பெருந்துறை கோக கோலா ஆலை தொடர்பாக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க்கத் தலைவர் தோழர். கே.பாலகிருஷ்ணன் 30-3-2015 அன்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுச் சூழல் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் அவர்கள் அதிர்ச்சி தரும் பதிலளித்துள்ளார். பெருந்துறையில் கோகோலா ஆலைக்கு நிலத்தையும் தண்ணீரையும் வழங்க தமிழக அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மூடி மறைத்து, உரிமம் கேட்டு விண்ணப்பம் வரவில்லை என்று சட்டமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார்.

coke document 600

2014 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பெருந்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் சிப்காட் நிறுவனம் கோக கோலா நிறுவனத்திற்கு 71.30 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படை செய்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ஓர் ஆண்டுக்கு குத்தகை ரூபாய் ஒன்று என்றும் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கோக கோலா நிறுவனத்திற்கு கச்சா பொருளாக இருக்கிற தண்ணீரை நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டரை, லிட்டர் ஒன்று நான்கு பைசா விலையில் கொடுப்பதென்றும் ஒப்பந்தம் கூறுகிறது. இவ்வாறு நிலம் ஒப்படை செய்யப்பட்ட பின் கோக கோலா நிறுவனம் ஆலை கட்டுவதற்கான அடிப்படை வேலைகளை பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தொடங்கி பொதுமக்களால் வேலை தடுத்து நிறுத்தப்பட்டது. இது குறித்து தமிழக முதல்வருக்கு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

erode collector document

கடந்த மூன்று மாதங்களாக ஈரோடு மாவட்டத்தில் கோக கோலா ஆலைப் பிரச்சனை மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உண்மையில் ஆலை நிறுவப்படாது எனில் பெருந்துறையில் இருக்கும் அமைச்சர் பெருந்துறையிலேயே உள்ள போராட்டக் குழுவினரை அழைத்து முறையாக பேச்சுவார்த்தை நடத்தி இப்பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை ஒழுங்கு செய்யாதது ஏன்?

ஆலை கட்டுவதற்கும், தண்ணீர் வழங்குவதற்கும் ஒப்பந்தம் செய்து விட்டு ஆலைக்கு இன்னும் உரிமம் கேட்டு விண்ணப்பம் வரவில்லை என அமைச்சர் சட்டமன்றத்தில் கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். தொகுதி மக்களுக்கு பொறுப்பாக இருக்க வேண்டிய அமைச்சர் கோகோ கோலா கம்பனிக்கு முகவர் போல செயல்படுவது ஏன் என்று தெரியவில்லை.

அமைச்சரின் சட்டசபை பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. உண்மையை எக்காரணம் கொண்டும் மூடி மறைக்க முடியாது. கோகோ கோலா ஆலையுடன் சிப்காட் நிறுவனம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்வது ஒன்று தான், ஆலை பெருந்துறையில் அமைக்கப்படாது என்பதற்கான உத்திரவாதமாகும். ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் வரை கோககோலா எதிர்ப்பு போராட்டக் குழு மக்களை திரட்டி போராடிக் கொண்டிருக்கும் என்பதை சுற்றுச்சூழல் அமைச்சருக்கு இந்த அறிக்கையின் மூலம் தெரிவிக்கின்றோம்.

இப்படிக்கு,
கி.வே.பொன்னையன், அலைபேசி எண்: +919788648605
வே.மா. கந்தசாமி, அலைபேசி எண்: +919842722266
பொறுப்பாளர்கள்,
பெருந்துறை கோகோ கோலா ஆலை எதிர்ப்பு போராட்டக் குழு

Pin It