இணைப்பு-1       

 விதி 10(xii)  ன் கீழ் தமிழககத்துக்கு வழங்கப்பட்ட அநீதி-விளக்கம்:

        1924 ஒப்பந்தப்படி தமிழகத்திற்கான மூன்று விதிகளில் இரண்டு விதிகளின் கீழ் மட்டுமே 6.186 இலட்சம் ஏக்கர் பரப்பு அங்கீகரிக்கப் பட்டுள்ளது. விதி 10(xii)  ன், கீழ் தமிழக அரசு கேட்ட 4.937 இலட்சம் ஏக்கர் பரப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதே சமயம் கர்னாடகா அரசு கேட்காமலேயே அவ்விதியின் கீழ் 2.72 இலட்சம் ஏக்கரை நடுவர் மன்றம் அங்கீகரித்துள்ளது. விதி எண் 10(xii)  என்பது,

       “பாசனத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ள நீரைச் சிறிதுகூட அதிகரிக்காது, பாசன எண்ணை(டியுட்டி) அதிகரிப்பதின் மூலம் மட்டும் சேமிக்கப்படும் நீரைக்கொண்டு, சென்னை மாகாண அரசும், மைசூர் அரசும் பாசனப் பகுதியை விரிவாக்கம் செய்வதை, பிரிவு எண் IV, V  ஆகியவற்றில் சொல்லப் பட்டுள்ள பாசனப்பகுதியை விரிவு படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தடுக்காது என்பதை இரு அரசுகளும் ஒப்புக் கொள்கின்றன” (பகுதி-1, பக்: 40).

           எனச் சொல்கிறது. பிரிவு எண்  IV என்பது மைசூர் அரசு கிருஸ்ணசாகர் அணையைக் கட்டி பாசனப் பரப்பை அதிகரிப்பது குறித்தும், பிரிவு எண்  V என்பது தமிழக அரசு மேட்டுர் அணையைக் கட்டி பாசனப் பரப்பை அதிகரிப்பது குறித்தும் பேசுகிறது. அவ்விதிகளில் இவ்வணைகளைக் கட்டி பாசனப்பரப்பை அதிகரிப்பதற்குச் சில எல்லைகள் விதிக்கப்பட்டுள்ளன(பகுதி-1, பக்: 37, 38).

krs dam

 பாசன எண்(டியூட்டி):

          இங்கு “பாசன எண்(டியூட்டி) என்பது, ஒரு பயிரின் தொடக்க காலம் முதல் அதன் அறுவடைக்காலம் வரை வினாடிக்கு ஒரு கனஅடி நீர் தொடர்ந்து வரும்பொழுது அந்த நீரைக்கொண்டு எவ்வளவு ஏக்கர்பரப்பு பாசனம் செய்யப்படுகிறதோ அந்த ஏக்கர்பரப்பின் எண்ணிக்கையே ஆகும்”. ஒவ்வொரு பாசனத்திட்டத்திற்கும் பாசன எண்(டியூட்டி) இருக்கும். அதன்படியே நீர் பிரித்து வழங்கப்பட்டு பாசனம் செய்யப்படும்.

     உதாரணமாக கீழ்பவானி பாசனத்திட்டத்தின் பாசன எண் 60 ஆகும். ஆகவே கீழ்பவானி பாசனத்திட்டத்தில் வினாடிக்கு ஒரு கனஅடி நீர் தொடர்ந்து விடப்படும்பொழுது, 60 ஏக்கர் பாசனம் செய்யப்படும். ஒரு பாசனத்திட்டத்தின் பாசன எண் 40 ஆக இருக்கும் எனில், அங்கு வினாடிக்கு ஒரு கனஅடி நீர் தொடர்ந்து விடப்படும்பொழுது, 40 ஏக்கர் மட்டுமே பாசனம் செய்யப்படும்.

      பாசன எண்(டியூட்டி)= பயிரின் பாசன காலம் x  60/ பயிரின் நீர் உயரம்

பயிரின் பாசன காலம் என்பதை நாட்களிலும், பயிரின் நீர் உயரம் என்பதை செ.மீ. உம் தரவேண்டும். 60 என்பது நிரந்தர எண் ஆகும். இந்தச் சூத்திரத்தின் படி பயிரின் பாசன காலத்தில் மாற்றம் இல்லாத பொழுது பாசன எண்ணை அதிகரித்தால் பாசன நீர் உயரம்(டெல்டா) குறையும். பாசனத்திற்கான பாசன நீர் உயரம்(டெல்டா) குறையும்பொழுது நீர் மிச்சமாகும். வேறு நீரைப் பயன்படுத்தாமல், இவ்வாறு மிச்சமாகும் நீரை மட்டும் பயன்படுத்தி பாசனப்பரப்பை அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே விதி எண் 10(xii)  இன் பொருளாகும்.

        1924க்கு முந்தைய பழைய பாசனத்திட்டங்களுக்கான பாசனஎண்ணை(டியூட்டி) அதிகரித்து, அல்லது அவைகளின் பாசன நீர் உயரத்தைக்(டெல்டா)  குறைத்து அதனால் மிச்சமாகும் நீரைக்கொண்டு பாசனப்பரப்பை அதிகரித்துக் கொள்ளலாம். இதற்கு விதிகள் IV, V இல் உள்ள கட்டுப்பாடுகள் தடையாக இருக்காது  என்பதே விதி எண் 10(xii)  இன் பொருளாகும்.

     விதி எண் 10(xii)  என்பது முன்பே இருந்து வரும் பாசனத்திட்டங்கள் குறித்துத்தான் பேசுகிறதே ஒழிய புதிய திட்டங்கள் குறித்துப் பேச வில்லை. அதன் கடைசி வரிகளான, “without any increase of the quanity of water used”  என்பது அதனைத் தெளிவு படுத்துகிறது. “பயன்படுத்தப் படும் நீரை சிறிது கூட அதிகப்படுத்தாமல்” என்பதே அதன் பொருளாகும். ஆகவே தர்க்க அடிப்படையில் பார்த்தாலும், பொதுக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் நீரைச் சேமிப்பது என்பது முன்பே நீரைப் பயன்படுத்தி வரும் பாசனங்களுக்கே பொருந்துமே ஒழிய, புதிய  பாசனத்திட்டங்களுக்குப் பொருந்தாது.

   எனவே இந்த விதி இந்த ஒப்பந்தத்துக்கு முந்தைய, அதாவது 1924க்கு முந்தைய பாசனப்பகுதிகளில் நீரைச் சேமிப்பதற்குத்தான் பொருந்துமே ஒழிய பிந்தைய திட்டங்களுக்குப் பொருந்தாது. இந்நிலையில் விதி எண் 10(xii)  இன் கீழ், கிருட்டிணசாகர், ஏமாவதி அணைத்திட்டங்களின் மூலம் பாசனம் பெரும் 2.72 இலட்சம் ஏக்கர்களுக்கு, 23.19 டி.எம்.சி நீர்  தரப்பட்டிருப்பது என்பது எவ்விதத்திலும் பொருந்தாது.

   காவேரி நடுவர்மன்றம் தொகுதி-4, பக்: 131,135 ஆகிய பக்கங்களில் கிருட்டிணசாகரில் 0.71 இலட்சம் ஏக்கரும், ஏமாவதி திட்டத்தில் 2.01 இலட்சம் ஏக்கரும், விதி எண் 10(xii)  இன் கீழ் எப்படிப் பொருந்தும் என்பது குறித்துப் பேசுகிறது. ஆனால்  அதில் தரப்பட்ட விளக்கங்களும் இன்னபிற காரணங்களும் இவ்விதியின் அடிப்படை நோக்கத்தின்படி இருக்கவில்லை. கர்னாடக அரசே இத்திட்டங்களை இவ்விதியின் கீழ் கொண்டுவரவில்லை. தொகுதி-4, பக்: 135 இல் இது குறித்து பேச வந்த நடுவர் மன்றம் “without any increase of the quanity of water use” எனச் சொல்கிறது. (விதி எண் 10(xii)  இன் கடைசி வரியின், கடைசிச் சொல் water used   என்றுதான் இருக்கிறதே ஒழிய water use  என இருக்கவில்லை).

         ஆனால் முன்பு சொன்னது போல், விதி எண் 10(xii)  என்பது முன்பே இருந்து வரும் பாசனத்திட்டங்கள் குறித்துத்தான் பேசுகிறதே ஒழிய புதிய திட்டங்கள் குறித்துப் பேச வில்லை. அதன் கடைசி வரிகளான, “without any increase of the quanity of water used”  என்பது அதனைத் தெளிவு படுத்துகிறது.  அதாவது விதி எண் 10(xii)  இன் கடைசி வரியில் உள்ள கடைசிச் சொல் water used  என்று தான் உள்ளதே ஒழிய, நடுவர் மன்றம் பயன்படுத்தியவாறு water use  என்று இருக்கவில்லை. ஆகவே கர்நாடகத்திற்கு விதி எண் 10(xii)  இன் கீழ், கிருட்டிணசாகர், ஏமாவதி அணைத்திட்டங்களின் மூலம் பாசனம் பெரும் 2.72 இலட்சம் ஏக்கர்களுக்கு, 23.19 டி.எம்.சி நீர்  தரப்பட்டிருப்பது என்பது எவ்விதத்திலும் பொருந்தாது.

    தொகுதி-4, பக்: 59,60,61 ஆகிய பக்கங்களில் இவ்விதி குறித்தும் டியுட்டி மூலம் பாசனப் பரப்பை அதிகரித்தல் குறித்தும் நடுவர்மன்றம் விவாதிக்கிறது. அதில் 1923ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதியில் மைசூர் அரசின் திவான் அவர்களும், சென்னை அரசின் 3வது கவுன்சில் உறுப்பினர் அவர்களும் டியுட்டி மூலம் பாசனப் பரப்பை அதிகரித்தல் குறித்து விவாதித்தது பற்றிய குறிப்பு ஒன்றைத் தந்துள்ளது. அதன் விபரம் வருமாறு,

              “டியூட்டியை மேம்படுத்துவதன் மூலம் பாசனப்பரப்பு ஏக்கரில் செய்யப்படும் எந்த அதிகரிப்பையும்(நிர்ணயிக்கப்பட்டிருக்கிற விகிதாசாரத்தில்), விருப்பப்பட்டால் உரியவகையில், தேவையான பாதுகாப்புடன் உடன்படிக்கையில் வழங்கலாம். ஆனால் இது தொழில்நுட்பக் கூறாக இருப்பதால்,  இரு அரசுகளின் தொழில்நுட்ப அலுவலர்களால் இது விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும் என்பதோடு, அவர்கள் அவ்வப்போது அந்தந்த அரசுகளுக்கு இதுகுறித்து ஆலோசனையும் வழங்கவேண்டும்.

          மேட்டூரின் கீழ் உள்ள 3.01 இலட்சம் ஏக்கர் பாசனத்தைப் பொருத்தவரையில், மேற்கண்ட டியூட்டி வகையில் எந்த அதிகரிப்பும் வழங்கப்படுமானால், புதிய 1.10 இலட்சம் ஏக்கர் பாசனப்பரப்புக்கும் அதே அளவுக்கு அதே முறையில் அதிகரிப்பு வழங்கப் படவேண்டும்” 1923ல் நடைபெற்ற இந்த விவாதக் குறிப்பைக் காரணம்காட்டி விதி எண் 10(xii)  என்பது காவேரி மேட்டூர் திட்டத்தில் உள்ள புதிய பாசனத் திட்டங்களில் நீரைச் சேமிப்பதற்கே இவ்விதி பொருந்தும் என நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.

         ஆனால் நடுவர்மன்றம் அந்த முடிவிற்கு வருவதற்கான தரவுகள் எதுவும் மேற்கண்ட விவாதக் குறிப்பில் இல்லை. மேலே உள்ள விவாதக் குறிப்பில் டியூட்டியை மேம்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாசனப்பரப்பு அதிகரிப்பை தேவையானால் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற கருத்து பொதுப்படையாகத்தான் சொல்லப் பட்டுள்ளதே ஒழிய புதிய பாசனத்திட்டங்களுக்குத்தான் அது பொருந்தும் என்று சொல்லப்படவில்லை.

   ஆனால் இது தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டது என்பதால் தொழில்நுட்ப அலுவலர்களைக் கொண்டே முடிவு செய்யப்படவேண்டும் என்பது சொல்லப்பட்டுள்ளது. மேட்டூர் பாசனத்திட்டத்தில் உள்ள 3.01 இலட்சம் ஏக்கருக்கு இந்த முறையின் கீழ் பாசனப்பரப்பில் அதிகரிப்பு வழங்கப் பட்டால், 1.10 இலட்சம் ஏக்கருக்கும் அதே அளவு அதிகரிப்பு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் சொல்லப்பட்டுள்ளது.

       ஆகவே மேட்டூர் பாசனத்திட்டத்தின் 3.01 இலட்சம் ஏக்கருக்கு இந்த முறையின் கீழ் பாசனப்பரப்பில் அதிகரிப்பு பொதுவாக வழங்கப் படாது என்ற மறைமுகக் கருத்தும் அப்படி மீறி வழங்கினால் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கருத்தும் அதில் அடங்கி உள்ளது. மேலும் தொழிநுட்ப அலுவலர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னர் மேட்டூர் போன்ற புதிய பாசனத் திட்டங்களுக்கு இந்த டியூட்டியை மேம்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாசனப்பரப்பு அதிகரிப்பை வழங்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல, என்ற முடிவு ஏற்பட்டிருக்கவேண்டும் எனத்தெரிகிறது.

     அதனை “பயன்படுத்திக் கொண்டுள்ள நீரைச் சிறிதுகூட அதிகரிக்காது” (“without any increase of the quanity of water used”)  என்ற விதி எண் 10(xii) இல் உள்ள இறுதி வரிகள் தெளிவு படுத்துகின்றது எனலாம்(பகுதி-1, பக்: 40). மேலும் பொதுவாக முந்தைய பாசனத் திட்டங்களில் மட்டுமே  டியூட்டியை மேம்படுத்துவதன் மூலம் மிச்சமாகும் நீரைக்கொண்டு  பாசனப்பரப்பு அதிகரிப்பைச் செய்ய முடியும். இனி செயல்படுத்தப்போகும் பாசனத்திட்டத்திற்கு அது பொருந்தாது. எனவே தர்க்க அடிப்படையிலோ, பொதுக் கண்ணோட்டத்திலோ  புதிய பாசனத்திட்டங்களுக்கு விதி எண் 10(xii)  என்பது பொருந்தவே பொருந்தாது என்பதே உண்மை. விதிஎண் 10(xii)  இன்கீழ்  கர்னாடகம் பெற்ற பரப்பும் நீரும் 

பாசனத்திட்டம் முதல் பருவம் இரண்டாம் பருவம் நீரின் அளவு
 

பரப்பு

நீர் உயரம்

பரப்பு நீர் உயரம் டி.எம்.சியில்
  (ஏக்கர்) (இன்ச்) (ஏக்கர்) (இன்ச்)  
கிருட்டிணசாகர் 30,972 55” 20,000 24” 6.17+1.74= 7.91
  20,000 15” - - 1.09
ஏமாவதி 1,01,000 15” 1,00,000 24” 5.49+8.70= 14.19
மொத்தம்

1,51,972 + 1,20,000 =2,71,972

23.19

பார்வை: தொகுதி-4, பக்: 139 & தொகுதி-5, பக்: 94. 

             ஆக மொத்தம் 2.72 இலட்சம் ஏக்கர் பரப்பும், 23.19 டி.எம்.சி நீரும் நடுவர் மன்றத்தால் கர்னாடகத்துக்கு விதி எண் 10(xii)  கீழ் வழங்கப்பட்டுள்ளது. எந்தவகையில் டியூட்டியை மேம்படுத்தி 23.19 டி.எம்.சி. நீர் மிச்சப்படுத்தப் பட்டுள்ளது என்பது தீர்ப்பில் சொல்லப்படவில்லை. எனவே அந்த வகையிலும் இந்த 23.19 டி.எம்.சி. நீரை ஒதுக்கியது ஏற்கப்படத்தக்கதல்ல. இது நீதிக்கும் நியாயத்துக்கும் முரணானது ஆகும். உடனே இது தடுக்கப்பட்டு டியூட்டி மூலம் நீர் சேமித்ததற்கு உரிய நீர் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் நீர் சேமிப்பு: (பார்வை: தொகுதி-5, பக்: 33)

      தமிழகத்தில் 1924க்கு முன்பிருந்தே பாசனம் பெற்று வந்துள்ள 15.193 இலட்சம் ஏக்கர் பரப்பில், காவேரி டெல்டா பகுதியில் மட்டும் 9.5 இலட்சம் ஏக்கர் பரப்பு உள்ளது. காவேரி உண்மை அறியும் குழுவின் அறிக்கைப்படி, 1928ல் அப்பாசனப் பரப்பின் பாசன நீர் உயரம்(டெல்டா) என்பது 5.3 அடி ஆகும். 1971ல் அதன் பாசன நீர் உயரம்(டெல்டா) என்பது 4.2 அடி ஆகும். பயிரின் பாசனகாலம் என்பதை சராசரியாக 135 நாட்கள் என எடுத்துக் கொண்டால், 1928ல் காவேரி டெல்டா பாசனப்பகுதியின் பாசன எண்(டியூட்டி) என்பது 50 ஆகும். அதே சமயம் 1971ல் அதன் பாசன எண்(டியூட்டி) என்பது 63.3(அ) 64 ஆகும்.

          ஆகவே 1924க்குப்பின் அந்த 9.5 இலட்சம் ஏக்கரிலும் பாசனஎண்ண (டியூட்டி) அதிகரித்து, பாசன நீர் உயரத்தைக்(டெல்டா) குறைத்து  மிச்சப் படுத்திய நீரின் உயரம்(டெல்டா) என்பது சுமார் 1.1 அடி(5.3-4.2) ஆகும்.

எனவே மிச்சப்படுத்தப்பட்ட நீரின் அளவு= 9.5 இலட்சம் ஏக்கர் x  1.1 அடி                                   = 45 டி.எம்.சி.

எனவே காவேரி டெல்டா பகுதியில் மட்டும் 1928க்கும் 1971க்கும் இடையே 45 டி.எம்.சி நீர் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்றே கீழ்க்கொள்ளிடம் அணைக்கட்டுப் பகுதியில் 1.196 இலட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. 1928ல் அப்பகுதியில் பாசன் நீரின் உயரம்(டெல்டா) என்பது 7.4 அடி . ஆனால் 1971ல், அப்பகுதியில் பாசன் நீரின் உயரம்(டெல்டா) என்பது 5.4 அடி. ஆக 7.4-5.4= 2 அடி(டெல்டா) நீர் மிச்சமாகியுள்ளது. ஆக மிச்சப்படுத்தப்பட்ட நீரின் அளவு = 1.196 இலட்சம் ஏக்கர் x   2 அடி = 10 டி.எம்.சி.

    ஆகவே காவேரி டெல்டா பகுதியிலும், கீழ்க்கொள்ளிடம் அணைக்கட்டுப் பகுதியிலும் சேர்ந்து 1928க்கும் 1972க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 55 டி.எம்.சி நீர், டியூட்டியை மேம்படுத்தி பாசன நீர் உயரத்தைக்(டெல்டா) குறைத்து மிச்சப்படுத்தப் பட்டுள்ளது. 15.2 இலட்சம் ஏக்கரில் மீதி உள்ள பழைய பாசனப் பரப்பான சுமார் 4.5 இலட்சம் ஏக்கரில் குறைந்த பட்சம் 25 டி.எம்.சி நீர் மிச்சமாகியிருக்கும். 

    எனவே தமிழகம் 1928 முதல் 1972க்குள், டியூட்டியை மேம்படுத்தி பாசன நீர் உயரத்தைக்(டெல்டா) குறைத்து, மொத்தமாக 80டி.எம்.சி பாசன நீரை மிச்சப்படுத்தி இருக்கிறது எனலாம். இவை அனைத்துமே விதி எண் 10(xii) இன் கீழ் வருகிறது. நாம் 1924க்கு முந்தைய பாசனப் பரப்பை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளோம். டியூட்டியை மேம்படுத்தி, டெல்டா உயரத்தைக் குறைத்து பாசன நீரை மிச்சப்படுத்தி உள்ளோம்.  நாம் இந்த மிச்சப்படுத்தப் பட்ட பாசன நீரைக் கொண்டு மட்டும் 2,06500 ஏக்கர் பாசனப் பரப்பை விரிவாக்கம் செய்துள்ளோம். அதற்குத் தேவைப்படும் பாசன நீரின் அளவு என்பது  22+7 = 29 டி.எம்.சி. ஆகும்.      

      பாசனப்பகுதி பரப்பு நீர் உயரம் நீர்தேவை
  (ஏக்கர்) (டெல்டா) (டி.எம்.சி.)
1.காவேரி டெல்டா பாசனம் 8000 3.4 1.17
2.கீழ்க்கொள்ளிடம் அணைக்கட்டு 20,300 3.2 2.8
3.சேலம் திருச்சிக் கால்வாய் 15,600 4.2 2.82
4.கட்டளைத்திட்டம் 32,400 4.2 5.86
5.புதியகட்டளை உயர்மட்டபாசனம் 20600 4.1 &
 புல்லம்பாடி பாசனக் கால்வாய் 22100 4.1 7.63
6. கொடிவேரி அணைக்கட்டு 4800 4.2 0.87
7. காளிங்கராயன் அணைக்கட்டு 2000 4.2 0.36
8.பழைய அமராவதி 2200 4.6 0.44
             மொத்தப் பாசனம் 1,28,000 - 21.95= 22

பிற பகுதிகளில் நிறைவேட்டப்பட்ட புன்செய் பாசனத் திட்டங்கள்

1.தொப்பையார் பாசனப்பகுதி 5300 1.5 0.35
2.பவானி பாசனப்பகுதி 8000 2.0 0.7
3.பாலார் பொரந்தர் பாசனப்பகுதி 9700 2.1 0.89
4.வட்டமலைக்கரை பாசனப்பகுதி 2500 2.1 0.23
5.கொடங்கார் பாசனப்பகுதி 9000 2.1 0.82
6.நங்கஞ்சார் பாசனப்பகுதி 6200 2.1 0.57
7.பிற சிறுபாசன திட்டங்கள் 4000 2.1 0.36
8.நொய்யல் பாசனம்(ஆத்துப்பாளையம் 9600 2.1 0.88
9.ஒரத்துப்பாளையம் 10,400 2.1 0.95
10.பிற சிறுதிட்டங்கள் மேட்டூருக்கு மேல் 6000 1.5 0.39
                                  கீழ் 7800 2.0 0.68
                       மொத்தம் 78,500 - 6.82(அ) 7

        

        எனவே மொத்தம் 1,26000 + 78,500 =2.065 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பும், 22 +7 = 29 டி.எம்.சி நீரும் ஆகிறது. இவை தற்போதுள்ள மூன்றாம் பிரிவில் இருந்து, 1924 ஒப்பந்தத்தில் உள்ள விதிஎண் 10(xii) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டு  இரண்டாம் பிரிவிற்கு மாற்றப்பட வேண்டும். இந்த 2.065 ஏக்கருக்குரிய 29 டி.எம்.சி நீர் போக, டியூட்டியை மேம்படுத்துவதன் மூலம் தமிழகம் மொத்தம் சேமித்த 80 டி.எம்.சி. நீரில் 51 டி.எம்.சி. நீர் மீதி உள்ளது.

    எனவே தமிழகத்திற்கு 1924க்கு முந்தைய பாசனத்தில் 15.19 இலட்சம் ஏக்கரும், 1924 ஒப்பந்தப்படி 6.195 + 2.065 = 8.260 இலட்சம் ஏக்கரும் இருக்கும். சிறு பாசனத்திட்டம் என்பது 1924 ஒப்பந்தத்தில் இல்லை என்பதால், தமிழகத்தின் சிறுபாசனத்திட்டப் பரப்பான 1.255 இலட்சம் ஏக்கர் பரப்பு தகுதி அடிப்படையில் முன்புபோல் மூன்றாம் பிரிவில் இருக்கும். ஆகவே தமிழகத்தின் மொத்தப்பாசனப்பயிர் பரப்பு 24.71 இலட்சம் ஏக்கர் அங்கீகரிக்கப்படும் .

        கர்நாடகத்தின் 1924க்கு முந்தைய பாசனத்தில் 3.439 இலட்சம் ஏக்கரும், 1924 ஒப்பந்தப்படியான பரப்பில் 7.239 – 2.72 = 4.519 (அ) 4.52 இலட்சம் ஏக்கரும், மூன்றாவது பிரிவில் தகுதி அடிப்படையில் சிறுபாசனத் திட்டமான 1.261 இலட்சம் ஏக்கரும் இருக்கும். ஆகவே கர்நாடகத்தின் மொத்தப்பாசனப்பயிர் பரப்பு 9.22 இலட்சம் ஏக்கர் மட்டுமே அங்கீகரிக்கப்படும். கேரளத்தில் 1924க்கு முந்தைய பாசனமோ, 1924 ஒப்பந்தப்படியான பாசனமோ இல்லை என்பதால், அதன் 1924க்குப் பின் உள்ள பாசனமான 0.53 இலட்சம் ஏக்கர் மட்டும் அங்கீகரிக்கப்படும். பாண்டிச்சேரியில் 0.45 இலட்சம் ஏக்கர் அங்கீகரிக்கப்படும்.

-    கணியன் பாலன், ஈரோடு.

Pin It