farmers 372
மண்ணில் வாழுகின்ற மனிதர்களின் வாய்மொழிச் சொற்களே நாட்டுப்புற இலக்கியம் ஆயிற்று. சங்ககால இலக்கியங்களில் உணவு சேகரிக்கும் வாழ்க்கை நிலை, வேட்டையாடும் வாழ்க்கை நிலை, கால்நடை வளர்ப்பு நிலை, பயிர்த்தொழில் செய்யும் வாழ்க்கையினை காண முடிகின்றது.

இயற்கையும் வேளாண்மையும்:

சூரியனிலிருந்து பிரிந்து வந்த பூமியை தமிழர்கள் உணர்ந்ததால்தான் பின்பு அதனை வணங்கி தெய்வமாகப் போற்றுகின்றனர். பொதுவாகவே தமிழர்கள் இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்து வருபவர்கள். பழங்கால மனிதனின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் செயல்கள் யாவும் இயற்கைச் சூழ்நிலையில் உருவாக்கப்பட்டன. இதனால்தான் இயற்கையைப் போற்ற தமிழன் தவறியதில்லை. இதனாலேயே இளங்கோவடிகள்,

“ஞாயிறு போற்றுதும்; திங்கள் போற்றுதும் மாமழை போற்றுதும் எனச் சூரியன், சந்திரன், மாமழை போன்றவற்றை சிறப்பித்துப் பாடியுள்ளார்.

உழவுத்தொழிலுக்கு கலப்பையும், விலங்குகளைப் பழக்குவதும் கண்டுபிடிக்கும் வரை கற்களாலோ, குச்சிகளாலோ நிலத்தினைக் குத்தியோ, கீறியோ பயிரிட்டனர். வேளாண்மைத் தொழில் முழுக்க முழுக்க பெண்களே செய்து வந்த நிலைமை இருந்தது. பெண்களின் கைவண்ணமாக இருந்த வேளாண்மை பண்பட்ட வேளாண்மையாகிறது.

நாட்டுப்புற வேளாண்மை, நடப்பு வேளாண்மையின் அடித்தளமாகும். அக்கால மக்கள், மண்ணுடன் வாழ்ந்தனர்; மண்ணை வசப்படுத்தினர்; விண்ணுடன் வாழ்ந்தனர்; விண்ணின் மாற்றத்திற்கு ஏற்ப பட்டங்களை வகுத்துக் கொண்டனர்; நீருடன் வாழ்ந்தனர், நீரை நெல்லாக்கினர்; பூச்சிகளுடன் வாழ்ந்தனர், பூச்சிகளுக்கு முந்திக்கொண்டு விளைவித்துக் கொண்டனர்; பயிருடன் வாழ்ந்தனர், பயிரியலை மகசூலாக்கினர்; வேளாண்மையுடன் வாழ்ந்து, வேளாண்மையை வாழ்வாக்கினர். இயற்கையுடன் வாழ்ந்து இயற்கையை ஒட்டி இன்பம் எய்தினர்.

இந்த வாழ்க்கையின் மூலம் அனுபவம் பெற்றனர். அனுபவ அறிவின் மூலம் புதிய முறைகளைத் தேடிக் கொண்டனர். காலம் காலமாக வேளாண்மையை பெருக்கினர். இதன் மூலம் வேளாண்மையை காலம் கடந்து நிற்கச் செய்தனர்.

இன்றைய அறிவியல் யுகத்தில் வேளாண்மையும் அதன் சார்ந்த தொழில்களும் இயற்கை வாழ்வும் மெல்ல மெல்ல சிதைந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

வேளாண்மையின் அவசியம்

வேளாண்மை என்பது தொழில் அல்ல ஒரு தொண்டு சமுதாயத்தின் முதுகெலும்பாகும். தாளாண்மைக்கும் இதுவே தளம் இதில் நமது பண்பாடும் நாகரீகமும் பொதிந்துள்ளன. எனவே தான் ஆங்கிலேயர் இதனை ‘அக்ரிகல்சர்’ என்றனர். மண்ணைப் பண்படுத்துவது மனிதனைப் பண்படுத்துவதற்கான பயிற்சிதான். மண் விளைந்தால் மனம் விளையும், மானுடம் விளையும். இதன் மூலவேர்கள் கீராமப்புறங்களில் தான் உள்ளன. இவற்றைக் கவனிப்பதும் காப்பதும் இன்றைய தேவைகளுள் ஒன்று.

“சுழன்றும் ஏர்பின்னது உலகம்”

“ஏரோட்டம் நின்னுபோனா ஒங்க காரோட்டம் என்னவாகும்"

“நாங்கள் சேற்றிலே கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றிலே கை வைக்க முடியாது”

இவ்வாறு ‘நாட்டுப்புறத்தார்’ கூறுவன பொய்யல்ல.

வேளாண்மையும் வழிபாடும்:

கிராமப்புறங்களில் ஆண்டுக்கொருமுறை நடத்தப்படும் திருவிழாக்களில் முளைப்பாரி வளர்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியான வாழ்வு அமையவேண்டியும் முளைப்பாரி பெண்களாள் எடுக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வள்ளிப்பாட்டு, கும்மிப்பாட்டு, காவடிப்பாட்டு போன்றவை பாடப்படுகின்றன. இவ்வகை வழிபாட்டுப் பாடல்களில் வேளாண்மை என்னும் துறையும் இடம்பெறுகின்றது.

“மம்பெட்டி பிடிக்கும் மாறுமணிபோட்டு ஆடும் மாறு
பொங்கரும்பு வெட்டுதில்ல புதுமையில்ல பெரிய கரும்பு”

கருப்பசாமியின் பெருமைகளைக் கூறும் இப்பாடலில் கிணறு வெட்டிச் சாகுபடி செய்த விபரமும் அறிந்து கொள்ள முடிகின்றது.

நாட்டுப்புற தெய்வங்களைப் பற்றி மட்டும் பாடாமல் பெருமரபு சார்ந்த தெய்வமான மீனாட்சி சொக்கர் பற்றியும் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இப்பாடலில் வேளாண்மையும் இணைந்தே அமைந்துள்ளது. இதன்
“நாழி நல்ல வெதயெடுத்து மீனா
நாடெங்கும் வெத வெதச்சா
வீசி நல்லா எறிஞ்சா மீனா
வீரமணி கையினால
நாத்தரிச்சு நடவு நட்டு
நாறு பேறு களையெடுத்து
கட்டு கலங்காக்கும் எங்க
கதிருழக்கு சொன்னா நல்லா பொலியாகும்
சொக்கரோட வீரச்சம்பா”

மீனாட்சி சொக்கநாதர் வீரச்சம்பா எடுத்து, விதை விதைத்து, நாத்தரித்து நடவுநட்டு, களையெடுத்து முறையே செய்யும் போது ஒரு கட்டு நெல்லில் கலம் நெல் கிடைக்கும். ஒரு கதிரில் உழக்கு நெல் கிடைக்கும். ஒரு கதிரில் உழக்கு நெல் கிடைக்கும் என்ற உயரிய மகசூல் பற்றிக் கும்மிப்பாட்டில் கூறப்படுகின்றது.

பழமொழியும் வேளாண்மையும்:

கிராமப்புற மக்களிடத்து வாழுகின்ற நெறிமுறைகள் கருத்தாழம் மிக்கவைகளாக, அறிவுக்கூர்மை உடையனவகளாக எடுத்துச் சொல்வதிலே சிறப்பானவை பழமொழிகள். இவை எளிமையாக மக்கள் பயன்படுத்துகின்ற சொற்களைக் கொண்டே அமைந்திருக்கும். இரண்டு அடிகள் முதல் நான்கு அடிகள் வரை அமைந்து ஆழ்ந்த கருத்துக்களை உடையதாக இருக்கும்.

“பருவத்தே பயிர் செய்’ – என்பது பொதுவாக எப்பயிர் இட்டாலும் பருவம் தப்பாமல் பயிரிட வேண்டும் எனபதை அறியலாம். எந்த செயலானாலும் பருவம் தவறாமல் செய்ய வேண்டும் எனபதை உணர்த்துகின்றது.

“தான் திங்க தவிடில்ல சம்பா நெல்லுக்கு
தொம்ப வச்சு கொட்டுறேங்கிறயான்”

என்ற பழமொழி தொம்பை வைத்து தானியங்களைச் சேமிக்கும் வழக்கம் இருந்துள்ளது என்பதை விளக்குகிறது. அதே போல் குதிர் வைத்து தானியங்களை சேமிப்பது வழக்கம் என்பதை

“அம்மா குதிர் போல
அப்பா கதிர் போல”

என்ற பழமொழி நகைச்சுவை கலந்தவையாக உள்ளது. அம்மா தடித்தவர் எனபதற்கு குதிர்போல என்றும் (குதிர் எனபது தானியசேமிப்புக் கலன். அது உருண்டு திரண்டு இருக்கும்) அது போல கணவன் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்பதற்கு அப்பா கதிர் போல என்று கூறப்படுகிறது.

விடுகதையும் வேளாண்மையும்:

விடுகதை என்பது விடை கண்டுபிடித்து விடுவிக்கப்பட்ட வினாவென்று கூறுவர். இது நேரடியாக வேறுபடக் கூடயது. மறைபொருளாகவும் அமையும். கிராமப்புறக்களில் முன்னோர் அதிகளவில் பயன்னடுத்தினர். கிராமப்புற வேளாண்மையில் உள்ள விடுகதை

“பச்ச பச்ச நெறத்தா
பாவக்கா நெறத்தா
ஒலப்பா நெறத்தா
புள்ள பெத்தா
தாலி அறுத்தா
தலகீழா நின்ன”

இதில் நெல் நடவு முதல் அறுவடை வரையிலான செய்திகள் கூறப்படுகின்றது. நெல் இளம் பயிரில் பச்சையாய் பாகற்காய் நிறத்திலும் வளர்ந்து முதிர்ச்சியடையும் நிலையில் ஓலப்பாயின் நிறத்திலும் முதிர்வின் போது கதிர்கள் வெளிவந்து நிற்பதை புள்ள பெத்தா என்றும் அறுவடை நிகழ்வு தாலி அறுத்தலுக்கும் அறுவடைக்குப் பின் நெற்பயிரை தலைகீழாகப் பிடித்து நெல் மணிகளைப் பிரித்து எடுப்பதை ‘தளைகீழா நின்னா’ என்று கூறுகிறது.

இன்று கிராமப்புற வேளாண்மை பற்றிய ஆராய்ச்சி பல மட்டங்களில் பல துறைகளில் பல்வேறு விதங்களில் நடைபெறுகிறது நுணுக்கமாக ஆராயும் இயல் வலுவடைந்து மரபனுக்களைக் கண்டறிந்து புத்தம்புதிய இனங்களைக் கண்டறியும் ‘பிரம்மாக்களாக’ விஞ்ஞானிகள் வளர்ந்துள்ளனர். எனினும் ஒன்றை மறக்கலாகாது. நேற்றிலிருந்து இன்று பிறந்து இன்றிலிருந்து நாளை உதயமாகப் போகின்றது. அதனை மறந்துவிட்டு அடித்தளமில்லா அரண்மனையை அமைக்க இயலாது. அடுத்த தலைமுறைக்கு இயற்கையை (வேளாண்மையை) கொண்டு சேர்ப்பது அவசியமாகும். கிராமங்களை வேளாண்மையால் வளமாக்குவோம்.

ப.மணிகண்டன், உதவிப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கோவை-28

Pin It