"தேசிய இனப்பிரச்சினையில் எங்களைவிட யாரும் சனநாயகவாதிகளாக இருக்க முடியாது........."

விவாதத்தின்போது தோழரின் வார்த்தைகள் என்னை சீண்டிப் பார்த்தது.

"நாங்கள் என்று உங்கள் கட்சியையா கூறுகிறீர்கள்?"

"கம்யூனிஸ்டுகளை குறிப்பிடுகிறேன்"

தேசியப் பிரச்சினைகளை விவாதிப்பதால் அவர் என்னை கம்யூனிஸ்டாக அங்கீகரிக்க முடியாதென்கிறார். சான்றளிக்கும் உரிமை அவரிடம்தான் இருக்கிறது போலும். நான் என்ன செய்ய முடியும்?

"சரி தோழர். தேசிய இனப்பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?"

"சுயநிர்ணய உரிமை மட்டும்தான் தீர்வு!"

"சுயநிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனத்திற்கு தன்னுடைய அரசியல் - பொருளாதார - பண்பாட்டு வாழ்வைத் தானே தீர்மானித்துக்கொள்ள உரிமை அளிக்கிறது இல்லையா?"

"ஆமாம்"

"அது அத்தேசிய இனத்திற்கு சொந்த வாழ்வை தீர்மானிக்கவும், பாதுகாக்கவுமான அரசை உத்திரவாதப்படுத்துகிறது இல்லையா?"

"ஆமாம்"

"ஆக சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனிதனியான சொந்த அரசு உண்டு என்பதை உத்தரவாதப்படுத்துகிற கோட்பாடாகும்."

தோழர் என்னவோ சொல்ல முயற்சிக்கிறார்.

"சொல்லுங்க தோழர்"

"இல்ல நீங்களே தொடர்ந்து சொல்லுங்க"

"தனக்கான அரசியல் - பொருளாதார - பண்பாட்டு வாழ்வைத் தானே தீர்மானிக்கிற; அதற்கான அரசை அமைத்துக்கொள்கிற தேசிய இனம் அதற்கானத் திட்டத்தை தான்தானே முன்வைக்கும்?"

".........................."

"அப்படியானால் இந்தியாவிலிருக்கிற ஒவ்வொரு தேசிய இனங்களும், பழங்குடியினங்களும் தங்களுக்கான சொந்த திட்டங்களை கொண்டிருக்க வேண்டுமல்லவா?"

"........................"

"ஒரே திட்டம், ஒரே கட்சி என்பது எப்படியிருக்க முடியும் தோழர்?"

இங்கிருக்கிற அமைப்புகளிடமும், பக்கத்து தேசிய இனப் பிரதிநிதிகளிடமும் என்னுடைய விவாதம் இதற்குமேல் நகரவில்லை. நீங்களாவது நகர்த்துங்களேன்!

Pin It