கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

periyar 342உயர்திரு ராவ் பகதூர் பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் ஸ்தல ஸ்தாபனங்களில் இருக்கும் வெகு சில கண்ணியமான தலைவர்களில் முக்கியமானவர்களுக்குள் ஒருவராவர். அவர் மீது நாணையத் தவறுதலான வார்த்தைகள் இதுவரையிலும் யாருமே பிரஸ்தாபித்தது கிடையாது.

அவரைப்போல் பார்ப்பனரல்லாத மக்கள் விஷயத்தில் தனது ஆதிக்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களிலும் விகிதாச்சார உரிமை கொடுத்தவர்கள் மிக மிக அருமையாகும்.

அப்படிப்பட்டவரை சென்னை ஐகோர்ட்டார் ஏதோ ஒரு விண்ணப்பம் போட்டதின் காரணமாய் நாணையமற்றவர் என்றும், யோக்கியர் அல்லாதவர் என்றும் ஐக்கோர்டு ஜட்ஜ்ஜிகள் பேசியதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றன.

கோர்ட் விவகாரங்களில் விண்ணப்பம் போடும் விஷயங்களைக் கொண்டு ஒருவனை யோக்கியன், அயோக்கியன் என்று தீர்மானிப்பதாயிருந்தால் இந்த இந்தியாவில் கோர்ட்டு சம்மந்தமுள்ள மக்களில் 100க்கு வீசம் பேர் கூட இருக்க மாட்டார்கள் என்று நாம் உறுதியாய்ச் சொல்லுவோம்.

கோர்ட்டு சட்டங்களே உண்மைக்கு நியாயமளிக்க முடியாதபடிதான் இருக்கின்றன. அவைகளைக் கையாளும் வக்கீல்கள் அவ்விண்ணப்பம் போடும் விஷயத்தில் செலுத்தும் புத்தியும் மனப்பான்மையும் நடுநிலையிலிருந்து பார்த்தால் அவர்களை விட நாணையக் குறைவானவர்களும் யோக்கியர்கள் அல்லாதவர்களும் வேறு யாரும் இல்லையென்று சொல்ல வேண்டிய அளவுக்கே இருப்பார்கள்.

அச்சட்டங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தி அவ்விண்ணப்பங்களை விசாரிக்கும் ஜட்ஜுகள் என்பவர்களும் ஏறக்குறைய பெரும்பான்மையான பேர்கள் இக்கூட்டத்திலிருந்தே தான் பொறுக்கி எடுக்கப் படுகிறார்கள்.

ஆகவே கோர்ட்டு விவகாரங்களில் பெரும்பாலும் இப்படிப்பட்ட வக்கீல்களுடைய யோசனைகளை அனுசரித்தே நடந்து கொள்ளுகின்ற கக்ஷிக்காரர்களைப் பற்றி ஜட்ஜிகள் திடீரென்று இம்மாதிரியான அபிப்பிராயத்திற்கு வருவதானது மிக்க அதர்மமானதென்றே கருதுகின்றோம்.

திரு. பன்னீர்செல்வத்தை நன்றாய் அறிந்தவர்கள் இந்த ஜட்ஜிகளின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுடன் பொது ஜனங்களும் இந்த ஜட்ஜிகள் அபிப்பிராயத்தால் ஏமாந்து போகமாட்டார்கள் என்றும் நாம் உறுதியாய் நம்புகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.11.1930)