உழைக்கும் மக்களின் பணத்தை எப்படி எல்லாம் கொள்ளையடிக்கலாம் என்பதை முதலாளித்துவம் நன்றாகத் திட்டமிட்டு செயல்படுத்துகின்றது. ஒரு பக்கம் ஊடகங்கள் மூலம் நுகர்வு வெறியைத் தூண்டிவிடும் முதலாளித்துவம், இன்னொரு பக்கம் அதற்கான பணத்தை அடைய எவ்வளவு கீழ்த்தரமான வழிகளையும் நாடலாம் என உபதேசிக்கின்றது.

தினம் தினம் உழைத்தாலும் வாயிக்கும் வயிற்றுக்குமே சரியாகப் போய்விடும் மனிதர்கள் தங்களின் ஆடம்பர நுகர்வுகளை தீர்த்துக் கொள்ள உழைத்தால் மட்டும் போதாது என்று முடிவு செய்து முதலாளிகளால் திணிக்கப்படும் ஆன்லைன் ரம்மி, லாட்டரி சீட்டு போன்றவற்றின் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என தப்புக்கணக்கு போட்டு அதில் மாட்டிக் கொள்கின்றார்கள்.

online gamblingதினம் தினம் ஆன்லைன் ரம்மியால் பலர் தங்களின் வாழ்க்கையை முடித்துக் கொண்டாலும், அதைத் தடை செய்ய அரசாங்கங்களோ, நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றங்களோ அதை அனுமதிக்கும் அயோக்கியத்தனம் நடந்து வருகின்றது.

மாநில அரசோ ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுகளிடமே இருக்கிறது எனச் சொல்கின்றது. ஆனால் ஒன்றிய அரசோ ஆன்லைன் சூதாட்டத்தை மாநில அரசால் மட்டுமே முற்றிலுமாகத் தடுக்க முடியும் என்கின்றது. மேலும் இந்த விளையாட்டுக்கு எந்தத் தடையும் விதிக்காமல் அமைதி காப்பதுடன், 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதித்து தனது வருவாயைக் கூட்டுவதில் மட்டுமே ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தினால் கடந்த ஆண்டில் மட்டும் 10,000 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்திருப்பதாக கூறும் இந்திய கேமிங் சம்மேளனமான பிக்கி, இந்த வருவாய் அடுத்த ஆண்டு 20,000 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என்று கணித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டு இறந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிறகு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர் உளவியல் மருத்துவர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே மற்றும் ஐ.பி.எஸ் அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவும் தன்னுடைய பரிந்துரைகளை அரசிடம் சமர்பித்து விட்டது. ஆனால் இன்று வரையிலும் எந்த நடவடிக்கையையும் மாநில அரசு எடுக்கவில்லை. கேட்டால் “எப்படிச் சட்டம் இயற்றினாலும் அதை எதிர்த்து ஆன்லைன் ரம்மியைக் கொண்டு வந்திருக்கும் நிறுவனங்கள் நீதிமன்றங்கள் செல்லும்” என்கின்றார்கள்.

 அது ஒரளவு உண்மையும்கூட. பிப்ரவரி 14, 2022 அன்று, ஆன்லைன் விளையாட்டுகளைத் தடைசெய்து, அதை கிரிமினல் குற்றமாக மாற்றிய கர்நாடக அரசின் திருத்தச் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

 இது சம்மந்தமாக இணையம் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டத்தை தடை செய்வதற்கு எதிராக சில காரணங்களை முன்வைத்தது. அதில்,

தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்கள் நிறுவனங்களுக்கு ஏற்படும் பெரும் இழப்பு, ஆன்லைன் கேமிங்கில் இருந்து பெறப்படும் வரி நிறுத்தப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும், அடிப்படை உரிமைகள் பிரிவு 19ன் படி, இந்திய குடிமக்களுக்கு தொழில், வர்த்தகம் மற்றும் வணிக சுதந்திரத்திற்கான உரிமை உள்ளது எனக் குறிப்பிட்டது.

 அதே போல கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக அரசு ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படவும், தடையை மீறி விளையாடினால் ரூ.5,000 அபராதம் விதிக்கவும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும் வழிவகை செய்தது. ஆனால் அச்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது.

 வழக்கினை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு போடப்பட்ட தடையானது அரசியலமைப்புச் சட்டம் 19(1)-G-க்கு எதிரானது என்று கூறியது. அச்சட்டப் பிரிவானது தொழில், பணி மற்றும் வணிகம் அல்லது வியாபாரத்தை செய்யும் சுதந்திரத்தின் மீதான நியாயமான கட்டுப்பாடுகளைப் பற்றிக் கூறும் சட்டமாகும்.

அதே போல ஆன்லைனில் ரம்மி விளையாடுவது எந்த வகையிலும் சூதாட்டம் அல்ல என்றும், 18 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கு இது சட்டப்பூர்வமானது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 இந்தியாவில் சூதாடினால், சூதாட்ட பொதுச் சட்டம் 1867-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல தமிழக விளையாட்டுச் சட்டத்தின் கீழ் பணம் வைத்துச் சீட்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதே சூதாட்டம் ஆன்லைனில் நடைபெற்றால் அது குற்றமாக வரையறுக்கப்படுவதில்லை.

ஏஸ்2த்ரீ, போக்கர்டங்கல், பாக்கெட் 52, ‘கேஸ்டோ க்ளப்’, போக்கர், ஷீட்டிங் பைட்டர்ஸ் ரம்மி வட்டம், ஜங்கிலி ரம்மி, தாஜ் ரம்மி இப்படி பல பெயர்களில் இந்தியாவில் 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு செயலிகள் உள்ளன. இவற்றில் ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஜங்லி கேம்ஸ், கே.பி.எம்.ஜி, ஆர்.ஜி.எம் போன்றவற்றை சர்வதேச கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்துகின்றன.

 சூதாட்ட கம்பெனிகளால் அரசுக்கு வரும் வருவாயைவிட சாமானிய மக்களின் உயிர் மேலானதல்ல என்பதுதான் மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிலைப்பாடாக இருக்கின்றன.

 இவர்கள் நினைத்தால் ஒரே நாளில் அனைத்து ஆன்லைன் சூதாட்ட செயலிகளைத் தடை செய்ய முடியும். ஏற்கெனவே கோடிக்கணக்கானோர் பயன்படுத்திய TikTok, PUBG போன்றவற்றையும் பல சீன செயலிகளையும், பல ஆபாச இணையதளங்களையும் ஒன்றிய அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஆனால் இந்த சூதாட்ட செயலிகளை தடை செய்ய மட்டும் ஒன்றிய அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் விருப்பமில்லை என்றால் அவர்கள் சூதாட்ட செயலிகளின் முதலாளிகளால் கவனிக்கப்படுகின்றார்களா என்ற சந்தேகத்தை பொதுமக்களிடம் எழுப்புகிறது.

 லாட்டரி சட்டம் 1998 படி, லாட்டரியை சட்டப்பூர்வமாக்க வேண்டுமா இல்லையா என்பது மாநிலங்கள் தீர்மானிக்க முடியும். இன்று 29 மாநிலங்களில் லாட்டரி சட்டப்பூர்வமானது. ஆனால் தமிழ்நாட்டில் அது தடை செய்யப்பட்டதாகும். அதே போல மாநில அரசுகளின் சட்டத்திற்கு உட்பட்டு செயலிகளைத் தடை செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும்.

 இல்லை என்றால் ஒன்றிய அரசும், மாநில அரசும், நீதிமன்றங்களும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கைகாட்டி தப்பித்துக்கொண்டு சூதாட்ட கம்பெனிகளுக்கு புரோக்கர் வேலை மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

- செ.கார்கி

Pin It