மனிதநேயம் கொண்ட கன்னட எழுத்தாளர் கல்புர்கி அவர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அதில், கருத்து கூறல் என்பதாய் மனநோயாளியினும் கீழாய் உளறிக் கொட்டியிருக்கிறார்!

charu niveditaகருத்துச் சுதந்திரம் என்பதற்கு இவர் கூறும் விளக்கம் முட்டாள் தனத்திற்கு முதல் தகுதி பெற்றதாகும். மதமும் கடவுளும் இந்தியாவில் புனிதம் என்கிறார். யாருக்கு? அதை ஏற்பவர்க்கு. ஏற்காதவர்க்கு அது எப்படி புனிதமாகும்?

மனைவிக்கு கொலைகாரக் கணவன் கூட புனிதம் தான். அதற்காக அவனைக் காவல்துறை கைது செய்யக்கூடாதா? நீதிமன்றம் தண்டிக்கக் கூடாதா?

கடவுளும் மதமும் புனிதம் என்று நினைக்க ஒருவர்க்கு உரிமை உள்ளது போலவே, அவை புனிதமல்ல, அவை மூடத்தனத்தின் முடை நாற்றம் எனறு சொல்லுகின்ற உரிமையும் மற்றவருக்கு உண்டு. கடவுளைப் பற்றி பெருமையாய் பேசுகிறவனுக்கு மறுப்பாய் கருத்துக் கூறுவது கருத்துச் சுதந்திரம். ஆனால், கடவுளைப் பெருமையாய் பேசாதே என்று தடுத்தால் மட்டுமே அது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. இந்த அடிப்படை கூட புரியாத இவரெல்லாம் ஓர் எழுத்தாளர் என்று ‘பந்தா’ பண்ணிக் கொள்ளுவது கேவலத்திலும் கேவலம்!

தந்தை பெரியார் விமர்சிக்காத மதமா? கடவுளா? அதற்காக பெரியாரைக் கொலை செய்தார்களா? பெரியார் இன்றளவும் பக்தர்கள் உள்ளத்திலும் உயர்வாகக் குடியிருக்கிறாரே!

அம்மை மாரியாத்தாள் சீற்றம்; காலரா காளியாத்தாள் சீற்றம் என்று பக்தன் சொன்னால், மருத்துவரும், விஞ்ஞானியும், பகுத்தறிவாளரும் அதை எதிர்க்காமல் இருக்க முடியுமா? அவை நோய்கள் என்று சொல்லி சிகிச்சை செய்யாமல் இருக்க முடியுமா? பிற மதங்களை விமர்சித்திருந்தால் அவர் 20 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டிருப்பாராம்! இந்த அரைவேக்காடு சொல்கிறது.

இஸ்லாம் மதத்தை எத்தனையோ பேர் விமர்சித்திருக்கிறார்கள். அதேபோல, கிருத்துவ மதத்தையும் எத்தனையோ பேர் விமர்சித்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் கொல்லப்படவில்லையே! தந்தை பெரியார் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி.... என்ற வாசகங்களை நீதிமன்றமே ஏற்றுள்ளதே!

சுயநல மதவெறிக் கூட்டத்தைத் தவிர மற்ற மக்கள் அதை குரோதமாக எண்ணுவதில்லை. சிந்திக்கவே செய்கின்றனர். அப்படிச் சிந்தித்ததால் எவ்வளவோ மூடச்செயல்கள் ஒழிந்துள்ளன.

எக்கருத்தையும், எதையும் ஒருவன் நம்பவும், ஏற்கவும் உரிமை உள்ளது போலவே, அவற்றை மறுத்துப் பேசவும், உண்மை சொல்லவும் மற்றவர்க்கு உரிமையுண்டு. இது புரியாமல் உளரும் நீரெல்லாம் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதே அவமானம்.

97% மக்களை சூத்திரன் என்று இந்துமதம் சொல்கிறது. மதம் சொல்வதை அப்படியே ஏற்க முடியுமா? பிராமணன் முகத்தில் பிறந்தான், சூத்திரன் காலில் பிறந்தான் என்று மதம் சொல்கிறது, ஏற்கமுடியுமா? சூத்திரன் படிக்கக் கூடாது, சாஸ்திரம் சொல்கிறது, ஏற்க முடியுமா?

ஒரு பகுத்தறிவுச் சிந்தனையாளனை மதவெறியர்கள் கொலை செய்வதை நியாயப்படுத்தவில்லை என்று சொல்லிக்கொண்டே, அதை நியாயப் படுத்துவதற்கான காரணங்களை அடுக்குவது அயோக்கியத்தனம் அல்லவா?

சா.நி... பேசாமல் ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்து ஆயுதம் ஏந்தும் அடியாளாய் மாறும்! பேனா பிடிக்க உமக்கு இனி யோக்கியதை இல்லை!

- மஞ்சை வசந்தன்

Pin It