நம்ம ஊரில் பொதுவாக ஏப்ரல் 1 ஆம் தேதியை முட்டாள்கள் தினம் என்று சொல்லுவார்கள். அன்றைய தினம் ஏதாவது ஒரு பொய்யை உண்மை என்று சொல்லி நம்மை நம்ப வைப்பார்கள். அப்படி நம்பி விட்டால் உடனே அனைவரும் சேர்ந்து ஏப்ரல் ஃபூல் என்று நம்மை கேலி செய்து சிரிப்பார்கள். நாமும் ஏமாந்துபோன அவமானத்தில் கூனிக்குறுகி நிற்போம். அப்படித்தான் இன்று தமிழகமே கூனிக்குறுகி நிற்கின்றது. சசி பெருமாள் அவர்களின் இறப்பை ஒட்டி தமிழ்நாட்டில் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் வீதிக்கு வந்து மது விலக்கு வேண்டி போராடினார்கள். அவர்களை தமிழக காவல்துறை எப்படி கையாண்டது என்பது நமக்குத் தெரியும். மதுபாட்டில்களுக்கு இருக்கும் மரியாதை கூட இந்த மனிதப் பிறவிகளுக்கு கிடையாது என அது நிரூபித்தது.

jayalalitha independence day

 போலீசின் பூட்ஸ் கால்களும், குண்டாந்தடிகளும் அதிகார போதையில் ஆட்டம் போட்டன. அதற்கு குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் என்ற பேதம் எல்லாம் தெரியவில்லை. ‘காவல் துறை மக்களின் நண்பன்’ என்று சொன்ன நாயை மக்கள் தேடிவருகின்றார்கள். இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஊடகங்கள் மக்களின் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்கான எல்லா முயற்சியிலும் ஈடுபட்டன. ஆகஸ்ட் 15 அன்று மதுவிலக்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும்; அதுவரை மக்கள் அமைதி காக்க வேண்டும் என்ற தொனியில் அவை செய்திகளை வெளியிட்டன. இதை நம்பி பலர் தங்களுடைய போராட்டங்களை கைவிட்டார்கள். தமிழக அரசு வெளிப்படையாக மதுவிலக்கு தொடர்பாக அறிவிக்காமால் எப்படி இந்த ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன?

ஒருபக்கம் உடல் ரீதியாக ஒடுக்குவதற்கு காவல்துறையையும், மறுபக்கம் கருத்தியல் தளத்தில் ஒடுக்குவதற்கு சில ஊடக விபச்சாரிகளையும் பயன்படுத்தி இருக்கின்றது தமிழக அரசு. அதிலே முக்கியமான விபச்சாரி தினமலர். கடந்த ஜூலை மாதம் 22, 2015 அன்று அது வெளியிட்ட செய்தியில்

“டாஸ்மாக் மூலமாக மதுவிற்பனையை கைவிட அரசு முடிவெடித்து உள்ளதாக தகவல் பரவி வருகின்றன”.

“கடைகளின் நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணிவரை குறைத்து அறிவிக்கத் திட்டமிட்டு இருந்தது. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடிக்கப்பட்டது” என்று கூறி இருந்தது. மக்களின் போராட்டம் கனன்று கொண்டு இருக்கும்போது இப்படியொரு பொய்யான செய்தியை வெளியிடவேண்டிய அவசியம் என்ன? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பார்ப்பன தினமலர் இந்த செய்தியை வெளியிட்டது? அதன் ஒரே நோக்கம் மக்களின் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதுதான்.

மற்றொரு பார்ப்பன பத்திரிக்கையான விகடன் தன்னுடைய இணைய செய்தியில் 06/08/2015 அன்று

 “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளதால், அதற்கு முன்பாகவே முதல்வர் ஜெயலலிதா மதுக்கடைகளை மூடுவது பற்றி முக்கிய அறிவிப்பை வருகிற 15 ஆம் தேதி சுதந்திர தின கொடியேற்று விழாவில் அறிவிப்பார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது”

“முதல் கட்டமாக பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள கடைகளை மூடும் அறிவிப்பு வெளியாவதுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை பகல் 2 மணியில் இருந்து இரவு 9 மணி வரை குறைக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது”

இத்தோடு வாங்கிய காசுக்கு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை இன்னும் ஒரு படி மேலே சென்று

“அதன்பிறகு 6 மாதகால அவகாசம் கொடுத்து அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூடுவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது. மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்போது உயர்ரக மதுபான ‘எலைட்’ மதுபானக்கடைகள் மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது” என்று எழுதி இருந்தது. இதை எல்லாம் படித்துவிட்டு தங்கள் போராட்டத்தை நிறுத்திவைத்த அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இன்று ஏமாந்துபோய் தேற்றுவார் யாருமின்றி புலம்பிக்கொண்டு இருக்கின்றார்கள். குறைந்தபட்சம் படிப்படியாகவாவது மூடுங்கள் என்று கெஞ்சத் துவங்கி உள்ளனர்.

 ஜெயா திரைத்துரையில் மட்டும் அல்லாமல் அரசியலிலும் கைதேர்ந்த நடிகை என்று புரிந்துகொள்ளாத அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் இந்த பார்ப்பன புரட்டுப் பத்திரிக்கைகளை நம்பி மோசம்போய் இருக்கின்றார்கள். தன்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்று ஜெயா எப்போதும் கருதுவது கிடையாது. அவர் தமிழ்நாட்டின் மகாராணியாகவே எப்போதும் தன்னை நினைத்துக் கொள்கின்றார். ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து தன்னை யார் என்ன செய்துவிட முடியும் என்ற மமதையில் தலைகால் தெரியாமல் ஆடிக் கொண்டிருக்கின்றார். மக்களின் போராட்டங்களை மயிர் அளவுக்குக் கூட எப்போதும் இவர் மதிப்பது கிடையாது. போலீசின் குண்டாந்தடிகளை நம்பியே எப்போதும் ஆட்சி நடத்தும் இந்த பாசிச சர்வாதிகாரி சுதந்திர தின விழாவில் தமிழக காவல்துறை அதிகாரிகள் 24 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கி பெருமைபடுத்தி இருக்கின்றார். மேலும் 13 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களை வழங்கி மக்களை முட்டாள்கள் ஆக்கி இருக்கின்றார், தன்னுடைய சுதந்திர தின உரையில்

 “……..நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ் நாட்டை வளமிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்கிடவும், அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம்…..” எனக் கூறியிருக்கின்றார். ‘தமிழ்நாட்டை வளமிக்க முன்னோடி மாநிலமாக’ என்பதற்குப் பதிலாக ‘தமிழ்நாட்டை வளமிக்க குடிகார மாநிலமாக’ என்று இருந்தால் சரியாக இருந்திருக்கும்.

 தமிழக போலீஸ் ‘தான் போலீஸ் அல்ல பொறுக்கி’ என்பதையும், தமிழக முதலமைச்சர் ‘தான் முதலமைச்சர் அல்ல மிடாஸ் என்ற சாராய ஆலையின் தொழிலதிபர்’ என்பதையும் நிரூபித்துவிட்டார்கள். ஆனால் தமிழக மக்கள்தான் தான் யார் என்பதை இவர்களுக்கு இன்னும் புரியவைக்காமல் இருக்கின்றார்கள். எந்த மொழியில் சொன்னால் இவர்களுக்குப் புரியுமோ அந்த மொழியில் இனி நாம் இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்!

- செ.கார்கி

Pin It