நம்மில் பலருக்கும் டாக்டர் அண்ணாஜி அவர்களைத் தெரிந்திருக்க வாய்ப்புகள் அரிது. உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் இன்றியமையாத் தேவைகளுக்காகவும் தமது வாழ்வை வழங்கிய அனேக தலைவர்களின் தியாக வாழ்வை முதலாளிய எடுபிடி ஊடகங்கள் மூடிமறைத்துவிட்டன. பாலியலிலும், விளையாட்டுகளிலும், சாதி, சமயப் பூசல்களிலும் இன்றைய இளம் தலைமுறையினை மூழ்கடித்து, சமூக ப்ரக்ஞை ஏதுமற்ற மலடுகளாய், கொடுமைகள் கண்டு கண்மூடிப்போகும் கோழைகளாய் மாற்றிப்போட்டிருக்கும் நிகழ்கால அவலத்தின் சூழ்ச்சி வலைகளைத் தகர்க்க டாக்டர் அண்ணாஜி போன்றோரின் மகத்தான வாழ்க்கைகளே பாதை காட்ட முடியும்.

சேலம் ஜில்லா, தேவூர் எனும் கிராமத்தில் ஒரு பிரபலமான செல்வந்தர் குடும்பத்தில் 30.09.1909ல் பிறந்தார் அண்ணாஜி். உயர்நிலைப்பள்ளியில் மணவராக இருந்தபோதே 1930ம் ஆண்டு வாக்கில் நடந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த அவர் கொடும் தடியடிக்கும், 1 வருட சிறை தண்டனைக்கும் ஆளானார்.

இயல்பிலேயே உழைக்கின்ற மக்களின் மீது ஆழ்ந்த பற்றுகொண்ட அண்ணாஜி காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் குருவிகளைப் போல மக்களை கொத்துக்கொத்தாய் கொல்லும் அவலம் கண்டு முறையான அறிவியல் மருத்துவத்தின் தேவையை உணர்ந்தார். தனது தந்தையின் பலத்த எதிர்ப்பையும் மீறி 1934ம் ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்தார்.

மருத்துவப் படிப்புக்கு பிறகு லலிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட மருத்துவர் தொடர்ந்து தேசவிடுதலைப் போராட்டத்தில் தனது மனைவியுடன் பங்கெடுத்தார். 1940ம் அண்டில் நாடெங்கும் நடந்த தனிநபர் சத்யாகிரகத்தில் பங்கெடுத்த மருத்துவர், தனது மனைவி லலிதாவுடன் இணைந்து 9 மாத சிறை தண்டனை பெற்றார். லலிதா வேலூர் பெண்கள் சிறையிலும், அண்ணாஜி திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்த அந்த 9 மாத காலத்தில்தான் அண்ணாஜி வாழ்வில் மகத்தான மாற்றம் உண்டானது. ஏற்கனவே சத்யாகிரக போராட்டத்தில் பங்கெடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ தோழர்களான பி.சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோருடன் விவாதித்து வெளியில் ஒரு பொதுவுடைமை சிந்தனையாளராய் திரும்பினார்.

சிறைவாசத்துக்குப் பிறகு தனது மனைவி லலிதாவுக்கும் பொதுவுடமைக் கொள்கைகளை போதித்து அவரையும் முழுநேர கம்யூனிஸ்டாக்கினார். தோழர் லலிதா தனது இறுதி மூச்சுவரை ஒரு அறிவார்ந்த கம்யூனிஸ்ட்டாகத் திகழ்ந்தார்.

சிறைவாசத்திற்குப் பிறகு பல பகுதிகளில் சுற்றிவந்த அண்ணாஜி இப்போதைய கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டிணம் பகுதியில் தனது மருத்துவ சேவையை ஆரம்பித்தார். காவேரிப்பட்டிணம் பகுதியில் இருந்த மிட்டாதாரர்களும் உயர்சாதி ஆதிக்க சக்திகளும் விவசாயிகளையும், விவசாயக்கூலிகளையும் கொடுமையாக அடக்கி சுரண்டிக் கொண்டிருந்தது கண்டு மனம் பதைத்தார். விளைச்சலில் பெரும் பகுதியினை மிட்டாதாரர்கள் அபகரித்துவிட பெரும் வறுமையில் விவசாயிகள் விழிபிதுங்கி நின்றனர். இந்த கொடுமை தீர உறுதி மிக்க விவசாயிகளின் சங்கமே ஒரே தீர்வு என அவருக்கிருந்த பொதுவுமைச் சிந்ததனை வழிகாட்டியது.

முதல் முதலாக காவேரிப்பட்டிணம் ராமபுரம் பகுதியில் 1942-ம் ஆண்டு அண்ணாஜியால் விவசாய சங்கம் கட்டப்பட்டது. "தமிழகத்திலேயே முதன் முதலில் ஸ்தாபன ரீதியில் விவசாயிகளை அணிதிரட்டிய பெருமை டாக்டர் அண்ணாஜியையும், அவர் மனைவி லலிதாவையுமே சாரும்." என தோழர் சீனிவாசராவ் பெருமையுடன் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். தஞ்சை விவசாயிகளின் பேரெழுச்சி கூட அண்ணாஜி தலைமையிலான போராட்டத்திற்குப் பின்னிட்டே எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஆறு மாதத்துக்கும் மேலாய் நடந்த விவசாயிகளின் போராட்டம் அண்ணாஜியின் சீரிய வழிகாட்டுதலால் வெற்றியுடன் முடிந்தது.

வெற்றி கொடுத்த உற்சாகமானது கிருஷ்ணகிரி வட்டம் முழுவதுமே பற்றிப் படர்ந்தது. பல இடங்களிலும் விவசாயிகள் சங்கம் கட்டவேண்டி தொடந்து விண்ணப்பங்கள் குவிந்தவண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் விவசாயிகளின் எழுச்சி கண்டு அண்ணாஜியே திகைத்துப் போய்விட்டார். திகைப்பிலிருந்தும், குழப்பத்திலிருந்தும் விடுபட பொதுவுடைமை இயக்கத்தின் தேவை குறித்து உணர்ந்த அண்ணாஜி கம்யுனிஸ்ட் இயக்கத்தின் மைய நீரோட்டத்தோடு தன்னை ஆழமாய்ப் பிணைத்துக் கொண்டார். அவரின் மறைவு வரை அந்த உறவு தொடர்ந்தது.

தொடர்ந்து இயக்க நடவடிக்கையில் தீவிரமாகப் பங்கெடுத்த அண்ணாஜி 1947 அதிகார மாற்றத்தின்போது பாதுகாப்பு கைதியாய் சிறை வைக்கப்பட்டார். அதே ஆண்டு தமிழக விவசாய சங்கத்தின் மாநில அமைப்புக் குழு உருவாக்கப்பட்டபோது தோழர் லலிதா மாநில உதவி செயலாளராகவும், அண்ணாஜி மாநில கவுன்சில் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அதே ஆண்டு விஜயவாடாவில் நடந்த அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் இருவரும் தமிழகம் சார்பாக பங்குபெற்றனர்.

1948ம் ஆண்டு பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டு கொடும் அடக்குமுறை கட்டவிழ்த்துவிட்ட போதும், தைரியத்தோடு செயலாற்றிய மருத்துவர்; தோழர்கள் தெய்வம், பஞ்சாட்சரம், சின்னதம்பி உள்ளிட்ட உறுதி வாய்ந்த தோழர்களையும் உடன் இணைத்துக்கொண்டு பணியாற்றினார்.

தோழர் லலிதா தனது கணவரின் அடியொற்றி புரட்சிகரப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1949ல் ஏற்பட்ட அவரின் திடீர் இறப்பு கம்யூனிஸ்டு கட்சிக்கும், அண்ணாஜிக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்தது. தனது 29 வது வயதில் அந்த அம்மையார் இறந்தது அவரைப் பெரிதும் பாதித்தது. துணைவியாரின் இறப்புக்குப் பிறகு மீளாத துன்பத்தில் ஆழ்ந்த அண்ணாஜி, உறவினர்களின் நச்சரிப்பில் இரண்டாவதாக உறவுக்காரப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்.

நடைமுறை தொடர்பான செயல்பாடுகளில் எப்போதும் அதீத ஆர்வம் கொண்ட மருத்துவர் 1963ல் கட்சி இரண்டாக உடைந்தபோது சி.பி.எம் இல் இணைந்து செயலாற்றினார். தனது வாழ்வின் கடைசிமூச்சுவரை பொதுவுடைமை இயக்கங்களின் பால் பற்றுகொண்ட மருத்துவர் கட்சிபேதம் பார்க்காமல் நச்சல்பாரி இயக்கத்தின் தலைமறைவுத் தோழர்களுக்கும் அச்சமின்றி மனம் விரும்பி வைத்தியம் பார்த்தவர்.

தள்ளாத வயதிலும் 1984ல் நடந்த நக்சல்பாரித் தோழர்களான அப்பு-பாலன் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அண்ணாஜி அந்நிகழ்வு குறித்தும், அதன் வீச்சு குறித்தும் நீண்ட காலம் பெருமையோடு பேசிக் கொண்டிருந்ததாக அவருடன் இணைந்திருந்த தோழர்கள் இன்றைக்கும் குறிப்பிடுகின்றனர்.

மக்களின் மருத்துவராக....
-------------------------------------------------

விவசாய சங்கத்திலும் பொதுவுடைமை இயக்கத்திலும் முக்கிய நிர்வாகியாகத் திகழ்ந்த அண்ணாஜி மகத்துவம் மிகுந்த, முன்னுதாரணமான மருத்துவராகத் திகழ்ந்தார். ஆங்கில மருத்துவம் வர்த்தக நோக்கோடு கொள்ளைக் கூடாரமென மலிந்துபோய்விட்ட இன்றைய சூழலில் அவரின் தியாகம் தன்னிகரில்லாதது.

1940களின் துவக்கத்தில் நாடெங்கும் பரவிய காலரா நோய்க்குப் பலர் பலியாயினர். டாக்டர் அண்ணாஜி வீடுவீடாகச் சென்று இலவசமாக வைத்தியம் பார்த்தார். நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஊசியில் கலக்கப்படும் டிஸ்ட்டில்டு வாட்டர் இல்லாத காலத்தில் இளநீரைக் காய்ச்சி ஆறவைத்து ஊசிக்குப் பயன்படுத்தினாராம்.

1942ல் இந்தியாவெங்கிலும் பிணக்குவியலை ஏற்படுத்திய பிளேக் நோய்; அந்தக்காலத்தில் வைத்தியம் பார்த்த பலரையும் விட்டுவைக்கவில்லை. அண்ணாஜி அப்போதும் அசராமல் கடமை உணர்வோடு வைத்தியம் பார்த்த மருத்துவர்; உறவினர்களே செல்லத் தயங்கிய தென்பென்னை ஆற்றங்கரையிலிருந்த பிளேக் முகாமுக்கு தோழர்களுடன் சென்று தாமே இறந்தவர்களை அடக்கமும் செய்தார்.

தனது வாழ்நாள் முழுவதுமே அரையணாவுக்கும் காலணாவுக்கும் வைத்தியம் பார்த்த அண்ணாஜி 1992ம் ஆண்டு மறைந்தார். கிருஷ்ணகிரியில் தான் நடத்திய மருத்துவமனையையும் கம்யூனிஸ்டு கட்சிக்கே எழுதி வைத்துவிட்டார்.

பக்கம் பக்கமாய் எழுதிக் குவிக்கலாம். மேடைதோரும் வீராவேசமாக நீட்டி முழங்கலாம். ஆனால் களத்தில் இறங்கி வலுவான மக்கள் திரள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்துவதே ஒரு போராளியின் இலக்கணமாகும். அத்தகு இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது டாக்டர் அண்ணாஜியின் வாழ்வு.

- பாவெல், தருமபுரி

Pin It