ஒரு காலத்தில் இந்தியக் கிராமம் குடியமர்ந்த சமூகத்தினரையும் சிதறுண்ட சமூகத்தினரையும் கொண்டதாக இருந்தது; அவர்களில் ஒரு சமூகத்தினர் கிராமதிற்குள்ளேயும் இன்னொரு சமூகத்தினர் கிராமத்திற்கு வெளியேயும் தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும் அவர்களிடையே சமூகஉறவுகள் வளர்வதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. இதையெல்லாம் இதுவரை நாம் நடத்தியுள்ள ஆய்வுகளும் விவாதங்களும் காட்டுகின்றன. ஆனால் பசு புனிதமான பிராணியாக்கப்பட்டு, மாட்டிறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட பிறகு சமுதாயம் இரண்டாகப் பிளவுபட்டது. குடியமர்ந்த சமூகத்தினர் தீண்டத்தக்க சமூகத்தினராகவும், சிதறுண்ட மக்கள் தீண்டப்படாத சமூகத்தினராகவும் ஆனார்கள். சிதறுண்ட மக்கள் தீண்டப்படாதவர்களாக எப்போதுமுதல் கருதப்பட்டனர்? இதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய கடைசிக் கேள்வியாகும். தீண்டாமை தோன்றிய காலத்தை துல்லியமாக நிர்ணயிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. தீண்டாமை என்பது சமூக மனோபாவத்தின் ஓர் அம்சமாகும். அது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரிடம் காட்டும் ஒரு வகையான சமூக அருவருப்பு. சமூக மனோபாவத்தின் இயல்பான விளைவான தீண்டாமை ஒரு குறிப்பிட்ட உருவத்தையும் வடிவத்தையும் எய்துவதற்கு சில காலம் பிடித்திருக்க வேண்டும். அநேகமாக ஆரம்பத்தில் ஒரு மனிதனது உள்ளங்கை அளவு மேகமாக உருவாகி வளர்ந்து பெருகி இறுதியில் இன்று பிரம்மாண்டமான வடிவத்தை எய்தியுள்ள ஒரு நிகழ்வுப்போக்குத் தொடங்கிய காலத்தைத் துல்லியமாக அறுதியிட்டு உறுதியாகக் கூறுவது எவராலும் இயலாது. தீண்டாமைக்கான விதை எப்போது விதைக்கப்பட்டிருக்கும்? இது சம்பந்தமாக ஒரு துல்லியமான காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமில்லை என்றாலும் ஏறத்தாழ சரியாக இருக்கக்கூடிய ஒரு காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமா?
சரி நுட்பமான காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமல்ல. எனினும் தோராயமான காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமே. இதற்கு முதலாவதாக செய்ய வேண்டியது தீண்டாமை நடைமுறையில் இல்லாத அதிகபட்ச காலவரம்பை நிர்ணயிப்பதும், அதேபோன்று அது நடைமுறைக்கு வந்த குறைந்தபட்ச காலவரம்பை நிர்ணயிப்பதும் அவசியம்.
அதிகபட்சக் காலவரம்பை நிர்ணயிக்கும் பிரச்சினையைப் பொறுத்தவரையில், நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் அந்த்யஜாக்கள் என அழைக்கப்படுவோர் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் என்பதாகும். ஆனால் அவர்கள் தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை என்பது மட்டுமின்றி, தூய்மையற்றவர்களாகவும் கூட பாவிக்கப்படவில்லை. இந்த முடிவுக்கு ஆதரவாக கானேயின் நூலிலிருந்து பின்கண்ட பகுதியை மேற்கோள் காட்டுவது உசிதமாக இருக்கும். கானே கூறுகிறார்: (தர்ம சாஸ்திரம் தொகுதி II பாகம் I பக்கம் 165)
“ஸ்மிருதிகளில் அந்த்யஜாக்கள் எனப் பேசப்படும் பலசாதிகளின் பெயர்கள் ஆரம்பகால வேத நூல்களில் காணப்படுகின்றன. ரிக்வேதத்தில் (VIII 8.38) சார்மன்னாக்களும் (தோல் பதனிடுபவர்கள்), வாஜ்நேய சூத்திரத்தில் சண்டாளர்களும் பவுல்காசர்களும், ரிக் வேதத்தில் வேபர்கள் அல்லது வப்தாக்களும் (நாவிதர்கள்) வாஜ்நேய சூத்திரத்தில் விடாலகரர்கள் அல்லது பிடாலகரர்களும் (ஸ்மிருதிகளில் கூறப்பட்டிருக்கும் புரூடர்களைப் போன்றவர்கள்), அதே வாஜ்நேய சூத்திரத்தில் ஸ்மிருதிகளின் இரசகர்களை ஒத்த தய்களும் (சலவைத் தொழில் செய்யும் பெண்கள்) குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இவர்கள் எல்லோரும் தனிச் சாதியினராகக் கூறப்பட்டிருந்த போதிலும் தீண்டப்படாதவர்கள் அல்ல.”
இவ்வாறு, வேத காலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. தர்மசூத்திரங்கள் காலத்தைப் பொறுத்தவரையில் தூய்மையின்மை இருந்து வந்ததைக் காண்கிறோமே தவிர தீண்டாமை இருந்து வந்ததை நாம் காணவில்லை.
மனு காலத்தில் தீண்டாமை இருந்து வந்ததா? இந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதிலளிப்பது சாத்தியமல்ல. நான்கு வருணங்கள் மட்டுமே இருக்கின்றன, ஐந்தாவது வருணம் என்று எதுவும் இல்லை என்று அவர் சுலோகத்தில் (மனு X. 4) கூறுகிறார். இது புதிரான சுலோகமாகக் காணப்படுகிறது. அதன் பொருளைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. மனு தமது தர்ம சாஸ்திரத்தை எழுதிவந்த காலத்தில் எழுந்த ஒரு சர்ச்சைக்கு முடிவுகட்ட அவர் மேற்கொண்ட முயற்சியை இந்த சுலோகம் காட்டுவதாக தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கும் சதுர்வருண அமைப்புக்கும் இடையேயான சம்பந்தாசம்பந்தம் பற்றிய சர்ச்சையே இது என்பது தெள்ளத்தெளிவு. இந்த சர்ச்சைக்கு மையமான விஷயமும் முக்கியமானது என்பது கண்கூடு. சுருக்கமாகக் கூறினால், இந்த வகுப்பை சதுர்வருண அமைப்புக்கு உட்பட்டதாகக் கருதவேண்டுமா அல்லது ஆதி நான்கு வருணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஓர் ஐந்தாவது வருணமாக இதைக் கருதவேண்டுமா என்பதே இந்தச் சர்ச்சைக்குரிய விஷயம். இவையாவும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் புரியாத விஷயம் மனு எந்த வகுப்பை இங்கு குறிப்பிடுகிறார் என்பதுதான். சர்ச்சைக்குள்ளான இந்த வகுப்பை அவர் திட்டவட்டமான முறையில் இனம் காட்டாததுதான் இதற்குக் காரணம்.
மனுவின் முடிவு தெளிவில்லாமல் இருப்பதும் இந்த சுலோகம் புதிராக இருப்பதற்கு மற்றொரு காரணமாகும். ஐந்தாவது வருணம் இல்லை என்பது மனுவின் முடிவு. பொதுவான முன்மொழிதல் என்றமுறையில் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய அர்த்தத்தை அது கொண்டிருக்கிறது. ஆனால் எந்த வகுப்பின் அந்தஸ்து சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறதோ அந்த வகுப்பு விஷயத்தில் இந்த முடிவை ஸ்தூலமான முறையில் பிரயோகித்துப் பார்க்கும்போது அது என்ன பொருளைக் குறிக்கிறது? இதற்கு இரண்டு விதமாகப் பொருள்கொள்ளமுடியும். சதுர்வருண அமைப்பின்படி ஐந்தாவது வருணத்துக்கு இடமில்லையாதலால், சம்பந்தப்பட்ட வகுப்பை அங்கீகரிக்கப்பட்ட நான்கு வருணங்களில் ஒன்றைச் சேர்ந்ததாகக் கருதவேண்டும் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். ஆனால் அதேசமயம், ஆதி வருண அமைப்பில் ஐந்தாவது வருணத்துக்கு இடமில்லையாதலால், சம்பந்தப்பட்ட வகுப்பு வருண அமைப்புக்கு அறவே வெளியே உள்ளதாகக் கருதவேண்டும் என்றும் இதற்கு அர்த்தம் செய்யலாம்.
மனுவின் இந்த சுலோகம் தீண்டப்படாதவர்களையே குறிக்கிறது என்றும், இவர்களது அந்தஸ்துதான் சர்ச்சைக்குரியதாக இருந்தது என்றும், இதுவே மனுவின் முடிவு சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் வைதீக இந்துக்கள் காலம் காலமாகவே இதற்கு வியாக்கியானம் செய்து வந்துள்ளனர். இந்த விளக்கமே இந்துக்களை சவர்ணர்கள் (சதுர்வருண அமைப்புக்குள் இருப்பவர்கள்) என்றும், அவர்ணர்கள் (சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள்) என்றும் பிரிப்பதற்கு வழிவகுத்தது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்தக் கண்ணோட்டம் சரிதானா? மனுவின் இந்த வாசகம் யாரைக் குறிப்பிடுகிறது? தீண்டப்படாதவர்களை அது குறிக்கிறதா? இந்தப் பிரச்சினைக்குறித்த விவாதம் பரிசீலனையிலுள்ள பிரச்சினைக்கு சம்பந்தப்படாதது, அதற்கு அப்பாற்பட்டது என்று தோன்றலாம். ஆனால் இது சரியல்ல. ஏனென்றால் இந்த வாசகம் தீண்டப்படாதவர்களைத்தான் குறிக்கிறது என்றால் மனு காலத்தில் தீண்டாமை இருந்து வந்ததை அது உறுதிப்படுத்துகிறது – இந்த முடிவு பரிசீலனையிலுள்ள பிரச்சினையின் மையத்தையே தொடுகிறது. எனவே, இந்த விஷயத்தை ஆழ்ந்து ஆராய்ந்து அதற்கு ஒரு தீர்ப்பு காணுவது அவசியமாகிறது.
மேலே கூறிய வியாக்கியானம் தவறு என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. மனுவின் வாசகம் எவ்வகையிலும் தீண்டப்படாதவர்களைக் குறிக்கவில்லை என்று உறுதியாகக் கருதுகிறேன். எவரது அந்தஸ்து சர்ச்சைக்குரியதாக இருக்கிறதோ அந்த ஐந்தாவது வருணத்தினர் யார் என்பதையும், இந்த வாசகத்தில் மனு தெரிவித்திருக்கும் முடிவு எவரது அந்தஸ்தைப் பற்றியது என்பதையும் அவர் கூறவில்லை. அவரது வாசகம் தீண்டப்படாதவர்களைக் குறிக்கிறதா அல்லது வேறு ஏதேனும் வகுப்பினரைக் குறிக்கிறதா? அந்த வாசகம் தீண்டப்படாதவர்களை எவ்வகையிலும் குறிக்கவில்லை என்பதே என் முடிவு. நான் இந்த முடிவை மேற்கொள்வதற்கு இரண்டு சூழ்நிலைகளை ஆதாரமாகக் கொள்கிறேன். முதலாவதாக, மனுவின் காலத்தில் தீண்டாமை இருக்கவில்லை. தூய்மையின்மைதான் இருந்து வந்தது. மனு வெறுப்போடு குறிப்பிடும் சண்டாளனும் கூட தூய்மையற்றவனே தவிர வேறல்ல. இவ்வாறிருக்கும்போது, இந்த வாசகம் தீண்டப்படாதவர்களைக் குறிப்பதாக இருக்கமுடியாது. இரண்டாவதாக, இந்த வாசகம் அடிமைகளைக் குறிக்கிறதே அல்லாமல் தீண்டப்படாதவர்களைக் குறிக்கவில்லை என்ற கருத்துக்குப் போதிய சான்று இருக்கிறது. தீண்டாமையின் தொழில்ரீதியான மரபுமூலம் குறித்த அத்தியாயத்தில் நாரதஸ்மிருதியிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கும் மேற்கோளை அடிப்படையாகக் கொண்டது இந்தக்கருத்து. அடிமைகளை ஐந்தாவது வருணமாக நாரதஸ்மிருதி கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாரதஸ்மிருதியில் வரும் ஐந்தாவது வருணம் என்பது அடிமைகளைக் குறிக்கிறது என்றால், மனுஸ்மிருதியில் வரும் ஐந்தாவது இனம் என்பதும் அடிமைகளை குறிப்பதாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று எனக்குப் புரியவில்லை. இந்தக் கருத்து சரியானதாக இருக்கும்பட்சத்தில் மனுவின் காலத்தில் தீண்டாமை நிலவியது என்று கூறப்படும் வாதத்தின் ஆணிவேரையே அது தகர்த்தெறிகிறது. மேலே கூறிய காரணங்களால், மனுவின் வாசகம் தீண்டாமையைக் குறிக்கவில்லை என்பதும், மனுவின் காலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது என்ற முடிவுக்கு வருவதற்கு நியாயமோ, காரணமோ இல்லை என்பதும் தெளிவு.
இவ்வாறு தீண்டாமை தோன்றியதன் அதிகபட்சக் காலவரம்பை நம்மால் நிச்சயமாக நிர்ணயிக்கமுடியும். மனுஸ்மிருதி தீண்டாமையை எவ்விதத்திலும் குறிப்பிடவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியும். எனினும் இங்கு முக்கியமான கேள்வி எழுகிறது: மனுஸ்மிருதியின் காலம் எது? இந்தக்கேள்விக்கு விடை காணாமல், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தீண்டாமை அனுஷ்டிக்கப்பட்டதா, இல்லையா என்பதைக் கூறுவது சாத்தியமல்ல. மனுஸ்மிருதியின் காலம் குறித்து அறிஞர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. சிலர் அதனை மிகத்தொன்மையானது என்று வாதிடுகின்றனர். எல்லாத் தகவல்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டு, பேராசிரியர் புஹ்லர் சரியானதெனத் தோன்றும் ஒரு காலத்தை நிர்ணயித்துக்கூறுகிறார். மனுஸ்மிருதி அதன் இப்போதைய வடிவத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிற்று என்று புஹ்லர் நிர்ணயிக்கிறார். இவ்வாறு மனுஸ்மிருதிக்கு மிக அண்மைக்காலத்தை நிர்ணயிப்பதில் புஹ்லர் மட்டும் தனித்திருக்கவில்லை. திரு.டப்தாரியும் இந்த முடிவுக்கே வருகிறார். அவரது கருத்துப்படி மனுஸ்மிருதி தோன்றியது கி.மு.185 ஆம் ஆண்டுக்குப் பிறகே தவிர முன்பல்ல. இதற்கு டப்தாரி ஒரு காரணம் கூறுகிறார். மனுஸ்மிருதிக்கும் மௌரிய வம்சத்தின் பௌத்த பேரரசரான பிரிகத்ரதன் அவனுடைய பார்ப்பன பிரதம தளபதியான புஷ்யமித்தர சுங்கனால் கொலை செய்யப்பட்டதற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. இந்த நிகழ்ச்சி கி.மு.185க்குப் பிறகுதான் எழுதப்பட்டிருக்கவேண்டும். இத்தகைய ஒரு முக்கிய முடிவுக்கு வலுவூட்ட பிரிகத்ரத மௌரியன் புஷ்யமித்தரனால் கொலை செய்யப்பட்டதற்கும் மனுஸ்மிருதி எழுதப்பட்டதற்கும் தொடர்பு உண்டு என்பதை வலுவான, நம்பத்தகுந்த சான்றுகளால் நிலைநாட்டுவது அவசியம். ஆனால் துரதிருஷ்டவசமாக த்ரயு.டப்தாரி இவ்வாறு செய்யத் தவறிவிட்டார். இதனால் அவரது முடிவு வலுவிழந்து காணப்படுகிறது. இத்தகைய ஒரு தொடர்பு இருந்ததை நிரூபிப்பது முற்றிலும் இன்றியமையாதது. அதிருஷ்டவசமாக இதற்கான சான்றுகளுக்கு பஞ்சம் இல்லை.
பிரிகத்ரத மௌரியன் புஷ்யமித்தரனால் கொலையுண்டது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகக் கருதப்படாதது துரதிருஷ்டவசமானதாகும். எப்படியிருப்பினும் இந்நிகழ்ச்சி அதற்குரிய கவனத்தைப் பெறவில்லை என்றே கூறவேண்டும். இரு தனிநபர்களிடையே ஏதோ சொந்தப்பகைமையினால் நிகழ்ந்த ஒரு சாதாரண நிகழ்ச்சியாகவே வரலாற்றாசிரியர்கள் இதனை எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் விளைவுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்த்தோமானால் இது சகாப்தகர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்பது தெற்றெனப் புலனாகும். மௌரியர்கள் போய் சுங்கர்கள் ஆட்சிபீடமேறிய ஒரு வெறும் வம்சாவழி மாற்றமாக மட்டுமே இந்த நிகழ்ச்சியைக் கருதினால் அதன் முக்கியத்துவத்தை அளவிட முடியாது. உண்மையில், இது பிரஞ்சு புரட்சிபோன்ற ஒரு மாபெரும் அரசியல் புரட்சியாகும். பௌத்த மன்னர்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பார்ப்பனர்கள் திட்டமிட்டுச் சூழ்ச்சிசெய்து நடத்திய புரட்சியாகும். புஷ்யமித்திரன் பிரிகத்ரதனைக் கொலை செய்ததை இவ்வாறுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வெற்றிகண்ட பார்ப்பனியத்துக்கு தன்னை நிலைநாட்டிக் கொள்வதற்கு, வலுப்படுத்திக்கொள்வதற்குப் பல விஷயங்கள் தேவைப்பட்டன. பௌத்தர்கள் ஏற்கமறுத்த சதுர்வருண அமைப்பு முறையை நாட்டின் சட்டமாக்குவது பார்ப்பனியத்துக்கு அவசியமாக இருந்தது. அதேபோன்று பௌத்தர்கள் ரத்துசெய்த பிராணிகள் பலியை சட்டபூர்வமாக்குவதும், பார்ப்பனியத்துக்கு அவசியமாக இருந்தது. இதுமட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களும் பார்ப்பனியத்துக்குத் தேவைப்பட்டன. பௌத்த மன்னர்களின் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்த பார்ப்பனியம் அனைவராலும் புனிதமானவையாகவும் மீறவொண்ணாதவையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டின் காலகாலமான இரண்டு சட்டவிதிகளை மீறவேண்டியிருந்தது. முதல்விதி ஒரு பார்ப்பனன் ஆயுதத்தை தொடுவதுகூட பாபம் என்று கூறிற்று. இரண்டாவது விதி அரசர் புனிதமானவர் என்றும் அரசர் கொலை மாபெரும் பாபம் என்றும் பிரகடனம் செய்தது.
இந்த இரண்டு விதிகளையும் தாங்கள் மீறுவதை நியாயப்படுத்தக்கூடிய மகத்தான அதிகாரம் கொண்ட மதச்சார்புடைய ஒரு நூல் வெற்றிக்கொண்ட பார்ப்பனித்துக்குத் தேவைப்பட்டது. இந்தத் தேவதையை மனுஸ்மிருதி பூர்த்தி செய்தது. மனுஸ்மிருதியின் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அது சதுர்வருண அமைப்பு முறையை நாட்டின் சட்டமாக்குகிறது; யாகத்துக்கு விலங்குகள் பலியிடப்படுவதை சட்டபூர்வமாக்குகிறது; அது மட்டுமின்றி அவசியம் நேரிடும்போது பார்ப்பனன் ஆயுதமேந்துவதையும், அரசனைக் கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது. இதில் மனுஸ்மிருதி முந்தைய வேறு எந்த ஸ்மிருதியும் செய்யாததைச் செய்திருக்கிறது. இது முற்றிலும் அப்பட்டமான பிறழ்வாகும். இது ஒரு புதிய கோட்பாடாகும். மனுஸ்மிருதி இதை ஏன் செய்தது? புஷ்யமித்திரன் செய்த கொலை பாதகங்களையும், அத்துமீறிய செயல்களையும் அது தத்துவார்த்தரீதியில் நியாயப்படுத்தவேண்டியிருந்ததாலேயே அது இவ்வாறு செய்தது என்பதே இதற்கு ஒரே பதிலாக இருக்கமுடியும். புஷ்யமித்திரனுக்கும் மனு வகுத்தளித்த இந்தப் புதிய கோட்பாட்டுக்கும் இடையேயான பரஸ்பரத் தொடர்பு எதைக் காட்டுகிறது? மனுஸ்மிருதி கி.மு.185க்குப் பிந்தைய ஒருகாலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இது பேராசிரியர் புஹ்லர் நிர்ணயித்துக்கூறிய காலத்திலிருந்து அதிகம் விலகியதல்ல என்பது தெளிவு. மனுவின் காலத்தை இவ்வாறு நிர்ணயித்தபிறகு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தீண்டாமை இருந்திருக்க முடியாது என்று நம்மால் கூறமுடியும்.
அடுத்து, தீண்டாமையின் தோற்றம் குறித்த குறைந்தபட்சக் கால நிர்ணயத்துக்கு வருவோம். இதற்கு, இந்தியாவுக்கு வருகை தந்த சீனப்பயணிகளையும், இந்திய மக்களின் பழக்கவழக்கங்கள் குறித்து அவர்கள் கூறியுள்ள விவரங்களையும் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இந்தப் பயணிகளில் ஒருவரான பாஹியான் கூறியிருப்பது மிகவும் சுவையானதாகும். அவர் கி.பி.400ல் இந்தியாவுக்கு வந்தார். அவர் கூறிய விவரங்களில் ஒரு பகுதி வருமாறு: (மேற்கத்திய இந்தியாவிலுள்ள பௌத்த ஆவணங்கள், பியல். முன்னுரை பக்கம் XXXVIII)
“மதுராவிலிருந்து தெற்கே மத்தியதேசம் எனும் ஒருநாடு இருக்கிறது. இந்த நாட்டின் பருவநிலை பனியோ, மூடுபனியோ இல்லாமல் ஒரே சீராகவும் வெதுவெதுப்பாகவும் இருக்கிறது. தலை வரியோ, அதிகாரிகளின் கெடுபிடியோ இன்றி மக்கள் நலமாகவும் வளமாகவும் இருக்கிறார்கள். அரசக் குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்களை உழுது பயிரிடுபவர்களே மகசூலில் ஒரு பகுதியை அவர்களுக்குத் தருகிறார்கள். அவர்கள் நிலத்தை விட்டுப்போக விரும்பினால் போகிறார்கள்; நின்றுகொள்ள விரும்பினால் நின்றுவிடுகிறார்கள். மரண தண்டனை ஏதும் விதிக்காமல் மன்னர்கள் ஆளுகிறார்கள்; சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ அபராதம் விதிக்கிறார்கள். ராஜ துரோகத்துக்குக்கூட வலதுகரத்தை மட்டுமே வெட்டிவிடுகிறார்கள். மன்னரின் பாதுகாவலர்களுக்கு நிர்ணயமான சம்பளம் உண்டு. நாடு முழுவதும் மக்கள் எந்த உயிர்ப் பிராணிகளையும் கொல்வதில்லை; மது அருந்துவதில்லை; வெங்காயத்தையோ வெள்ளைப்பூண்டையோ உண்பதில்லை; சண்டாளர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. சண்டாளர்கள் ‘தீயவர்களாகக்’ கருதப்படுகிறார்கள்; மற்றவர்களிடமிருந்து அவர்கள் தனித்து வசிக்கிறார்கள். அவர்கள் ஒரு நகரத்துக்குள்ளோ, சந்தைக்குள்ளோ நுழையும்போது தங்களைத் தனியே பிரித்துக் காட்டுவதற்காக மர ஊதுகுழலால் ஒலி எழுப்புகிறார்கள்; இந்த ஒலியின் மூலம் அவர்கள் அவர்கள் வருவதைத் தெரிந்துகொண்டு மக்கள் விலகிச் செல்லுகிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கிறார்கள். இந்த நாட்டில் மக்கள் பன்றிகளையோ, கோழிகளையோ வளர்ப்பதில்லை; கால்நடை வாணிகம் செய்வதில்லை; அவர்களது அங்காடி இடங்களில் இறைச்சிக் கடைகளையோ, மதுபானக் கடைகளையோ காணமுடியாது. சிப்பிகளையே அவர்கள் பண்டமாற்று நாணயமாகப் பயன்படுத்துகிறார்கள். சண்டாளர்கள் வேட்டையாடுவதிலும் இறைச்சி விற்பதிலும் மட்டுமே ஈடுபடுகிறார்கள்."
பாஹியான் காலத்தில் இந்தியாவில் தீண்டாமை நிலவியது என்பதற்கு இந்த விவரங்களைச் சான்றாக எடுத்துக் கொள்ள முடியுமா? சண்டாளர்கள் நடத்தப்பட்டவிதம் குறித்த அவரது வருணனையின் சில பகுதிகள் தீண்டாமையை குறிக்கின்றன என்ற முடிவுக்கு வருவதற்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருப்பதாகத் தோன்றக்கூடும்.
ஆனால் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதில் ஒரு சிரமம் இருக்கிறது. சண்டாளர்கள் சம்பந்தப்பட்ட சில உண்மைகள் காரணமாகவே இந்த சிரமம் எழுகிறது. இந்த நாட்டில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு சண்டாளர்கள் விஷயத்தை ஒரு திட்டவட்டமான சான்றாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஏனென்றால் பார்ப்பனர்கள் எப்போதுமே சண்டாளர்களைத் தங்களது பரம்பரை பகைவர்களாகப் பாவித்து வந்திருக்கின்றனர்; அவர்கள் வெறுக்கத்தக்க நடத்தை உடையவர்கள் என்று அவர்கள்மீது பழிசுமத்தும் மனசார்புடையவர்களாக இருந்து வந்திருக்கின்றனர்; அவர்கள் மீது வசைமொழிகளைப் பொழிந்து வந்திருக்கின்றனர்; அவர்கள் மீது வேண்டுமென்றே விஷத்தை கக்கி வந்திருக்கின்றனர். எனவே, சண்டாளர்களுக்கு எதிராகக் கூறப்படுவதைப் பெருமளவுக்குத் தயக்கத்தோடுதான் நோக்க வேண்டும்.
இந்த வாதம் வெறும் யூகத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் நம்பகத்தன்மையைப் பற்றி ஐயப்படுபவர்கள் சண்டாளர்கள் நடத்தப்படும் விதம் பற்றிய வேறுபட்டதொரு வருணனையை பாணரின் காதம்பரியில் காணலாம். காதம்பரி கதை மிகவும் சிக்கலானது. அது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு சண்டாள யுவதி வளர்க்கும் வைசம்பாயணன் என்ற கிளி ஷூத்ரக மன்னனுக்குக் கூறும் கதைதான் இது என்பதை நாம் தெரிந்து கொண்டால் போதுமானது. காதம்பரியிலுள்ள பின்கண்ட பகுதிகள் நமது நோக்கத்துக்கு மிகவும் முக்கியமானவை. ஒரு சண்டாளர் குடியிருப்பு வட்டாரம் பற்றிய பாணரின் வருணனையோடு தொடங்குவது உசிதமானது. அது வருமாறு: (காதம்பரி (ரிட்டிங்கின் மொழிபெயர்ப்பு) பக்.204.)
“ஒரு காட்டுமிராண்டிக் குடியேற்றத்தை என் முன்னே பார்க்கிறேன்; தீய செயல்களின் சந்தைக்கூடமாக அது அமைந்துள்ளது. எல்லாப் பக்கங்களிலும் சிறுவர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்; வேட்டை நாய்களை அவிழ்த்துவிட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள்; வல்லூறுகளைப் பழக்கிக்கொண்டிருக்கிறார்கள்; பொறிவலைகளைச் சீர்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; ஆயுதங்களை ஏந்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்; அருவருப்பான அவர்களது உடைகளில் பார்க்கும்போது ஏதோ பேய்கள் போல் அவர்கள் காணப்படுகிறார்கள். அவர்களது குடியிருப்புகளின் நுழைவாயில்கள் அங்குமிங்குமாக உள்ளன; ஓங்கி வளர்ந்து அடர்ந்த மூங்கில் காடுகளுக்கிடையே அவர்களது இருப்பிடங்கள் மறைந்துபோயுள்ளன; மேல் எழுப்பிவரும் புகையைக் கொண்டுதான் அங்கு வீடுகள் இருப்பதையே தெரிந்து கொள்கிறோம். எல்லாப்புறங்களிலும் வேலி அடைப்புகள் மண்டையோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன; சாலையிலுள்ள குப்பைக் குவியல்களில் எலும்புகள் நிறைந்துள்ளன; சேரிகளின் முற்றங்கள் இரத்தமயமாகவும், கொழுப்பும் இறைச்சித்துண்டுகள் மயமாகவும் காட்சியளிக்கின்றன. அங்கு வாழ்க்கை வேட்டையாடுவதாகவும், உணவு இறைச்சி உண்பதாகவும், எண்ணெய் கொழுப்பாகவும், ஆடைகள் முரட்டுப் பட்டாகவும், படுக்கைகள் விலங்கு தோலாகவும், வீட்டு வேலையாட்கள் நாய்களாகவும், சவாரி செய்யும் விலங்கு பசுக்களாகவும், ஆடவர்களின் தொழில் மதுவும் மங்கையாகவும், தெய்வங்களுக்கான நைவேத்தியம் இரத்தமாகவும், உயிர்ப்பலி கால்நடைகளாகவும் உள்ளன. சுருங்கச் சொன்னால் நரகத்தை இங்கு காணலாம்.”
இத்தகைய ஒரு குடியிருப்பிலிருந்துதான் சண்டாளர் இனத்தை சேர்ந்த மேலேகூறிய யுவதி தனது கிளியுடன் மன்னன் ஷூத்ரகனது அரண்மனைக்குச் செல்லுகிறாள். மன்னர் ஷூத்ரகன் அரசவையில் தனது தளபதிகளுடன் அமர்ந்திருக்கிறார். அப்போது ஒரு பணிப்பெண் வந்து இவ்வாறு அறிவிக்கிறாள்: (காதம்பரி (ரிட்டிங்கின் மொழிபெயர்ப்பு) பக்கம்.6)
“அரசே தென்புலத்திலிருந்து வந்துள்ள ஒரு சண்டாளக் கன்னி பெண் வாயிலில் வந்து நிற்கிறாள். வானுலகிற்குச் சென்று, சீற்றமுற்ற இந்திரனது ஆணையால் அங்கிருந்து விழுந்த திரிசங்கு ராஜாவின் இனத்தில் வழிவந்த பேரழகி அவள், ஒரு கூண்டில் கிளியுடன் அவள் வந்திருக்கிறாள். தங்களிடம் பின்வருமாறு கூறும்படி அவள் சொல்லியனுப்பினாள்: “பேரரசரே, எல்லையற்ற மாகடல் போன்றவர் தாங்கள், இந்த உலகம் முழுவதன் மகத்தான செல்வங்களைப் பெறத் தகுதிபெற்றவர் தாங்கள் ஒருவரே, அத்தகைய செல்வங்களை வாரிவழங்கக்கூடிய இந்த அதியற்புதப் பறவையைத் தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்க வந்துள்ளேன்.” மாட்சிமை தாங்கிய மன்னர் பிரானே, அவளின் இந்தச்செய்தி கேட்டு தாங்கள் முடிவு செய்யவேண்டும்!” இவ்வாறு அந்த பணிப்பெண் தன் பேச்சை முடித்தாள். இது மன்னரின் ஆர்வத்தை வெகுவாகக் கிளர்த்திவிட்டது. சுற்றிலுமுள்ள பரிவாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, ‘ஏன் கூடாது’ அவளை இங்கு அழைத்து வா’ என்று கூறி தனது ஒப்புதலை அளிக்கிறார். பணிப்பெண் உடனே அரசனின் ஆணையின்பேரில் அவளை உள்ளே அனுமதிக்கிறாள். யுவதியும் அரசவைக்குள் பிரவேசிக்கிறாள்.
அரசரும் அவருடைய பரிவாரத்தினரும் முதலில் அவளைக் கவனிக்கவில்லை. அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அவள் மூங்கிற்தடியால் தரையில் அடிக்கிறாள். மன்னர் விழிப்படைகிறார். இதன்பின்னர் பாணர் அவளுடைய எழில்மிகு தோற்றத்தை சுவைபட வருணிக்க ஆரம்பிக்கிறார்: (காதம்பரி நூல், பக்கங்கள் 8-10)
“பின்னர் மன்னர் தமது பரிவாரத்தினரைப் பார்த்து ‘அதோ பாருங்கள்’ என்றுகூறி, அந்தச் சண்டாள மங்கையை வைத்த கண் எடுக்காமல் ஊன்றிக் கூர்ந்து நோக்கினார். அவளுக்கு முன்னால் ஒரு மனிதன் சென்றான். வயதானதன் காரணமாக அவனது தலைமுடி நரைத்துப்போயிருந்தது. அவனது கண்கள் சிவப்பு ரோஜாவின் வண்ணத்தைப் பெற்றிருந்தன. இளமை அவனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு சென்றிருந்தாலும், இடையறாத சலியாத, சளையாத உழைப்பால் அவனது மூட்டெலும்புகள் உறுதியும் வலுவும் அடைந்திருந்தன. அவனது உருவம் மதங்கனுடையதாக இருந்தாலும் வெறுக்கும்படியானதாக இல்லை. அரசவைக்கு வருவதற்குப் பொருத்தமான வெண்ணிற ஆடை அவன் அணிந்திருந்தான். அவளுக்கு பின்னால் ஒரு சண்டாளச் சிறுவன் வந்தான். அவனுடைய மயிர்க்கற்றைகள் இருபுஜங்களிலும் விழுந்து புரண்டுக்கொண்டிருந்தன. அவனது கையில் ஒரு கூண்டுக்கிளி இருந்தது. அதன் கம்பிகள் பொன்னால் உருவாக்கப்பட்டிருந்தபோதிலும் கிளியின் இறகுகள் உமிழும் ஒளிக்கதிர்கள் பட்டு அவை மரகதக்கற்கள் போல் பிரகாசித்தன. அவளுடைய கருநிற சாயலேகூட அரக்கர்கள் அபகரித்துக்கொண்ட அமிழ்தத்தை மீட்பதற்கு சாமர்த்தியமாக பெண்வேடம் பூண்ட கார்மேக வண்ணன் கிருஷ்ணனை அப்படியே உரித்துவைத்தாற் போலிருந்தது. நீலமணிக்கல் பதுமை தன்னந்தனியே நடந்துவருவது போன்று அவள் காட்சியளித்தாள்; அவள் அணிந்திருந்த நீலநிற மேலங்கி கணுக்காலைத் தொட்டுக் கொண்டிருந்தது; அவளது செம்பட்டு முகத்திரை அந்தி நேர கதிரவன் ஒளி நீலத் தாமரை மீது ஒளிர்வதுபோல் தவழ்ந்து கொண்டிருந்தது. ஒரு காதிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த காதணி அவளது கன்னக்குழியைப் பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்தது; உதயச் சந்திரனின் தண்ணொளிகளால் உட்பதித்து ஒப்பனை செய்யப்பட்ட இரவின் முகம் போல் அது காட்சியளித்தது; அவளது நெற்றியில் பழுப்பு மஞ்சள் நிறத் திலகம் மிளிர்ந்து கொண்டிருந்தது; அது மூன்றாவது கண்போல் மின்னியது; சிவனின் உடைபாணியை அனுசரித்து, மலை உடை அணிந்த பார்வதி போல் அவள் தோன்றினாள்.
நாராயணனது மேனியின் நீலவண்ணக்கதிர்கள் அவளது மார்பகத்தின் மீது தவழ்ந்த தளர்த்தியான மேலங்கி மீது மின்னிட அவள் ஸ்ரீயைப் போல் தோன்றினாள்; கடுஞ்சினம் கொண்ட சிவனது நெற்றிக்கண்ணால் மன்மதன் சுட்டெரிக்கப்பட்டபோது எழுந்தபுகையால் நிறம்மாறிய ரதியைப்போல் அவள் தோற்றமளித்தால்; மூர்க்க வெறிகொண்ட பலராமனின் உழுமுனையோடு சேர்த்து இழுத்துச் செல்லப்பட்டு விடுவோமோ என்று பயந்து பாய்ந்தோடும் யமுனையைப் போல் அவள் தென்பட்டாள்; வருணிக்க வொண்ணா உக்கிரத்துடன் மகிசாசுரனை மிதித்துத் துவைத்தபோது அவனது இரத்தத்தால் துர்க்கையின் பாதங்கள் சென்னிறமடைந்ததுபோல், பெரிதும் அலங்காரம் செய்யப்பட்ட வார் இழை அழுத்த அவளது தாமரைமலர் பாதங்கள் அரும்பும் தளிர்கள்போல் காட்சியளித்தன.
அவளது நகங்கள் அவளுடைய இளஞ்சிவப்பு விரல்களின் ஒளிவண்ணத்தில் செந்நிறமாகப் பிரகாசித்தன, பளிங்குக்கல் பரவியதளம் அவளது பூப்போன்ற பாதங்களை நோகச் செய்தது போலும், எனவே இளந்தளிர்களை தரையின்மீது வைப்பது போன்று மெதுவாக அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்து வந்தாள்.
அவளது கால் கொலுசுகளின் ஒளிக்கதிர்கள் அனற்கொழுந்து நிறத்தில் எழுந்து அவளைச்சுற்றி வளைத்துக் கொண்டதுபோல் தோன்றிற்று; அக்னியே அவளது நிரதிசய அழகில் மயங்கி, அவளது வம்சத்தைத் தூய்மைப்படுத்தி படைப்புக் கடவுளைப் பழிப்பதுபோல் இது இருந்தது.
அவளது ஒட்டியாணம் அன்பெனும் யானையின் நெற்றியில் பதிக்கப்பட்ட நட்சத்திரங்கள்போல் காட்சியளித்தன; அவளது கழுத்தாரம் பிரகாசமிக்க பெரியபெரிய முத்துக்கள் கோத்த முத்து வடமாக இருந்தது; இப்போதுதான் யமுனை சங்கமமான கங்கையின் நீரோட்டம்போல் அது தென்பட்டது.
இலையுதிர்காலம்போல் அவள் தனது தாமரைக்கண்களைத் திறந்தாள்; மழைக்காலம்போல் அவள் அடர்த்தியாக கூந்தலைக் கொண்டை போட்டிருந்தாள்; மலாயா குன்றுகளைப்போல் அவளிடம் சந்தனமணம் கமிழ்ந்தது; இரவி மண்டலம்போல் விண்மீன்கள் போன்று ஒளிரும் இரத்தினக்கற்களால் தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்தாள்; ஸ்ரீயைப் போல் கையில் தாமரையைப் பிடித்திருக்கும் அழகு அவளிடம் மிளிர்ந்தது; மூர்ச்சையைப்போல் அவளது வனப்பு உள்ளதை வசீகரிப்பதாக இருந்தது; கானகத்தைப்போல் அவளிடம் உயித்துடிப்புமிக்க அழகு கொஞ்சியது; ஒரு தேவதையின் குழந்தையைப்போல் அவள்மீது எந்த இனமும் உரிமை கொண்டாடவில்லை; நித்திரையைப் போல் அவள் கண்களுக்கு எழில் கூட்டினாள். கானகத்திலுள்ள தாமரைக்குளத்தை யானைகள் கலங்குவதுபோல் அவளது மதங்கா பிறப்பு அவளை ஒளி மங்க வைத்தது; ஆவியைப் போல் அவளை யாரும் தொடமுடியாது; எழுவதைப்போல் அவள் கண்களை மட்டுமே மகிழ்வித்தாள்; வசந்தகால மலர்கள் எத்தனை எத்தனையோ இருந்தும் அவளுக்கு ஜாதிமலர் கிடைக்கவில்லை; மன்மதனது வில்லின் நாண் போன்ற அவளது குறுகிய இடையை ஒரு கைப்பிடிக்குள் அடக்கிவிடலாம்; சுருள் சுருளான கூந்தலுடன் அலக்காவின் யட்சமன்னனது லட்சுமிபோல் இருந்தாள். அவள் வாழ்வின் கட்டிளம் பருவத்தை மலர்ச்சிப் பருவத்தை எய்தி ஈடுஇணையற்ற அழகியாகத் திகழ்ந்தாள். இந்த எழில் ஓவியத்தைக் கண்டு, மன்னன் திகைத்துப் போனான். அப்போது அவன் மனத்தில் பின்கண்டவாறு எண்ணங்கள் அலைமோதின: ‘பிரஜாபதி இந்த அழகியை தவறான இடத்தில் படைத்துவிட்டார்! இவளுக்கு உரிய துணைவன் கிடைக்காத ஓர் இடத்தில் இவளை ஏன் படைக்கவேண்டும்? இது மாசுமருவற்ற அழகையே பழிப்பதாகும். அவள் இந்த நிலவுலக லட்சுமிபோல் பேரெழில்மிக்க வடிவத்தைப் பெற்றிருந்தாலும் அவளது இழிவான பிறப்பு தெய்வங்களுக்கு ஒரு நிரந்தரமான அவப்பேறாகும். இவ்வாறு மன்னன் தன் மனத்தில் எண்ணிக்கொண்டிருந்தபோது, காதுவரை மலர்மாலை சூடியிருந்த அந்த அழகி தனது வயதுக்குமீறிய தன்னம்பிக்கையுடன் மன்னருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தினாள். இவ்வாறு வணக்கம் தெரிவித்துவிட்டு ஒரு சில அடிகள் முன்னால் சென்றபோது, அவளுடன் வந்திருந்தவன் கூண்டுக்குள் இருந்த கிளியை வெளியே எடுத்து அதை அரசனிடம் காட்டிப் பின்வருமாறு கூறினான்: “மாமன்னரே, இந்தக் கிளியின் பெயர் வைசம்பாயணன். அனைத்து சாஸ்திரங்களின் பொருளும் இதற்கு தெரியும். அரசுக் கொள்கையைச் செயல்படுத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்தது; கதைகள், வரலாறு, புராணங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றது; பாட்டுகளிலும் வாத்திய இசையிலும் பரிச்சயமுள்ளது; பாடுவதில் தனித்திறமை வாய்ந்தது; நேர்த்தியான, நேர்நிகரற்ற வீரகாவியங்களையும், காதற் கதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் இன்ன பிறவற்றையும் தானே இயற்றவல்லது; வீணை, புல்லாங்குழல், மத்தளம் முதலியவற்றை வாசிப்பதில் நிகரற்றது. நாட்டியத்தின் பல்வேறு அசைவுகள் அதற்கு அத்துபடி; ஓவியத்தில் நுண்திறம் மிக்கது; விளையாட்டில் மிகவும் துணிகரமானது; காதலனுடனான சச்சரவில் காதலியைச் சமாதானபடுத்துவதில் கைதேர்ந்தது; யானைகள், குதிரைகள், ஆடவர்கள், பெண்டிர்கள் இவர்களின் இயல்புகளை நன்கு அறிந்தது. அது இந்த உலகம் முழுவதன் இரத்தினம்; முத்துகள் சமுத்திரத்திற்குச் சொந்தமாக இருப்பதுபோல, இந்த உலக செல்வங்கள் எல்லாம் உங்களுக்குச் சொந்தம் என்ற எண்ணத்தில் இந்த அபூர்வமான கிளியை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்க உங்கள் மகள் போன்ற இவள் வந்திருக்கிறாள். ஓ வேந்தே! இதனை உங்களுடையதாக ஏற்றுக் கொள்ளுங்கள்.”
சண்டாளர் குலத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணைப் பற்றிய வருணனையைப் படிக்கும்போது பல கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, பாஹியான் தெரிவித்த கருத்துகளிலிருந்து இது எந்த அளவுக்கு வேறுபடுகிறது? இரண்டாவதாக, பாணர் வத்ஸ்யாயன பார்ப்பனர். இந்த வத்ஸ்யாயன பார்ப்பனர் சண்டாளர்களின் குடியிருப்புகள் பற்றி மிகமோசமாக, கேவலமாக வருணித்தபிறகு, அதே சண்டாளர் இனத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை மனசாட்சி உறுத்தல் அணுவளவும் இன்றி, சொல் நயத்தோடு, கருத்து வளத்தோடு மிக அற்புதமான முறையில் வருணித்திருக்கிறார். இந்த வருணனை தீண்டாமையுடன் சம்பந்தப்பட்ட இகழ்ச்சி, ஏளனம், வெறுப்பு, அருவருப்பு, அவமதிப்பு, புறக்கணிப்பு போன்ற உணர்வுகளுக்கு இசைந்ததுதானா? சண்டாளர்கள் தீண்டப்படாதவர்கள் என்றால் தீண்டாதோர் இனத்தைச் சேர்ந்த ஓர் யுவதி அரண்மனையில் எவ்விதம் பிரவேசித்திருக்க முடியும்? பாணர் போன்றவர்கள் தீண்டாதோரை எவ்வாறு வானளாவப் புகழ்ந்திருக்க முடியும்? (காதம்பரி நூல், தொகுதி 1, பக்.142)
பாணர் காலத்து சண்டாளர் இழிந்தவர்களாக இல்லாமல் அவர்களிடையே ஆளும் குடும்பத்தினரும் இருந்திருக்கின்றனர். பாணர் தமது நாடகத்தை சுமார் கி.பி.600ல் எழுதியிருக்கிறார். கி.பி.600 ஆம் ஆண்டுவாக்கில் சண்டாளர்கள் தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை. எனவே, பாஹியான் விவரித்துள்ள நிலைமைகள் தீண்டாமையை நெருங்கியதாக இருக்கலாமே அன்றி, உண்மையிலேயே தீண்டாமை நிலவியதற்கு சான்றாக அவற்றை எடுத்துக்கொள்ளமுடியாது. பார்ப்பனர்கள் அதிதீவிரமாகக் கடைபிடித்து வந்த தூய்மையின்மை எதிர்ப்பாக இது இருக்கலாம்; ஏனென்றால் புரோகிதத்துவத்தில் அளவுக்கு மீறிப் பங்கெடுத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்கள் அவர்கள். பாஹியான் இந்தியாவுக்கு வந்த போது குப்தமன்னர்களின் ஆட்சி நடைபெற்றுவந்தது என்பதை மனத்தில் கொண்டால் இந்தக் கருத்து சரியானதாகத் தோன்றுவதைப் பார்க்கலாம். குப்தமன்னர்கள் பார்ப்பனியத்தின் புரவலர்களாக இருந்து வந்தனர். பார்ப்பனியம் பல வெற்றிகளும் புத்துயிரும் பெற்றுவந்த காலம் அது. பாஹியானது வருணனை தீண்டாமையைக் குறிக்கவில்லை. மாறாக சில வகுப்பினரை குறிப்பாக சண்டாளர்களை சடங்குரீதியில் தூய்மையற்றவர்களாகக் கருதும் அதீதப்போக்கை பார்ப்பனர்கள் கடைப்பிடித்து வந்ததையே அது குறிப்பதாக இருப்பது முற்றிலும் சாத்தியமே.
இந்தியாவுக்கு வருகை தந்த இரண்டாவது சீன யாத்திரிகர் யுவான் சுவாங் கி.பி.629ல் இந்தியாவுக்கு வந்தார். அவர் இந்தியாவில் 16 ஆண்டுகள் தங்கி நாட்டின் மூலைமுடுக்குகளை எல்லாம் சுற்றிப் பார்த்தார். இந்திய மக்களின் பழக்கவழக்கங்களை மிக ஆழமாக ஆராய்ந்து அவர் மிக துல்லியமான தகவல்களைச் சேகரித்திருக்கிறார். இந்திய நகரங்கள் மற்றும் கட்டிடங்களின் பொது இயல்புகளைப் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்: (வால்டர்ஸ், யுவான் சுவாங், தொகுதி I. பக். 147)
“அவர்கள் வசிக்கும் ஊர்களையும் நகரங்களையும் பொறுத்தவரையில், நகரங்களின் நாற்கோணமான சுவர்கள் பரந்தவைதிருக்கின்றன. சத்திரங்களும் சாவடிகளும் சாலையின் இரு மருங்கிலும் உள்ளன. கசாப்புக் கடைக்காரர்கள், மீனவர்கள், கூத்தாடிகள், மரணதண்டனைகளை நிறைவேற்றுபவர்கள், தோட்டிகள் போன்றோரின் உறைவிடங்கள் ஒரு குறிப்பிட்ட அடையாளத்துடன் தென்படுகின்றன. அவர்கள் நகருக்கு வெளியே வசிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கிராமங்களுக்குள் செல்லும்போது இடதுபுறமாக அஞ்சியஞ்சிப் பதுங்கிச் செல்லுகிறார்கள்.”
மேலே கண்ட விவரங்கள் மிகச் சுருக்கமாக இருப்பதால் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. எனினும் ஒரு விஷயம் இங்கு கவனத்துக்குரியது. பாஹியானது வருணனை சண்டாளர்களை மட்டுமே குறிப்பிடுகிறது. ஆனால் யுவான் சுவாங்கின் வருணனையோ சண்டாளர்களைத் தவிர்த்த இதர சில வகுப்பினர்களைப் பற்றிக் கூறுகிறது. இது மிக முக்கியமான விஷயமாகும். இந்த வருணனை சண்டாளர்களைத் தவிர்த்த இதர வகுப்பினர்களைக் குறிப்பிடுவதால் இதனை ஏற்பதற்கு எதிராக மேலே கண்டவாறு வாதம் செய்யமுடியாது. எனவே, யுவான் சுவாங் இந்தியாவுக்கு வந்த காலத்தில்தான் இந்தியாவில் தீண்டாமை பிறக்க ஆரம்பித்திருக்கிறது எனக் கூறலாம்.
மேலே கண்ட அடிப்படையில் பார்க்கும்போது, கி.பி.200ல் இந்தியாவில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படவில்லை. கி.பி.600 ஆம் ஆண்டு வாக்கில்தான் அது தோன்றிற்று என்ற முடிவுக்கு நாம் வரமுடியும்.
இவைதான் தீண்டாமையின் தோற்றத்தை நிர்ணயிப்பதற்கான அதிகபட்ச, குறைந்தபட்சக் காலக்கெடுவாகும். இதனடிப்படையில் தீண்டாமை பிறந்த காலத்தைத் தோராயமாக நாம் நிர்ணயிக்கமுடியுமா? தீண்டாமைக்கு மூலக்காரணமாகக் கூறப்படும் மாட்டிறைச்சி உண்பது ஆரம்பமாக எடுத்துக்கொண்டால் இவ்வாறு நாம் நிர்ணயிக்கமுடியும். மாட்டிறைச்சி உண்பது தடைசெய்யப்பட்டதை ஒரு முன்னோடி நடவடிக்கையாக எடுத்துக்கொண்டால் தீண்டாமை தோன்றிய காலம் பசுவதையும் மாட்டிறைச்சி உண்பதும் தடை செய்யப்பட்டதுடன் மிக நெருங்கிய சம்பந்தமுடையது என்பது தெள்ளத்தெளிவாகிறது. எப்போது பசுவதை ஒரு குற்றமாகவும், மாட்டிறைச்சி உண்பது ஒரு பாவமாகவும் ஆக்கப்பட்டது என்ற கேள்விக்கு விடையளிக்க முடியுமானால் தீண்டாமை தோன்றிய காலத்தை ஏறத்தாழ நிர்ணயிக்க முடியும்.
பசுவதை எப்போது ஒரு குற்றமாக்கப்பட்டது?
மாட்டிறைச்சி உண்பதை மனு தடைசெய்யவில்லை என்பதையும், பசுவதையை அவர் ஒரு பாபமாக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம். கி.பி.4 ஆவது நூற்றாண்டில் பசுவதை குப்த மன்னர்களால் ஒரு தலையாயக் குற்றமாக்கப்பட்டது என்று டாக்டர் பி.ஆர். பண்டர்கர் நிலைநாட்டியிருக்கிறார்.
எனவே, கி.பி. சுமார் 400 ஆவது ஆண்டுவாக்கில் தீண்டாமை தோன்றியிருக்கவேண்டும் என்று ஓரளவு நம்பிக்கையோடு நாம் கூறமுடியும். மேலாதிக்கம் பெறுவதற்குப் புத்தமதத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்திலிருந்தே தீண்டாமை தோன்றிற்று. இந்தியாவின் வரலாற்றுப் போக்கையே முற்றிலுமாக மாற்றிய இந்த நிகழ்வுபோக்கை ஆய்வுசெய்யும் பணியை இந்திய வரலாற்று மாணவர்கள் உதாசீனம் செய்தது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 16)