ஆயிரக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்ற ‘வீதி விருது விழா’வில் வைக்கப்பட்ட ஓவியங்கள் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. சென்னை லயோலா மாணவர் அரவணைப்பு மையம் மற்றும் மாற்று ஊடக மையம் ஆகியவை இணைந்து, ஆறாவது ஆண்டாக, நாட்டுப்புறக் ‘கலைஞர்களின் கருத்துரிமைகளைக் காக்கும்’ நோக்கில் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன. லயோலா கல்லூரி வளாகத்தில்,19-20 ஜனவரி தேதிகளில் நடைபெற்ற இந்த விழாவில், கரகாட்டம், ஒயிலாட்டம், காளி வேடம் உள்ளிட்ட பல்வேறு மரபுக் கலைகளை நாட்டுப்புறக் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டினர்.               

loyola college விழாவின் ஒரு பகுதியாக, ஓவியர் முகிலன் வரைந்த 30க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. இந்துத்துவ அரசியலையும், பாஜக கட்சியையும், பிரதமரையும் கடுமையாக விமர்சிக்கும் அரசியல் ஓவியங்கள் அவை. இந்த ஓவியங்கள் இந்துத்துவ சக்திகளை எரிச்சலடையச் செய்துள்ளன.

            “சென்னை லயோலா கிறித்துவக் கல்லூரியில் வி.சி.க, கம்யூனிஸ்ட், நக்ஸல், கிறித்தவ மதமாற்றம் செய்யும் தீயசக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து திட்டமிட்ட விதத்தில் இந்து மதம் மற்றும் தேசத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஓவியங்களைத் தாண்டி விழாவில் பங்கேற்றவர்களையும், ஏற்பாடு செய்திருந்தவர்களையும் கடுமையாக விமர்சித்த பாஜக-வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா அவர்கள், லயோலோ கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் மனுவை அளித்தார். இந்த ஓவியங்களுக்கு எதிராக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட, பல பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தொடர்ந்து கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

            இதையடுத்து, லயோலா கல்லூரியின் கலை மற்றும் இலக்கிய பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் காளீஸ்வரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், லயோலா கல்லூரி நாட்டின் பன்மைத்துவ விழுமியங்களையும், பண்புகளையும் போற்றி வருகிறது என்றும், ஒரு குறிப்பிட்ட மதக் குழு, சமூக அமைப்பு, கட்சி மற்றும் நாட்டின் தலைமை ஆகியவற்றைஇழிவுபடுத்தும் கண்காட்சிக்கு, விழாவின் அரங்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், தங்களின் கவனத்துக்கு வந்தவுடனேயே அந்த கண்காட்சி நீக்கப்பட்டது என்றும், தங்களது தவறை ஒப்புக்கொள்வதாகவும், ஆற்றமுடியாதக் காயத்தை ஏற்படுத்தியதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

            இதைத் தொடர்ந்து, சிறுபான்மை நிறுவனம் என்பதால் லயோலாக் கல்லூரி மிரட்டப் படுவதாகவும், கருத்துரிமை நசுக்கப்படுவதாகவும், இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்பு கண்டனத்திற்குரியது என்றும் அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் கூறியுள்ளனர்.

            கலைஞர்களின் கருத்துரிமையைக் காப்பதற்காக நடத்தப்பட்ட விழாவொன்றில் வைக்கப்பட்ட ஓவியக் கண்காட்சிக்கு வருகின்ற எதிர்ப்பும், ஓவியரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று வரும் தகவலும், சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரையும் கவலையில் ஆழ்த்தும் செய்தியாகும். விழாவை ஒருங்கிணைத்த முனைவர் காளீஸ்வரன் மற்றும் அவருடைய மனைவிக்கும் கூட தொலைபேசியில் தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதாக அறிய முடிகிறது.

      அரசியலமைப்பு சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்தியா குடியரசாகி 70 ஆண்டுகள் ஆகியும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை ஆளும் அரசுகள் துச்சமென மதிப்பது, நாம் செல்ல வேண்டிய உரிமைப் பயணம் நீண்டது என்பதையே காட்டுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் பகுதி III-ல், பிரிவு 19 (1) (a)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்துச் சுதந்தரம், சனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். இதன் மூலமே குடிமக்கள், சமூக, அரசியல், கலாச்சாரக் கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொள்ளவும், அவற்றை மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் முடியும். குடிமக்கள் தங்கள் சனநாயகக் கடமையை நிறைவேற்ற பேச்சுரிமையும், கருத்துரிமையும் அடிப்படையானவை. அதனால்தான் அடிப்படை உரிமைகள் பகுதியில் மட்டுமல்லாமல் (பகுதி III), இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையிலேயே அவை இடம் பிடித்துள்ளன.

      பிரிவு 19 (2)-ன் கீழ் கருத்துச் சுதந்தரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், பல்வேறு உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கள் குடிமக்களின் கருத்துச் சுதந்தரத்தை உயர்த்திப் பிடித்துள்ளன. பிரபலமான கேதர்நாத் சிங் வழக்கில், (Kedar Nath Singh vs State Of Bihar on 20 January, 1962), அரசின் செயல்பாடுகளை மாற்றுவதற்காக, அரசை ஒருவர் எந்த அளவுக்குக் கடுமையாக விமர்சித்தாலும், அது சட்டத்திற்குட்பட்டதே என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.     

      ஓவியர் எம்.எஃப். உசேன் பாரதமாதாவை இழிவுபடுத்தும் வகையில் ஓவியம் வரைந்து விட்டார் என்று தொடரப்பட்ட வழக்குகளில், அவர் மேல் முறையீட்டுக்குச் சென்ற பொழுது, ‘சனநாயகம் பெரும்பான்மைவாதத்தைத் தாண்டிய விழுமியங்களைக் கொண்டது. பன்மைத்துவம்தான் சனநாயகத்தின் ஆன்மா. மாற்றுக் கருத்துக்கான உரிமை என்பதே அதன் தனித்தன்மை. உண்மையான சனநாயகத்தில், மாற்றுக் கருத்து கொண்டவர், மரபுக்கு எதிரான, தன்னுடைய விமர்சனப் பார்வைக்காக தான் சிறைப்படுத்தப்படுவோம் என்றோ, துன்புறுத்தப்படுவோம் என்றோ, பொருளாதார, சமூக புறக்கணிப்பு தனக்கு நடக்கும் என்றோ பயமில்லாமல், இயல்பாக உணரவேண்டும். நாம் வெறுக்கும் கருத்துக்கும் சுதந்தரம் வேண்டும்’ என்று டெல்லி உயர்நீதிமன்றம் 2008ல்  தீர்ப்பு வழங்கியது.           

      மேலும், வெளிப்படுத்தும் கருத்தின் மூலம் உருவாகும் அபாயம், நேரடியாகவும், உடனடியாகவும் சமூக நலனை பாதிக்கும்படி இருந்தால் மட்டுமே, 19 (2)-ன்படி,  பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், அது ஊகத்திற்குட்பட்டதாகவோ, உடனடித் தாக்கத்தை உண்டாக்காமல், நீண்ட கால தாக்கத்தை உண்டாக்குவதாக இருந்தால், கருத்துரிமையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் {Ramesh v. Union of India AIR 1988 SC 775} அளித்தத் தீர்ப்பு இங்கு குறிப்பிடத்தக்கது.

      இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தாண்டி, இந்திய மரபிலும் கருத்துரிமையைப் பாதுகாக்கும் போக்கு இருந்துள்ளது. இந்தியாவின் பழமையான இலக்கியங்களில் ஒன்றான நாட்டிய சாஸ்திரத்தில், இந்திரனும், பிரம்மாவும், நாடக மேடையில் எதையும் பேசலாம், அங்கே தடை செய்யப்பட்டது எதுவுமில்லை என்று நாடக நடிகர்களுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்ததைப் பற்றி குறிப்புள்ளது என்று சல்மான் ருஷ்டி தன்னுடைய உரையொன்றில் குறிப்பிடுகிறார். 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்வாச்சாரியாரால் உருவாக்கப்பட்ட வேதாந்தத்தின் மத்வா பிரிவு, அதற்கு எதிரான உரைகளையும்/ இலக்கியங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. தர்ம உரையாடலின் பகுதியான ‘பூர்வ பக்சா’ என்ற மரபு, எதிராளியின் கருத்தை விமர்சிக்கும் முன், அதைப் பற்றி ஆழமான பரிச்சயம் வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

      இப்படி இந்தியாவில் கருத்துரிமைகளைக் காக்கும் மரபுகள் இருந்தும், இந்துத்துவ சக்திகள், தங்கள் நிலைப்பாட்டை மட்டுமே மற்றவர்கள் வழிமொழிய வேண்டுமென்றும், அப்படி வழிமொழியாதவர்களை எதிரிகளாகப் பாவித்து அவர்களுக்கு நெருக்கடியையும், அச்சுறுத்தலையும் கொடுப்பதும் தொடர்ந்து நடக்கின்றது. இது இந்திய மரபுகளைப் பற்றியோ, இந்திய அரசியல் சாசனத்தின் விழுமியங்களைப் பற்றியோ இந்துத்துவ சக்திகளுக்கு புரிதலோ, அக்கறையோ இல்லை என்பதையே காட்டுகிறது. ஓர் அகில இந்தியக் கட்சியின் மாநில மற்றும் தேசியப் பொறுப்பாளர்கள், கருத்துரிமைக்கு எதிராக நிலைப்பாடு எடுப்பது ஒன்றும் தற்செயலானது இல்லை. பல்வேறு தருணங்களில் மதத்தின் பெயரால் இந்துத்துவ சக்திகள், கருத்துரிமைக்கு எதிராகப் படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் நெருக்கடிகளைக் கொடுக்கும் பொழுது, ஆளும் பா.ஜ.க அரசு வேடிக்கைப் பார்ப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது என்பதைப் பொதுச்சமூகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது..

      தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னை, ரபேல் ஊழல், கத்துவா மற்றும் நந்தினி பாலியல் வன்கொடுமை, ஆளும் அரசின் ஏகாதிபத்திய மோகம், கஜா புயலில் பறக்கும் தேசிய மானம், விவசாயிகள் தற்கொலை, பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியா சூறையாடப்படுவது, சபரிமலை பெண்கள் நுழைவு பிரச்னை, கைதுக்கான முகாந்திரம் இருந்தும் கூட பா.ஜ.க வின் பொறுப்பாளர்கள் கைது செய்யப்படாமல் நீதி பிறழ்வது போன்ற சமகால அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்து முகிலனின் தூரிகை ஆழமாகவும், அழுத்தமாகவும் தன்னுடைய கடமையைச் செய்துள்ளது. உண்மையில் இவ்வளவு துணிவுடன் தன்னுடையப் படைப்புக்களைப் பொது வெளியில் வைத்த முகிலன், ஒரு கலைஞனாகக் கொண்டாடப்பட வேண்டியவர். இத்தைகைய எதிர்ப்புப் புயல்களைத் தாண்டியும் ஒரு கலைஞனாக அவர் மிளிர்வார் என பியூசிஎல் நம்புகிறது.

      இறுதியாக 2016ல், தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ மற்றும் அதன் ஆங்கில வடிவான ‘One Part Woman’ புத்தங்களைப் பறிமுதல் செய்ய மறுத்து, “படிப்பதற்கான முடிவு எப்போதுமே வாசகருடையது. ஒரு புத்தகத்தை நீங்கள் விரும்பவில்லையெனில், தூக்கி எறியுங்கள்” என்று கருத்துரிமையை உயர்த்திப் பிடித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியதை பியூசில் நினைவு கூருகிறது.

      எனவே, ஓவியர் முகிலன், முனைவர் காளீஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், தமிழகக் காவல்துறை அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதுடன், அச்சுறுத்துபவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) வலியுறுத்துகிறது.     

      மேலும், வரும் கல்வியாண்டு முதல் டெல்லி அரசு அறிமுகப்படுத்துவது போல, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு  இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கூறுகள், அடிப்படை உரிமைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றைப் பற்றிய விவாதங்களை நடத்தி, மாணவர்களை அரசியல் புரிதலுள்ள, பொறுப்புள்ள குடிமக்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என தமிழக அரசை பியூசிஎல் கோருகிறது. இதன் மூலம் கருத்துரிமையைப் போற்றும் ஓர் அறிவார்ந்தச் சமூகத்தை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என பியூசிஎல் நம்புகிறது.

கண. குறிஞ்சி                                                    க.சரவணன்

மாநிலத் தலைவர்                                     மாநிலப் பொதுச் செயலர்

Pin It