sallekhana

 சமண மதத்தைச் சார்ந்தவர்களால் சந்தாரா என்றும் சல்லேகனா என்றும் அழைக்கப்படும் உண்ணா நோன்பிருந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் சடங்கிற்கு உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக அனுமதி வழங்கி உள்ளது. இந்த சடங்கிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான நிகில்சோனி என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் விசாரணை நடந்த பிறகு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சந்தாராவுக்குத் தடை விதித்தது. ஆனால் வழக்கம் போல உச்ச நீதிமன்றம் “மத வழிபாட்டுச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுவதால் இப்போதைக்கு இதைத் தொடரலாம்’ என்று கூறி இந்தச் சடங்கிற்குத் தற்கால அனுமதி வழங்கியுள்ளது. (கூடுதல் தகவல்: இந்த வழக்கை விசாரித்தது நம்ம நாட்டாமை தத்துதான்).

 ஒருவர் காலம் காலமாக கடைபிடித்து வரும் பழக்கம் என்பதற்காகவே அதற்கு அனுமதி கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. அப்படி கொடுப்பது என்பது மதவாதிகளின் கொடுஞ்செயல்களுக்கு ஆதரவு கொடுத்ததுபோன்று ஆகிவிடும். இன்று நாட்டில் தீண்டாமை என்பது மதத்தின் பெயரால் கடைபிடிக்கப்படுகின்றது. அதையும் நீதிமன்றம் சாஸ்திரங்களின் பெயரால் அங்கீகரிக்கின்றது. பார்ப்பனனைத் தவிர வேறு ஒருவன் கோவில் கருவறையில் நுழைந்தால் சாமி சிலை தீட்டாகிவிடும் என்றும், அந்தச் சிலையில் இருந்து கடவுள் வெளியேறி விடுவார் என்றும் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி தீர்ப்புச் சொல்லும் நீதிமன்றத்திடம் இருந்து வேறு என்ன வகையான தீர்ப்பை நாம் எதிர்பார்க்க முடியும்?

 காலாவதி ஆகிப்போன பிற்போக்கான மூட நம்பிக்கைகளுக்கு எல்லாம் ‘நம்பிக்கை’ என்ற ஒரே வார்த்தையைக் காரணம் காட்டி ஆதரவு கொடுத்தல் என்பது வளர்ந்து வரும் வலதுசாரி மதவாத, சாதியவாத சக்திகளின் கரத்தை வலுப்படுத்துவது போல் ஆகிவிடும். ஆனால் அனைத்து நீதிமன்றங்களிலும் புரையோடிப்போய் இருக்கும் பார்ப்பன சித்தாந்தத்தின் மேலாண்மை, தொடர்ந்து நீதியைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டு இருக்கின்றது. அதேபோல நீதிமன்றங்கள் என்பவை ஆளும் வர்க்கங்களின் அடிவருடி அமைப்புகள் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன.

 இப்படிப்பட்ட தீர்ப்புகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் சதித் திட்டத்தை நம்மில் பலர் அறிவது கிடையாது. ராஜஸ்தான் நீதிமன்றம் சந்தாராவுக்கு தடை விதித்தவுடன் இதற்கு இந்துத்தூவா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இத்தனைக்கும் சமண மதம் கடவுளை ஏற்றுக் கொள்ளாத, பார்ப்பனியத்தின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளாத மதம். அப்படி இருக்கும் போது எதற்காக இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? அதுவும் “மதம், கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம் என்று நீதித்துறையையும், அரசையும் கேட்டுக் கொள்கின்றோம்” என்று விஷ்வ ஹிந்து பரிஷத் சொல்கின்றது என்றால் அதன் உள்நோக்கத்தை எப்படி சந்தேகிக்காமல் இருக்க முடியும்!.

 இந்துத்தூவா பாசிச சக்திகள் நீதிமன்றங்களையும், அரசமைப்புகளையும் தங்கள் கொள்கைகளைச் செயல்படுத்தும் ஒரு கருவியாகவே எப்போதும் பயன்படுத்தி வருகின்றன. நீதிமன்றங்களில் பெரும்பான்மையாக உள்ள பார்ப்பனர்களின் எண்ணிக்கை அதற்குச் சாதகமாக உள்ளது.

 சமணமதம் கடவுளை நிராகரித்த மதமாக இருந்தாலும் அதன் முற்போக்குப் பாத்திரம் என்பது முழுமையான ஒன்றல்ல. அதற்குள்ளும் பல மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. கர்மம், ஆத்மா, மோட்சம் போன்ற பார்ப்பன சனாதான இந்துமதத்தின் பல கூறுகள் அதற்குள்ளும் மேலாதிக்கம் செய்கின்றன.

 உடலில் இருந்து பழைய கர்மாவை வெளியேற்றுவதும் புதிதாக கர்மா உள்ளே வராமல் தடுப்பதும் சமணமதத்தின் கோட்பாடாக உள்ளது. இந்த கர்மாவை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றால் அதற்கு நாம் உயிரைத் துறந்து அந்த கர்மாவை தாங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவை வெளியேற்ற வேண்டும். இப்படி வெளியேற்றிவிட்டால் அந்த ஆன்மா மோட்சம் அடைகின்றது என்று சமணம் நம்புகின்றது. ஆனால் எப்படி இந்த உயிர் தானாகப் பிரியும்? அதற்குத்தான் சந்தாராவை சமணமதம் பரிந்துரைக்கின்றது.

  இது போன்ற சந்தாராவை கடைபிடிப்பதற்கு வயது வித்தியாசம் ஒரு முன்நிபந்தனை இல்லை என்று சமணம் சொல்கின்றது. ஆனால் இது போன்ற சடங்கை மேற்கொள்கின்றவர்கள் பெரும்பாலும் வயதான முதியவர்களாக இருப்பதுதான் இந்தச் சடங்கிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணமாக இருக்கின்றது. வழக்கு தொடர்ந்த நிகில் சோனி சந்தாரா இருந்து உயிர்துறக்கும் சடங்கினை ஒரு தீயவழக்கம் என்றும் வயதானவர்கள் பெறவேண்டிய மருத்துவ மற்றும் அடிப்படை உதவிகளை மறுப்பதற்கு இந்த வழக்கம் பயன்படுத்தப்படுகின்றது என்றும் கூறியே வழக்கு தொடர்ந்தார்.

  ஆனால் இதைப்பற்றி எந்தக் கவலையும் படாத உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தத்து மற்றும் அமிர்தவாராய் போன்றவர்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்த தடையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஏற்கெனவே வழக்கில் ஜாமீன் கேட்டால் வழக்கையே ஊத்தி மூடுவதற்கு வழி சொல்லும் நம்ம தத்து அவர்கள், ஜெயின் போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியவர்களின் வழக்கு என்பதாலும் பதவிஓய்வு பெறப் போவதாலும் ஒரு ‘கை’ பார்த்திருப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

 சமணம், பெளத்தம் போன்றவை வரலாற்றில் முற்போக்கான பாத்திரத்தை வகித்திருந்தாலும் அதில் தற்கால பிரச்சினைகளுக்குத் தீர்வை தேடிக் கொண்டிருப்பது என்பது முட்டாள் தனமான ஒன்றாகும். சில தமிழ் நாளிதழ்கள் சல்லேகனாவை வடக்கிருந்து உயிர்துறத்தல் என்று எழுதி இருந்தன. அவை முற்றிலும் தவறாகும். மோட்சம் அடைவதற்காக வேண்டி தமிழர்கள் வடக்கிருந்தாக எந்தப் பதிவும் இலக்கியங்களில் கிடையாது. அவர்கள் வடக்கிருந்த காரணங்கள் என்பது முற்றிலும் வேறானது. அது புறக்காரணங்களுக்காக (போரில் புறமுதுகிடுதல் மற்றும் காதல், வீரம் போன்றவை கைகூடாத போது) செய்யப்பட்டதே ஒழிய அகக்காரணங்களுக்காக (மோட்சம் போன்றவற்றுக்காக) அல்ல.

 ஒருவரின் மரணம் என்பது இயற்கையானதாக இருக்க வேண்டும். அதை யாரும் கட்டாயப்படுத்தி ஏற்படுத்தக் கூடாது. விதவைகள் மற்றும் வயதில் முதிர்ந்தவர்களை கட்டாயப்படுத்தி சல்லேகனா இருக்கச் செய்வது மனிதாபிமானமற்ற செயலாகும். இந்தியாவில் வருடத்திற்கு 200 பேர் இது போல சல்லேகனா இருந்து இறப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் அதிலும் வயதானவர்கள், விதவைகள் என்பதில் இருந்தே இதன் தீவிரத்தன்மையை உணரலாம். இந்தியாவிலேயே 90 விழுக்காடுகளுக்கு மேல் கல்வியறிவு பெற்ற சமூகமாக இருந்தும் இது போன்ற மூடநம்பிக்கைகளை தீவிரமாக கடைபிடிப்பது அதன் பிற்போக்குத் தனத்தையே காட்டுகின்றது.

 தத்து கொடுத்த தீர்ப்பானது நாளை இந்துமத வெறியர்கள் தங்களுடைய பிற்போக்கு சனாதான பார்ப்பனக் கருத்துக்களை அனைத்து மக்கள் மீதும் சட்டப்படி திணிப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இனி மத வெறியர்கள் சொல்லும் அனைத்தையும் நீங்கள் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி கேட்டால் தத்துவே உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தாலும் தொடருவார். 

- செ.கார்கி

Pin It