உயர் ஜாதிப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித் துள்ளனர். தலைமை நீதிபதி உட்பட 2 நீதிபதிகள், “இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்றத் தீர்ப்பை வழங்கி யுள்ளனர். “இது சமூகநீதிக்கு பின்னடைவு என்றும் இந்திய ஒன்றியம் முழுவதும் சமூக நீதிக்கு ஆதரவான சக்திகள் ஒருங்கிணைந்து போராட முன் வர வேண்டும்” என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தமிழ் நாட்டின் உணர்வு களைப் பிரதிபலித்து இருக்கிறார்.

தீர்ப்பை ஆதரித்து வழங்கப்பட்ட கருத்துகள், அரசியல் சட்ட அமைப்பில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்பது கடும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு கொள்கை அந்த சமூகத் திற்கான மக்கள் முன்னேற்றமடைய பயன்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்களது பச்சைப் பார்ப்பனியக் கருத்துகளை தீர்ப்புகளாக எழுதி வைத்துள்ளனர்.

பிராமணர் சங்க மாநாடுகளில் பேசப்படும் கருத்துக்கள், அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டிய உச்சநீதி மன்றத்தில் குரலாக ஒலிக்கத் தொடங்கி விட்டது.

இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதற்கு உச்சநீதிமன்றமே அசைக்க முடியாத சான்று. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையையும், பார்ப்பன உய ர்ஜாதி நீதிபதிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது புரியும்.

இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு மட்டும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதும் நீதிமன்றங்கள் இந்து மதத்திலிருந்தும் ஜாதி ஒழிக்கப் பட வேண்டும் என்று ஒருபோதும் தீர்ப்பு எழுத மாட்டார்கள். ஜாதி அர்ச்சகர்களை உறுதி செய்யும் ஆகமங்கள் தேவை யில்லை, அது காலாவதியாகிவிட்டது என்று இதுவரை எந்தவொரு தீர்ப்பிலும் வலியுறுத்தவில்லை. மாறாக ஆகமங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டிற்கான தேவைகள், நியாயங்கள் இருக்கின்றன என்பதற்கு அரசிடம் புள்ளி விவரங்கள் இருக்கிறதா? என்ற கேள்வியைக் கேட்பதற்கும் நீதிமன்றங்கள் தயாராக இல்லை. ஆனால், நீட் தேர்வு என்றால் மட்டும், அதன் பாதிப்புகளுக்கான புள்ளி விவரங்கள் இருக்கின்றனவா? என்று நீதிமன்றங்கள் கேட்கும்.

உயர்ஜாதி ஏழைகள் ஒதுக்கீடு வருவதற்கு முன்பு தகுதி போய்விட்டது. நல்ல மதிப்பெண் பெற்ற தகுதியான வர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கூப்பாடு போட்ட பார்ப்பன சனாதன கூட்டம் அதற்குப் பிறகு மதிப்பெண் தான் தகுதிக்கான அடிப்படை என்று கேட்பதில்லையே ஏன் ?

பழங்குடிப் பிரிவு மாணவர்களைவிட குறைந்த ‘கட்ஆப்’ மதிப்பெண் பெற்று உள்ளே நுழையும் வாய்ப்புகள் கிடைப்பதால் தானே?

ஒன்றிய ஆட்சியின் இரட்டை வேடத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். மோடி பிற்படுத்தப்பட்டவர்; பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது அல்ல என்று பேசுகிறார்கள். இவர்கள் தான் திறந்த போட்டியில் தகுதி அடிப்படையில் இடம் பிடிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் 10 சதவீத இடங்களைப் பறித்து, முன்னேறிய சாதியினருக்கு வாரிக் கொடுக்கும் இந்த இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள்; அதுவும் அவசர அவசரமாக எந்த ஆய்வுகளும் இல்லாமல் ஒரே வாரத்துக்குள் செய்து முடித்தவர்கள்; அகில இந்திய மருத்துவப் படிப்புக்கான பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டை வழங்க மறுத்தவர்கள்; மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் உச்சநீதிமன்றம் சென்று அந்த உரிமையை மீட்டெடுத்தது. கிராமப்புற மாணவர்கள், மருத்துவக் கனவை சீரழிக்கும் ‘நீட்’டைத் திணித்தது யார்? அந்தப் பாதிப்பிலிந்து அரசுப் பள்ளி மாணவர்களை மீட்டெடுக்க 7.5 உள் ஒதுக்கீட்டை தமிழக அரசும், புதுவை காங்கிரஸ் அரசும் கொண்டு வந்தபோது அதை எதிர்த்து மனு போட்டது இதே ஒன்றிய ஆட்சி தான். புதுவை முதல்வர் நாராயண சாமி, 10 சதவீதம் உள்ஒதுக்கீட்டு ஆணை பிறப்பித்தார். இது நீட் தேர்வுக் கொள்கைக்கே எதிரானது என்று நீதிமன்றத்தில் வாதாடியது ஒன்றிய ஆட்சி.

அயோத்தி கோயில் வழக்கில் ‘இராம பகவானுக்காக’ சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சனாதனத்தின் புராணப் பிரசங்கியாக மாறிய உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பிலும் அதே சட்ட மீறலை தீர்ப்புகளாக்கியிருக்கிறது. இது மற்றொரு ‘அயோத்தி தீர்ப்பு’.

உயர்ஜாதியினருக்கு ஆதரவானது இந்தத் தீர்ப்பு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

வேத காலத்தில் தொடங்கிய போராட்டம் ஓயவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுடன் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்கிறது பார்ப்பன இறுமாப்பும், இந்த மறுப்புக்கும் இறுமாப்புக்கும் நீதிமன்றம் சனாதனம், ஆகமம், ஒற்றை இந்தியம் அரண்களாக நிற்கின்றன; பார்ப்பன எதிர்ப்புக் களம் கூர்மையடைந்து வருகிறது.

சமூக - இன விடுதலைக்கான தீர்வு - இந்தப் போராட்டத்தில் தான் மய்யம் பெற்றிருக்கிறது என்பதை வரலாற்றுப் போக்கு உறுதி செய்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It