cauvery 413

முன்னுரை:

 செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்

 ஞாலம் காவலர் தோள் வலி முடுக்கி

 ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த

 நல்லிசை நிறுத்தல் வேண்டினும்…..

 இறந்தபின் செல்லும் மறு உலகத்தின் செல்வத்தை அடைய விரும்பினாலும், உலக மன்னர்கள் எல்லோரையும் வென்று உலகம் முழுவதற்குமான ஒரு பேரரசனாக நீ ஆக விரும்பினாலும், இந்த உலகத்தில் மிகப்பெரிய புகழை நிலை நிறுத்திக்கொள்ள விரும்பினாலும் அவைகளை அடைவதற்கான தகுதியைக் கேள் எனக் கூறியபின்,

 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;

 உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

 உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;

 நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு

 உடம்பும் உயிரும் படைத்திசினோரே; என்கிறார் குடபுலவியனார்.

 ‘நீர் இன்றி வாழ முடியாத உடலுக்கு உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொத்தவர்கள் ஆவர். உணவுதான் உடலுக்காண காரணமாகும். உணவு எனப்படுவது நிலத்தொடு நீர் சேருவதால் கிடைப்பதாகும். ஆகவே நிலத்தையும் நீரையும் சேர்த்தவர்கள்தான் உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள் ஆவர். ஆகவே வேந்தனே! நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை, அணைக்கட்டு போன்றவற்றை நாடு முழுவதும் பெருக்குக! இவைகளைச் செய்வதன் மூலமே முதலில் கூறிய மூவகை நலங்களையுமடையும் தகுதி பெறுவாய்!’ என்கிறார் அவர். இவர் கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலப் புலவர். இவரது இப்பாடல் எண்: புறம்-18.

 கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரும்புகழ்பெற்ற தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்கிற பாண்டிய வேந்தனிடம் கூறிய அறிவுரை இதுவாகும். ஏரி, குளம், குட்டை, அணைக்கட்டு போன்ற நீர்நிலைகளை உருவாக்குவதுதான் ஒரு ஆட்சியாளனின் கடமை எனத் தெளிவாக நமது பண்டைய புலவர்கள் எடுத்துரைத்துள்ளனர். ஆனால் இன்று நீர் நிலைகள் தொடர்ந்து அழிந்து கொண்டுள்ளன. அரசின் பேருந்து நிலையங்களும், பள்ளிகளும், அரசு அலுவலகங்களும் நீர் நிலைகளில்தான் கட்டப்படுகின்றன. எவ்வளவு கொடுமை? தொழிற்சாலைக்கழிவுகளால் நீர்நிலைகள் பெருமளவு மாசுபட்டு வருகின்றன. நீர்வளத்துக்கு மூல காரணமான காடுகள் அழிக்கப்படுகின்றன. மணல் வேட்டையாடப்படுகிறது.

 இவைகளின் காரணமாக நதிகளும், ஆறுகளும் காணாமல் போகின்றன. மிகுந்த வருத்தத்துக்கும் சோகத்துக்கும் உரிய இந்தச் சூழ்நிலையில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் நமக்குத் தரவேண்டிய நீரைத்தர மறுத்து, நம்மை ஏமாற்றி வருகின்றன. இவைகள் தடுக்கப்பட வேண்டுமானால் தமிழக மக்கள் விழிப்புணர்வு பெற்றாக வேண்டும். சாதி மத பேதங்களை; ஏழை பணக்காரன்; தொழிலளி முதலாளி; படித்தவன், படிக்காதவன்; பெரியவன், சிறியவன் போன்ற பேதங்களை மறந்து தமிழ் தேசத்து மக்களாக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நமக்குரிய நீரைப்பெற அண்டை மாநிலங்களோடு போராடத்தயாராக வேண்டும். நமது தமிழக முன்னோர்களின் பண்டைய காலத்திய சிறந்த தொழில்நுட்பங்களைக் கண்டுணர்ந்து அவைகளை பேணி வளர்த்தாக வேண்டும்

 பல நவீன முறைகளைக் கையாண்ட பின்னரும் இன்றைய தமிழகத்தின் சராசரி நெல் உற்பத்தி என்பது ஏக்கருக்கு 1.25 டன்னுக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் பண்டைய தமிழகத்தின் சராசரி நெல் உற்பத்தி என்பது ஏக்கருக்கு 2.5 டன்னுக்கும் அதிகமாக இருந்துள்ளது. இதனை 1000 ஆண்டுகளுக்கு முந்தைய இராசராச சோழனின் தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டும், ஆங்கில ஆட்சியின் தொடக்க காலத்தில்(கி.பி.1762-1766) செங்கல்பட்டில் ஆங்கிலேயர் நடத்திய ஆய்வும் உறுதிப்படுத்துகின்றன(SOURCE: HINDUISM TODAY, MAY, 1997). தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்த ஆங்கிலேயர் காலத்திய ஓலைச்சுவடிகள் மூலம் வரலாற்றாசிரியர் திரு தரம்பால்(DHARAMPAL) அவர்களால் 1960 வாக்கில் இத்தரவுகள் படித்தறியப்பட்டன. நமது பண்டைய தமிழக முன்னோர்களின் தொழில்நுட்பங்கள் பலவற்றை நாம் இழந்துள்ளோம் என்பதை இத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

 நமது முத்தமிழின் சிறப்பையும், நமது சங்ககால முன்னோர்களின் வரலாற்றையும் அவர்களின் அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் அவைகளின் பயன்பாட்டையும் நாம் இழந்து நிற்கிறோம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் இசை, நாடகம் ஆகிய இரண்டையும் முழுமையாக இழந்து விட்டோம். இயலின் ஒரு சிறுபகுதி மட்டுமே சங்க இலக்கியம் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டுள்ளது. நாம் ஒன்று சேர்ந்து முயன்றால் இழந்த பண்டைய தொழில்நுட்பங்களை ஓரளவாவது மீட்டெடுக்க முடியும். அவை நமது வாழ்க்கையை வளப்படுத்தும், மேம்படுத்தும்.

 இறுதியாக காவிரி நதி நமது பண்டைய பண்பாட்டின், பண்டைய பெருமையின் அடையாளம்; நமது இன்றைய வளத்தின் சின்னம். அதனை நாம் இழந்துவிடக்கூடாது. இடைவிடாது தொடர்ந்து போராடி காவிரி நதியைப் பாதுகாக்க வேண்டியது தமிழ் தேசத்தவர்களாகிய நமது அனைவரின் கடமையாகும். தமிழக மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று கூடி, முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு இக்கடமையை முடிக்காவிடில் நமது எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

காவேரி நதியின் தொன்மையும் பெருமையும்:

 “ .....................................................கூம்பொடு

 மீப்பாய் களையாது மிசைபரந் தோண்டாது

 புகாஅர் புகுந்த பெருங்கலத் தகாஅர்

 இடைப்புலப் பெருவழிச் சொரியும்” (புறம்-30)

 ‘பெருங்கப்பல்கள் தனது கூம்புடன்கூடிய விரிந்த பாய்களை தளர்த்தாமலும், அதில் ஏற்றப்பட்டிருந்த பண்டங்களை இறக்காமலும், காவேரிநதியின் முகத்துவாரத்தில் உள்ள பூம்புகார்த்துறையில் பண்டங்களைச் சிதறியவாறு நுழைந்தன’ என்கிறார் சோழன் நலங்கிள்ளி குறித்துப் பாடிய உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அவர்கள்.

 இதன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு ஆகும். கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பட்டினப்பாலையும், கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிலப்பதிகாரமும், இன்னபிற சங்க இலக்கியங்களும், அதன் பிந்தைய தமிழ் இலக்கியங்களும் காவேரி நதி குறித்தும் அதன் முகத்துவாரத்தில் உள்ள பூம்புகார்த் துறை குறித்தும் அவைகளின் பெருமைகள் மற்றும் சிறப்புகள் குறித்தும், அவைகளின் தொன்மை குறித்தும் பலபடப் பேசுகின்றன.

 இந்தியக் கப்பலியல்(INDIAN SHIPPING) என்ற நூலை எழுதிய வரலாற்று ஆராய்ச்சியாளர் திரு இராதா குமுத் முகர்ஜி அவர்கள், “சங்க இலக்கியங்களில் இருந்து புகார்த்துறையின் பெருமையை தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் வாயிலாகத் துறைமுகத்தின் நீள அகலங்களும் நமக்குத் தெளிவாகின்றன. பெரிய பாய்மரக்கப்பல்கள் இத்துறைமுகத்தில் தமது பாய்களைத் தளர்த்தாமலேயே நுழைந்தன” எனக் குறிப்பிடுவதாகச் சொல்கிறார். இந்தியக் கடற்படை முதன்மைப் பொறியாளர்களில் ஒருவரான திரு நரசய்யா அவர்கள்.

 மேலும் நரசய்யா அவர்கள் “பாய்களைத் தளர்த்தாமல் வரும்பொழுது கப்பலின் வேகம் அதிகமாக இருக்கும். சரக்குகளுடன் கப்பல்கள் பளுவாகவும் ஆழமாகவும் மிதக்கும். அதனால் பூம்புகார்த்துறைமுகம் நல்ல ஆழமும் பெரிய பரப்பளவும் கொண்ட மிகப்பெரியதொரு துறைமுகமாகத்தான் இருந்திருக்க வேண்டும்” என்கிறார்.(கடல்வழி வணிகம்-நரசிய்யா, பக்: 48,49).

 பூம்புகார்த் துறையும் அது இருந்த காவேரி நதியும் மிகப்பெரிய நீள அகலங்களைக் கொண்டதாகவும் மிக ஆழமானதாகவும் இருந்தன என்பதை மேற்கண்ட செய்திகள் உறுதி செய்கின்றன. இச்செய்தியோடு வணிகக் கப்பல்கள் பூம்புகார்த் துறைமுகம் முதல் உறையூர் (இன்றைய திருச்சி வரை) வரை சென்று வந்தன என்ற செய்தியையும் பொருத்திப் பார்க்கும்பொழுது, காவேரி நதியில் வருடம் முழுவதும் மிகப்பெரிய அளவு நீர் ஓடிச் சென்று கடலில் கலந்து கொண்டிருந்தது என்பது உறுதியாகிறது. பெரிய கப்பல்கள் செல்லும் அளவு இருந்த அன்றைய காவேரி நதி, இன்று சிறுத்து வறண்டு கிடப்பது நம் நெஞ்சைக் கனக்க வைக்கிறது.

பழைய ஒப்பந்தங்களும் பேச்சு வார்த்தைகளும்:

 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே 1892 இல் காவேரி நதி நீர் சம்பந்தமாக ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1924 இல் மற்றொரு ஒப்பந்தம் உருவானது. இரண்டாவது ஒப்பந்தம் 50 வருடங்களுக்குப் பிறகு அதாவது 1974 இல் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஆனால் கர்நாடக அரசு 1974 உடன் அந்த ஒப்பந்தம் காலாவதி ஆவதாகக் கருதி, 1924 ஒப்பந்தத்தில் உள்ள ஒப்பந்த விதிகளை மீறி பல்வேறு பாசனத் திட்டங்களை 1974 க்கு முன்பே நிறைவேற்றத் தொடங்கியது.

 அதனால் கவலை அடைந்த தமிழக அரசு 1970 இல் காவேரி நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க மத்திய அரசை வலியுறுத்திக் கடிதம் எழுதியது. ஆனால் மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை.

காவேரி உண்மை அறியும் குழு:

 பின் 1972 இல் மூன்று மாநில முதலமைச்சர்களும் மத்திய அமைச்சர் முன்னிலையில் நடத்திய பேச்சு வார்த்தையின் படி காவேரி உண்மை அறியும் குழு (Cauveri Fact Finding Committee – CFFC) அமைக்கப்பட்டது. அது மாநில அரசு வாரியாகக் காவேரி நதியின் பயன்பாடு பற்றி ஆய்வு செய்தது.

 அந்த ஆய்வின்படி, தமிழ் நாட்டிற்குக் கிடைத்த மொத்த நீரின் அளவு 567 டி.எம்.சி எனவும், ஆனால் தமிழகத்தின் பயன்பாடு 489 டி.எம்.சி. எனவும், கர்நாடகாவின் நீர்ப் பயன்பாடு 177 டி.எம்.சி எனவும், கேரளாவின் பயன்பாடு 5 டிஎம்.சி எனவும் இருந்தது. இந்த உண்மை அறியும் குழுவின் தரவுகளைக் கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது. மேலும் இறுதி முடிவு எடுக்கும் வரை தற்போது பயன்படுத்தி வரும் நீர் அளவை மட்டுமே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பது கருத்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

காவேரி நடுவர் மன்றம்:

 அதன்பின் மாநில அரசுகளுக்கு இடையே காவேரி நதிநீர்ப் பிரச்சனை குறித்துப் பலமுறை பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. 1983 இல் ‘தமிழ்நாடு காவேரி நீர்ப்பாசன விலைபொருட்கள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்பு சங்கம்’’ என்ற ஒரு விவசாய அமைப்பு, மத்திய அரசு காவேரி நடுவர் மன்றத்தை அமைக்க உத்தரவிட வேண்டுமென உச்சநீதிமன்றத்தைக் கேட்டு வழக்குத் தொடுத்திருந்தது.

 இந்த வழக்கின் அடிப்படையில் 1990 ம் ஆண்டு மே 4 ல் உச்சநீதிமன்றம் காவேரி நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அதே ஆண்டில் மத்திய அரசு காவேரி நடுவர் மன்றத்தை அமைத்தது. தமிழக அரசு 1970 முதல் நடுவர்மன்றத்தை அமைக்கச் சொல்லிக் கேட்டுவந்தபோதிலும் மத்திய அரசு 20 ஆண்டுகளுக்குப் பின் 1990 ல் உச்ச நீதிமன்ற உத்தரவு தந்த பின்னரே காவேரி நடுவர்மன்றத்தை அமைத்தது.

இடைக்காலத் தீர்ப்பு:

 தமிழக அரசு நடுவர் மன்றத்திடம் உண்மை அறியும் குழு கண்டறிந்த கர்நாடகத்தின் பயன்பாடான 177 டி.எம்.சி. நீரை மட்டும் கர்நாடக அரசு பயன்படுத்தத் தக்க வகையில், இடைக்கால உத்தரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. ஆனால் உண்மை அறியும் குழுவின் அறிக்கைக்குப் பின் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதால் மாநில அரசுகள் தற்பொழுது (1990) பயன்படுத்தி வந்த நீர்ப் பயன்பாட்டின் அடிப்படையில் தான் இடைக்கால உத்தரவை வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் தெரிவித்தது. ஆனால் 1990 இல் கர்நாடகம் பயன்படுத்தி வந்த 248 டி.எம்.சிக்குப் பதில் 295 டி.எம்.சி நீரைப் பயன்படுத்திக்கொள்ளத் தக்கவகையில் நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழ்ங்கியது.

 நடுவர் மன்றம், 1980-81 முதல் 1989-90 வரை கடந்த 10 வருடங்களாக மேட்டூர் அணைக்கு வந்த வருட சராசரி நீர் வரத்தாக தமிழக அரசு தந்த தரவுகளின் அடிப்படையில், 205 டி.எம்.சி நீரை மட்டும் தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகம் தற்பொழுது பயன்படுத்தி வந்த நீரின் அளவையோ தமிழகத்திற்கு அது வழங்கிவந்த நீரின் அளவையோ கணக்கில் கொள்ளவில்லை. அதே சமயம் கர்நாடக அரசு 1990 இல் பாசனம் செய்து வந்த பரப்பான 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல், எக்காரணத்தைக் கொண்டும் கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரிக்கக் கூடாது என உத்தரவிட்டது(தொகுதி-1, பக்: 86).

1990 இல் கர்நாடக அரசின் நீர்ப் பயன்பாடு:

 கர்நாடக அரசு 1980-81 முதல் 1989-90 வரையான 10 ஆண்டுகளில் பில்லிகுண்டு என்ற இடத்தில் தமிழகத்திற்கு வழங்கி வந்த வருட சராசரி நீரளவு 227 டி.எம்.சி ஆகும். இந்த நீரளவு மத்திய நீர்வள வாரியத்தால் (CWC) அளக்கப்பட்டு, கர்நாடக அரசால் நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட நீரளவு ஆகும். பில்லிகுண்டு என்ற இடத்தில் இருந்து மேட்டூர் அணை வரையான வருட சராசரி நீர்வளம் என்பது 25 டி.எம்.சி ஆகும். எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கிய நீரளவு என்பது, 227 + 25 = 252 டி.எம்.சி ஆகும். [ பார்வை : தொகுதி-1, பக்கம் : 101 ]

 மேட்டூர் அணை வரையான வருட சராசரி நீர்வளம் 500 டி.எம்.சி என்பதால், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கிய 252 டி.எம்.சி போக மீதி உள்ள 248 டி.எம்.சி நீர் என்பதுதான் கர்நாடகத்தின் பயன்பாடாகும். 1972 வாக்கில் 177 டி.எம்.சி நீரைப் பயன்படுத்தி வந்த கர்நாடகம் 1990 வாக்கில் 248 டி.எம்.சி நீரைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்திற்கு 252 டி.எம்.சி. நீரை வழங்கி வந்துள்ளது(தொகுதி-1, பக்: 19).

 எனவே நடுவர் மன்றம், 1990 வாக்கில் கர்நாடகம் பயன்படுத்தி வந்த 248 டி.எம்.சி. நீர் போக, மீதியுள்ள 252 டி.எம்.சி நீரை தமிழகத்திற்குக் கர்நாடகம் வழங்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் நடுவர் மன்றம் அதனைச் செய்யாது, 205 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன் மூலம் 248 டி.எம்.சி நீரை மட்டுமே பயன்படுத்தி வந்த கர்நாடகம், 295 டி.எம்.சி நீரைப்(500 – 205) பயன்படுத்த வழிவகை செய்தது.

காவேரி நதியின் நீர்வளம் :

 தமிழக அரசு 75% உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையில் உள்ள சராசரி நீர்வளமான 670 டி.எம்.சி நீரை கணக்கில் கொள்ள வேண்டுமென நடுவர் மன்றத்தை வலியுறுத்தியது. ஆனால் கர்நாடக அரசு 50% உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையில் உள்ள சராசரி நீர்வளமான 740 டி.எம்.சி நீரை கணக்கில் கொள்ள வேண்டுமென நடுவர் மன்றத்தை வலியுறுத்தியது. நடுவர் மன்றம் கர்நாடகம் வலியுறுத்திய 50% உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையில் உள்ள சராசரி நீர்வளமான 740 டி.எம்.சி நீரை கணக்கில் எடுத்துக் கொண்டது. 75% அடிப்படையை எடுத்துக் கொண்டால் பழைய பாசனங்கள் உறுதிப்படுத்தப்படும் என்பதோடு, காவிரியில் பற்றாக்குறை இருக்கும்பொழுது பாசனப்பரப்பை விரிவு படுத்தும் கர்நாடகத்தின் நோக்கம் தடுக்கப்படும். ஆனால் நடுவர் மன்றம் அதனைச் செய்யவில்லை.

சர்வதேச விதிகள் :

 பல நாடுகளுக்கு உரிய ஒரு பொது நதியில் இருந்து ஒவ்வொரு நாடும் தனக்குரிய சமபங்கு உரிமையைப் பெற 1966 இல் எல்சிங்கி(Helsinki) என்ற இடத்தில் பல விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. அவை எல்சிங்கி விதிகள் என அழைக்கப்படுகின்றன. அவ்விதிகளில் பிரிவு IV , V (Article IV &V ) ஆகியன, ஒவ்வொரு வடிநில அரசும் அதற்குரிய சமபங்கு நீரை பொது வடிநில ஆற்றிலிருந்து பெறுவதற்கான உரிமைகள் குறித்துப் பேசுகின்றன. (பார்வை: தொகுதி-4 , பக்: 20, 21)

 ஒரு பொது நதியில் இருந்து ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய நியாயமான சமத்துவமான நீர்ப் பங்கீட்டைப் பிரித்து வழங்கச் சொல்லப் பட்டுள்ள காரணிகள் பதினொன்று ஆகும். [(Article V –(II) ] அவைகளில் முக்கியமான சிலவற்றை காவிரி நடுவர்மன்றம் கணக்கில் கொள்ளவில்லை எனலாம். அவை வருமாறு,

  1. தற்பொழுது இருந்து வரும் குறிப்பிட்ட பயன்பாடுகள் உட்பட பண்டைய பயன்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. ஒவ்வொரு அரசினுடைய பிற நீர்வள ஆதாரங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. ஒரு வடிநில அரசின் குறைந்த பட்சத் தேவைகளை, பிற வடிநில அரசை அதிக அளவு பாதிக்காமல் பூர்த்தி செய்ய வேண்டும்.

 நடுவர் மன்றம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய நீர்த் தேவைகளை கண்டறிய கீழ்க்கண்ட 6 கோட்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டது.(பார்வை: நடுவர்மன்றத் தீர்ப்பு தொகுதி-4, பக்கம்: 94)

  1. 1924 ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத இரு போகம் நெல் மற்றும் வருடப் பயிர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
  2. கோடைக்கால நெற்பயிர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
  3. 1924 க்கு முன்புள்ள கோடைக்கால நெற்பயிர் புன்செய்ப் பயிராக மாற்றப்படும்.
  4. வருடாந்திரப் பாசனப் பயிரளவு (Annul Crop Intensity of Irrigation) 100% மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது வருடம் ஒருபோகப் பாசனப் பயிர் மட்டுமே ஒரு பகுதிக்கு அனுமதிக்கப்படும்.
  5. பயிர்க்காலம் என்பது பாசனக் காலமான ‘ஜூன் 1 முதல் ஜனவரி 31 வரை’ மட்டுமே அனுமதிக்கப்படும்.
  6. நீரேற்றுப் பாசனங்கள் (Lift Irrigation) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

நடுவர் மன்றத் தீர்ப்பு : [ பார்வை : தொகுதி-5 , பக்கம் : 20 ]

 காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பில் ஒவ்வொரு மாநில அரசுக்கும் வழங்கப்பட்ட நீரின் அளவும், பாசனப்பரப்பும் கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளன. அவைகளின் பரப்பு இலட்சம் ஏக்கரிலும், அவைகளின் நீர்ப்பயன்பாடுகள் டி.எம்.சியிலும் வழங்கப்பட்டுள்ளன.

விவரம் தமிழ்நாடு பாண்டிச்சேரி கர்நாடகா கேரளா மொத்தம்
பாசனப் பரப்பு 24.71 0.43 18.85 1.93

45.92

நீர்ப்பயன்பாடு 419.0 7.0 270.0 30.0 726.0

 சுற்றுப்புறச் சூழ்நிலைக்கான நீர்த்தேவை 10.0

 கடலில் வீணாகும் நீரளவு 4.

 மொத்த நீர்ப் பயன்பாடு 740.0

நடுவர் மன்றத் தீர்ப்பும் பாசனப் பரப்பும்:

 நடுவர்மன்றம் 1924 ஒப்பந்தப்படியும், சர்வதேச விதிகளின் படியும், தானே வகுத்துக்கொண்ட கோட்பாடுகளின்படியும் ஆய்வு செய்து ஒவ்வொரு மாநில அரசுக்கும் உரிய பாசனப்பரப்பை மூன்று பிரிவுகளின் கீழ் முதலில் நிர்ணயம் செய்தது. பின் அப்பாசனப் பரப்புகளுக்கு உரிய நீர்த்தேவைகளையும் நிர்ணயம் செய்தது. அந்த மூன்று பிரிவுகள் வருமாறு,

  1. 1924க்கு முந்தைய பாசனப்பயிர்பரப்பு.
  2. 1924 ஒப்பந்தப்படியான பாசனப்பயிர்பரப்பு.
  3. தகுதி அடிபடையில் அங்கீகரிக்கப்பட்ட பாசனப்பயிர்பரப்பு.

1)1924க்கு முந்தைய பாசனப்பயிர் பரப்பு:

 பாரம்பரியமாக, மிக நீண்டகாலமாக பாசனம் செய்து வந்த பாசனப்பரப்புகள் இதில் அடங்கும். இந்த முதல் பிரிவில் தமிழகம் 15.19 இலட்சம் ஏக்கரும், கர்னாடகம் 3.44 இலட்சம் ஏக்கரும் பாசனம் செய்து வந்ததாக காவேரி நடுவர்மன்றம் அங்கீகரித்துள்ளது. இப்பிரிவில் நமக்குக் கருத்து வேறுபாடு இல்லை.

2)1924 ஒப்பந்தப்படியான பாசனப்பயிர் பரப்பு:

 1924 ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இப்பாசனப் பரப்புகளை நடுவர்மன்றம் நிர்ணயம் செய்து அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழகத்தின் பாசனப் பயிர்பரப்புகளை விரிவாக்கம் செய்ய 1924ல் உள்ள மூன்று விதிகள் வழிவகை செய்கின்றன. அந்த மூன்று விதிகளின் கீழ் தமிழகத்திற்கு 6.195 இலட்சம் ஏக்கர் பரப்பும், கர்னாடகத்தின் பாசனப் பரப்புகளை விரிவாக்கம் செய்ய 1924ல் உள்ள நான்கு விதிகளின் கீழ் கர்னாடகத்திற்கு 7.24 இலட்சம் ஏக்கர் பரப்பும் நடுவர்மன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 1924 ஒப்பந்தப்படி தமிழகத்திற்கான மூன்று விதிகளில் இரண்டு விதிகளின் கீழ் மட்டுமே 6.186 இலட்சம் ஏக்கர் பரப்பு அங்கீகரிக்கப் பட்டுள்ளது. விதி எண் 10(xii) ன், கீழ் தமிழக அரசு கேட்ட 4.937 இலட்சம் ஏக்கர் பரப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதே சமயம் கர்னாடகா அரசு கேட்காமலேயே அவ்விதியின் கீழ் 2.72 இலட்சம் ஏக்கரை நடுவர் மன்றம் அங்கீகரித்துள்ளது. இங்குதான் நாம் முரண்படுகிறோம். விதி எண் 10(xii) என்பது 1924க்கு முந்தைய பாசனப்பகுதிகளில் நீரைச் சேமிப்பதற்குத்தான் பொருந்துமே ஒழிய பிந்தைய திட்டங்களுக்குப் பொருந்தாது. ஆனால் நடுவர் மன்றம் அவ்விதியைத் தவறாகப் புரிந்துகொண்டு 1924க்கு முந்தைய பாசனத் திட்டங்களில் 1972 வரை 80 டி.எம்.சி நீர்வரை சேமித்த தமிழகத்திற்கு எதுவும் வழங்காது கர்நாடகத்திற்கு 23.19 டி.எம்.சி. நீரை வழங்கியுள்ளது.

 அதன் காரணமாக 1924 ஒப்பந்தப்படியான பாசனப்பரப்பில் கர்நாடகத்திற்கு 7.24 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை நடுவர் மன்றம் அங்கீகரித்துள்ளது. இதில் முறையற்று வழங்கிய 2.72 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பைக் குறைக்கவேண்டும். அப்பொழுது கர்நாடகத்திற்கு 4.52 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு மட்டுமே இந்தப் பிரிவில் கிடைக்கும். அதே சமயம் தமிழகம் இந்தப் பிரிவில் கேட்டிருந்த 4.937 இலட்சம் ஏக்கர் பரப்பை அங்கீகரிக்காவிடினும், தகுதி அடிப்படையில் மூன்றாவது பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட 2.065 இலட்சம் ஏக்கர் பரப்பையாவது இந்த இரண்டாவது பிரிவில் அங்கீகரித்து இரண்டாம் பிரிவில் சேர்க்கவேண்டும். இந்த விதி எண் 10(xii) இன் கீழ் தமிழகம் 80 டி.எம்.சி வரை, நீரைச் சேமித்துள்ளது. அந்த விதியின்படி அந்த 80 டி.எம்.சி. நீரும் நமக்கு வழங்கப்பட வேண்டும். ஆகவே குறைந்தது இந்த 2.06 இலட்சம் ஏக்கர் பரப்புக்குத் தேவையான 29 டி.எம்.சி நீரையாவது தமிழகத்திற்கு வழங்க வேண்டியது நடுவர் மன்றத்தின் கடமையாகும். அதன்மூலம் இந்தப் பிரிவில் தமிழகத்தின் பாசனப்பரப்பு 6.195 + 2.065 = 8.260 இலட்சம் ஏக்கர் என ஆகும். கர்நாடகத்தின் பரப்பு முன்பு சொன்னவாறு 2.72 இலட்சம் குறைந்து 4.52 இலட்சமாக ஆகும்.

-  கணியன்பாலன், ஈரோடு

(தொடரும்)

Pin It