம் பரிணமித்திருக்கிறது. மக்களின் ஆயுதங்களான ஓட்டுக்களை சரியாகப் பயன்படுத்தியதன் விளைவு அரசியலில் இருந்து அதிகாரத்திற்கு புற்றுநோய் சித்தாந்தங்கள் நுழைய பெரும் தடைக்கல்லாகவே இருந்தது. இன்றைக்கு அத்தகைய தடைக்கல்லை நகர்த்துவதற்கு வகுப்புவாத அரசியல் சக்திகள் அரசியலுக்கான அப்டேட்டட் வெர்ஷனை வரையறுத்து விட்டனர்.

நாகரிகமற்ற இந்த அரசியலின் பரிணாமத்தை மாற்றி வடிவமைத்தவர்களின் முக்கியப் பங்கு சங்பரிவாரங்களையேச் சாரும். மோடி மாநில அளவில் பேசப்பட்டது முதல் பிரதமர் நாற்காலியில் அமரும் வரை..ஏன் இன்னமும் அந்த பரிணாமத்தை கொஞ்சம் கொஞ்சமாக வடிவமைத்தவர் மோடியின் வலது என அறியப்படும் அமித்ஷா. குஜராத் தொடங்கி தற்பொழுதைய ஹரியானா வரை கலவரங்கள் மூலம் கட்சியின், ஆட்சியின் இருப்பிடத்தை தக்க வைத்துக்கொள்ள களமிறங்கியிருக்கினர்.

சமீபத்திய அரசியலில் "சோஷியல் இன்ஜினியரிங்" எனும் சொல்லாடல் புழக்கத்தில் உருவாகி இருக்கிறது. பாஜகவின் அரசியல் நகர்வுகளை ஊடகங்கள் அமித்ஷாவின் சோஷியல் இன்ஜினியரிங் என்றே வர்ணிக்கிறது. உ.பி, பீகார், ஹரியானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வியூகங்கள் வகுக்கவும் இத்தகைய சோஷியல் இன்ஜினியரிங் கைகொடுக்கும் என பாஜக நம்புகிறது.

"சோஷியல் இன்ஜினியரிங்"???:

மாநில அளவில் கள நிலவரங்களுக்கு தக்கவாறு மதமோ, சாதியமோ கொண்டு வலுவான அணி திரட்டலை ஏற்படுத்தி அவற்றை தேர்தலில் ஓட்டுக்களாக மாற்றும் உத்திகளே சோஷியல் இன்ஜினியரிங் எனப்படும் அமித்ஷாவின் தந்திரம். அந்த தந்திரம் உ.பி யில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிறப்பாக வேலை செய்தது. 80 க்கு 71 என மிகப்பெரும்பான்மையை பாஜகவிற்கு உறுதி செய்தது.

முசாபர் நகர் கலவரங்களுக்கு ஸ்பெஷல் ஆஃபிஸராய் மோடியால் நியமிக்கப்பட்டவர் அமித்ஷா. ஜாட் இன மக்களை அணி திரட்ட அமித்ஷா பயன்படுத்தியது, “பாகிஸ்தான் சிடி" எனப்படும் போலியான காணொளி கொண்ட சிடிக்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வீடு வீடாக விநியோகம் செய்ததன் விளைவு காலம் காலமாக சகோதரர்களாக வாழ்ந்து வந்த ஜாட்-முஸ்லிம் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி முஸ்லிம்களை அச்சுறுத்தியும், அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தும், ஜாட்டுகளின் மொத்த வாக்குகளையும் சுருட்டிக் கொண்டது பாஜக. ஆளும் மாநிலக் கட்சிக்குக்கூட இவ்வளவு செல்வாக்கு கிட்டவில்லை.

தேர்தல் முடிந்தது. பெரும்பான்மை பலத்துடன் எம்பிக்களும் கிடைத்தனர். உ.பியின் நிலவரங்கள் என்ன..?? ஜெய்து எனும் நகை கடைக்காரர். இவரது 90% வாடிக்கையாளர்கள் ஜாட்டுகள். அமித்ஷாவின் சோஷியல் இன்ஜினியரிங்கிற்குப் பின் 1% சதவீதம் கூட ஜாட்டுகள் வருவதில்லை. கடையின் பெயரை S.Jewellery என பொதுப் பெயரை மாற்றி வைத்துவிட்டார். வாடிக்கையாளர்கள் வருவர்; உரிமையாளரின் பெயரை விசாரிப்பர், முஸ்லிம் எனத் தெரிந்ததும் முகம் சுழித்து சென்று விடுவர். கொஞ்சம் வசதி படைத்த நகைக் கடைக்காரர் ஜெய்துக்கே இந்நிலை எனில். மத்திய தர வர்க்க குடும்பத்திற்கு, குடிசை வாழ் ஏழைக்கு என்ன நிலை என்பதனை அகதிகள் முகாம்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவிலும் அமித்ஷாவின் சோஷியல் இன்ஜினியரிங் சிறப்பாக வேலை செய்திருக்கிறது. ஹரியானாவின் அடாலியில் இந்துத்தவ பயங்கரவாத கும்பல் திட்டமிட்டு கலவரம் நடத்தியிருக்கிறது. கல்வியறிவும், பொருளாதாரப் பின்புலமும், சட்ட அறிவும் கொண்ட ஹாஜி அலி என்பவரது வீட்டை திட்டமிட்டு தாக்கியிருக்கிறார்கள். ஹாஜி அலியின் உறவுக்காரப் பெண்ணை பாலியல் தொல்லைகள் கொடுத்தும், அவரின் தொழிற்சாலையில் ஒரு கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்களை தீயிட்டு கொளுத்தியும் தங்களது தாகத்தை தீர்த்துக் கொண்டனர். ஹாஜி அலி கலங்காமல் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்பிற்கு நியமிக்க நீதிமன்றம் ஆணையிட்டது. அரசின் அத்துணை அதிகாரங்களும் வேடிக்கை பார்த்த எத்தனையோ கலவரங்கள் சுதந்திர இந்திய வரலாறு நெடுக நமக்கு இருக்கவே செய்கின்றன. ஹாஜி அலிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு எந்த வகையிலும் உதவியதாகத் தெரியவில்லை. துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கண்முன்னால்தான் உடைமைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கல்வி, பொருளாதாரம், சட்ட அறிவு, காவல்துறை பாதுகாப்பு என எல்லா வளங்கள் இருந்தும் பிரயோசனமில்லாத சூழல்தான் தற்பொழுது இந்தியா தேசத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது.

அஸ்ஸாம், நாகலாந்து போன்ற மாநிலங்களில் வேறுவிதமான சோஷியல் இன்ஜினியரிங்கை பாஜகவும் அதன் பரிவார அமைப்புகளும் கையாளுகின்றன. இந்தியாவின் பூர்வ குடிகளை வந்தேறிகள், ஊடுருவல்காரர்கள் எனப் பிரச்சாரம் செய்து போடோக்களையும், நாகலாந்து தீவிரவாத கும்பல்களையும் தூண்டி விடுவதன் மூலம் பல இனக்கலவரங்கள் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக தனிமைப்பட்டு நிற்க வேண்டிய சூழல் வடகிழக்கு மாநிலங்களை ஆட்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அஸ்ஸாமின் பாஜக எம்எல்ஏ அகதிகள் குறித்த வரையறையையும், பாஜகவின் நிலைப்பாடையும் பொதுமேடையில் பேசியிருக்கிறார். அகதிகளை வரவேற்போம், அவர்களில் இந்துக்கள் இருப்பின் அவர்களை நம் சகோதரர்களாக ஏற்றுக்கொள்வோம், முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள், பயங்கரவாதிகள் என அரசுக்கு காட்டிக் கொடுப்போம் என்ற முட்டாள்தனமான விஷமப் பிரச்சாரமே அவை. சுதந்திர இந்தியாவின் 69ஆண்டு கால வரலாற்றில் முஸ்லிம் பூர்வ குடிகளே தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் சூழலில் வங்காளதேசம், மியான்மர் போன்ற நாடுகளின் அகதிகள் குறித்து எப்படி ஆரோக்கியமாக புரிந்து கொள்ள முடியும்?

கலவரங்களோ, வந்தேறிகள் என்ற முத்திரைகளோ எடுபடாத தமிழகத்தின் சோஷியல் இன்ஜினியரிங் சற்று வித்தியாசமானது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்டன. முஸ்லிம்களின் வாக்கு வங்கி எந்த வகையிலும் பாஜக பக்கம் செல்லாது என்பது தெள்ளத் தெளிவு. இந்துக்களின் ஓட்டுக்களை கணிசமான அளவு பெறும் முயற்சியில் பாஜக கடுமையான மெனக்கெடலில் இறங்கியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தலித்களை தவிர்த்து பிற சாதியக் கட்சிகளை தன் பக்கம் இழுத்து ஓட்டுக் கணக்கை பார்த்த பாஜகவுக்கு ஓர் இடம் கிட்டியது. தலித்களின் ஓட்டுக்களை எப்படியாவது பெற வேண்டுமென பாஜக முயற்சித்து வருகிறது. அமித்ஷாவின் சோஷியல் இன்ஜினியரிங் இதற்குத் துணைபுரியும் என தமிழக பாஜக நம்புகிறது.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் மாநாடு என்ற மதுரைப் பிரகடனம் அதனைத் தொடர்ந்து எழுந்த "இட ஒதுக்கீடு உரிமை வேண்டாம் பெயர் மாற்றம் போதும்" என்ற சர்ச்சைக்குரிய கருத்தியல் போன்றவை தமிழகத்தில் பரபரப்புடன் பேசப்பட்டன. கடந்த வாரம் தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமித்ஷாவோடு பிரதமர் மோடியை சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்திருக்கின்றனர். ஒருவேளை அவர்களது கோரிக்கை மத்திய அரசினால் நிறைவேற்றப்படுமாயின் தலித்களின் ஓட்டுக்களைப் பெறும் என பாஜக நம்புவதோடு ஆர்எஸ்எஸ் இன் செயல்திட்டமான இட ஒதுக்கீடு ரத்து என்ற கொள்கையை அமல்படுத்தியதாகவும் அது மாறும். ஜாட்டுகள் மற்றும் படேல் சமூக மக்களின் இட ஒதுக்கீடை அங்கீகரித்ததும், ஆதரவு அளித்ததும் இதே பாஜக தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐந்து கட்டமாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள பீகாரில் அமித்ஷாவின் சோஷியல் இன்ஜினியரிங்க்கான திட்டங்கள் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது. பீகாருக்கு நிதி ஒதுக்கீடு, ராஜஸ்தானில் பக்ரீதுக்கு விடுமுறை ரத்து, மகாராஷ்டிராவில் இறைச்சி விற்பனைக்குத் தடை என நாடுமுழுவதும் ஏதோவொரு திட்டமிட்ட சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் நிச்சயம் பீகாரின் கவனத்தைப் பெறும் என்ற அடிப்படையில் பாஜகவின் அரசு காய் நகர்த்துகிறது. முன்னாள் முதல்வர் மஞ்சி, மத்திய இணை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் போன்றோரை இணைத்து புதிய கூட்டணியுடன் தேர்தலை சந்திப்பதற்கான வேலைகள் அமித்ஷாவால் திட்டமிடப்பட்டுவிட்டன. இன்னும் பீகாரில் பாக்கி இருப்பது கலவரங்களும், அச்சுறுத்தல்களுமே.

பீகாரில் கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலம் இரண்டு விடயங்களை பாஜக சாதிக்கலாம். ஒன்று மக்களை அச்சுறுத்தவது, இரண்டாவது நிதிஷ் குமார் அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவது. பீகாரில் அமித்ஷாவின் சோஷியல் இன்ஜினியரிங் ஏற்படுத்தும் முடிவுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரசியலில் புதிய அத்தியாயத்தை பாஜக எழுதியிருக்கிறது. அதன் கோரமான முகத்தை பெரும்பான்மை ஊடகங்கள் காட்ட மறுக்கின்றன. பிரதமருக்கான தகுதியை மாற்றியமைத்த பெருமை பாஜகவிற்கு இருக்கும்பொழுது அரசியலுக்கான கேவலமான அளவுகோலையும் மாற்றியிருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏதோவொரு இடத்தில் தடைக்கல்லாக (Check and Balance) நிற்கும் இந்தியாவின் அரசியல் கட்டமைப்பின் மீதும் நம்பிக்கை இழக்க வேண்டிய தருணங்களை இந்திய அரசியலே ஏற்படுத்தி இருப்பதுதான் கொடூரம். உச்சபட்ச அவைகளான நீதியின் கதவுகள் கூட கலவரக்காரர்களுக்கு கைபிடித்து நடைபயில சொல்லிக் கொடுக்கையில் அப்பாவிகளின் நம்பிக்கைகளை யாரை நோக்கி நீட்டுவது??

அரசியல் அப்டேட்டட் வெர்ஷனில் இன்னும் எத்தனை கலவரங்கள், எத்தனை உயிர்கள் காவு வாங்கப்படுமோ என்ற கேள்விதான் இந்தியாவின் பூர்வ குடிகளுக்கான சவால்கள்.

நவீன இந்தியாவின் அரசியலை இப்படிக் குறிப்பிட்டால் மிக பொருத்தமாக இருக்கும் "சில்லரை அரசியலில் பிணங்களின் முதலீடு"

- அஹ்மது யஹ்யா அய்யாஷ்

Pin It