pachayappa students

நேற்று முன்தினம் (03-08-2015) பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராடிய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மிகக்கடுமையான போலீஸ் வன்முறைக்கு ஆளாகி இருக்கின்றார்கள். படிக்கும் மாணவர்கள் என்றும் பராமல் அவர்களை தெருநாய்களைப் போல அடித்து இழுத்துச் சென்றனர் போலீஸ் ரவுடிகள். மதுக்கடைகளை அடித்து நொறுக்கினால் தமிழக போலீஸின் ரத்தம் கொதிக்கின்றது. பின்னே இருக்காதா! மதுவால் அதிகம் பயனடையும் துறைகளில் காவல் துறையும் ஒன்றல்லவா! இரவு பத்துமணிக்கு மேலும் பார்களை மூடாமல் விடிய விடிய சரக்கை விற்பதற்கு காசுவாங்கிக்கொண்டு  அனுமதி அளிக்கும் காவல்துறை, பார்களுக்கு வெளியே நின்று கொண்டு எப்படியும் வெளியே வருபவன் குடித்திருப்பான் என்ற நம்பிக்கையில் காத்திருந்து அவர்கள் வெளியே வந்து வண்டியை எடுத்தவுடன் கோழி அமுக்குவது போல அமுக்கி பணம் பறிக்கும் காவல்துறை, நீங்கள் மதுக்கடைகளை அடித்து நொறுக்கினால் சும்மா இருக்குமா? அதுதான் பாய்ந்து குதறுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்தோழர்களிடம் இவர்கள் நடந்துகொண்ட முறையைப் பார்த்து நாடே காறித்துப்புகின்றது. ‘காக்கி சட்டை போட்ட பொறுக்கி பயல்கள்’என்று மக்கள் பேசிக் கொள்கின்றார்கள்.

  போராட்டத்தில் ஈடுபட்ட பதினைந்து தோழர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், பொது சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகளை அடித்து நொறுக்கினால் கொலை மிரட்டல் வழக்கு போடுவார்களாம். அப்படி என்றால் மதுக்கடைகளை திறந்து வைத்து லட்சக்கணக்கான பேரைக் கொன்ற சாராய ராணி ஜெயலலிதாவின் மீது கொலை வழக்கல்லவா பதிவு செய்யப்படவேண்டும்! மானங்கெட்ட காவல் துறையால் அதை செய்ய முடியுமா?

குண்டாந்தடிகளை கையில் வைத்திருந்தால் யாரை வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் அடிக்கும் காவல்துறை நாய்கள் அவர்களின் அக்கா, தங்கைகளை யாராவது இப்படி அடித்து உதைத்து தர தரவென்று இழுத்துகொண்டு போனால் சும்மா இருப்பார்களா? இருந்தாலும் இருப்பார்கள் மதுக்கடைகளை காவல்காக்கும் இந்த காவல் நாய்கள்!

  சென்னை பச்சையப்பன் கல்லூரியில் போராட்டத்தை ஒருங்கிணைத்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் நேற்று சென்னை ஹாரிங்டன் சாலையில் உள்ள மதுக்கடையை மட்டும் அல்லாமல் கோவை சாய்பாபா காலனியில் உள்ள மதுக்கடை, விருத்தாசலம் காட்டுக் கூடலூர் சாலையில் உள்ள மதுக்கடை போன்றவற்றையும் அடித்து நொறுக்கி உள்ளனர். அந்தத் தோழர்களுக்கு நாம் மனமார வாழ்த்துக்களைச் சொல்லிவிடலாம். இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சித் தோழர்களும், ம.தி.மு.க தோழர்களும் கடைகளை அடித்து நொறுக்கி தங்கள் கோபத்தை வெளிக்காட்டி இருக்கின்றார்கள். இப்படி பல்வேறு அமைப்புகள் மதுவிலக்கு வேண்டி மிகத்தீவிரமாக போராடுவதைப் பார்த்து தமிழக அரசு மிரண்டு கிடக்கின்றது. அதனால் தான் தன்னுடைய காவல் நாய்களை ஏவிவிட்டு மிகக்கொடூரமாக தாக்கச் சொல்கின்றது.

kovai tasmac

 தமிழ்நாட்டில் பற்றி எரிய ஆரம்பித்திருக்கும் மதுவிலக்குப் போராட்டத்தால் கலக்கம் அடைந்திருக்கும் சாராய ராணி ஜெயா தன்னுடைய அல்லக்கை  முண்டம் ந(நா)த்தம் விஸ்வநாதனை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அதில் ஒரு குடிகாரனைப்போல உளறி இருக்கின்றார் நாத்தம் விஸ்வநாதன். எல்லோரும் மதுவிலக்கை வைத்து அரசியல் செய்கின்றார்களாம்! பின்னே இதை வைத்து என்ன மசால்தோசையும், மெதுவடையுமா செய்யமுடியும்! மதுவிலக்கை கொண்டு வந்தால் மிடாஸில் தயாராகும் சாராயத்தை எங்கு கொண்டுபோய் விற்று எவன் பொண்டாட்டி தாலியை அறுப்பது என்பதுதான், மிஸ் சாராய ராணிக்கும், மிஸ்டர் நாத்தம் அவர்களுக்கும் உள்ள பெரிய கவலை!

ஒருபக்கம் மதுஒழிப்புக்காக மக்கள் போராடிக்கொண்டு இருக்கையில் மற்றோரு பக்கம் பேருந்து நிலையங்களில் தாய்பால் கொடுக்க 352 தாய்பாலூட்டும் அறைகளைத்  திறந்து வைத்திருக்கின்றார் ஜெயா. நான் பெண்களின் தாலியை அறுக்க பாரும் திறப்பேன், தாய்பால் கொடுக்க பாலூட்டும் அறைகளையும் திறப்பேன் என்கிறார் தாயுள்ளம்(!) கொண்ட ஜெயா.

  மதுவிலக்குக்குக் குரல் கொடுக்கும் முக்கிய கட்சியான தி.மு.க ஒருபக்கம் சாராய ஆலைகளை வைத்துக்கொண்டு மற்றொரு பக்கம்  மதுவிலக்கு பற்றி பேசுவது வெட்கக்கேடானது. மதுவிலக்கு கொண்டுவந்தால் நாங்கள் சாராய ஆலைகளை மூடிவிடுவோம் என்று ஸ்டாலின் கூறுவது கடைந்தெடுத்த பிழைப்புவாதமாகும். ‘நாங்கள் காங்கிரஸில் இருந்து விலகி இருந்தால் ஈழப்போர் நடக்காமல் போயிருக்குமா?’ என்று கலைஞர் சொன்னதற்கும் இப்போது ஸ்டாலின் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ‘முதலில் அவர்களை கடையை மூடச்சொல்; பிறகு நான் மதுபான தொழிற்சாலைகளை மூடுகின்றேன்; அதுவரை நாங்கள் கல்லா கட்டிக்கொண்டு தான் இருப்போம்’ என்கின்றார் ஸ்டாலின்.

  இந்த மதுவிலக்குப் போராட்டம் என்பது ஏதோ எதிர்க் கட்சிகளால் தூண்டிவிடப்பட்ட போராட்டம் போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அரசு முயற்சிக்கின்றது. இங்கே தமிழ் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலேயும் ஒரு குடிநோயாளி இருக்கின்றார். அது போராடுபவர்களின் அப்பாவாகவோ, அண்ணனாகவோ, தம்பியாகவோ, இருக்கலாம். இத்தனை நாட்களாக அவர்களின் மனங்களில் கனன்று கொண்டிருந்த நெருப்பு இப்போது வெடித்துக் கிளம்பி இருக்கின்றது. அதை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன அவ்வளவுதான்.

 இனி அரசிடம் கெஞ்சிக்கேட்டு எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்து மக்களே தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள தெருவில் இறங்கி இருக்கின்றார்கள். இனி ஒரு சசிபெருமாளை பலி கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. காந்திய வழி எல்லாம் நம்மைக் கொல்ல வரும் மிருகத்திடம் நாம் கடைபிடிக்க முடியாது. புத்தர் சொன்னது போல எவ்வளவு முடியுமோ அவ்வளவு அகிம்சை; முடியாத போது வன்முறை. மக்களின் உயிரைத் துச்சமாக மதிக்கும் இந்த அரசுக்கு மக்களின் அதிகாரம் என்றால் என்னவென்று காட்டுவோம்! அனைத்து மதுக்கடைகளையும் அடித்து நொறுக்குவோம்!

- செ.கார்கி

Pin It