உணவு மனிதனின் பசியின் தேவை கருதி எடுத்துக் கொண்டவையான ஒரு வகையான உணர்வு நிலைதான். உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு என்பது இன்றியாமையாததாகும். மனிதத் தோற்றம் முதலே பசியின் தேவையினால் உணவின் ஒவ்வொரு பொருட்களும் காலத்தின் கட்டாயத்தில் படிமலர்ச்சியின் நிமித்தமாக வெவ்வேறு பண்டங்களாக மாற்றம் பெற்றுக் கொண்டேதான் வந்திருக்கின்றன. வேட்டையாடுதல் முறையே பசியின் தேவை என்பது எவ்வளவு நிதசர்னமோ அதே போலத்தான் ஒவ்வொரு உயிரினமும் தேவை கருதியே தனக்கான உணவை தானே தீர்மானிக்கத் தொடங்கின எனலாம்.
இந்தியப் புவியில் தகவமைப்பில் தமிழ் நிலப்பரப்பு என்பது ஐந்திணையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகும். குறிஞ்சி நிலத்தகவமைக்கான உணவும், அதன் தேவை எவ்வளவு என்பது போல மற்ற நான்கு திணைகளின் உணவு விளைச்சல், பண்பாடு முதலியன எல்லாம் அந்தந்த திணையின் மூலம் அல்லது நிலத்தில் விளையும் உணவுப் பொருட்களின் அடிப்படையிலேயே அந்தந்த திணைகளின் உணவுப் பண்பாடு என்பது உருவாக்கப்படுகின்றன. ஒரு நிலத்திலிருந்து அல்லது கண்டம் விட்டு கண்டம் தாண்டிய மிளகு கூட உணவின் பண்டமாற்று முறையும் கூட மனித உணர்வின் வெவ்வேறான உணவு வகைகளைத் தேடியவற்றுள் ஒன்றாகவே இருக்கமுடியும். பண்டமாற்று முறை ஐந்திணை அமைப்பில் கிழங்கு, பழம் முதலானவை இன்னொரு மாற்று திணையான நெல், உப்பு, மீன் இவ்வாறு மாற்றுதலில் வெவ்வேறு வகையான உணவினை தேடுதல் என்றே குறிப்பிட்டுச் சொல்லிவிடமுடியும். இவ்வாறான தமிழர் உணவு முறைகளில் இன்று தீட்டாகவும் பசுவின் இறைச்சியை உண்பவர்களைத் தீண்டத்தகாதவர்களாகவும் அடையாளப்படுத்தப்படுகின்ற தவறான நிலையினையும், பசுவின் இறைச்சி தமிழர்களின் அன்றாட வாழ்வின் உணவுமுறைகளில் இயல்பாகவே இருந்துள்ளதனையும் அது எவ்வாறு அரசியல் விபரீதத்தில் புனிதப்படுத்தப்பட்ட நிகழ்வினையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
வழிபாடுகளில் உணவு
சமயம் மற்றும் வழிபாட்டு முறைகளிலும் உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதான நீண்டநாள் நெடிய வரலாறு நம்புவிச் சூழலுக்கு உண்டு. ஆகையில், சமய வழிபாடு, இயற்கை முதலான எல்லா வழிபாடுகளிலும் உணவுப் பண்பாடென்பது முக்கிய அங்கமான ஒன்றாகவே கருதப்படுகின்றதையும் அறியலாம். சைவம், அசைவம் எனப் பிரிக்கப்பட்ட உணவு முறைகளில் முதலில் மனிதனின் உணவுப் பண்பாடு சைவத்தை அதாவது பழங்கள், காய்கறிகள்தான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பென்ற ஒன்று கண்டறியப்பட்டதன் தொடர்ச்சியே அசைவ உணவின் ஆரம்பம் என்பதும், எந்த உணவினை எந்த தெய்வத்திற்குப் படைத்தல் என்பதில் இருந்தே ஆரம்பமாகின்றது. எந்தத் தேவையினைக் கொண்டு உருவானது என்பதும் தெரிவது சாலச் சிறந்ததாகும்.
“நாம் பயன்படுத்தும் பொருட்கள் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகள் என்ற பொதுப்புரிதலிலிருந்து விடுபட்டு, மற்ற பண்பாடுகளிலிருந்து நாம் எவ்வாறு வேறுபட்டு நிற்கிறோம் என்பதைப் பொருட்களே வெளிப்படுத்துகின்றன. அதனைக் காலங்காலமாகவே நிலைப்படுத்தியும் வருகின்றன” (தொ.பு.பக்தவச்சல பாரதி.2011.16)
ஒவ்வொரு உணவுப் பொருட்களும் ஒவ்வொரு பண்பாட்டு தளங்களின் வெவ்வேறான பாதைகளில் பயணிக்கக் கூடியதாகவே இருக்கின்றன. இது எல்லா புவிவியல் சூழலுக்குப் பொருந்துமா என்றில்லாமல் அந்தந்த புவியியல் தகவமைப்பிற்குத் தகுந்தாற்போல் பண்பாட்டின் அடிப்படையில் மாற்றம் இருக்கவே செய்யும் என்பதில் ஐயமில்லை. அதே போலத்தான் தமிழர் உணவுப் பண்பாடு என்பது கூட பொதுவாக அடையாளம்தான் என்பதை,
“இன்று தமிழகத்தில் 364 அகமணச் சாதிகள் உள்ளன. இச்சாதிகளின் தமிழரல்லாத சாதிகளின் எண்ணிக்கை 155 ஆகும். மீதமுள்ள 209 அகமணச் சாதிகளே தமிழ்ச் சாதிகள் என்று சொல்ல வேண்டும். இந்தியச் சமூகம் சாதியச் சமூகம் என்பதால் இந்தியப் பண்பாட்டைச் சாதியப் பண்பாடாகவே காணவேண்டிய ஒரு வரலாற்று நெருக்கடி நமக்குண்டு” (தொ.பு.பக்தவச்சல பாரதி.2011.17)
மேற்கண்ட பக்தவத்சல பாரதியின் கூற்று, மீதமுள்ள 209 சமூகத்தின் உணவுப் பண்பாடென்பது உண்ணுதல், சமைத்தல் முறை என்பன போன்ற ஒவ்வொன்றிலும் தனித்தனியான பண்பாடாகவே தெரியும். ஆனால் இவையெல்லாம் ஒரு புள்ளியில் போய் சங்கமிக்கும் இடம்தான் தமிழர் உணவுப் பண்பாடாகும்.
மதமும் பசுவும்
வேதகாலங்களிலும் புராண காலங்களிலும் பசுவின் இறைச்சி என்பது பலியிடப்படுகின்ற ஒரு பொருளாக இருந்தது என்பதை புனிதம் இல்லாத தன்மையினையும் நமக்குத் தருகின்றன. காரணம் என்னவெனில் தங்களுக்கும் வேதகால இறைவர்களுக்கும் பசுவின் இறைச்சி என்பது மிகவும் விரும்பிய உணவாக இருந்திருக்கின்றது என்பதில், தொடக்கால வேத நூல்களிலும், பிற்கால வேத நூல்களிலும் இடம் பெற்றுள்ள ஏராளமான குறிப்புகளைப் பார்க்கும் போது பசுக்கள் பலி தரப்படுவது வேள்விகளில் மிக முக்கிய அம்சமாக இருந்திருக்கின்றது என்ற விஷயம் வெளிப்படையாகவே தெரிகின்றது. வேள்வியில் பலியிடப்படும் பசு மிக நல்ல உணவு என்றும் நூறு காளைகளை உயிர்பலி தந்ததற்காக அகஸ்தியரைப் போற்றியும் தைத்தீரிய பிராமணம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
எனவே வேதகாலகட்டத்தில் பசுக்கள் மற்ற விலங்குகள் போலவே மிகவும் சாதாரண புனிதப்படுத்தாத தன்மையிலே இருந்திருக்கின்றதனை உறுதி செய்யும் விதமாக மேற்கண்ட கூற்று ஊர்ஜீதப்படுத்தப்படுகின்றது. ஆனால் பசு எப்போது புனிதமாக்கப்பட்டது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டிய சூழலில் மத்திய காலகட்டத்தினை பார்க்கும் போது, “மத்திய காலத்தைச் சேர்நத சில சாஸ்திர ஆசிரியர்கள் பசுவைக் கொன்றவனை தீண்டத்தகாதவனாகவே பார்த்தனர். அவனோடு பேசுவது கூட பாவமாகக் கருதப்பட்டது. இருப்பினும். ஒரு சில ஆசிரியர்கள் இதை (பசு வதையை) சிறு குற்றமாகவே பார்த்தனர் என்பது சுவையான செய்தியாகும்” (டி.என்.ஜா.2006.ப.97)
வேள்வியின் தேவையற்ற நிகழ்வுகளால் அதிகமாக கால்நடைகளான பசுக்களும், காளைகளும் தொடர்ச்சியாகப் பலியிடப்பட்டு வந்ததால் வேளாண்மைக்கு மிகவும் பெரிய பாதிப்புகள் வந்திருக்கலாம் ஆகையால் வேளாண்மைக் காலகட்டத்தில் பசுக்கள், காளைகள் பொருளாதாரத்தின் நிலையைச் சுட்டுவதாகவும் அதற்கு அன்றைய அதிகாரங்களில் இருந்தவர்களாலும் புனிதமானவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களாலும் புனையப்பட்ட ஒன்றாக இருக்கமுடியும் என்பதில் உண்மையைத் தவிர வேறென்ன இருக்க முடியும்.
“பௌத்த நூல்களிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள், புத்தரின் காலத்திலும்கூட மாட்டிறைச்சி உள்பட விலங்குகளின் இறைச்சி உண்ணப்பட்டு வந்ததைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. வேதகாலத்துக்குப் பிந்தையதும், மௌரியர்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததுமான தர்ம சூத்திரங்களிலும், கிரக சூத்திரங்களிலும் விதிக்கப்பட்டிருந்த தடை காரணமாக இவ்வழக்கம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்ததையும் இவை எடுத்துக்காட்டுகின்றன.” (டி.என்.ஜா.2006.ப.44)
பௌத்தர் காலத்திலும் பசு பொதுவாக எல்லோராலும் உண்ணப்படடு வந்துள்ளதனை அறிந்து கொள்ள மேற்கண்ட சான்று ஏதுவாக அமைகின்றது. புத்தரின் சமயக் கொள்கைகளில் உயிர்ப்பலி கூடாது தனிப்பட்ட ஒருவருக்காக விலங்குவதைகளும் இறைச்சியும் தவிர்த்தல் என்பதும் அக்காலகட்டத்தில் நிலவிய உயிர்பலிகளால் ஏற்பட்ட சிந்தனையாகவே இருக்க முடியும்.
“இறைச்சி உண்பதும், உணவுக்காகக் கால்நடைகள் கொல்லப்படுவதும் இயல்பான வழக்கமாக குப்தர் காலத்திலும், அதற்குப் பின்னரும் நீடித்து வந்திருக்கின்றது என்பதற்குப் போதுமான ஆதாரங்களைப் புராணங்களிலும், காவியங்களிலம் பார்க்க முடிகிறது. ஈமச்சடங்கின் போது பார்ப்பனர்களுக்கு மாட்டிறைச்சி விருந்து தரப்பட்டதற்கான ஆதாரங்களைப் பல்வேறு புராணங்களில் பார்க்க முடிகிறது.” பக். (டி.என்.ஜா.2006.ப.94)
இன்றைய சூழலில் மாட்டுக்கறி என்பது ஒரு அரசியலாக்கப்பட்ட வினையுடன் இருக்கின்ற பொழுதில், பார்ப்பனர்களின் முக்கியமான அதுவும் அவர்களின் கௌரவ உணவுப் பட்டியிலில் பசுவின் இறைச்சி இடம் பெற்றிருந்ததை,
“ரந்தி தேவரின் புகழ்பாடும் குறிப்புகளையும் மகாபாரதத்தில் பார்க்க முடிகின்றது. அவரின் சமையலறையில் தினந்தோறும் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப்பட்டு வந்தன. தூனியங்களோடு, இறைச்சியும் பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டு வந்தன.” (டி.என்.ஜா.2006.ப.95)
மேலும் இதற்கு வலு சேர்க்கும் விதமாக,
“பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றி வந்த ஞானசியாமர், விருந்தினர்களைக் கௌரவிப்பதற்காக பசுக்களைக் கொல்வது பண்டைய விதி முறையாக இருந்தது என்று குறிப்பிடுகிறார்” (டி.என்.ஜா.2006.ப.96)
ஆக பார்பனர்களின் தேவையிலும் ஒரு வகையான சுயநலம் என்பது இன்றைய பசுவின் மீதான புனித அரசியலை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதனையும் அறிய முடிகின்றது மேலும் வாய்மொழிக் கதைகளும் தென்மக்கதைகளும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பார்ப்பனர்களால் வஞ்சிக்கப்பட்டு கீழ்நிலையாக்கம் செய்யப்பட்ட பறையர் இனத்தின் தொன்மக் கதை இதனை உறுதிப்படுத்தவே செய்கின்றது.
“தொடக்ககால இந்திய மருத்துவத் நூல்களில் அசைவ உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஒரு முக்கிய இடம் தரப்பட்டுள்ளது. இந்த நூல்களும், மநு, யாக்ஞவல்கியரின் சாஸ்திர நூல்களும், தொடக்ககாலப் புராணங்களும், இரண்டு காவியங்களும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் எழுதப்பவட்டவைதாம். மீன்கள், விலங்குகள் குறித்து சரகர், சு~;ருதர், வாக்பதர் ஆகியோர் தரும் பட்டியல் கவனத்ihத ஈர்ப்பதாக இருக்கிறது. முhட்டிறைச்சியின் மருத்துவக் குணங்கள் பற்றி இந்த மூவருமே பேசுகின்றனர்.” (டி.என்.ஜா.2006.ப.95)
எனவே மருத்துவத்துறையில் மாட்டுக்கறி முக்கியப் பங்கு வகிப்பதினையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
இறைச்சியால் சமூக கீழ்நிலையாக்கம்
அண்ணன் பறையன் தம்பி பார்ப்பான் என்ற தொன்மக் கதைகளில் வேண்டுமென்றே கீழ்நிலையாக்கம் செய்யப்படுவதற்கு எடுத்துக் கொண்ட கருவி தான் பசு. தமிழ்ச் சாதிகளில் ஒவ்வொரு சமூகத்திற்கான உணவு முறைகளில் பறையர் சமூகத்தினர் மடடுமே பசுவின் இறைச்சியோடு அடையாளப்படுத்தப்படுகின்றதையும் தமிழ்ச் சூழல் அறியாமல் இல்லை. எல்லா விலங்குகள் போல இந்த விலங்கு சாதாரணமான முறையில் பார்க்கப்படாமல் அரசியலாக்கம் செய்யப்பட்;டதன் நோக்கம். அந்த விலங்கினைப் புனிதப்படுத்தியது தான். அதற்கான காரணம் ஆய்வுத் தேடுகையில், பறையர்களின் தொன்மக் கதைகளில் பறையர் அண்ணன் பார்ப்பனர் தம்பி அண்ணன் கோமாதாவின் ஒரு துண்டுக் கறியை தன் மனைவிக்குக் கொண்டு வந்ததால் பசு இறந்துவிட்டது. ஆகையால் இறந்த பசுவை அண்ணனாகிய பறையர் திங்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டதால் கீழ்நிலையாக்கம் பெற்றனர் என்ற தொன்மக் கதையே ஆதாரமாய் விளங்குகின்றது.
பசு எவ்வகையான அரசியலில் சிக்கி புனிதமானது என்ற வரலாற்று ஆய்வு மிகவும் முக்கியமாகும். ஏனெனில் மாட்டுக்கறி சாப்பிடுவதால் தீண்டதகாதவர் என்ற இழிவான ஒன்றை ஒரு சமூகம் காலங்காலமாகத் தன் மீது சுமந்து கொண்டே வருகின்றதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் உள்ள காலகட்டத்தில் சுவைக்காகவும், விருந்திற்காகவும் கொல்லப்பட்டதற்காக யாரையும் தீண்டத்தகாதவர்கள் என்ற எந்தவொரு சாட்சியும் இல்லை. மேலும் மநு என்ற மநுதர்மம் கூட பசுவைக் கொல்லுதல் தீண்டாமை என்பதனைப் பேசவில்லை என்று,
“அகிம்சையின் நற்பண்பை மநு (கி.பி.200-கி.பி.200) மேன்மைப்படுத்திப் பேசியிருந்த போதிலும். உண்ணத் தகுந்த விலங்குகளின் இறைச்சி குறித்த பட்டியலைத் தந்துள்ளார். உணவுக்காக ஒட்டகத்தைக் கொல்லக்கூடாது என்று விதிவிலக்கைத் தரும் இவர் அந்தச் சலுகைகளைப் பசுவுக்குத் தரவில்லை....மேலும் மதுபர்கம், சிரார்த்தம் ஆகிய சடங்குகளின் போது கால்நடைகள் கொல்லப்படுவதையும் மாட்டிறைச்சி உண்ணப்படுவதையும், மநு நியாயப்படுத்தினார் என்று யாராவது விளக்கம் அளித்தால் அது உண்மையாகவே இருக்கும்” (டி.என்.ஜா.2006.ப.94)
என்று மனித ஒழுக்கம் புகுத்திய மநுவே கூறியிருப்பதால் எவ்வாறு பசு மட்டும் புனிதமாக ஆக்கப்பட்டதென்பதை விரிவாக ஆய்வுக்கு எடுத்துச் செல்வதே சாலந் சிறந்ததாக இருக்கும்.
மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளதனை மிகவும் எளிய முறையில் மேற்சொன்ன ஆதாரங்கள் நமக்கு விளக்குகின்றன. வேட்டைச் சமூகச் சூழலில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டு வந்த ஆரியர்கள் கால்நடைகளை உணவாகக் கொண்டுள்ளனர் என்பதில் எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடியாத சூழலை நமக்கு வேதகால நூல்களும், புராணங்களும் தருகின்றன. ஆனால் எப்போது பசு என்ற சாதாரணமான கால்நடை விலங்கு புனிதப்படுத்தப்பட்டதென்று நோக்குகையில் நிலப்பிரபுத்துவக் காலகட்டம் தான் என்பதும் அதுவும் கி.பி. முதலாம் ஆயிரம் ஆண்டின் நடுப்பகுதியின் போது தர்ம சாஸ்திர நூலசிரியர் இதனை கண்டித்தனர் என்ற செய்தியும் நமக்குக் கிடைக்கின்ற போது அதற்கு முன்னால் பசுவின் இறைச்சி உணவின் முக்கிய அங்கமாக இருந்திருக்கின்றன என்பதனை நிரூபிக்கின்றதனையும் அறிய முடிகின்றது. பசு பொருளாதாரமாகவும் வேளாண்மைத் தொழிலுக்காவும் முக்கியத்துவம் என்பது உழைக்கின்ற விவசாயிகளுக்குத்தான் தெரியும் உழைப்பற்றவர்கள் பார்ப்பனர்கள் அவர்கள் மத்திய காலத்தில் இதற்கு மறுப்பும் கண்டிப்பும் என்பது நமது கல்விச் சூழலையும் சேர்த்து விளக்குவதாகவே இருக்கின்றது.
- இசக்கிராஜா