11. 05. 1981 அன்று திரு. கே. நடராஜ குஞ்சிதா தீட்சிதர் ஒருவர் கோவிலில் பல நிதி, தங்கத் தகடுகள், தங்கக் காசுகள், தங்க நகைகள், முறைகேடுகள் நடந்ததாகக் கூறிய புகாரின் பேரில், இந்து சமய அறநிலையைத் துறையின் உதவி ஆணையர் தீட்சி­தர்களிடம் கேட்டபோது, பொன் நகைகள், பொற்காசுகள் போன்றவற்றைக் காட்ட, பொது தீட்சிதர்கள் ஒரு வார கால அவகாசம் கேட்டனர். அதன் பின்னும் கணக்கு காட்ட மறுத்தனர். ஆனால், அவ்வாறு மறுத்ததையடுத்து, உதவி ஆணையர் கோவிலில் உள்ள அலமாரிகள் போன்ற இடங்களில் சோதனையிட்டதில், தங்கப் பொருட்கள் சிக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், கைப்பற்றப்பட்ட தங்கப் பொருட்கள் தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமா­னது எனக் கூறி, அவற்றைப் பிரிந்து செல்ல மறுத்­துவிட்டனர் பொது தீட்சிதர்கள். அதே நேரத்தில், இந்த நகைகள் யாரிடம் இருந்து பரிசாகப் பெறப்பட்டன என்பதை நிரூபிக்க முடியவில்லை. எனவே உதவி ஆணையரிடம் ரசீது எதுவும் காட்டப்படவில்லை. மேற்கண்ட தங்கப் பொருட்களை பறிமுதல் செய்த உதவி ஆணையர், 4717 கிராம் தங்கம் உருக்கி, எந்த அதிகாரிகளின் அனுமதியும் இன்றி தங்களிடம் வைத்திருப்பதை கண்டறிந்தார். இன்னும், உதவி ஆணையர், கோவில் ஆல்மிராக்களில் இருந்து கணக்கில் வராத தங்கப் பொருட்களையும் (குத்து விளக்கு) போன்ற நூற்றுக்கணக்கான வெள்ளி விளக்கு பொருட்களையும் கண்டுபிடித்தார்.

மேலும் தமிழில் தேவாரம் பாடி வழிபடும் உரிமை பற்றிய வழக்கில் திரு ப. சத்தியவேல் முருகன் மற்றும் திரு. உ. ஆறுமுகசாமி ஆகியோரை மனு­தார்களாக அனுமதிப்பதில் தனி நீதிபதி தன்னிச்சையான அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

sekar babu with Dhikshidarsஇந்த வழக்கில் திரு சுப்பிரமணியன்சாமி (இவர் ஒரு தொழில் முறை வழக்கறிஞர் அன்று) தன்னையும் ஒரு கட்சியாக மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரினார். அவர் தமக்கு இந்த வழக்கில் ஆர்வம் இருப்பதாகவும் ஷிரூர் மடம் பற்றிய வழக்கில் சில செய்திகள் தனக்கு; தெரியும் என்றும் வாதிட்டார். உயர் நீதிமன்ற அமர்வு அவரு­டைய வாதத்தை ஏற்றுக் கொண்டது. அதற்கு ஒப்புதல் அளித்தது.

ஆனால் மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்துவிட்டது; தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டது. தீட்சிதர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அந்தத் தீர்ப்புக்கு எவ்விதம் வந்தது என்பதையும் நாம் இனிக் காணலாம். அந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் திரு. பொப்படே மற்றும் சௌகான். கீழ்க்கண்டவாறு கூறினர்.

1) தீட்சிதர்கள் ஒரு தனி மதக் குழு என்பது ஏற்கனவே சட்ட ரீதியாக முடிவு செய்யப்பட்ட செய்தி . எனவே இதைப் பற்றி நாம் மீண்டும் விசாரிக்கத் தேவையில்லை இந்த சட்ட விதிக்கு ரெஸ் ஜூடிகா என்று பெயர், . முடிந்த முடிவான உண்மைகளை நாம் மீண்டும் மீண்டும் வாதிட வேண்டியதில்லை. இந்த நிலைபாடு ஆங்கிலசாக்சொன் சட்ட விதிகளினடி ஏற்பட்டது ஏறக்குறைய உலகமெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

1957 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு இந்து அற நிலையத்துறை சட்டத்தின் 27 விதியின் படி இந்து அற நிலையத்துறை ஆணையருக்கு கோவில் கணக்கு வழக்குகள் அதன் சொத்து விவரங்களை மேற்பார்வையிடஒரு செயல் அலுவலரை நியமிக்கும் உரிமை உண்டு என்று அரசின் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு எதிராக தீட்சிதர்கள் தரப்பில் தாங்கள் (தீட்சிதர்கள்)ஒரு தனிமதம் சார்ந்தகுழு என்றும் அது (ஸ்மர்த்த ப்ராஹமின்ஸ்) ஸ்மார்த்த பார்ப்பனர்கள் என்ற பார்ப்பன உட்பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் அதனால் அவர்கள் ஒரு தனி மதக் குழுவாகக் கருதலாம் என்றும் வாதிடப்பட்டது. மத சிறுபான்மைக் குழு என்று வாதிட்டதின் மூலம் தீட்சிதர்கள் தங்கள் இந்துக்களின் ஒரு பிரிவு அல்ல என்று வாதிட்டதாகவே நாம் கருதலாம் (ஆசிரியர் குறிப்பு அது போன்றே தங்களால் உருவாக்கப்படாத அமைப்பாக இருந்தால் மதச் சிறுபான்மையினருக்கும் இந்த உரிமை அடிப்படை உரிமையாகாது என்றும் ஒரு உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உண்டு. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் பற்றிய வழக்கில் 1968 ஆம் ஆண்டு எஸ். அசீஸ் பாட்சா எதிர் இந்திய ஒன்றிய அரசு மேற் சொன்ன பல்கலைக்கழகம் இசுலாமியர்களால் மட்டும் கட்டப்பட்டதல்ல. எனவே அதை நிர்வகிப்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26ஆம் விதியின் கீழ் அடிப்படை உரிமையாகக் கருத முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் முன்னர் ஷீருர் மடம் சீவாளிப் பார்ப்பனர்கள் பற்றிய ஒரு தீர்ப்பில் ஒரு மதத் தலைவரைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்தினர் தங்களை ஒரு தனிக் குழுவாகக் கருதிக் கொள்ள முடியும். அப்படி இருப்பின் அவர்களது மதம் மற்றும் நிர்வாக உரிமை யானது அடிப்படை உரிமையாகும். இதில் முன்னது முழு முற்றான உரிமை. பின்னது அரசின் தற்காலிகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது (இங்கு கவனிக்க வேண்டியது தற்காலிகம் என்ற சொல்ல­hகும்). தீட்சிதர்கள் ஒரு தனிப் பிரிவினர் என்றும் அவர்கள் ஸ்மார்த்த பார்ப்பனர்களாயிருந்தாலும் ஒரு இறுக்கமான கட்டுப்படுகளைக் கொண்ட தனிக் குழுவாக இயங்கி வருகிறது. அவர்கள் வேறு ஸ்மார்த்த பார்ப்பனர்களுடன் கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்வது கிடையாது. எனவே சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பானது (ஆடுது. 601 -606) அவர்களை ஒரு தனிக் குழுவாகவும் பல நூற்றாண்டுகள் தில்லைக் கோவிலில் வழிபடவும் நிர்வாகம் செய்யவும் முழு முற்றான உரிமை படைத்தவர்களாகவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வகையில் அவர்கள் மாடாதிபதிகளைப் போன்றவர்கள். எனவே அவர்களின் மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கது. இப்படியாக உச்ச நீதிமன்றம் அவர்களுடைய மனுவை விசரணைக்கு ஏற்றுக் கொண்டது.

தமிழ்நாடு இந்து அற நிலையத்துறையின் சார்பாக வைக்கப்பட்ட வாதத்தின் சுருக்கம் எப்படி உள்ளது என்பதைக் காண்போம். இந்த வாதமும் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு உச்சநீதி மன்றத்தில் நேரடியாக செய்த வாதமல்ல. எழுத்து மூலம் சமர்பிக்கப்பட்ட வாதமாகும். முறையாக வழக்கறிஞர்களை நியமிக்காமல் அப்பொழுது ஆட்சியிலிருந்த செயலலிதா அரசு இந்த வழக்கை பொறுப்பற்ற வகையில் நடத்தியது. அங்கிருந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் உச்ச நீதி மன்றத்தின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க முயலவில்லை. அல்லது முடியவில்லை. இதற்குக் காரணம் தீட்சிதர்கள் ஜெயலலிதாவை தனியே சந்தித்து “முறையாக” முறையிட்டனர் என்பதே.

1) தீட்சிதர்கள் தில்லைக் கோவிலின் பரம்பரை யான பாதுகாவலர்கள் அல்லது தர்மகர்த்தாக்கள் என்பதை அரசின் வாதம் ஒத்துக் கொள்கிறது.

அவர்களை இந்த பொறுப்பிலிருந்து நீக்குவது தமிழ் நாடு அரசின் நோக்கமல்ல; ஆணையருக்கு கோவில் கணக்கு வழக்குகள் அதன் சொத்து விவரங் களை நிர்வகிப்பதில் உதவி செய்வதும் தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்வதும் கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்துவதும் அதன் நோக்கமாகும்.

இந்தக் கருத்தை இறுகப் பற்றிக் கொண்ட உச்ச நீதிமன்றம் இத்தகைய முற்சி ஒரு தற்காலிகமான ஏற்பாடாக மட்டுமே இருக்க முடியும். (தவறு நேர்ந்தால் அதை சரிபடுத்தி விட்டு பிறகு அதை விட்டு அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளலாம்).

தில்லைக் கோவிலை தீட்சிதர்கள் கட்டவில்லை, அவர்கள் அதற்கு உரிமையாளர்கள் இல்லை. (அப்படி அவர்கள் கட்டியதாக தீட்சிதர்கள் கூறவும் இல்லை) இருந்தாலும் அவர்கள் தனி மதக்குழு என்ற ­வகையில் அதை நிர்வகிக்கும் உரிமை பெற்றவர்கள் பல நூற்றாண்டுகளாக அவர்கள் அதை நிர்வகித்து வருகின்ற காரணத்தால் அதை விட்டு அவர்களை நீக்குவது என்ற கேள்வியே எழவில்லை. மேலும் அவர்கள் மீது பலகுற்றச்சாட்டுகள் (நிர்வாகக் குறைபாடுகள், தவறுகள், களவு போன்ற) கூறப்பட்டாலும் அதைக் குறித்து இந்த நீதிமன்றம் எந்தகருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. மேலும் செயல் அலுவலரை நியமனம் செய்த உத்தரவில் எந்த குறிப்பிட்ட காரணத்திற்காக எந்த சூழ்நிலையில் இந்த உத்தரவு இடப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்த உத்தரவு (செயல் அலுவலரை நியமிப்பது) எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று கால அளவு நிர்ணயிக்கா­மல் வெளியிடப் பட்டுள்ளது . எனவே இந்த அரசாணை ஒரு தலைப்பட்சமானது சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பா­னது . எனவே அது செல்லத்தக்கதல்ல என்பதே தீர்ப்பு.

இது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாரமாகும்.

இந்த தீர்ப்பு 2019 இல் வெளியானது. நீதியரசர்கள் திரு. பொப்ப்டே, திரு. சௌகான் அவர்களைக் கொண்ட அமர்வு இந்ததீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை தீட்சிதர்கள் கோவிலின் உள்ளேயே பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்த மூன்று ஆண்டுகளில் பல நிகழ்வுகள் தமிழக அரசியலில் ஏற்பட்டு விட்டன. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட செ. செயலலிதா மரணமடைந்தார். அவர் மரணத்தைச் சுற்றியுள்ள மர்மத்திரை இன்னும் விலகவில்லை. திராவிட இயக்கத்தின் தலைவராகவும் பழுத்த அரசியல்வாதியாகவும் விளங்கிய கலைஞர் கருணாநிதி அவர்களும் மறைந்தார்.

ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. அதிமுக அரசு போய். கலைஞர் மகனாகிய திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வர் ஆகியுள்ளார் அவர் அமைச்சரவையில் இந்து அற நிலையத்துறை அமைச்சராக இருக்கும் திரு. சேகர் பாபு தில்லைக் கோவில் பற்றி சட்டப் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார். அது தொடரின் நல்லதே. இல்லையென்றால் கோவில் கொடியவர்களின் கூடராமகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது தில்லைக் கோவிலுக்கு மட்டுமல்ல; எல்லாக் கோவில்களுக்கும் பொருந்தும்.

உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு வேறு தீர்வே இல்லையா? இருக்கிறது. அதற்கு வழியும் அந்த தீர்ப்பின் வாசகத்திலேயே இருக்கிறது. தேவை அரசியல் உறுதியும் சில நேர்மையான வழக்கறிஞர்களும்தான் . அறிஞர் அண்ணா கூறியது போல் சட்டம் ஒரு இருட்டறை தான். அதில் ஒளியைத் தேடித்தருவது வழக்கறிஞர்கள் வாதம்தான். சட்டம் முன்னால் சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் என்று மேலை நாட்டு அறிஞர் கூறியதாக நினைவு . நாம் முன்னாலும் செல்லாமல் பின்னாலும் செல்லாமல் அதன் மீது சென்று நமது இலக்கை எட்ட வேண்டும் எட்டலாம்; இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தில்லைக் கோவிலுக்கு இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாடே கூடாது என்பதல்ல, அப்படி சொல்லவும் இயலாது. எந்த அடிப்படை உரிமை இருந்தாலும் அதற்கும் சில எல்லைகள் உண்டு. இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையைப் பற்றிய தீர்ப்பில் நெருக்கடி காலத்தில் எல்லா உரிமைகளையும் ஒத்திவைக்கும் உரிமை உண்டு என்று உச்ச நீதி மன்றம் கூறியது. எல்லா அடிப்படை உரிமைகள் என்றால் உயிர் வாழும் உரிமை உட்பட எல்லாமும் தான். நெருக்கடி நிலைக்குப்பிறகு இது குடியரசுத் தலைவரின் விருப்பத்தைப் பொறுத்து என்பது சிறிது மாற்றப் பட்டுள்ளது இரண்டு அவைகளிலும் 2/3 பங்கு பெரும்பான்மையுடன் நெருக்கடி நிலை தீர்மானத்தை நிறைவேற்றி, பிறகு அறிவித்தால் இதையும் செய்ய முடியும்! நிலைஅப்படி இருக்க தில்லைக் கோவில் தீட்சிதர்கள் தொல்லையை ஒழிப்பது தான் பெரிய செய்தியா?

தீட்சிதர்கள் சிறுபான்மைக் குழு என்று உயர் நீதிமன்றம் ( 1951 ஆம் ஆண்டு தீர்ப்பு) கூறிவிட்டது எனவே அதை மாற்ற இயலாது என்று கூறியிருக்கிறது (Res Judica). இது தவறான வாதம். இந்துக்களில் ஒரு பிரிவினர் மட்டும் தனியான இனக் குழு என்றுக் கூறுவது சரியான வாதமாகுமா? தீட்சிதர்கள் தாங்கள் இந்துக்கள்தான் என்றுக் கூறிக்கொள்ளும் வரை அவர்கள் ஒரு போதும் தனி மதக்குழு என்று கூற இயலாது என்பது எனது கருத்தாகும். அவர்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை; நாங்கள் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் என்று அறிவித்தால் கோவில் அவர்களுக்கு உரிய இடமில்லை. தீ வளர்த்து வேள்வி செய்வதே அவர்கள் அடிப்படை உரிமையாகும். அது செல்க. அதற்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பல சிதம்பரம் ஸ்ரீ சபானயகர் கோவில் பொதுக் கோவில் என்று தீர்ப்பளித்த விவரங்களை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

மேலும் உச்ச நீதி மன்றம் கூறியிருப்பது இன்னும் ஒரு எளிய வழியினையைக் காட்டுகிறது. தில்லைக் கோவில் தீட்சிதர்களின் தனி உடமை என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் முறைகேடுகள் நடந்தால் தலையிட அரசுக்கு உரிமை உண்டு. இதை உச்ச நீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பில் பலதடவை கூறியிருக்கிறது. ஆனால் எம்ஜியார் கொண்டுவந்து கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அரசாணை யில் இந்தவிதமானக் குற்றம் எதுவும் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை. இது ஒரு முக்கிய காரணமாகும். இரண்டாவது தில்லைக் கோவிலுக்கு இந்து அற நிலையத்துறை செயல் அலுவலரை நியமிக்கலாம். ஆனால் எந்தக் குறிப்பிட்டக் காரணத்திற்காக , எவ்வளவு காலம் நியமிக்கப்படுகிறார் என்பது தெளிவாகக் கூறப்படவேண்டும், அப்படிக் கூறப்படாமல் அரசு மொட்டையாக ஒரு அரசாணையை வெளியிட்டது. எனவே அது செல்லத்தக்கதல்ல. இதுவேஉச்ச நீதி மன்றத் தீர்ப்பின் சாரமாகும். இதை எளிதில் தமிழ் நாடு அரசின் சட்டத்துறை கடந்துவிட முடியும். எ. கா. தீட்சிதர்கள் அனுமதியோடு தில்லைக் கோவிலில் தொழிலதிபர்கள் இல்லத் திருமணம் நடைபெற்றுள்ளது (2019. ) இது ஒரு முறைகேடு. இதை விசாரிப்பதற்காக இந்து அற நிலையத்துறை அதை ஒரு செயல் அலுவலரை நியமிக்கலாம். அவர் இது குறித்து இரண்டு ஆண்டுகள் விசாரணை செய்து அறிக்கைத் தர வேண்டுமென்றும் அதுவரை தில்லைக் கோவிலின் நிர்வாகம் செயல் அலுவலரின் கையில் இருக்கும் என்று அரசாணை வெளியிட்டால் உச்ச நீதி மன்றம் சென்றாலும் அதைத் தடுக்க இயலாது. தீட்சிதர்களும் முறைகேடு செய்வது எங்கள் அடிப்படை உரிமை என்று வாதிட இயலாது. ஜெயேந்திர சங்கராச்சாரி சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டது ஒரு நல்ல முன்மாதிரியாகும். அது குற்றவியல் வழக்கு, இது குடிமையியல் வழக்கு என்பதெல்லாம் எடுபடாது.

நீதி, அரசியலமைப்பு சட்டம் இந்த வேறுபாடுகளை யெல்லாம் பார்ப்பதில்லை. இது ஒரு எளிய புரிதலாக இருக்கலாம். இதில் சட்ட நுணுக்கங்கள் பல இருக்கலாம். ஆனால் எல்லா வழிகளையும் உச்ச நீதி மன்றம் அடைத்துவிட்டது என்ற சோர்வோ அல்லது சாக்குப் போக்கு சொல்லும் மனபான்மையோ தேவை இல்லை. எல்லா சட்டங்களும் மக்கள் நலன் முன்னிட்டே!

மாநில அரசு மத வழிபாட்டிற்கு இடையூறு செய்யாமல் சட்டம் இயற்றலாம். 1959ஆம் ஆண்டின் சட்டத்தின்படி நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டாலும் எதற்காக நியமிக்கப்படுகிறார் என்று தெளிவாக குறிப்பிட வில்லை; என்ன காரணத்தினால் அந்த நியமனம் தேவைப்பட்டது என்பதும் குறிப்பிடப் படவில்லை; எவ்வளவு நாளைக்கு அந்த நியமனம் செல்லும் என்பதும் குறிப்பிடப்படவில்லை. எனவே அந்த அரசாணை தன்னிச்சையானது, சட்ட விரோதமானது, அநீதியானது. எனவே அது செல்லாது இதுதான் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் சாரம். அந்த அரசாணையில் சில பிழைகளுக்காக அரசாணையை முற்றிலுமாக தள்ளி விட்டது. அந்த பிழைகள் வேண்டுமேன்றெ கூட செய்யப் பட்டிருக்கலாம். ஆனால் முதலில் மதச் சிறுபான்மை என்றெல்லாம் முழங்கிய உச்ச நீதிமன்றம் இறுதியில் அரசாணையில் உள்ள சிறு தவறுகளைச் சுட்டிக்காட்டி வழக்கை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்து விட்டது.

1987 ஆம் ஆண்டு சட்டம் நிர்வாக அதிகாரி எவ்வளவு நாளைக்கு செயல் படுவார் என்பதைத் தெளிவாகக் கூறவில்லை. எவ்வளவு நாளைக்கு என்று குறிப்பிட்டு 1987ஆம் ஆண்டு சட்டத்தைத்திருத்தி அல்லது மேல் முறையீட்டு மனுவைத் திருத்தி திரும்ப முறையிடலாம். இதுவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாசகம் தான்(49-50 பத்தி) தீர்ப்பையும் வழங்கி விட்டு அதை எப்படி மேல் முறையீடு செய்வது என்பதையும் அதுவே கூறுகிறது. முறையான தேதியிட்டு முறையான கால அளவு நிர்ணயம் செய்து அரசாணை புதியதாக வெளியிட்டு விட்டு பிறகு மேல் முறையீடு செய்யுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறாமல் கூறுகிறது. ஆனால் கேளாசெவிகள் புரியாதது போல நடிக்கின்றன என்று தானே பொருள்!

சட்ட மன்றத்தைக்கூட்டி தீர்மானம் நிறை வேற்றி தில்லைக் கோவில் தனியார்க் கோவில் அல்ல; அது பொதுக் கோவில் என்று அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து 2014-2019 வழக்கின் தீர்ப்பை தள்ளுபடி செய்யக் கோர வேண்டும். பொதுமக்கள் கருத்து தீட்சிதர்களுக்கு எதிராக உள்ளது. இதைப் பயன்படுத்தி மக்கள் திரள் போரட்டங்களை நடத்தி தீட்சிதர்களின் திருட்டுப் போக்கினை வெளிப்படுத்த வேண்டும்.

மரு. இளமுருகு

Pin It