அண்மையில் ஜே.என்.யு.வில் நடந்த வன்முறை குறித்து, இரண்டு தரப்பினருக்கு இடையேயான மோதல் என்று செய்திகள் வெளியிடப்பட்டன. இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது?

இரண்டு தரப்பிற்குமான கைகலப்பு என்பது தொடர்ச்சியாக ஜே.என்.யு. வில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து வட இந்திய ஊடகங்கள் வெளியிடும் செய்தியாகும். இது இரண்டு தரப்பினருக்கான கைகலப்பு கிடையாது. உண்மையில் ஜே.என்.யு. மாணவர்கள் மீது ஏபிவிபி மாணவர்கள் மற்றும் வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட குண்டர்கள் மூலம் தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல். நிறைய மாணவர் அமைப்புகள் இருக்கின்றன. பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். அதில் ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் அதைச் சொல்வதற்கான ஜனநாயகத்தளம் இங்கே இருக்கின்றது. இங்கு யார் வேண்டுமானாலும் கருத்தைச் சுதந்திரமாக சொல்லலாம். மாற்றுக் கருத்துகளோடு இயங்கும் பல்வேறு அமைப்புகள் இங்கே இருக்கின்றன. மாற்றுக்கருத்தை இன்னொரு கூட்டம் நடத்தி வெளிப்படுத்துவதுதான் இங்குள்ள வழக்கம். ஜே.என்.யு. ஆய்வுப் பல்கலைக்கழகமாக இருப்பதால் பெரும்பான்மையினர் ஆய்வுப் படிப்பை மேற்கொள்பவர்கள்தான். முதுநிலைப் படிப்புகள் கொஞ்சம் பரவலாக இருக்கும். இளநிலைப் படிப்புகள் வெகு குறைவாகவே இருக்கும். பள்ளி முடித்துவிட்டு கல்லூரி சேரும் இளம் மாணவர்கள் உணர்வுவயப்பட்டு மோதிக் கொள்வது போல் அல்ல. இங்கு ஒரு கருத்து சொல்லப்பட்டால் அதன் மீது கேள்விகள் எழுப்பப்படும், விவாதங்கள் உரையாடல்கள் நடைபெறும். இதுதான் ஜே.என்.யு.வின் கலாச்சாரம். வன்முறை என்பது ஜே.என்.யு.விற்கு எதிரான கலாச்சாரம். அதைச் செய்கிற ஒரே ஒரு அமைப்பு ஏபிவிபி மட்டும்தான்.jnu rally 593வன்முறையில் ஈடுபடும் ஏபிவிபி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுவதில்லையா?

வன்முறையில் ஈடுபடும் ஏபிவிபியினர் மீது ஒரே ஒரு முறை நடவடிக்கை எடுத்தால் அவர்கள் வன்முறை நின்றுவிடும். ஆனால் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு ஐந்து நாள்கள் ஆகியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் இன்னும் எங்களை அழைத்து எந்த விசாரணையும் நடத்தவில்லை. துணைவேந்தரைச் சந்திப்பதற்குக்கூட அவர்கள் நேரம் கொடுக்கவில்லை. ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். படங்களை யார் உடைத்தார்கள் என்பதை அறிய அந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். வன்முறை குறித்து விசாரிக்க என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நடவடிக்கை எடுக்கும் முனைப்பு இருப்பதாக பார்க்க முடியவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து முதல்வர் கண்டனங்களைத் தெரிவித்தார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜே.என்.யு. வந்தார்கள். இந்நடவடிக்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன?

பல காலமாக இது போன்ற வன்முறைகள் நடந்து கொண்டிருக்கிற நிலையில், மாணவர்களே சோர்வடைந்திருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து இவ்வளவு பெரிய ஆதரவு வந்தது யாரும் எதிர்பார்க்காதது. முதலமைச்சரே கண்டன அறிக்கை கொடுத்தது பெரிய ஆறுதலையும் ஆதரவையும் தந்தது. தமிழக முதல்வரின் கண்டனத்தின் மூலம் நாடு முழுவதும் ஏபிவிபியினரின் வன்முறை கவனம் பெற்றிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக வந்தார்கள். எந்த இடத்தில் பெரியார் படத்தை உடைத்தார்களோ அதே இடத்தில் மீண்டும் படத்தை வைக்கத் துணை நின்றார்கள். மற்ற மாநில மாணவர்கள் தமிழ்நாட்டைப் போன்று நம் மாநிலங்களிலும் ஆதரவு வராதா என்று எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் வந்ததால் துணைவேந்தர் எங்களையும் அழைத்துப் பேசினார். நாங்கள் கொடுத்த புகாரையும் பெற்றுக் கொண்டார். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தது பல்கலைக்கழக நிர்வாகத்திற்குப் பெரிய அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது.

வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் இனி மாணவர்கள் அந்தக் களத்தில் தொடர்ந்து செயல்பட முடியும். ஜே.என்.யு. போன்ற பொது பல்கலைக்கழகங்களில் ஏபிவிபியின் வன்முறை தொடர்ந்தால் எளிய மக்கள் இயல்பாகவே இக்கல்வி நிலையங்களைத் தவிர்க்க தொடங்கி விடுவார்கள். வலதுசாரிகளே அதிகமாக சேர்க்கப்படுகிறார்கள். எனவே இந்தத் தாக்குதல் என்பது கல்வியின் மீதான தாக்குதல். பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்கள், குறிப்பாக வட மாநிலங்களில் இல்லாத மற்ற மாநில மாணவர்கள் மீதான தாக்குதல். தமிழ்நாட்டில் எப்படி ஏவிபிக்கு அனைத்துத் தரப்பினரும் கண்டனங்களைப் பதிவு செய்தார்களோ அதுபோல் எல்லா மாநிலங்களிலிருந்தும் கண்டனக் குரல்கள் வந்தால்தான் ஏபிவிபியின் வன்முறை தடுக்கப்பட முடியும்.

- தமிழ் நாசர், ஜேஎன்யூ மாணவர்

நேர்கண்டவர்: உதயகுமார்

Pin It