இந்தியாவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய கலைகள் 845 ஆகும். தமிழகத்தில் மட்டும் 215 கலைகள்; மிஞ்சி இருப்பது 20 மட்டுமே. காரணம் இவைகளை ஓரம்கட்டத் துடிக்கும் மேல்சாதி மனப்பான்மையே. கழிவில் இருந்து கலை கொண்டு வந்தவர்கள் தலித்துக்கள் மட்டுமே. இறந்துபோன மாட்டின் தோலில் இசையை உருவாக்கியவர்கள் இவர்களே.

இவ்வுலகில் தோன்றிய நாளிலிருந்து இயற்கையும் இயற்கை தோன்றிய நாளில் இசையும் தோன்றியதாக கருதப்படுகின்றது. இசை எனில் ஏற்றுக்கொள்ளுதல் அல்லது ஒப்புக்கொள்ளுதல் என்பன பொருளாகும். இசையை ஏற்காதோர் எவருமில்லை. இசைக்கு மயங்காதோர் எவருமில்லை. மனிதன் நாவசைக்கும் முன் முதன் முதலில் இசைத்து பேசிய மொழி இசை என்பது மொழியியல் ஆய்வாளர் யெஸ்பர்சனின் ஆய்வுக்கருத்து. ஆதி கால மனிதர்கள் குரலரைத்தே பேசவும், பாடவும் செய்தனர். செவிக்கின்பம் நல்கும் இனிய ஓசைகள் இசையாகக் கருதப்பட்டன. மரம், செடி, கொடிகள் காற்றில் அசையும் போது மரங்கள் உரசும்போதும் ஆறுகள், அருவிகள் சலசலக்கும் நீரோடைகள் என அனைத்திலும் இசை எழுந்தது. குயில் கூவுவதிலும், வண்டின் ரீங்காரத்தில் இசையை கேட்கிறோம். காட்டு மூங்கிலின் வண்டு துளையிடக் காற்று அதன் உட்புகுந்து இசையைத் தோற்றுவிக்கின்றது.

ஆதியில் ஆண்டவன் இசையுடன் இசைந்த
ஆகுகக் கட்டளை ஒலியில் ஆனவை
அருவி கடல் ஆறு மழைத் தாவரங்கள்
இறையாற்றலில் இயற்கையாய் எழுந்த
காற்று ஊடுருவிச் செல்ல இவையெல்லாம்
சுவாசித்து முதன் முதலாகச் சிலிர்த்தன
அலை தூறல் அதிர்வு அசைவுகள்
ஆதி இசையின் ஒலி மூதாதைகள்
(திருவேந்தன்)

இக்கவிதை இசையின் மூலத்தை தோன்றிய வரலாற்றை விளக்குகிறது என்பதைக் காணலாம். நாளடைவில் நரம்பு, தாளம், துளை, வாத்திக்கருவிகள் எழுந்து இசையின் வளத்தினை பெருகச் செய்தன. இன்று அனைத்து துறைகளிலும் இசையின் ஆதிக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையாகாது. வானொலி, தொலைக்காட்சி, கைப்பேசி, திரைப்படம், குறும்படம், பத்திரிக்கை துறை என இசை ஆதிக்கம் செலுத்துவது இன்றும் காணலாம்.

paraiமுகமது நபி அவர்கள் வாழ்ந்தபோது, ஜாகிலியா காலகட்டத்தில் இசையின் தாக்கம் அதிகம் இருந்தது. அவர்களுடைய காலத்தில் திருமணம், திருவிழாக்களில் மது அருந்திவிட்டு கூத்தாடுவது அதிகமாக இருந்துள்ளது. இதனைக் கண்ட முகமது நபி இசையை தடை செய்தார்.

முஸ்லிம் தமிழ் இலக்கியபரப்பு பிற சமய இலக்கியங்களை அளவிலும், அழகிலும், ஆழத்திலும் மிஞ்சி அமைந்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது. அந்நிய ஆதிக்க சக்திகளால் வெறுப்புணர்வுடன் அழிந்தவை போக தற்கால முஸ்லிம்களின் பொறுப்பின்மையால் இசை ஒழிந்தது. இதுவரையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வடிவங்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட இசை வடிவங்கள் தமிழ் இலக்கியங்களாகும். இவை மாலை, குறம், கும்மி, ஏசல், சங்கீதம், பதம், கீர்த்தனை, சிந்து, மஞ்சரி ஆகிய பெயர்களில் அறியப்படுகின்றன. வழிநடை சிந்துகள் எனும் இசைத்தமிழ் வடிவங்கள் முஸ்லிம்களின் கல்லறைகளில் அதாவது தர்கா வழிப்பயணங்களின்போது பாடுவதற்கேற்ற வகையில் இயற்றப் பெற்றதாகும். திருமணத்தின்போது இஸ்லாமிய பெண்கள் குழுமியிருந்து பாடுகின்ற ஒப்பனைப்பாட்டும், கோல் களியும், கைகோட்டிக் களியும் இன்றும் கூட அரபு நாடுகளில் நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. திருவிழா, திருமணம், தர்கா ஆண்டுவிழா, நிகழ்ச்சிகளில் தப்ஸ், தாயிரா, கொட்டி ஆடிப்பாடுவதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.

ஆப்பிரிக்க கலைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க மண்டேலாவும், மார்டின் லூதர் கிங்கும் கொடுத்த குரல் விலை மதிக்க முடியாதது. மண்டேலா பேசும் முன்பு கருப்பினக் கலைஞர்களின் ஆட்டம் அவரின் பேச்சுக்கு உரமிடும். லூதர்கிங் திருச்சபை நிகழ்வுகளில் கலைகளை முன்மொழிந்து சிலையிடுவார். இவர்களின் ஆணித்தரமான அறிவுணர்வு ஆப்பிரிக்க கலைகளை உச்சத்தில் வைத்திருந்தது.

சங்கீத சபா, ஞானசபா, அகாடமி என்று கர்நாடக சங்கீத சங்கங்கள் சவ்வாதும் பன்னீரும் கலந்து கட்டி அடிக்கின்றன. அடவு கட்டிய நமது உடம்பு கரகம், ஒயில், பறை, சாட்டை, மயில், மாடு, சிலா, பெரியகம்பு, சதிர், சிலம்பு, சிங்காரம், கணியன் என்று கலை சமைக்கிறது.

தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளில் முதன்மையானது பறை இசைக்கருவி. எல்லா இசைக்கருவிகளுக்கும் முதல் கருவி இதுவே தான். தபேலா, முரசு போன்ற கருவிகளுக்கு எல்லாம் முன்னோடி இதுதான். மகிழ்ச்சிக்கான கருவியாக இருந்த பறை காலப்போக்கில் இறப்பில் வாசிக்கப்படும் இசையாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. பறை என்ற சொல்லுக்கு பேசுதல் என்று பொருள். சங்க இலக்கிய நூல்களில் பறை பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளது. குரவைப்பறை, சாப்பாறை, குறும்பறை, உவகைப்பறை, தமுக்கு, முரசம் என அந்தக்காலத்தில் 60க்கும் மேற்பட்ட பறை வகைகள் இருந்தன. ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு சிறப்பு பறை இருந்தது.

இது தோலினால் செய்யப்பட்ட கருவியாகும். எருமை மாட்டுத்தோலில் பறை செய்யப்படுகிறது. ஆனால் உயிருடன் இருக்கும் மாட்டை இதற்காக கொல்ல மாட்டார்கள். இறந்த எருமை மாட்டின் தோலை எடுத்து, சுத்தம் செய்து ஊறவைப்பார்கள். பிறகு புளியங்கொட்டைகளை அரைத்து பசையாக தயாரிப்பார்கள்.

வேப்ப மரத்தின் அடிப்பகுதியை எடுத்து வட்ட வடிவமான பறைக்கட்டையை உருவாக்குவார்கள். இந்தக் கட்டையில் தோலை இழுத்துக்கட்டி பசையால் இணைப்பார்கள். இரண்டு நாட்கள் காய வைப்பார்கள்.

பறையை அடிக்கும் குச்சிகளுக்கு அடிக்குச்சி, சிண்டுக்குச்சி, என்று பெயர். வேம்பு, கொய்யா, பூவரசு போன்ற மரத்தில் இந்தக் குச்சிகளைத் தயாரிப்பார்கள். கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு கோயில் திருவிழாக்களில் பறை இசைப்பது, பறையாட்டம் ஆகியவை முக்கிய நிகழ்வாக உள்ளன.

இவ்வளவு பெருமை வாய்ந்த பறை இசை தற்பொழுது இறப்பு வீட்டில் மட்டுமே இசைக்கக்கூடிய இசையாக கொண்டுவரப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் விழாக்களில் இவ்வாறான கலைகளுக்கு முக்கியத்துவம் தருவது ஆறுதலான விடயமே. மேலும் தலித்களுக்குரிய இசையாகவே இதனை ஆதிக்க சக்திகள் கொண்டு வந்துவிட்டனர். இந்த வளர்கலைகள் உரம் பெறவேண்டும் எனில் பள்ளிகளில் ;பாடமாக்கவும், கோவில் கருவறைக்குள் கருவியாகவும், கொள்கை பேசும் இடங்களில் கோசமாகவும், குடும்பம் கூட்டுக்குள் குயிலாகவும், கொட்டும் மழையில் குடையாகவும், அடிக்கும் வெயிலில் நிழலாகவும். உன்னதப் படைப்பாளிகளை, அடவு தெரிந்தோரை, ஆட்டம் நிறைந்தோரை, ஒடுக்கப்பட்டோரின் கலைகளை மீட்டுருவாக்கம் செய்யவும் கலை அணி ஒன்று கருத்தாய் இயங்கவேண்டும். அதற்கான முயற்சியில் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். இல்லையெனில் அழிந்துபோன கலைகளில் இக்கலையும் இணைத்துக்கொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- வைகை அனிஷ்

Pin It