அம்பேத்காருக்கு பின்பு தோன்றிய பல தலித் இயக்கங்கள் இன்று முட்டு சந்தில் மாட்டிக்கொண்டு எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன. இத்தனை ஆண்டுகளில் அவர்களின் செயல்பாடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகின்றது.

 dalit women 343எதற்காக கட்சி ஆரம்பித்தோம் என்பது அந்தத் தலைவர்களுக்கு இன்று நினைவில் இருக்குமா என்பதே சந்தேகம், தொண்டர்களைக் கேட்கவே வேண்டாம். உலகமயமாக்கலுக்குப்பிந்திய காலத்தில் தலித் மக்களின் வாழ்க்கை மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்திருக்கின்றது. வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் அவர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப் பட்டிருக்கின்றது. தங்களை மீட்டெடுக்கப்போகும் இரட்சகன் யார் என்று தெரியாமல் கண்கள் வெறித்து போய் காத்துக்கிடக்கின்றனர்.

 இத்தகைய சூழல், தலித் அரசியல் கட்சிகளின் தேவை பற்றி மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒட்டுமொத்த இந்திய சூழலும் இந்துத்துவ பாசிச சக்திகளாலும், ஏகாதிபத்திய கார்ப்ரேட் நிறுவனங்களாலும், உள்ளூர் அதிகார வர்க்க கொள்ளைக்கூட்டத்தாலும் சூழப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த கட்ட நகர்வைப் பற்றி கண்டிப்பாக நாம் பேசவேண்டியுள்ளது.

  அம்பேத்கரைக்காட்டி தலித்மக்களை இத்தனை ஆண்டுகாலம் ஆண்டுவந்த தலித் கட்சிகள் அவர்களை வீடற்றவர்களாக வேலைவாய்ப்பற்றவர்களாக, தன்மானமற்றவர்களாக, அரசியல் அற்றவர்களாக மாற்றி இருக்கிறார்கள். இதற்காக நூற்றுக்கணக்கான ஆதாரங்களை நம்மால் காட்டமுடியும். ஆனால் இதுவெல்லாம் இந்த தலித் தலைவர்கள் அறியாததல்ல. அப்படி தெரிந்திருந்தும் இவர்களை பிழைப்புவாத வழியில் செல்லத்துண்டுவது எது என்பதே நம் கேள்வி.

 பொதுவாக தலித் என்ற சொல் தாழ்த்தப்பட்டமக்களையும், பழங்குடியின மக்களையும் சேர்த்தே குறித்தாலும், எந்தவொரு தலித் அரசியல் கட்சியும் அந்தப் பார்வையில் இருந்து தலித்மக்களின் பிரச்சினைகளை அணுகுவது கிடையாது.

தாழ்த்தப்பட்ட சாதியில் இருக்கும் ஒவ்வொரு சாதியும் தனக்கென சாதிச்சங்கங்களை வைத்திருக்கின்றன. ஒரே சாதியில்கூட இரண்டு மூன்று சாதிச்சங்கங்கள் உள்ளன. இப்படி புற்றீசல்போல புறப்படும் இந்த தலித் அரசியல் கட்சிகளின் உண்மையான நோக்கம் தான் என்ன? அறிவார்ந்த தளத்தில் இருந்து யோசித்து பார்க்கும் யாரும் உடனே சொல்விடலாம் பிழைப்புவாதம் மட்டுமே என்று.

 சிறு சிறு கும்பலாக திரட்டப்படும் இந்த மக்கள் அதிகார பீடங்களில் அடகு வைக்கப்படுகிறார்கள். அதிகார பீடங்களில் ஆதிக்க சாதிக்காரர்களும், மதவாதிகளும், ஏகாதிபத்திய அடிமைகளும் இன்னும் எவ்வளவு கீழ்த்தரமான அரசியல் சக்திகளும் இருந்தாலும் அதை கண்டுகொள்வது இல்லை. தன்னுடைய பணி அடகு வைப்பது மட்டுமே, மீட்பது கிடையாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

 தலித் தோழர்கள் உண்மையில் சமூக விடுதலையும், பொருளாதார விடுதலையும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தலித் அரசியல் கட்சியில் சேர்ந்திருந்தால் நேர்மையாக உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.

  1. நீங்கள் சார்ந்த தலித் இயக்கம் சாதி ஒழிப்புக்காக என்ன என்ன திட்டங்களை தங்களது கட்சி அறிக்கையில் வைத்திருக்கிறார்கள்.
  2. இதுவரை அதை நோக்கி அவர்களது முன்னெடுப்பு என்ன?.
  3. சாதியை ஒழிக்கப்புறப்பட்ட உங்களது தலைவர்கள் கூட்டணி வைத்த அரசியல் கட்சிகள் சாதி ஒழிப்பில் உடன்பாடு கொண்ட அரசியல் கட்சிகளா?.
  4. நேர்மையும், நாணயமும் கொண்ட உங்களது தலைவர்கள் சாதி ஒழிப்பை முன்னிட்டு தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள் நடக்கும் புறமண முறையை அங்கீகரித்திருக்கிறார்களா?.
  5. உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றைப் பற்றி உங்களது தலைவர்களின் கருத்து என்ன?.
  6. தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த கட்சிகள் என்றால் பழங்குடியின சாதிகளைப் பற்றி அவர்களது கருத்து என்ன? இதுவரை எத்தனை பழங்குடியின மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள்?
  7. பழங்குடியின சாதிகளைச் சார்ந்த கட்சிகள் என்றால் தாழ்த்தபட்ட சாதிகளை பற்றி அவர்களது கருத்து என்ன? இதுவரை எத்தனை தாழ்த்தப்பட்ட சாதிமக்களின் பிரச்சினைகளுக்காக குரல்கொடுத்திருக்கிறார்கள்?
  8. நாடாளுமன்றத்திற்கோ. சட்டமன்றத்திற்கோ தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களது தலித் தலைவர்கள் அங்கே சாதி ஒழிப்பு குறித்து இதுவரை என்ன பேசி இருக்கிறார்கள்?
  9. இந்திய சமூகத்தில் சாதி ஒழிப்பு என்பது தலித் மக்களை மட்டுமே சார்ந்த பிரச்சினையா?.
  10. சாதிமட்டும்தான் இந்திய சமூகத்தில் பிரச்சினையா?.

    இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், பழங்குடி இன மக்களுக்காகவும் உண்மையில் குரல் கொடுப்பவர்கள் பார்ப்பன எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சித்தாந்தங்களை வரித்து கொண்ட புரட்சிகர சக்திகளே அன்றி, சாதிய அரசியல் பேசும் சக்திகள் அல்ல.

 ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களை கொடூரமான முறையில் கொலை செய்து, பல லட்சக்கணக்கான பழங்குடியின மக்களை காடுகளில் இருந்து விரட்டிய பசுமை வேட்டைக்கு எதிராக தொடர்ந்து போராடுவது யார்? தலித் அமைப்புகளா இல்லை புரட்சிகர அமைப்புகளா?

தலித் அரசியல் கட்சிகளின் செயல்பாடு என்பது அவர்களுக்காக போராடும் தலித்தல்லாதவர்களைத் தனிமைப்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சாதிய கண்ணோட்டத்திலேயே புரட்சிகர சக்திகளையும் அணுகுவதே ஆகும்.

 இட ஒதுக்கீட்டுக்கான போராட்டங்களும், கோயில் நுழைவுப் போராட்டங்களும், சில தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிரான போராட்டங்களுமே தலித் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றான. இவையெல்லாம் சாதி ஒழிப்பு போராட்டங்கள் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. தன்னை எந்த பார்ப்பனிய இந்து மதம் விலங்குகளை விட கேவலமாக நடத்தியதோ, அந்தப் பார்ப்பனிய இந்துமதத்திடம் இருந்து, நாங்களும் கோயிலுக்குள் வந்து சாமி கும்பிட்டுக் கொள்கிறோம் (பூணூல் போட்ட பார்ப்பன சாமிகள்) மேல்சாதிக்கரர்களான நீங்கள் எங்களிடம் தீண்டாமையை கடைபிடிக்காதீர்கள், எங்களையும் கொஞ்சம் பொருளாதார தளத்தில் மேலே வரவிடுங்கள் என்று ஒரு எசமானனிடம் அடிமைகள் கேட்பது போலவே இந்த கோரிக்கைகளும் அது சார்ந்த போராட்டங்களும் அமைந்தன. இவையெல்லாம் பார்ப்பன சனாதான இந்துமதத்தின் கிளைகளைத்தான் அசைத்தனவே தவிர,வேர்களையல்ல. இவையெல்லாம் இந்துமதத்திற்குள் இருந்துகொண்டே பெற்ற சலுகைகள் தானே தவிர வேறொன்றும் அல்ல. நாம் இந்த போராட்டங்களை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு விமர்சனம் செய்யவில்லை. சாதி ஒழிப்புக்கான எந்த ஒரு கூறும் இதற்குள் கிடையாது என்பதையே சுட்டிக்காட்டுகின்றோம்.

 ஆனால் தலித் அரசியல் கட்சிகளின் அடிப்படைக்கட்டுமானமே இந்த கோரிக்கையில் தான் உள்ளது. அவர்களின் நோக்கம் சாதி ஒழிப்பு அல்ல மாறாக சலுகைகளைப் பெறுவது. அதனால் தான் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கிறார்கள். எப்பேர்பட்ட கீழ்த்தரமான மனிதர்களுடனும் கைகுலுக்குகிறார்கள்.

 ஆதிக்கசாதி அரசியல் கட்சிகளுக்கும் தலித் அரசியல் கட்சிகளுக்கும் இன்று மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. கட்சிகளின் பெயரில் மட்டுமே வித்தியாசங்கள் உள்ளன; அவர்களின் செயல்பாட்டில் அல்ல. நாம் இப்படி பேசுவதால் ஆதிக்க சாதி அரசியல் கட்சிகளுடன் தாழ்த்தப்பட்ட சாதி அரசியல் கட்சிகளை சேர்த்து பேசுவதாக நினைக்க வேண்டாம். ஆதிக்க சாதி அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைப் பற்றி நாம் இங்கே பேசவேண்டிய அவசியம் பெரிதாக ஒன்றுமில்லை. ஏனென்றால் அவை தன்னுடைய சாதிய மேலாண்மையை தக்க வைத்துக் கொள்வதர்க்கும், அரசியல் மூலம் தன்னுடைய அதிகார பலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் செயல்படுகின்றன. அவை யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேரும். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதிகளின் பெயரில் இயங்கும் அரசியல் கட்சிகள் அவ்வாறு செயல்பட நாம் அனுமதிக்க முடியாது.

 இன்று இந்தியாவில் மிகவும் வறிய மக்கள் தலித் மக்கள்தான். இந்திய மக்கள் தொகையில் 25% சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் 50% பேர் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள். தலித் என்ற சொல்லுக்கு நொறுக்கப்பட்டவர்கள் என்று பொருள். இந்திய பார்ப்பனிய சனாதான இந்துமதத்தால் சமூக தளத்திலும், பொருளாதார தளத்திலும் நொறுக்கப்பட்டவர்கள். ஆனால் இன்று உலகமயமாக்கலால் அவர்கள் மேலும் நொறுக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, பாதி மக்கள் கிராமப்புறங்களில் விவசாயக்கூலி அடிமைகளாகவும், மீதிப்பேர் நகர்புறங்களில் அத்துக்கூலிகளாகவும் உள்ளனர். இன்று தலித்மக்களின் பழைய பிரச்சினைகளுடன் அதாவது பார்ப்பனிய சித்தாந்த மேலாதிக்கத்துடன் ஏகாதிபத்திய மேலாதிக்கமும் சேர்ந்துள்ளது.

 இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள எந்தத் திராணியும் இல்லாமல் தலித் அமைப்புகள் உள்ளன. சுதந்திரம் அடைந்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகளைக்கடந்தவிட்ட சூழ்நிலையில் இன்னமும் இடஒதுக்கீட்டுக்காகவும், தீண்டாமைக் கொடுமைகளுக் கெதிராவும், கோவில் வழிபாட்டுக்காகவுமே நாம் போராட வேண்டியுள்ளதென்றால் எப்போது நாம் சாதியை ஒழிக்கப்போகிறோம்?

 உலகமயமாக்கலால் பெரும்பாலான சாதி இந்துக்கள் பிழைப்புவாதிகளாகவும், பாசிசத்திற்கு வக்காலத்து வாங்கும் பேர்வழிகளாகவும் மாறிவிட்ட சூழ்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பட்டாளி வர்க்கமாக இருக்கும் தலித்மக்களை புரட்சிகர சக்திகளின் பின்னால் அணிதிரள விடாமல் செய்வது அவர்களது அழிவுக்கே வழிவகுக்கும்.

  இன்று பல தலித் அமைப்புகள் ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. அவர்களின் சித்தாந்த ஆலோகசர்களாக பின்நவீனத்துவவாதிகள் உள்ளனர். தலித் மக்களின் புரட்சிகர உணர்வை மழுங்கடிப்பதற்காக தலித் தலைவர்களை ஆடம்பரமாக வாழ வைக்கின்றன ஏகாதிபத்திய நிறுவனங்கள். இவர்கள் சாதியை ஒழிப்பார்கள் என்று எந்த தலித்தாவது நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். இந்த சமூக அமைப்பு புரட்சியைக் கோரி நிற்கின்றது. தலித் அமைப்புகளின் தேவை என்பது ஒரு எள்ளளவும் இன்று சமூகத்தில் இல்லை. பாட்டாளி மக்கள் வர்க்கங்களாக ஒன்றிணைந்தால் மட்டுமே புரட்சி சாத்தியமாகும். அதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பவை இந்த சாதிச்சங்கங்கள். இத்தனை ஆண்டுகால தலித் அரசியல் கட்சிகளின் செயல்பாட்டுக்குப்பின் இந்திய தலித் மக்களின் நிலை என்னவென்றால் 2014 ஆண்டின் கணக்குப்படி

  1. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 25% பேர் தலித் மக்கள் உள்ளனர்; இவர்களில் 33.2% பேர் சிறையில் உள்ளனர்.
  2. கிராமப்புறங்களில் 44.8% பழங்குடியின மக்களும் 33.8% தாழ்த்தப்பட்ட மக்களும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள்.
  3. ஒவ்வொரு 18 நிமிடத்திற்கும் ஒரு குற்றம் தலித்துகளின் மீது தலித் அல்லாதவர்களால் நிகழ்த்தப்படுகின்றது.
  4. ஒரு நாளைக்கு சராசரியாக 3 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
  5. ஒரு வாரத்திற்கு 13 பேர் கொல்லப்படுகிறார்கள், 6 பேர் கடத்தப்படுகிறார்கள்.
  6. 50% தலித் மாணவர்கள் 5-ம் வகுப்பையே தாண்டுவது கிடையாது.

  தலித்துகளின் இன்றைய சமூக நிலைபற்றிய புள்ளி விவரங்களைக் குறிப்பிட்டால் இந்தியாவில் ஒரு துறை கூட மிஞ்சாது. அனைத்து துறைகளிலும் அவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். துப்புரவு வேலைகளில் மட்டுமே அவர்கள் முழுமையாக நிரப்பப்படுகிறார்கள்!

 இப்படியொரு நிலையை தலித்மக்கள் அடைவதற்கு தலித் அரசியல் கட்சிகள் தான் மிகப்பெரிய காரணம். சாதியப் பிரச்சினையை எப்படி ஆரம்ப கால கம்யூனிஸ்ட்டுகள் புறக்கணித்தார்களோ அதே போல வர்க்கப் பிரச்சினையை இன்றுள்ள தலித் கட்சிகள் புறக்கணிக்கின்றன.

 பிரச்சினைகள் முற்றி ஒரு முடிவுக்கு காத்துக் கிடப்பதை அவர்கள் பார்க்கத் தவறுகிறார்கள். ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன. சாமானிய மக்கள் அணுக முடியாத அதிகார பீடங்களாக அரசு எந்திரம் மாறியுள்ளது. நாட்டின் இயற்கை வளங்கள் நம் கண்முன்னாலேயே கொள்ளை போய்க் கொண்டு இருக்கின்றன. சாமானிய மக்கள் அரசு எந்திரத்தால் மிகக் கொடூரமான முறையில் நசுக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.

 நிலம் கையகப்படுத்தும் மசோதாவாக இருக்கட்டும், அல்லது ஆந்திராவில் 20 தொழிலாளர்கள் சுட்டு கொலைசெய்யப்பட்டதாக இருக்கட்டும் இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன. ஏகாதிபத்திய அடிமைகளால் ஆளப்பட்ட இந்த நாடு மீள முடியாத அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது என்பதையே கட்டியம் கூறுகின்றன. தாய், மகள், சகோதரி, என்ற வித்தியாசம் பாராமல் அனைவரிடமும் மதுபோதையில் வல்லுறவு கொள்ள முயலும் ஒரு காமக்கொடூரனைப்போல இந்த அரசு மாறியுள்ளது. பன்னாட்டு பெருநிறுவனங்களும், தரகு முதலாளிகளும், கனிம வளங்களை சூறையாடும் உள்ளூர் மாஃபியாக்களும், தரும் பண போதையில் ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது.

 எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள தலித் அரசியல் கட்சிகளிடம் எந்தத்திட்டமும் இல்லை. அவர்கள் தொண்டு நிறுவனங்களின் மடியில் சுகமாக உறங்கிக் கிடக்கிறார்கள். சாமானிய தலித் மக்கள் அவர்களை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

 சாதி ஒழிப்புக்கு முன்நிபந்தனை வர்க்க ஒற்றுமை. வர்க்க ஒற்றுமைக்கு முன் நிபந்தனை சாதி ஒழிப்பு.இதில் எது ஒன்று இல்லை என்றாலும் மற்றொன்று சாத்தியமில்லை. ஆனால் இதை சாத்தியப்படுத்தும் திறன் பார்ப்பன எதிர்ப்பையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் தன்னகத்தே கொண்ட புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சிகளிடம் தான் உள்ளது, தலித் அரசியல் கட்சிகளிடம் அல்ல, குறிப்பாக இந்த அதிகார அமைப்பில் கூட்டாளியாக இருக்கத் துடிக்கும் போலி கம்யூனிஸ்ட்டுகளிடம் அல்ல.

- செ.கார்கி

Pin It