இணையம், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒன்று. கடந்த இருபது ஆண்டுகளில் இணையத்தின் வளர்ச்சி அபரிவிதமானது. இன்று, உலகில் 40% சதவிகிதம் மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். 1995ல், 1% சதவிகிதமாக இருந்த எண்ணிக்கை, 2015ல் 40% சதவிகிதமாக உயர்ந்து உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 15% சதவிகித மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையம் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டிருக்கிறது.

இணையம் அளவற்ற அறிவை தன்னகத்தே கொண்டிருக்கிறது, அதுவும் அனைவருக்கும் பொதுவான சேவையை வழங்கி வருகிறது. இணையத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக இன்று பல கல்வி நிறுவனங்களும், மருத்துவதுறை சார்ந்த நிறுவனங்களும் இணையத்தின் மூலமாக தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர். இந்த முன்னேற்றத்துடன் சேர்ந்து தொலைபேசித் துறையின் முன்னேற்றத்தாலும், அனைவரும் நம் கைபேசியில் இணையத்தை பயன்படுத்துகின்றோம். பல விதமான அப்ளிகேஷன்களும்(Apps), சமூக வலைதளங்களும் அதில் பயன்படுத்தக் கிடைக்கின்றன.

இணையத்தை தோற்றுவித்த, டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners-Lee) அவர்கள் கூறியதாவது "நாங்கள் இணையத்தை உருவாக்கியபொழுது, அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமென்றே விரும்பினோம். உலக மக்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை, அறிவை சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்வதற்காகவே இணையத்தை உருவாக்கினோம்” என்று கூறுகிறார்.

டிம் பெர்னர்ஸ் லீயின் கூற்றிற்கு முற்றிலும் எதிராகவும், பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், இவ்வளவு நாட்களாக நாம் இலவசமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இணையதளங்களுக்கும், அப்ளிக்கேஷன்களுக்கும் இனி பணம் செலுத்த வேண்டும் என்கின்ற நிலைக்கு நம்மைத் தள்ளப் பார்க்கிறது, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India - TRAI).

Regulatory Framework for Over-the-top (OTT) services என்னும் இந்த புதிய ஆலோசனை அறிக்கையின் படி, இணைய பயன்பாட்டினாலும், சில அப்ளிகேஷன்களினாலும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அதனால் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு இணையதளத்திற்கும், அப்ளிகேஷன்களுக்கும் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இணைய பயன்பாட்டினாலும், சில அப்ளிகேஷன்களினாலும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பது முற்றிலும் ஒரு பொய்யான தகவல். எந்த ஒரு தொலைபேசி நிறுவனமும் முற்றிலும் இலவசமாக நமக்கு இணைய வசதிகளைத் தருவதில்லை. அதுமட்டும் அல்லாமல் தொலைபேசி நிறுவனங்களின் இணைய வசதிகள் தருவதன் மூலம் வரும் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து உள்ளது.

vodafone 600

 

 

 

 

 

 

Vodafone IMS - Quarter to 31 December 2014 (page 4)

airtel 479

 

 

 

 

 

 

 

 

Airtel 31 December 2014 Quarterly Report (page 23)

மேலே உள்ள இரண்டு ஆதாரங்களும், தொலை தொடர்பு நிறுவனங்களின் வருவாய் இணைய சேவைமூலம் எவ்வளவு தூரம் அதிகரித்து உள்ளது என்று நமக்குத் திட்டவட்டமாக எடுத்துக் காட்டுகிறது.

இந்த ஆலோசனை அறிக்கை இரண்டு விதமான ஆலோசனைகளை முன்மொழிகிறது. ஒன்று, விலை அடிப்படையிலான வலைதள சேவை (Price based mechanism) மற்றும் விலை இல்லா வலைதள சேவை (Non-Price based mechanisms).

விலை அடிப்படையிலான வலைதள சேவையை (Price based mechanism) அமல்படுத்தும் பட்சத்தில் ஒவ்வொரு வலைதளங்களுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படும். அதாவது Facebook வலைதளத்தை பயன்படுத்த வேண்டும் எனில், அதெற்கென்று தனி கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளவேண்டும். இல்லையெனில் அந்த வலைதளத்தை நாம் பயன்படுத்த முடியாது.

விலை இல்லா வலைதள சேவை (Non-Price based mechanisms) முறையில் குறிப்பிட்ட வலைதளங்களைப் பொருத்து, இலவசமாகவோ அல்லது அதன் வேகம், மற்ற வலைதளங்களைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சேவை அளிக்கப்படும். இதில் பயனாளிகளிடமிருந்து எந்த வித தனி கட்டணங்கள் வசூலிக்கப் படாது. மாறாக அந்த வலைதளத்தின் உரிமையாளரிடமோ அல்லது அப்ளிகேஷன்களினாலும் உரிமையாளரிடமோ பணம் வசூலிக்கப்படும்.

இந்த இரண்டு ஆலோசனைகளும் முற்றிலும் இணைய சமத்துவத்திற்க்கு எதிரானது. இந்த இரண்டு ஆலோசனைகளும் நாம் எந்த வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நம்மீது மறைமுகமாகவும், நேரடியாகவும் திணிக்கப்படும் வன்முறையாகும்.

அதுமட்டுமல்லாமல், சாமன்யனின் குரலும் ஓங்கி ஒலிக்கின்ற சமூகவலைதளங்களும், செய்திகளைப் பரிமாரிக்கொள்கிற அப்ளிகேஷன்களும், ப்ளாக்குகளும் (Blogger) பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிற நிலை வரும் பட்சத்தில், இது மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நகர்வாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்ற இந்திய ஒழுங்குமுறை ஆணையங்களைப் போலவே மக்களுக்கு எதிரானதாகவும், பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்காகவே வேலை செய்துகொண்டிருக்கிறது என்பது தெளிவு.

இணையப் பயன்பாட்டாளார்கள் அனைவருக்கும் கீழ் காணும் உரிமைகள் அவசியம்.

இணையத்தில் உள்ள தகவல்கள் அனைவருக்கும் பொதுவானவை. அதில் எந்த விதமான பாகுபாடும் இருத்தல் கூடாது.

அனைத்து இணைய தளங்களும் ஒரே வேகத்தில் வழங்குதல் வேண்டும். குறிப்பிட்ட தளங்களுக்கு இணைய வேகம் அதிகமாகவும், சிலவற்றிக்கு குறைவாகவும் இருக்கக் கூடாது.

அனைத்து இணைய தளங்களையும் பயன்படுத்த ஒரே விதமான விலை வசூலிக்கப்பட வேண்டும். எந்த ஒரு இணைய தளத்திற்கும் தொலை தொடர்பு நிறுவனங்களால் தனிப்பட்ட முறையில் பணம் வசூலிக்கப்படக் கூடாது.

இணையதளத்தை தோற்றுவித்த டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners-Lee) மற்றும் அவர் குழுவினர்கள் எந்தவித காப்புரிமையும் இல்லாமல் இந்தச் சமூகத்திற்கு இலவசமாக அளித்த இணையத்தைக் கைப்பற்ற அனைத்து வேலைகளையும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இணையம் வரும்காலத்தில், மக்களின் பேராயுதமாகப் பயன்படப்போகும் கருவி! ஆதலால் இந்த இணையத்தை கைப்பற்றிவிட பன்னாட்டு பெருநிறுவனங்கள் துடிக்கின்றன.

அமெரிக்க போன்ற நாடுகளில் இணைய சமத்துவத்தை அடைய பெரும்திரளான மக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து, இணைய சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் மீட்டெடுத்துள்ளனர். இப்பொழுது நாம் அத்தகைய எதிர்ப்பினை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (TRAI ) எதிராகப் பதிவு செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் 24 ம் தேதிக்குள் இந்த ஆலோசனை அறிக்கை தொடர்பாக மக்களிடம் TRAI எழுப்பி உள்ள 20 கேள்விகளுக்கு நாம் நம் பதில்களை அளிக்க வேண்டும்.

கீழ் கண்ட இணைப்பில் உள்ள Respond to TRAI now என்ற பொத்தானை அழுத்தி, இந்த அலோசனை அறிக்கைக்கு எதிராக நம் பதில்களைப் பதிவு செய்யலாம்.

www.savetheinternet.in

நாம் அனைவரும் நாம் எதிர்ப்பினை பதிவு செய்து நம் இணைய சுதந்திரத்தைக் காப்போம்.

குறிப்பு:
http://www.internetlivestats.com/internet-users/
http://ec.europa.eu/commission/2014-2019/ansip/blog/guest-blog-sir-tim-berners-lee-founding-director-world-wide-web-foundation_en
http://www.vodafone.com/content/dam/vodafone/investors/financial_results_feeds/ims_quarter_31december2014/dl_ims_31december2014.pdf
http://www.airtel.in/wps/wcm/connect/5f530f01-9e4f-4c95-ac6c-6d283f4ac71c/Bharti+Airtel+Limited_Quarterly+Report_December+31-2014.pdf?MOD=AJPERES&ContentCache=NONE
http://www.airtel.in/about-bharti/media-centre/bharti-airtel-news/corporate/airtel+launches+-+airtel+zero-+a+win-win+platform+for+customers+and+marketers
http://www.trai.gov.in/WriteReaddata/ConsultationPaper/Document/OTT-CP-27032015.pdf
http://www.savetheinternet.in

- நந்தகுமார், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்.

Pin It