படைப்பாளிகளும் எழுத்தாளர்களும் சமூகத்தின் போக்குக்கு முகப்பூச்சுக்கள் செய்யும் வேலையை எப்போதும் செய்வதில்லை. அவர்கள் சமூகத்தின் உள்ள முடை நாற்றமடிக்கும் அழுக்குகளை ஆராதிப்பதில்லை. மதம் சாதி வர்க்கம் இவற்றை எதிர்த்து அவர்களின் பேனா பயணத்தைத் தொடங்குகிறது. இதில் சமரசம் செய்வதற்கு ஏதுமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னதாக கிட்டதட்ட 1980 களின் நடுப்பகுதியில் என்றே நினைவு. தென் தமிழ் நாட்டின் கரிசல் வட்டார மொழி அகராதியைக் காண நேர்ந்த பெருமாள் முருகன் என்று தற்போது அறியப்படுகின்ற அவர், தான் பெரிதும் நேசித்த கொங்கு வட்டார மொழி அகராதியை உருவாக்கத் தொடங்கினர். அத்துடன் ஏறுவெயிலில் தொடங்கிய அவரது படைப்புலக பயணம் 9 நாவல்களாகவும் ஏராளமான சிறுகதைகளாகவும் விரிந்தது.. அததனையும் கொங்கு மண்டலத்தின சீரிய வரலாற்றை அதன் செழுமையான மரபை அற்புதமான படைப்புகளாக முன்வைத்தது. இது வரை தென் மாவட்டங்களான நெல்லை, விருதுநகர் மற்றும் சென்னை என்று மட்டுமே இருந்த தமிழ் நாவல்களின் களங்களை முதன் முறையாக கொங்கு மண்டலத்திற்கு நகர்த்தியது. சென்னையின் நடுத்தர மக்களின் வாழ்க்கையைச் சுற்றிய தமிழ் நாவல்களின் களங்களிலிருந்து கொங்கு மாந்தர்களின் அன்றாட வாழ்க்கையை அவர்களின் அபிலாசைகளைப் பேசியது.

perumal muruganபெருமாள் முருகனின் கானகத்தின் மாரிமுத்துவை யார் மறக்க முடியும்? நமது மனங்களில் நிழலாடும் முத்துவை நினைவின் ஓடைகளிலிருந்து நீக்கி விடமுடியுமா? ஆனால் யாரை அவர் நேசித்தாரோஅந்த சமூகத்தின் பெரும்பான்மை ஆதிக்க சக்திகள் அவரைத் துரத்தியுள்ளது; அதுவும் கொங்கு நாட்டிலிருந்தே கொங்கு மரபில் தோய்ந்துள்ள அவரது எழுத்துகளையும் மரணிக்க வைத்துள்ளது. அவருடைய நாவல் மாதொருபாகன் கடவுளையும் கொங்கு வேளாளக் கவுண்டர்களையும் இழிவு படுத்தி விட்டதகவும் கூறப்பட்டது. அதற்காக மாவட்ட நிர்வாகமே கட்டப் பஞ்சாயத்து நடத்தி சட்ட விரோதமாக‌ அவரை பலவந்தப்படுத்தி வாங்கியுள்ளது. அப்படி என்ன மாதொருபாகனில் எழுதி விட்டார்? குழந்தையில்லாத தம்பதியினரின் மன வலியை அவர்களின் ஏக்கத்தை அந்நாவல் கூறுகிறது. அவர்கள் பல வழிகளில் முயற்சித்தும் அந்த வழிகளில் கைகூடாமல் போகவே திருச்செங்கோட்டில் ஆண்டுதோறும் வைகாசி தேர்த் திருவிழாவில் இசைவுடன் தம்பதியினர் கூடுகின்றனர். அந்த நிகழ்வில் கருத்தரிப்பை சாமி கொடுத்த பிள்ளையாக ஏற்றுக்கொள்கின்றனர்.. இந்தப் பகுதிதான் சாதி ஆதிக்க சக்திகளையும் அதன் பின்னணியில் மதவெறி அடிப்படை வாதிகளையும் ஆத்திரங்கொள்ளச் செய்துள்ளது. இந்த நாவல் வந்து 4 ஆண்டுகள் ஆன் பின்னர் அது ஆங்கிலத்தில் மொழி பெய்ர்க்கப்பட்ட பின்னர் தற்போது பிரச்சினையாக்கப்பட்டுள்ளது.

பாலியலையும் பாலுறவையும் ஆண் பெண் உறவுகளையும் எப்போதுமே கொச்சையென பாலியல் நோக்கிலேயே புரிந்து கொள்ளும் நமது சமூகம் இதைப்பற்றி எப்படி ஆரோக்கியமாக‌ புரிந்து கொள்ளும்? பெண்ணின் உடலுக்கு ஏகபோக உரிமையும் அவளின் உடலையே தனி உடமையாகக் கருதும் சாதிய மதவாத ஆணாதிக்க சமூகத்திடம் இருந்து ஒரு எழுத்தாளரின் படைப்பிலக்கிய‌த்தை எப்படி ஆரேக்கியமாக புரிந்து கொள்ளும் என்று எதிர்ப்பார்க்க முடியும்? அன்றைய காலகட்டத்தில் தற்போதைய நவீன கருத்தரிப்பு தொழில்நுட்பங்கள் இல்லாதபோது கருத்தரிப்பு மையங்கள் மற்றும் சரோகஸி என்றழைக்கப்படும் வாடகைத்தாய்மார்கள் இல்லாத சூழலில இந்த முறையே பின்பற்றப்பட்டதாக வரலாறு சித்தரிக்கிறது. தொன்மையான தாயாண்மை சமூகத்தில் தற்போதைய குடும்ப அமைப்பு இல்லாத சூழலில் அதனை தொடர்ந்த பல வரலாற்றுக் கட்டங்களிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது. எண்ணற்ற மானுடவியல் ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளன. 1930 களில் இந்த நாவலின் பின்னணி விரிவடைகிறது.. உலகம் முழுவதும் சொத்துடைமை இல்லாத பழங்குடி மக்களின் இந்த பண்பாட்டு அம்சங்களை மட்டும் அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில நிலவிய சாதிய நிலவுடமைச் சமூகம் எடுத்தாளத் தொடங்கியது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நிலவுடைமையும் சாதியமும் கோலோச்சிய காலகட்டத்தில கொங்கு வேளாள சமூகம் மட்டுமின்றி தமிழகத்தில் பல சமூகங்கள் தங்களது வாரிசு உரிமையை நிலை நாட்டிடவும் தனக்கு பின்னர் தனது சொத்துக்கள் ஆண் மகவுக்கே செல்ல வேண்டுமென்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றியது. இதைப்போன்ற எண்ணற்ற நாவல்கள் பாலுறவு நடைமுறைகளையும் வாரிசுக்காக மேற்கொள்ளப்படும் பாலுறவு திரிதல்களையும் பேசியுள்ளது..

 இந்த நாவலில் சொல்லப்படும் கொங்கு மண்டலத்திலுள்ள ஆதிக்க சாதிகளிடம் மட்டுமின்றி தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள ஆதிக்க சாதிகளிடமும் ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் இதே நடைமுறைகள் இருந்ததாகவும் மானுட ஆய்வாளர்கள் கூறுகின்றனர் (ஆதாரம் இந்திய மானுடவியல் என்சைக்கிளோபிடியா). இதன் நீட்சியாக தங்கள் சமூகத்தின் மக்கள் தொகை குறைந்தவுடன் (அதே சமூகத்தில் இருந்த பெண் சிசுக்கொலை மற்றும் கருக்கொலையின் காரணமாக) அகமண முறையை வேறுவிதமாக பின்பற்றுகின்றனர். ஆணாதிக்க சமூகத்தின் நடைமுறையாக உள்ள சாதியை ஆணின் வழியாக காண்பதையொட்டி வேறு தேசிய இனங்களிலிருந்து பெண்ணை திருமணம் செய்வதும் நடைமுறையிலுள்ளது. கேரளம் ஆந்திராவிலுள்ள பெண்களை அவர்களின் சாதி வேறுபாடின்றி திருமணம் செய்து கொள்ளும் நடைமுறையும் அதிகரித்து வருகிறது. இந்த நடைமுறைகளை மறைத்துவிட்டு வேறு எதையும் அவர் எழுதவில்லை. இதைப்பற்றி விவாதிப்பதினாலேயே நாம் நாவலை அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. நாவலில் கருத்து வேறுபாடு இருப்பின் ஜனநாயக முறையில் வேறு ஒரு பதிவை செய்திருக்கலாம் அல்லது வழக்கு தொடர்ந்திருக்கலாம். அதை விட்டு தலிபான் நடைமுறையே பின்பற்றியுள்ளது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

 இதற்காக பெருமாள் முருகன் தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டார். ஒரு எழுத்தாளரை அச்சுறுத்த அவரது நாவல்கள் எரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டார். அப்போதும் அவரை அச்சுறுத்த மாவட்ட அரசு நிர்வாகமே இறங்கியுள்ளது. சட்டவிரோதமான முறையில் இனி எழுதக் கூடாது, நாவல்களை திரும்பப் பெற வேண்டும் என்று நிபந்தனைகளுடனான ஒரு கட்டப்பஞ்சாயத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியும் உள்ளது. கருத்துச்சுதந்திரம் மதவாதிகளுக்கும் சாதிய சக்திகளுக்கும் பலியாகிட அனுமதிக்கலாமா?

Pin It