புதுக்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் உள்ள பல்லவன் குளக்கரையில், இக்குளத்தில் இஸ்லாமியர்களும், ஆதிதிராவிடர்களும் கால் நனைக்க கூடாது என்று செதுக்கி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை தான் பதவியேற்ற முதல் பணியாக அகற்றியவர் திவான் பகதூர் கலிபுல்லா என்ற முஸ்லிம் தலைவர் தான்.

cow 360அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார், பொதுக்குளங்களில் நாய், ஆடு, மாடுகள் கூட தண்ணீர் குடிக்கலாம். ஆனால் ஒரு தலித் தண்ணீர் குடிக்க கூடாது என்று சொல்லும் இந்தப் பார்ப்பனர்கள் வாழும் நாட்டில் நான் ஒரு மிருகமாகப் பிறந்திருக்க கூடாதா என புலம்பியுள்ளார்.

ஆடு, மாடு கால்நனைக்கலாம். ஆனால் தலித்தும் முஸ்லிம்களும் கால்நனைக்க இடமில்லை என்ற கோஷங்கள் மறைந்து தற்பொழுது மாட்டிறைச்சி அரசியல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் மாட்டிறைச்சி என்பது பொதுவான உணவு. எந்த நாட்டிலும் அது அருவருப்பான விடயமல்ல. நாய் இறைச்சி நேபாளத்தினருக்கு ருசியான உணவு. ரஷ்யாவிலோ குதிரைப்பாலும், கறியும் தான் பிரமாதமான உணவு வகை. காங்கோவில் யானையை உண்பது வழக்கம். அரபு நாடுகளில் ஒட்டகம் தசையும், பாலும் உண்பார்கள். மங்கோலிய இனத்தவரோ பாம்பையும், கரப்பான், தவளைகளையும் கூடவிட்டு வைப்பதில்லை.

மகாராஷ்டிராவில் பசுவதை தடுப்புச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கால்நடை வதை தடுப்புச்சட்டம் கிடையாது. கேராளவிலும் கிடையாது. மேற்குவங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் முறையான உரிமம் பெற்று இறைச்சிக்கான மாடுகளை வெட்டலாம். ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா பசுவதை தடுப்புச்சட்டம அமலில் உள்ளது. மற்ற கால்நடைகளை உரிமம் பெற்று வெட்டலாம். தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களில் 4 சதவீதமும், நகர்ப்புறங்களில் 5 சதவீதமும் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர். பஞ்சாப், இமாலயா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்பது கிடையாது என சர்வே குறிப்பிடுகிறது.

மகாராஷ்டிராவிலும், அதனையடுத்து ஹரியானாவிலும் பசுவதை தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசன 48வது பிரிவான அரசுக்கான கொள்கை வழிகாட்டுதல் பட்டியலில் பசுவதை தடை என்பதும் ஒன்று. பசுக்களும், விவசாயத்திற்கு பயன்படும் ஏனைய கால்நடைகளும் கொல்லப்படாமல் பாதுகாப்பதை அரசு உறுதிப்படுத்தவேண்டும் என மார்ச் 18ந்தேதி வெளியாகியுள்ள தினமணி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி மாநாட்டுக்கு முதல்நாள் பசுவதை தடுப்பு மாநாடு என நடத்துவார்கள். கம்யூனிஸ்ட் நாடான கியூபா பசுவதையை தடை செய்துள்ளது. இஸ்லாமிய நாடுகளில் பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. யூத மதத்திற்கு எதிரானது என்பதால் குதிரை மாமிசம் தடை செய்யபட்டுள்ளது. இந்திய நாட்டின் பண்பாட்டின்படி பசு என்பது கோமாதா பொங்கலை ஒட்டி மாட்டுப்பொங்கல் வைத்து பசுக்களை வழிபடுவது வழக்கம். வீடுகட்டி கிருஹபிரவேசத்தின்போது முதல் பிரவேசம் கன்றோடு உள்ள பசுவுக்குத்தான் என்பதை நாம் அறிவோம். மத்திய அரசு நாடு அளவிலான பசுவதை தடைச்சட்ட வரைவை தயாரிக்கும்படி சட்ட அமைச்சகம் பணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பசுவை முதலில் கொன்று யாகம் நடத்தியவர்கள் யார்? பசுவை யார் யார் எல்லாம் உணவாக உண்டார்கள் என்பதைப்பற்றி ஆராய்வோம்.

பசுவிற்கு பண்டைய காலத்தில் பல பெயர்கள் உள்ளது. பசு, எருமை இரண்டுக்கும் பொதுப்பெயர் மாடு என்பதாகும். காரான், வடவை, மயிடம், சயரிபம், கவரி, கார், மேதி, மூரி, காசா, எருமை ஆகியவை எருமையின் பெயராகும். தேனு, பெற்றம், கோ, ஆன், சுரபி என்பவை பசுவினைக்குறிக்கும் சொற்கள் ஆகும். கூவம் என்பதும் பசுவின் பெயர். இது தவிர குடம், கபலை, ஆ, பசு என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

பசுவை கொலை செய்யும் இடத்தின் பெயர் சமித்ரசாலா ஆகும். அங்கு பசுவை அழைத்துக்கொண்டு போய், வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும்படியாகச் செய்து சமிதா என்னும் பசுவைக் கொல்லும் புரோகிதர் முஷ்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வார். அதன்பின்; சுரா இடா, ஸ_னு, ஸ்வதீதி என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவின் பிணத்தைக் கிடத்தி தோல் உரித்துச் சதையை அரிந்தெடுத்து சிறிது நெருப்பிலிட்டு மீதியுள்ள மாமிசத்தை புரோகிதர்கள் அனைவரும் பங்கிட்டு எடுத்துக்கொள்வார்கள். ரிக் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், யஜூர் வேதம் என நான்கு வகைகளாக வேதங்களை பிரித்துள்ளனர். அவ்வேதத்தில் மாட்டிறைச்சி உணவிற்காகவும், யாகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரிக்வேதத்தில் மாட்டிறைச்சி

விவசாயம் தொடங்கப்படுவதற்கு முன்னாளிலிருந்து இறைச்சியை நெருப்பிலிட்டு சுட்டுத்தின்பது ரிக் வேதகால ஆரியர்களிடம் பழக்கத்தில் இருந்தது. ரிக் வேதகாலத்தில் சமைப்பதற்கு அண்டா பயன்படுத்தப்பட்டது என்பதால் வேகவைத்த மாமிசத்தையும் அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். மாமிசத்திலே மசாலாவை பயன்படுத்துவது மிகப் பிற்காலத்திலே ஆரம்பமாயிற்று. இவ்வாறு ரிக் வேதகால ஆரியர்கள் இறைச்சியை சாப்பிட்டார்கள் என்று விளக்கமாக தருகிறார்.

ஏ இந்திரனே விரைவாக நடப்பதிலும், தத்துவத்திலும் மற்றெல்லாவிற்கும் சுவாமியாயிருக்கிறாய். இந்த வர்த்தராவின் பேரில் தனது கடலை நடத்து கசாப்புக்காரன் பசுவை அறுப்பது போல் அவனைத் துண்டு துண்டாக்கு. ஏனெனில் மழை பெய்து பூமியில் தண்ணீர் சேரவேண்டும் (ரிக் வேதம் சங்குத்தா, சக்த் 4(61) 6 ந் 120 என்பதிலிருந்து பசு அறுக்கப்பட்ட செய்தி தெரிகிறது. ஆதாரம்:ராகுல சாங்கிருத்தியாயன், ரிக்வேத கால ஆரியர்கள், சென்னை.1991 பக்கம்.45,46)

மாமிச சூப்

ரிக் வேதகால ஆரியர்கள் மாமிச சூப்பை பனமாக பருகி வந்தனர். இந்தப் பாணம் இந்திய-ஐரோப்பிய ஆரியர்கள் ஓரிடத்தில் இருந்த போது அவர்களின் முக்கிய பானமாக விளங்கி வந்தது (ஆதாரம்: ராகுல சாங்கிருத்தியாயன், இந்து தத்துவஇயல், சென்னை,1985, பக்கம் 7)

யஜூர் வேதத்தில் கால்நடை

யஜூர் வேதத்தில் யாகங்கள் நடைபெற்றுள்ளதை காணலாம். அவை பின்வருமாறு

ஐந்த்ர பசு: இந்திரனுக்காக ஆட்டைக் கொல்லும் யாகம்

கோஸவம்: பசு மாடு, காளைமாடு, இவைகளைக் கொல்லும் யாகம்

வாயவீயஸ் வேதபசு: வாயு தேவதைக்காக வெள்ளைப் பசுவைக் கொல்வது

காம்யபசு: தனது எண்ணங்களை ஈடேற்றிக் கொள்வதற்குரிய பசு யாகம்

வத்ஸோபகரணம்: கன்றுக்குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்

புருஷயஜ்ஞ: மனிதனைக் கொன்று நடத்தும் யாகம்

வைஷ்ணவ பசு: விஷ்ணு தேவனுக்காக ஆட்டை கொன்று நடத்தும் யாகம்

ஸாவித்ரபசு: சூரிய தேவனுக்காக ஆட்டைக் கொல்லும் யாகம்

அஸ்வமேதம்: குதிரையைக் கொல்லும் யாகம்

அஷ்டதசபசுவிதானம்: பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்

ஏகாதசீனபசுவிதானம்: பதினொன்று பசுக்களைக் கொல்லும் யாகம்

க்ராமாரண்யபசுப்ரசம்ஸா: நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுக்களைக் கொன்று யாகம் செய்தல்

ஆதித்ய வேதாகபசு: சூரிய தேவதைக்கு பசு யாகம்

உபாரண மந்த்ரம்: யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்

(ஆதாரம்:எம்.கே.கேலுண்ணி நாயர் என்னும் சுவாமி சிவானந்த சரஸ்வதி, கோலொளம்பு அம்ஸம், பொன்னானி, மதவிசாரணை, பக்கம் 78,79,80)

சாம வேதம்

சாம வேதத்தில் இந்திரனுக்கும், மருத என்னும் தேவருக்குமாக பசு மாட்டைக் கொடுக்கவேண்டும். அன்றியும் மருத் தேவருக்கு கன்றுக்குட்டியையும் கொடுக்கவேண்டும். (22 14 11)

சோம பூஷா தேவதைகளின் பொருட்டு பசுவைக் கொல்லவேண்டும் (23 16 4)

அதர்வ வேதம்

பசுயாகம்

அக்கினி குண்டத்தின் வடக்கு மூலையில் பசுவை கொல்வதற்கு இடம் அமைக்கவேண்டும். அன்றியும் பசுவைக்குளிப்பாட்டி பலாச மரத்தின் பச்சை சுள்ளியைக் கொண்டு பசுவின் உடலைத் தொடவேண்டும். பின்னர் நீ தேவனுக்கு உணவாக ஆவாய் என்று பசுவிற்கு சொல்லவேண்டும்.

குறுவை நெல், வாற்கோதுவை இவைகளைப் போட்டு வைத்த நீரினால் பசு மீது தெளிக்கவேண்டும். புல் எரிந்து கொண்டு பசுவை வலம் வரவேண்டும். பசுவின் முன்னால் எரிகின்ற புல் கயிற்றைப் பிடித்துக் கொல்லவேண்டும். பசுவைக் கொலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். வபா என்னும் கொழுப்பிற்குரிய மந்திரத்தை சொல்லவேண்டும். பசுவைக் கொன்று அதன் நாபியினின்றும் வபா என்னும் கொழுப்பை அறுத்தெடுக்கவேண்டும்.

யாகத்தில் கொல்லப்பட்ட பசுவை பங்கிடும் போது நாக்கு ப்ரஸ்தோதாவிற்கும், பருந்தின் வடிவத்தை யுடைய மார்பு உத்காதாவிற்கும், கழுத்தும், முதுகிலிருக்கிற கொண்டையும் ப்ரதியர்த்தாவிற்கும், வலது தொடை ஹோதாவிற்கும், இடது தொடை ப்ரம்மாவிற்கும், வலது தொடையின் அடிப்பாகம் மைத்திரா வருணணுக்கும் இடதுபாகம் ப்ராம்மணாச் சம்ஸிக்கும் வலது விலாப்புறம் வலது தோளும் அத்வாயுவிற்கும், இடது விலாப்புறம் உபகாதாக்களுக்கும், இடது தோள் ப்ரதிப்ரஸ்தாதாவிற்கும், வலது கை நேஷ்டாவிற்கும், இடது கை போதாவிற்கும் பிரித்துக்கொள்வார்கள்.

கோ பலி

பீப் இன் ஆன்சின்ட் இந்தியா என்ற நூல் கி.பி.1881 ல் நியூமேன் கம்பெனியாரால் பிரசுரம் செய்யப்ட்டது. இந்த நூலின் முதல் பாகத்தில் 6வது பீப் இன் ஆன்சியன்ட் இந்தியா என்ற கட்டுரை இடம் பெற்றது. அதில் கூறியுள்ள விடயங்கள் பின்வருமாறு

நான் எழுதப்போகும் விஷயம் என் நாட்டாருக்கு மிகவும் பிரமிப்பையுண்டாக்கி வருமெனினும் அதுதான் பூர்விக ஒருவாறு உணர்த்தும். அதுதான் பூர்விக நிலையை ஒருவாறு உணர்த்தும். ஆதலால் திருப்திகரிக்கப்படமென்று நம்புகிறேன்.

இமய மலையைக் கடந்து இத்தேசத்தினுட் புகுந்த ஆரியர்களின் சுபாவம், ஜீவனம், அடக்கம், ஒழுக்கம் எவ்வகைப்பட்டதென்பதை அறிய அவர்களின் ஆடு, மாடு பட்சி முதலிய மாமிச ஆகாரமே வழிபாட்டியாயிருந்திருக்கிறது.

இம்மாமிசங்களில் தற்பொது இந்துக்கள் பகவதி தேவியின் அம்சமாயும், தம் ஆவி பொருள் இரண்டிற்கு மேலாயும் கருதப்படும் பசுவின் இறைச்சியே முதன்மையாயிருந்தது. இறந்தவர்களுடன் பசுவின் மாமிசத்தையும் பிணத்துடன் ஒரு பசுவையும் விறகு சேர்த்து எரிப்பது புண்ணியமெனக் கருதுவார்கள். இத்தேசத்தில் பல தேசத்தவர்கள் யாத்திரிகர்களாய் வந்து அவ்வப்போதுள்ள அதிசயங்களை தங்கள் சரித்திரங்களில் எழுதியிருப்பதையும் நம்முடைய பூர்விக சாஸ்திர நூல்களையும் ஒப்பிட்டு பார்க்கின் இந்துக்களுக்கு கோபத்தணலுக்கு காரணமாக கோபலியே(பசு கொல்லப்படுதலையே) ஸ்திரப்படுத்துகிறது.

மேலும் இந்தியாவில் பசுவின் மாமிசமென்றால் பெரும்பாலான இந்துக்களுக்கு மிக மனவருத்தமுண்டாகும். ஆயினும் வேத ஆரம்பத்தில் பசுவின் மாமிசத்தை சர்வ சாதாரணமாகப் ஜனங்கள் புசித்துக் கொண்டு வந்ததுமின்றி, தாங்கள் மரணமாகும்போது ஒரு பசுவை அறுத்து அதன் மாமிசத்தையும் பிணத்தோடு கூட வைத்து எரிப்பார்கள். ஏனெனில் மறுமையில் மாமிசம் குறைந்து விடக்கூடாது என்பதால்

இவ்வாறு தெள்ளத்தெளிவாக பார்ப்பனர்கள் பசு மாமிசத்தை உபயோகித்ததைக் கூறியுள்ளார். (ஆதாரம்: 1.இ.முகமது அப்துல் காதிர் சாஹிபு, முஸல்மான், 1928 ஏப்ரல், தொகுதி 5, பகுதி 10 இந்து மதத்தில் பசு பலி, பக்கம் 242,243

2.Raja Rajendra Midra, Beef in Ancient india, indo-Aryan,W.Newmar,1881,pp 354-358)

புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டில் காளைகள்

புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் ஊர்ச் சண்டைகளில் மாடுகள் அழிக்கப்பட்டதைக் காணலாம். கீழைக்குறிச்சி ஊரவற்குப் படை ஒடுக்கம் சிந்து கல்வெட்டிக் குடுத்தபடி மன்பே எங்கள் போளுர் நரசிங்கத்தேவர் நாள் முதல் அடைக்கலம் காத்தார் நரசிங்கத்தேவர் நாள் அளவாக உற்றுநிலை அற்ற வினோதப் பகையாள் அங்கும் இங்கும் நால்பது நூறு மனித்தரும் பட்டு சிறைபடும் சிறைமாடும் பிடித்து ஆறாப் பகையாய் ..........என்று தொடர்கிறது (புதுக்கோட்டை 688,691)

முன்னாளிலே செய்யான் மாவலி வாளுதராயன் பள்ளர் பசகள் ஓடிப்போய் நெருஞ்சிச்...குடியிலே இருக்கiயில் இவர்களுள் மாடும் அளித்து இந்தப் பள்ளரையும் பிடித்துக் கொண்டு வருகச்சிதே தொடக்கத்தில் மாடுபிடி சண்டையாக இருந்த பிற்காலத்தில் வெட்சித்திணை என்ற இலக்கிய மரபாயிற்று.

நிரைமீட்க வருகின்ற வீரத்தலைவனுக்குத் கறிசோறும் கள்ளும் தரப்பட்டதை மதுரைப் பேராலவாயர் (புறம் 262) சுட்டுகிறார். நிரைகவர்ந்தார் செய்யும் வெற்றிவிழாவில் கவர்ந்து வந்த பசுக்களில் கொழுத்த பசுவினைக் கொன்று உண்டு மகிழ்ந்தனர். நடுகல் வீரர்களுக்கு அங்கேயே சமைத்து மாமிச உணவை அதாவது கறிச்சோற்றைப் படைத்துள்ளனர் (புறம் 329)

பசுவதை தடுப்புச்சட்டம் 48 வது பிரிவு கூறுவது என்ன

இந்திய அரசின் கொள்கை சார்ந்த வழிகாட்டு நெறிகளின் ஓர் அங்கமாக 48 பிரிவு உள்ளது. பசுக்களையும், கன்றுகளையும் வதை செய்யக்கூடாது என்பதைத்தான் இந்த 48 வது பிரிவு கூறுகிறது.

பல மாநிலங்களில் பசுவதை தடுப்புச்சட்டத்திற்கு எதிராக வழக்குகள் நடைபெறுகிறது.

1961 ஆம் ஆண்டு பீகார் அரசுக்கும் ஹக்கிம் குரேசி என்வருக்கும் இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றம் பசுவதை தடைச்சட்டம் செல்லும் என்று கூறியுள்ளது. இதே போல் 2005ல் குஜராத் அரசுக்கும் மிர்ஜாபூர் மோதிகுரேசி கசாப்புக்கடைக்கும் இடையிலான வழக்கிலும் பசுவதை தடை சட்டம் செல்லும். பசுவதை தடை தனி நபரின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்பதை ஏற்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.

கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களை மருத்துவ வல்லுனர்களின் துணை கொண்டு தடுக்கவேண்டும். கால்நடைகளை நன்கு பாதுகாக்கவேண்டும். அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவனை சார்ந்த மாநில பட்டியலில் உள்ள 15 வது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 24 மாநிலங்கள் பசுவதை கட்டுப்பாடு தொடர்பாக ஏதேனும் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளன.

தமிழகத்தில் 1958 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் கசாப்புக்கு கால்நடைகளை வெட்ட வேண்டும் என்பது இந்த சட்டத்தின் சாராம்சம். 10 ஆண்டுகளைக்கடந்த விலங்குகளைத்தான் வெட்டவேண்டும். இதே போல உழைப்புக்கு தகுதியற்ற கால்நடைகளையும், இனப்பெருக்கத்திற்கும் தகுதியற்ற கால்நடைகளையும், படுகாயமடைந்து ஊனமுற்ற கால்நடைகளையும் வெட்ட தடையில்லை என்பது நிபந்தனையாகும். எனினும் தமிழக அரசு 1715 அரசாணையை 30.8.1976 ஆம் ஆண்டு வெளியிட்டது. இது வேளாண்மைத்துறை சார்ந்ததாகும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

பசுவின் மேல் உள்ள கரிசனமும் எறும்பின்பால் கொண்ட பாசமும் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜனங்களின் மேல் இருப்பதில்லை.

இவர்கள் கூட்டிய பசுப்பாதுகாப்பு மாநாட்டிற்கு பின்னே இந்து மதவெறியும், மனு சாஸ்திரக் கோட்பாடும், இந்து நாடு என்ற லட்சியமும் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடங்குவதற்கான தத்துவார்த்தமும் உண்டு. இதனை முறியடிக்கப் புறப்படுவோம்.

- வைகை அனிஷ்

Pin It