உச்சநீதி மன்ற நீதிபதிகள், உயர்நீதி மன்ற நீதிபதிகள், பணி ஓய்வுக்கு பிறகு அரசு சார்ந்த பணிகளிலோ, தனியார்துறை பணிகளிலோ சேர்வதற்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும். என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

sathasivam 350இந்திய அரசும் மாநில அரசுகளும் நாடளுமன்றம் மற்றும் சட்டமன்றம் வழியாக இயற்றும் சட்டங்கள், போடுகின்ற ஆணைகள் அனைத்தும் அரசமைப்புச் சட்ட விதிகளின் வரம்புக்குட்பட்டவையா, அல்லவா என்று தீர்மாணித்து அவை செல்லும் அல்லது செல்லாது என்று தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உச்ச நீதிமன்ற, உயர் நீதி மன்ற நீதிபதிகளுக்கு உள்ளது.

இப்படிபட்ட மிகப்பெரிய மனித உரிமை மற்றும் சனநாயாகப் பாதுகாப்பு அதிகாரம் உச்ச நீதி மன்ற மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகளுக்கு உள்ளது.

இவர்கள் தங்களது பணி ஓய்விற்கு பிறகு அரசு வழங்கும் பதவிகளையோ அல்லது தனியார் துறை வழங்கும் பதவிகளையோ எதிர்ப்பார்பவர்களாக இருக்க கூடாது. பணி ஓய்வுக்கும் பிறகும் பதவிகளை எதிர்ப்பார்பவர்களாக இந்நீதிபதிகள் இருந்தால் அந்தப் பிற்கால எதிர்பார்ப்பு நிகழ்கால தீர்ப்புகளில் தாக்கத்தை உண்டாக்கும் வாய்ப்பிருக்கிறது.

கடந்த காலங்களில் அவ்வாரு சில நீதிபதிகள் நடந்து கொண்டுள்ளனர். இப்போதைய எடுத்துக்காட்டாக, உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.சதாசிவம் அவர்களுக்கு இந்திய அரசு கேரள மாநில ஆளுநர் பதவி வழங்கியிருப்பதை சொல்லலாம்.

இராசீவ்காந்தி கொலை வழக்கில் 23ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழுத் தமிழர்களை விடுதலை செய்வதற்கான முழு அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது என்றும் இந்தியா முழுவதும் இது போல் முடிவில்லாமல் சிறையில் வாடுவோறுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலும் குடியரசுத் தலைவர் மரத்தண்டனை வழங்கபட்டோரின் கருணை மனுக்களை முடிவுசெய்யாமல் நீண்ட காலதாமதம் செய்ய அதிகாரமில்லை என்ற எடுத்துக்காட்டான தீர்ப்பை வழங்கினார். இத்தீர்ப்பு அடிப்படையில் ஏழுதமிழர்களை விடுதலை செய்து ஆணையிட்டது.

ஆனால் இதன் மீதான மேல் முறையீட்டு வழக்கில் அன்றைய காங்கிரசு அரசும், காங்கிரசு கட்சியும் இத் தீர்பை எதிர்த்து கூச்சல் போட்ட பிறகு, கடைசியாக திமுக தலைவர் கருணாநிதி மக்களவை தேர்தல் முடிவதற்குள் ஏழுத் தமிழர் வழக்கில் தீர்ப்பு வழங்க கூடாது என்று கோரிக்கை வைத்த பிறகு நீதிபதி சதாசிவம் தனது மனதை மாற்றிக் கொண்டார் என்பது நாடறிந்த உண்மை.

ஏழுதமிழர் விடுதலை வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட விரிவடைந்த அரசமைப்பு அமர்வுக்கு மாற்றி வைத்து ஒதுங்கிக் கொண்டார்.

ஈழத்தமிழர் சிக்கலாக இருந்தாலும், தமிழகச் சிறையில் வாடும் ஏழுத்தமிழர் சிக்கலாக இருந்தாலும் பா.சா.க அரசுக்கும் காங்கிரசு அரசுக்கும் எவ்வகை வேறுபாடும் இல்லை. எனவே மேற்கண்டவாறு ஏழுத்தமிழர் விடுதலைச் சிக்கலில் முதலில் தாம் தீர்ப்புரைத்த படி அவர்களை விடுதலை செய்யாமல் ஒதுங்கிக் கொண்டமைக்கு அவருக்கு கிடைத்த பரிசாகவே கேரள ஆளுநர் பதவியை கருத இடமுள்ளது.

இனி வருங்காலத்தில் உயர் நீதித் துறையின் துலாக்கோல் சாயாமல் இருப்பதற்கு உறுதித் தன்மை உருவாக்கிட உச்ச நீதி மன்ற மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றபின் அரசு மற்றும் தனியார் துறை பதவிகள் எதையும் பெறுவதற்கு தடை விதித்து சட்டமியற்ற வேண்டும் என்றும். இதே போல் அரசமைப்புச் சட்டப் பதவிகளை வகிப்பவர்களான தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தலைமை கணக்கு ஆணையர் மற்றும் முப்படைத் தளபதிகள் முதலியோர் பணி ஓய்வுக்கு பிறகு அரசு மற்றும் தனியார் சார்ந்த பதவிகளை ஏற்க தடைச் செய்து சட்டமியற்ற வேண்டும் இவ்வாறு சட்டமியற்றவில்லையெனில் நாட்டில் சனநாயக நெறிகளும் சட்டத்தின் ஆட்சியும் தடம்புரளும் வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

Pin It