போகி.. தைப்பொங்கல்.. உழவர் திருநாள்.. தொடர்ந்து மூன்று நாள்கள் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து காட்சி ஊடகங்கள் 'பொங்கல் நாளன்று… பொங்கல் செருப்பு நிகழ்ச்சிகள்..’ என்று அதிக ஒலி டெசிபலில் ரேட்டிங் ரேட் காட்டுக் கூச்சல்களை அரங்கேற்றத் தொடங்கி உள்ளன. போகி ..தைப் பொங்கல்.. உழவர் திருநாள் போன்றவைகள் எதற்காக கொண்டாடப் படுகின்றன? தொன்மை வாய்ந்த தமிழர் மரபின் தொடர்ச்சியாக இயற்கை சார்ந்த வளங்களை போற்றி பேணுவதற்கும், உழைப்பின் மேன்மையைக் கொண்டாடவும், பழையன கழித்து புதியன வரவேற்கவுமான புரிதலை சமூகம் முழுமையும் கொண்டு செல்லவும் இந்த நாட்களின் கொண்டாட்டங்கள் பயன்பட்டன.

farmers

இதைப் பற்றி எதுவுமே தெரியாத அல்லது கூலிக்கு மாரடிக்கும் எழுத்தாளர்களின் சொற்களுக்கு வாயசைத்து, முக சேஷ்டைகளை, அங்கங்களை அலட்டி திரைப்பட- சின்னத்திரை நடிகர்- நடிகைகளை நடிக்க வைத்து போகி ..தைப்பொங்கல்.. உழவர் திருநாளை கேலிக்கூத்தாக இந்த காட்சி ஊடகங்கள் தயாராக்கிக் கொண்டிருக்கின்றன. சினிமாக்காரர்களும் சிறிதும் கூச்சமின்றி கருத்துக்கு வாயசைத்து தங்களை விளம்பரப்படுத்தி வெளிச்சம் போட்டு தக்க வைத்துக் கொள்ள இந்த நாட்களின் மேன்மையை, நோக்கங்களை கொச்சைப்படுத்து கின்றனர். சுயநல இலாப வெறிக்காக ஊடகங்கள் நடத்தும் இந்த அசிங்கங்களுக்கு உழைக்கும் மக்களின் சிந்தனையை மழுங்கடித்து அவர்களின் இயல்பான பிரச்சனைகளில் இருந்து மடை மாற்றுகின்றன.

இன்றைக்கு உழவு தொழிலின் நிலைமை என்ன? நீர்நிலை ஆதரங்கள் உழவர்கள் பிரச்சனைகள் என்ன? மோடி- ஜெயா அரசாங்கங்க‌ள் நம் நாட்டின் கிராமங்கள் மீது போர்ப்பிரகடன‌த்தை வெளிப்படையாக அறிவித்து உழவுத் தொழிலை, உழவர்களை அழிக்க நாள்தோறும் நாசகாரத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றனர்.

 ரோம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்று கேள்விப்பட்டு இருக்கின்றோம்..ஆனால் உழவர்கள் வயிறுகளும் மனங்களும் தீச்சுவலைகளால் பற்றி எரியும் பொழுது காட்சி ஊடகங்கள் குத்துப்பாட்டு.. கும்மாளங்கள் போடுவது எந்த வித நியாயம்… அறம்..?

பெட்ரோல் கச்சா எண்ணெய் கடந்த ஆறு மாதங்களில் பாதியாக உலகச் சந்தையில் குறைந்துள்ளது. 2014 ஜீனில் ஒரு பேரல் ரூ7198 ஆக இருந்தது. அப்பொழுது நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ75… இப்பொழுது ஒரு பேரல் கச்சா எண்ணெய் ரூ 2985.க்கு குறைந்துள்ளது. .இதன் படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 30 க்குதான் விற்கப்பட வேண்டும்.. ஆனால் பெட்ரோல் விலையைத் தீர்மானிப்பது பெரு முதலாளிகள் என்பதால் அவர்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 64 க்கு விற்கின்றனர். இதன் மூலம் மக்களுக்கு வரவேண்டிய ஆயிரக்கணக்கான கோடிகள் ரூபாய்களை பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்களுக்கும் எந்த கேள்வி முறையும் இன்றி மோடி அரசாங்கம் மடை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் விவசாயிகளின் விளைபொருட்களை விவசாயிகள் தீர்மானிக்க எந்த ஒரு கூட்டு அமைப்பையும், சிண்டிகேட்டையும் ஆளும்அரசுகள் ஏற்படுத்த முயலவில்லை. எடுத்துகாட்டாக கருப்புக்கான ஆதார விலை கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ 2650 க்குள்ளாக உள்ளது. இடுபொருள்கள், விலைவாசிகள் உயர்ந்தாலும் கரும்பிற்கான ஆதார விலையை 100 ரூபாய் கூட மோடி அரசோ, அதிமுக அரசோ உயர்த்தவில்லை. இங்கு கரும்பு உற்பத்தி அதிகமாக இருக்கும் பொழுது அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகள் நலன்களுக்காக ஆயிரக்கணக்கான டன்கள் சர்க்கரை இறக்குமதி செய்து கரும்பு விவசாயிகள் வயிற்றில் மோடி அரசு அடிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் தூக்கு போடும் போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், பட்டை நாமப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதே நிலைமைதான் அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் உள்ளது.

ஊடகங்களில் பொங்கல் விஷேச முன்னோட்டம், பொங்கல் சிறப்பு விவாதம் சினிமா நடிகர்கள், நடிகைகள் பேட்டிகள், ஆட்டங்கள் களை ( கலை அல்ல.. களை தான்)கள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற‌ன. இவைகளில் போகின்ற‌ போக்கில் மீத்தேன் ..பற்றி உங்கள் கருத்து கூறுங்கள் ..என்று பாலிவுட் புதிய வரவு நடிகையிடம் நிச்சயம் ஒரு தொகுப்பாளன் கேட்பான். அதற்கு அந்த நடிகை எட்டு கோணலாகி..:

 “ஹா…அந்த தேன் பாடிக்கு குட்..காஸ்டிலி ஹனி..… டிலிசியஸ் டிரிங்..”

உடனை அங்கு கூட்டப்பட்ட எல்லாரும் சிரிப்பாய் சிரித்து பொங்கலோ பொங்கல் என்று கொண்டாடுவர்.. ஆனால் மீத்தேன் திட்டத்திற்காக காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் கம்பெனிக்கு பலியாக உள்ளன. இதைத் தவிர பிற மாவட்டங்களுக்கு மீத்தேன் வாயு, நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட மோடி அரசு முடிவெடுத்து செயல்படுத்த உள்ளது.

தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் தராத கெயில் குழாய் பதிப்புக்காக‌ ஈரோடு-சேலம் மாவட்ட உழவர்களின் விளைநிலங்களை பலாத்காரமாக ஆட்சியாள‌ர்கள் பறித்துள்ளனர். போராட்டங்கள், வழக்குகள் என்று பல முனைகளில் உழவர்கள் போராடியும் அந்த திட்டம் நிறுத்தப்பட வில்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள், இரண்டு இலட்சத்திற்கும் மேலான நீர்ப்பாசன-கோயில் குளங்கள், குட்டைகள், இணைப்புக் கால்வாய்கள் இருந்தன. இவற்றில் 13,710 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ளன. மற்றவைகள் ஊராட்சிகளின், தனியார் வசம் உள்ளன. இந்த ஏரிகளில் 10,640 ஏரிகளை அதிகாரிகள்- ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகள் கூட்டாக விழுங்கி ஏப்பம் விட்டு விட்டனர். வெறும் 3,715 ஏரிகள் மட்டுமே இன்று உயிருடன் உள்ளன. முல்லை பெரியாறு பிரச்சனை- காவிரி சிக்கல்-பாலாற்று சிக்கல் என்று அண்டை மாநிலங்களைக் கைகாட்டும் உயர்அதிகாரிகள்- ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகள் இந்த இலட்சக்கணக்கான தமிழக நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க, ஆக்கிரமிப்பை அகற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பாலாற்றில் உயர் அதிகாரிகள்- ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளின் மணல் கொள்ளைகள்- தோல் மற்றும் இரசாயன கழிவுகள் கலத்தலால் வடஆற்காடு மாவட்டம் முழுவதும் நிலம், நிலத்தடி நீர் , உழவுத் தொழில் மிகவும் சீரழிக்கப்பட்டுள்ளது.

பல ஆயிரம் பள்ளிகளில் அதுவும் பெண்பிள்ளைகள் படிக்கும் பெண்களுக்கான பள்ளிகள் உட்பட இயற்கை உபாதைகளை கழிக்க கக்கூஸ்கள் கட்ட போதிய நிதியை ஒதுக்க வக்கற்ற மோடி அரசாங்கம், நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையத்தை தேனி மாவட்டம் தேவாரத்தில் பல ஆயிரம் கோடிகள் செலவில் தொடங்க உள்ளது… மேற்கு மலைத்தொடர்ச்சியில் உள்ள முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளுக்கு இதனால் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளது. பலகோடி மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களில் இத்தகைய பேராபத்து அணு ஆராய்ச்சி தேவையா..?

farmer

நொய்யல் ஆறு சாயப்பட்டறை கழிவுகளால் காணாமல் போய் விட்டது. அதனால் பல ஆயிரம் ஏக்கர்கள் நிலங்கள் மலடாகி போய்விட்டது. சில ஆயிரம் அந்நிய செலவாணிக்கு ஒர் ஆற்றையே நாசம் செய்த அதிபுத்திசாலிகள் இந்த உயர்அதிகாரிகள்- ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளாகத்தான் இருக்க முடியும்.

திருவள்ளுவர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகளை அரசியல்வாதிகள்- அதிகாரிகள் சேர்ந்து அழிந்து விட்டனர். இந்த இலட்சணத்தில் சென்னை குடிநீருக்கு புதியதாக ஏரி அமைக்க என்று ஒரு மோடி புளுகை சொல்லி திருவள்ளுவர் மாவட்டம் கண்ணன் கோட்டை கிராமத்தில் 800 ஏக்கர் நன்செய் நிலங்களை அதிமுக அரசாங்கம் அபகரிக்க முயல்கின்றது. கண்ணன் கோட்டை விவசாயிகள் இதற்கு சம்மதிக்க வில்லை. ஆனால் 2013 ஆம் ஆண்டு புதிய நில ஆர்ஜித சட்டம் வந்த பின்பு..... ஒரு தவறான சட்டவிரோத ஆணையை போட்டு அதாவது பழைய 1894 ஆம் ஆண்டு நில ஆர்ஜித சட்டப்படி திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் இந்த நிலங்களை ஆக்கிரமித்து உள்ளார். பிரான்சு நாட்டு கார்ப்ப்பரேட் டயர் கம்பெனிக்கும், பொன்னேரி வட்டத்தில் அமைய உள்ள கார்ப்பரேட் சுமார்ட் சிட்டிக்கும் தேவைப்படும் நன்னீருக்குத் தான் இந்த நிலப்பறிப்பு நடந்துள்ளது. ஆனால் கண்ணன் கோட்டை உழவர்கள் இதற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வரும் 16-01-2015 உழவர் தினத்தை துக்கதினமாக கடைபிடித்து கருப்பு கொடி ஏற்ற கண்ணன் கோட்டை உழவர்களும், கண்ணன் கோட்டை-சேர்வாய் உழவர்கள் ஆதரவு கூட்டமைப்பும் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.

நீண்ட நெடிய தமிழ்க கடற்கரையும், கடல் மீன்வளமும், விளைநிலங்களும் பல நிலக்கரி மின்உற்பத்தி திட்டங்களாலும், இராசயன தொழிற்சாலைகளால் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன.

பல கோயபல்ஸ் பொய்களைக் கூறி விவசாய மானியங்களை தொடர்ந்து அகற்ற, குறைக்க மோடி அரசு - ஜெயா அரசுகள் முயன்று வருகின்றன.

சென்ற பாராளுமன்றத் தொடரில் கிராமப்புற வங்கிகளை 49 % தனியார் மயமாக்க மோடி அரசாங்கம் மசோதா நிறைவேற்றி உள்ளது. இந்துத்துவா அஜண்டாக்களில் விளைந்த பாராளுமன்றப் பன்றிகளின் அலறல் சத்தத்தில் இந்த மசோதா பற்றி யாருக்கும் எதுவும் தெரியாமல் பார்த்து கொண்டனர்.

மோடி அமைச்சரவை கடந்த 60 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நில ஆக்கிரமிப்பு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மக்கள்திரளின் வீரமிக்க போராட்டங்களின் விளைவால் 1894 நில ஆக்கிரமிப்பு சட்டத்திற்கு மாற்றாக முன்னர் ஆட்சி செய்த மன்மோகன்சிங்கின் காங். அரசு பொதுத்துறை – தனியார் கூட்டு திட்டத்திற்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய 70 சதவிகிதம் அப்பகுதி மக்களின் ஒப்புதல் பெற வேண்டும், தனியார் திட்டம் என்றால், 80 சதவிகிதம் மக்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற ஒரு சட்டம் நிறைவேற்றியபோது, வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தது பாஜக. இப்போது, இந்த 80 சதவிகிதம் ஒப்புதல் தர வேண்டும் என்ற பிரிவையே இந்த அவசர சட்டத்தின் மூலம் நீக்கியுள்ளது. வேண்டப்பட்ட பெரு முதலாளிகளுக்கு, அந்நிய நாட்டு கம்பெனிகள் நில ஆக்கிரமிப்பு செய்ய எந்த தடையும் செய்ய முடியாது. கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு, இடத்தை காலி செய்ய வேண்டியது தான்.

தேர்தலுக்கு முன்னர் மோடி சொன்னாரே. “அச்சா தின்,”…நல்ல நாட்கள் வரும் என்று குடுகுடுப்பை ஸ்டைலில் சொன்னதன் அர்த்தம் புரிகிறதா? யாருக்கு நல்ல காலம் என்று. பெரு முதலாளிகளுக்கு, அந்நிய நாட்டு கம்பெனிகளுக்கு நல்ல காலம். 50 கோடி உழவர்களுக்கு பட்டை நாமம். பெரும்பான்மை பலம் பெற்றதாக சொல்லும் மோடி சர்க்கார், நாடாளுமன்றத்தை புறக்கணித்து, அவசர சட்டம் மூலம் ஆட்சி செய்யும் லட்சணம் இதுதான்!!

இன்னும் நிறைய எழுத வேண்டும்……

இப்படியாக உள்ள தமிழக உழவர்கள் நிலைமைகளை, தமிழக கிராமங்கள், இயற்கை வாழ்வாதாரங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்படுவது பற்றி எந்த காட்சிப்படுத்தல்களும், விவாதங்களும் இல்லாமல் இந்த தமிழக காட்சி ஊடகங்கள் சினிமா கவர்ச்சியில் மக்களை மழுக்கடிக்க திட்டமிடுகின்றன.

புதிய திரைப்படங்களுக்கான விளம்பரங்களுக்கு போகி ..தைப்பொங்கல்.. உழவர் திருநாளை தமிழக காட்சி ஊடகங்களைப் பயன்படுத்துவதை தார்மீக அடிப்படையில் நிறுத்த வேண்டும். இவர்களுக்கு “..என்ஜினியர் இல்லாமல் மனிதன் வாழ முடியும், மருத்துவர் இல்லாமல் இருக்க முடியும்.. டிவிக்கள், தொலைபேசிகள் இல்லாமல் மனிதன் இருக்கலாம்… அரசாங்கங்கள் கூட இல்லாமலும் மனித சமூகம் இருக்க முடியும்… ஆனால்… உணவு இல்லாமல்… அந்த உணவைத் தரும் உழவு தொழில் இல்லாமல் இருக்க முடியாமா…? சுழன்றும் ஒர் பின்னது உலகம்….” என்ற திருவள்ளுவனின் திருக்குறளை வார்த்தைக்கு வார்த்தை உச்சரித்த அய்யா நம்மாழ்வாரின் பிரகடனத்தை நினைவு கூற வேண்டி உள்ளது.

 ‘’உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது

 எழுவாரை எல்லாம் பொறுத்து.’’

என்ற திருவள்ளுவர் கூறிய அறம், தர்மம் காட்சி ஊடகங்களுக்கும் பொருந்தும் தானே?

அச்சாணி அற்ற இந்த நாடு இந்த உலகம் எவ்வளவு நாட்களுக்கு..ஆண்டுகளுக்கு ஓடும்.

ஊடகங்கள் உழவர் திருநாளில் உழவர்களைப் பற்றி பேசுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழர்கள் கட்டியமைத்த நீர்நிலைகளின் பொறியமை பற்றி விவாதியுங்கள். இன்றைய ஆட்சியாளர்கள் விவசாயிகள் மீது தொடுத்துள்ள போர்ச்சூழலை அம்பலப்படுத்துங்கள்…

இல்லாவிடில்…

கண்ணன் கோட்டை உழவன் விட்ட “கை விதைப்பு போட்டுதான் பயிர் செய்றோம். பச்சைக் குழந்தையை வளக்கிற மாதிரி வளர்த்துட்டு வந்தேன். கடன் வாங்கித்தான் பயிர் வெச்சேன். ராட்சச வண்டிகளை நிலத்துல ஓட்டுனப்போ, பயிர்களெல்லாம் மண்ணோட மண்ணா அமுங்கிப் போச்சு. மெஷின வெச்சு நிலத்தை கீறினப்போ என்னைக் கீறுன மாதிரியே மனசெல்லாம் வலிச்சுச்சு. நாங்கெல்லாம் படிக்காத மண்ணுங்கய்யா. அதனாலதான் இந்த மண்ணு மேல இவ்ளோ உசுர வெச்சிருக்கோம். அதனாலதான் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்க முயற்சி பண்ணினேன். அதிகாரிகளெல்லாம் என்னென்னமோ கண்டிஷன் பேசுறாங்க. எங்களுக்கு எந்த எழவும் புரியலைங்க. இப்படியே விவசாய நிலங்களையெல்லாம் அழிச்சுட்டு, நாளைக்கு இவங்கெல்லாம் சோத்துக்கு பதிலா மண்ண சாப்பிடும்போது தெரியுமய்யா... விவசாயத்தோட அருமை’’ என்ற சாபத்தை ஊடகங்களுக்கு நினைவு படுத்துவோம்!

“சினிமாகாரர்களுடன் சேர்ந்து நீங்க ஆடுங்க, பாடுங்க, கும்மாளம் போடுங்க.. ஆனால் அதற்கு உழவர் திருநாளை பயன்படுத்தாதீங்க ஊடக நண்பர்களே”

- கி.நடராசன்

Pin It