karpurgi

முனைவர் மல்லேஷப்பா மடிவாளப்பா கல்புர்கி 30.8.2015 காலையில் கர்நாடக தார்வாரில் உள்ள அவர் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கன்னட இலக்கியத்தில் மிகவும் பிரபலமானவரும் முற்போக்கு சிந்தனையாளரும், சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிராகவும் மூடத்தனத்திற்கு எதிராகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவருமாக டாக்டர்.கல்புர்கி திகழ்ந்துள்ளார்.

தான் பிறந்த லிங்காயத்து சாதியினர் இந்துத்துவா சார்பான நிலைபாட்டில் கடும் தீண்டாமை கடைபிடிப்பவர்களாக மாறியுள்ள நிலையில் சாதிகளை ஒழிக்கப் பிறந்த லிங்காயத்து சமூகம் என்பதை தனது படைப்புகள் வழியே சுட்டிக் காட்டினார். பசவன்னா என்ற ஆன்மீக குரு தாழ்த்தப்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு தனது உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்து வைத்தார் என சுட்டிக்காட்டினார். இதனால் கடும் சொந்த சாதி எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார். லிங்காயத்து சாதியின் சாமியார்கள், மடங்கள் அவருக்கு எதிராக தொடர் பிரச்சாரம் செய்தன. பலர் அவரைத் தாக்க எத்தனித்தனர். அவர் வீட்டின் மீது கல் வீசப்பட்டது. தனது குடும்பத்தாரின் பாதுகாப்புக்காக கருத்தை திரும்பப் பெறவேண்டிய வன்முறையான சூழலில் அது தனது தற்கொலைக்கு இணையானது என்றார்.

சிலை வழிபாட்டுப் பழக்கங்கள் மீது அவரின் எழுத்துக்கள் கருத்தியலான போரை நடத்தியது. மகாராஷ்டிரத்தின் முற்போக்கு மற்றும் மூட நம்பிக்கை எதிர்ப்பாளரான தபோல்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கோவிந்த் பன்சாரே போன்றோர்களைப் போல கல்புர்கியும் கொல்லப்பட்டுள்ளார். இந்த எல்லாக் கொலைகளிலும் அதன் பின்னணியிலும் ஓர் ஒற்றுமை இருந்துள்ளது.

அவர் ஹம்பியில் உள்ள கன்னட பல்கலைகழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றியுள்ளார். 2006ல் தனது ஆய்வு நூலுக்காக கர்நாடக சாகித்திய அக்காதமி விருது பெற்றுள்ளார். தனது கருத்துரிமைக்காக தனது வாழ்நாள் முழுவதும் நெஞ்சுரத்துடன் போர் புரிந்த ஒரு சிவில் சமூகப் போராளியாகவே கல்புர்கி திகழ்ந்துள்ளார். இந்துத்துவ பாசிசம் மற்றும் பார்ப்பனிய கருத்தாக்கங்களுக்கு எதிரான ஒரு தொடர் போராட்டத்தில் கருத்தியல் ரீதியாக வெல்ல முடியாத கோழைகள் அவரைக் கொலை செய்துள்ளனர்.

தனது ஆசிரியர் பணியில் தனது முற்போக்கு கருத்துக்களை தனது மாணவர்களிடம் அவர் விதைத்து வந்திருக்கின்றார். பாசிசம் தனது அச்சுறுத்தல்கள் மூலம் சனநாயக உணர்வுகளை அழிக்க முற்படும் ஒரு காலத்தில் தொடர்ந்து மூன்று படைப்பு ஆளுமைகளும் சிந்தனையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். பாசிசம் கல்புர்கிகளை கொன்றொழித்தபோதும் அதன் கோழைத்தனமே பதுங்கி வெளிப்படுகின்றது. கல்புர்கி இறந்தபோதும் முற்போக்கு சனநாயகத்தின் வீரம் உயிர்ப்பெற்று நிற்கின்றது. கல்புர்கிகள் சாவதில்லை என்பதை மக்கள் சமூகம் பாசிசத்திற்கெதிரான தனது அஞ்சாமையின் மூலம் வெளிப்படுத்தும்! மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) படுகொலையினைக் கண்டிப்பதுடன் முனைவர்.கர்புகிக்கு தனது அஞ்சலிகளை செலுத்துகின்றது!

- பேரா.சரஸ்வதி, தலைவர் & ச.பாலமுருகன், மாநிலச் செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தமிழ்நாடு மற்றும் புதுவை

Pin It