கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தபோல்கர் கொலை: மதவெறியர் கைது

2013ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் டாக்டர் தபோல்கரை சுட்டிக் கொன்ற ‘சிவசேனை’ முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் நடப்பது இந்துத்துவ பாசிச கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சிவசேனை ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது. கவுரி லங்கேஷ் படுகொலையைத் தொடர்ந்து கருநாடக அரசு மேற்கொண்ட தீவிரப் புலனாய்வு காரணமாக இதுவரை சிக்காமல் பதுங்கி நின்ற ‘சங்பரிவார்’ குடும்பங்கள் சிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய படுகொலைகளை நடத்தும் ‘சங்பரிவார்’ கொள்கையாளர்கள் ஒவ்வொரு வன்முறை நிகழ்த்தும் போதும் ஏதேனும் ஒரு புதிய இந்துத்துவா பெயரை சூட்டிக் கொள்வது வழக்கம். காந்தி கொலையில் கோட்சே கும்பல் இதே தந்திரத்தைத்தான் பின்பற்றியது. அவரைத் தொடர்ந்து அதே மாநிலத்தைச் சார்ந்த கோவிந்த் பன்சாரே 2015 பிப்ரவரியில் கோலாம்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இந்துத்துவா எதிர்ப்பாளர். மாவீரன் சிவாஜியின் உண்மையான வரலாற்றை தாய்மொழியில் நூலாக எழுதியவர்.

2015 ஆகஸ்ட்டில் கருநாடக மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் துணைவேந்தரும் சிறந்த இலக்கியவாதி யுமான முனைவர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டார். வீட்டுக்குள்ளேயே மாணவர்போல் சந்திக்க வந்து நேருக்கு நேர் சுட்டுக் கொன்றான் கொலையாளி. 14ஆம் நூற்றாண்டு சமூக சீர்திருத்தவாதி, பார்ப்பன எதிர்ப்பாளர் பசவண்ணாவின் கருத்துகளை ஏற்று பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்தவர்.

2017இல் இதேபோல் இந்துத்துவாவை எதிர்த்துப் போராடி வந்த கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைகளில் ஒரே ரக துப்பாக்கியும் துப்பாக்கிக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு கவுரி லங்கேஷ் கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் தபோல்கர் கொலையிலும் துப்பு துலங்கியுள்ளது. சிவசேனையின் முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்பவரை மகராஷ்டிரா காவல்துறை ஆக. 18ஆம் தேதி இரவு கைது செய்தது. அதேபோல் தபோல்கரை துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றம்சாட்டப்படும் பிரகாஷ்ராவ் கள்ளூர் புனேவில் கைது செய்யப்பட்டுள்ளார். நடைப்பயிற்சி சென்ற தபோல்கரை 2013 ஆகஸ்ட் 20ஆம் தேதி இரு சக்கரவண்டியில் பங்கார்கர் பின்னால் அமர்ந்திருக்க, தான் (பிரகாஷ் ராவ்) தபோல்கரை சுட்டுக் கொன்றதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

“தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவர் தொடங்கிய ‘மகாராஷ்டிரா அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி’ என்ற மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் வேகமாகப் பரவி வருகிறது” என்று தபோல்கர் மகன் அமீத் கூறியுள்ளார். இப்போது 36 மாவட்டங்களில் 5000 முழு நேர ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்; பிற மாநிலங்களிலிருந்தும் எதிர்பாராத முகாம்களி லிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது என்றும், முகநூல் வழியாக 80,000 பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்றும் கூறினார்.