admk protest

கடந்த சில நாட்களாக செய்தித் தொலைக்காட்சிகளையும், செய்தித்தாள்களையும் புரட்டிப் பார்த்தால் ஹிட்லர் ஆட்சியின் கீழ் நாம் வாழ்கிறோமோ என்ற வினா எழுகிற அளவிற்கு, ஆளும் அரசு நிகழ்த்தும் அரச வன்முறை அமைந்துள்ளது.

அமைச்சர்களே தலைமை தாங்கி வன்முறை நிகழ்த்துவதும், அதை ஆளும் கட்சி நிர்வாகிகள் ஆதரிப்பதும், மட்டமான அரசியலுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

அதிமுகவினர் இதுவரை நாகரீகமான முறையில் பேசி வருவதைப் போலவும், ஆரோக்கியமான அரசியலின் முன்மாதிரியினர் போலவும், இதுவரை ரசக்குறைவான வார்த்தைகளை உபயோகிக்காத உத்தமர்கள் போலவும், தமிழக அரசியல் வரலாற்றில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான் முதன் முறையாக நாகரீகமற்ற வார்த்தையை உபயோகித்தவர் போலவும் அதிமுகவினர் கொக்கரிக்கின்றனர்.

அதற்காக, இளங்கோவன் பேசியது தவறில்லையென்றும், தவறென்று தெரிந்தும், அதைக் கண்டிக்காமல் அற்ப அரசியலுக்காக அவரை தேடிச் சென்று ஆறுதல் கூறியும், அரவணைத்தும் வரும், பண்பாடற்ற எதிர்கட்சித் தலைவர்களைப் போல், நாமும் இருப்பது சரியல்ல!!

இளங்கோவன் பேசியது நாகரீகமற்றது.. கண்டிக்கதக்கது!!

அதற்காக, சத்தியமூர்த்தி பவனிலும், இளங்கோவன் வீட்டுமுன்பும் அதிமுகவினர் வன்முறைத் தாக்குதல் நடத்துவது, ஆளும் அரசின் உச்சகட்ட சர்வாதிகார தனத்தைப் பறைசாற்றுகிறது. மது எதிர்ப்புப் போராளி அய்யா சசிபெருமாளின் மரணத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் மதுவிற்கெதிராக தொடர் எழுச்சிப் போராட்டம் முழு வீச்சோடு நடத்தது.

சசிபெருமாள் தொடங்கிய போராட்டம், அவரின் மறைவிற்குப் பின்பு அது அரசியல் கட்சிகளின் போராட்டமாக மாறி, பின்பு அது மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து, பின்பு அது ஒட்டுமொத்த தமிழக மக்களின் வாழ்வாதார முழக்கமாக பரிணாமம் பெற்றது.

மாணவர்கள் நடத்திய மதுவுக்கெதிரான போராட்டத்தில், பெண் என்று கூட பார்க்காமல் மாணவியை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, மாணவ, மாணவியர் மீது தடியடி நடத்திய காவல்துறையினர், மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய காவல்துறையினர், மாணவர்களின் மீது வழக்கு பதிவு செய்து சிறைபடுத்திய காவல்துறையினர், சத்தியமூர்த்தி பவனில் வன்முறைத் தாக்குதல் நடத்திய அதிமுகவினரின் சட்டை பொத்தானைக் கூட புடுங்கவில்லை. அதிமுகவினர் எவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை!!

இன்னும் ஒருபடி மேலே சொன்னால், காவல்துறையினரே ஆளுங்கட்சியின் கூலிப்படையாக, அடியாட்களாக செயல்பட்டனர்.

காவல்துறையினரின் இச்செயல் பாமர மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள சிறிய நம்பிக்கையையும் இழப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே கண்டிக்கவும், தண்டிக்கவும் பட வேண்டியவர்கள் அதிமுகவினர் மட்டுமல்ல, காவல்துறையினரும்தான். மற்ற ஜனநாயக சக்திகள் அறவழியில் போராடும் போது, அதை சகித்துக் கொள்ள முடியாமல், தடியடி வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் காவல்துறையினர், அதிமுகவினர் வன்முறை வெறியோடு சத்தியமூர்த்தி பவனை நோக்கி விரையும்போது, காவல்துறையினரும் தனது தடியடி வன்முறையால் அதிமுகவினரை எதிர்கொண்டிருந்தால், சத்தியமூர்த்தி பவனும், காங்கிரஸ்காரர்களும் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.

- ஆழ்வை சம்சுதீன்

Pin It