குற்றச் செயல்கள் என்பது நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட இனத்தின், சமூகத்தின் உடைமைகளல்ல; அது மனிதர்களின் இயல்பு. இங்கு நாம் மனிதர்கள் செய்வதை, அந்த மனிதர்களின் இன, சமூக, மதம் போன்ற குறீயீடுகளோடு ஒப்பீடு செய்தே பழகிவிட்டோம். இந்த வரிசையில் இசுலாமியர்கள் தொடர்ச்சியாக ஒரு வரலாற்றுப் பிழையை செய்தே வருகின்றனர்.

muslims 600

அருந்ததிய சமூகம் பெரும்பான்மையாக மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுபவர்களாக இருக்கும் காரணத்தினாலேயே, மலம் அள்ளுபவன் யாவரும் அருந்ததியன் என ஒரு முத்திரை குத்தினால், அது முதலாளித்துவத்தின் மனோநிலையில் நாம் சிக்கியுள்ளதாகவே அர்த்தம். இன்று அருந்ததியர்களில் பலரும் மேலெழுந்து நிற்க்கிறார்கள். பொது வெளிகளில் நாகரீக உடைகளில், வேலைகளில் வளர்ச்சிகளைப் பெற்றுத்தான் உள்ளனர். ஆனால் இன்றும் மலம் அள்ளும் மனிதர்கள் இங்கு இருந்து கொண்டுதான் உள்ளனர். ஆக ஒரு குறிப்பிட்ட வேலையைக் கூட குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் சொத்தாக நாம் ஆக்கிட இயலாது. இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுமெனில், இதுபோன்ற இழி தொழில்களில் மனிதர்கள் ஈடுபடுவதைக் கூட, சக மனிதராய் நாம் அனுமதிக்க கூடாது. அவர்களையும் தட்டி எழுப்பி தன்மானம் உள்ளவர்களாய் மாற்ற முனைவதுதான் மனிதநேயம். எப்படி ஒரு இழிதொழிலை இந்தப் பார்வையோடு அணுக வேண்டுமோ அதே போலத்தான், குற்றச் செயல்களையும் நாம் அனுக வேண்டி உள்ளது.

‘காஃபிர்கள்’ என்றாலே இந்துக்கள் என ஒரு பொது சித்திரத்தை வரைந்து, அப்படியான காஃபிர்களை நாம் எதிர்க்க வேண்டும், அவர்கள் நம் எதிரிகள் என்ற‌ தவறான ஒரு கண்ணோட்டத்திலிருந்து சம காலத்தில் இஸ்லாமியர்கள் எவ்வளவோ விலகி, விளங்கிக் கொண்டுள்ளனர். இந்துக்கள் வேறு, இந்துத்துவாக்கள் வேறு என‌ அனைத்து இசுலாமியர்களும் இன்று நன்றாகவே விளங்கி வைத்துள்ளனர். அதன் ரீதியாகத்தான் எதிர்க்க வேண்டியது இந்துக்களை அல்ல, மாறாக இந்துத்துவாக்களை என்கிற இடத்திற்கு இசுலாமியர்கள் வந்து சேர்ந்துள்ளனர்.

இசுலாமியர்களின் பல மூர்க்கத்தனமான செயல்களுக்கெல்லாம் காரணம், பிழைப்புவாத தலைவர்களே ஆவார்கள். இஃவானுல் முஸ்லீமின் அமைப்பின் தோற்றுவிப்பாளர் இமாம் ஹசனுல் பன்னாவைப் போலவோ, பாலஸ்தீனப் போராளிகளை வார்த்தெடுத்த சேக் அஹ்மது யாசீனைப் போலவோ, இல்லை நம் தாய் தமிழகத்தில் இருந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களைப் போலவோ, இன்று இசுலாமியர்களை ஒழுக்கவியல் ரீதியாகவும் சரி, அரசியல், வரலாற்று ரீதியாகவும் சரி நெறிப்படுத்த தலைவர்கள் இல்லாமல் போனதே, இசுலாமியர்களின் இன்றைய மூர்க்கத்தனங்களுக்கு அடிப்படைக் காரணமாகும். இதே நேரத்தில் இன்னொன்றையும் பதிவு செய்ய அவசியப்படுகிறேன், இசுலாமியர்கள் அடிப்படைவாதிகள் என‌ ஒரு முத்திரை இங்கு ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் சில இசுலாமியர்களை, அடிப்படைவாதிகள் என‌ குறியீடு செய்வது மரபாக உள்ளது. உண்மை அப்படியானதாக இல்லை. இசுலாத்தின் அடிப்படைகளை அப்படியே கடைபிடிக்கும் எந்த ஒரு இசுலாமியனும் தவறு செய்யவே மாட்டான், ஏனெனில் இசுலாத்தின் அடிப்படைக் கருத்தியல் மனிதநேயத்தையே மூலதனமாகக் கொண்டது.

ஒரு விரும்பத்தகாத தவறினையோ, குற்றத்தினையோ செய்யும் இசுலாமியர்களை நாம் அடிப்படைவாதிகள் என குறிப்பிடுவதற்கு மாற்றாக ‘மூர்க்கத்தனமானவர்கள் அல்லது மூடர்கள்’ என குறிப்பிடுவதே சரியானதாக இருக்கும். ஏனெனில் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகள் உண்டென எழுதி வைக்கப்பட்டிருக்கும் வர்ணாஸ்சிரம, பார்ப்பனிய மூலதனத்தைப் போல, திருக்குரானில் வெடிகுண்டுகள் வைக்கப்பட வேண்டும் எனவோ, இசுலாம் அல்லாதோரை கொலை செய்யுங்களென்றோ எங்குமே குறிப்பிடவே இல்லை. ஆக நாம் பார்க்க வேண்டியது கொள்கையில் பிரச்சனையா இல்லை அதனை கடைபிடிக்கிறோம் பேர்வழி என வாழும் மனிதர்களில் பிரச்சனையா என்பதைத்தான். இந்த வழியில் பார்க்கிறபோது இசுலாத்தில் பிரச்சனையில்லை, இசுலாமியர்களில்தான் பிரச்சனை. இப்படி இருக்கிறபோது அடிப்படைவாதிகள் என்கிற சொல்லாடல் எப்படி சரியானதாக இருக்க முடியும் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“ISLAM IS THE BEST; BUT ISLAMIANS ARE THE WORST” என்று தெளிவாகவே சொல்லிச் சென்றுள்ளார் தத்துவியலாளர் ஜார்ஜ் பெர்னார்ட்சா. இவரின் இந்தக் கூற்றுக்களை நாம் மறுப்பதற்கில்லை. ஏனெனில் தூய இசுலாமிய கொள்கைப்படி இசுலாமியர்கள் வாழ்ந்திருப்பார்களேயானால், இன்று உலக அரங்கில் அடிபட்டுக் கொண்டிருக்கவே மாட்டார்கள். அதேசமயம் இசுலாமியர்கள் செய்யும் தவறுகளை வைத்து நாம் இசுலாத்தினை எடைபோடுவது மாபெரும் அபத்தமான பார்வை. எப்படி கம்யூனிஸ்டுகள் செய்யும் பிழைக்காக கம்யூனிஸத்தையோ, பெரியாரின் பெயரால் அரசியல் செய்பவர்களின் பிழையால் பெரியாரையோ குறை சொல்லிட இயலாதோ அதுபோலத்தான் இது. இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டுமானால் மனிதர்கள் செய்யும் பிழைகளை வைத்து கொள்கையை நாம் எடைபோடக் கூடாது. கொள்கையின் அடிப்படையில் அப்படி உள்ளதா என்ப‌தைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இசுலாமியர்களென்றாலே தீவிரவாதிகளென உலக அரங்கில் ஒரு பொதுபுத்தியை அமெரிக்காவும், இசுரேலும் விதைத்து வைத்திருக்கும் அதேவேளை இந்தியாவில் இந்துத்துவ பாசிச சக்திகள், தீவிரவாதிகள் என்கிற தோற்றத்தோடு, இசுலாமியர்கள் யாவரும் அரபு தேசத்தவர்கள் என்கிற ஒரு மாயையையும் இங்குள்ள பிற சமூக மக்களிடம் தூவி வளரவிட்டுள்ளனர் என்பது கண்கூடான ஒன்று. இப்படியான அபாண்டங்களை, விசமங்களை பொதுச் சமூகத்தில் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டு இசுலாமியர்களை தீவிரவாதிகளென பார்க்கும் பார்வையை எதிர்த்து இசுலாமியர்கள் முன்வைப்பது, “அதெப்படி தீவிரவாதம் தனிச் சொத்தாகுமா? இந்துக்களில் தீவிரவாதிகளில்லையா? சீக்கியர்களிலில்லையா, பெளத்தியர்களில்லையா?” என தங்களது வலி கலந்த உள்ளத்துக் குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் அவைகள் பொதுச் சமூகத்தின் செவிப்பறைகளில் சென்று சேர்வதற்க்கான எந்த வழிமுறைகளுமற்று, அவர்களுக்குள்ளாகவே புழுங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவலச் சூழலில்தான் இசுலாமியர்கள் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

இதுவரையில் சொல்லப்பட்டவையாவும், பொதுச் சமூகத்தின் மீதான பெரும்பான்மை விமர்சனங்களேயாகும். ஆனால் இந்தக் கட்டுரையின் மையம் இசுலாமியர்களின் மூர்க்கத்தனங்களுக்கான விமர்சனமேயாகும்.

‘இசுலாமியர்கள் தீவிரவாதிகளென ஏற்போமோ?’ என்பதனை இசுலாமியர்கள் ஒப்புக் கொள்ளவே முடியாது. ஏனெனில் உண்மை அப்படியாக இல்லை என்பதுதான் யதார்த்தம். ஆக இசுலாமியர்களில் யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்த இசுலாமியர்களையும் தீவிரவாதிகளென பிறர் நம்மை நோக்கி சொல்லுகிறபோது நம்மால் ஜீரணித்துக் கொள்ள இயலாமல், அது தவறான பார்வையென வாய்கிழிய கூறிக் கொண்டே, அதே போலான தவறுகளை இசுலாமியர்களே செய்து கொண்டிருப்பதுதான் துரதிர்ஷ்டவசமானது.

அகதிகளாக பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்களில் சிறுபகுதியினரை, பாலஸ்தீன மக்கள் அரவணைத்து அபயம் அளித்தனர். காலப் போக்கில், அந்த மண்ணின் மைந்தர்களையே விரட்டியடித்து, பாலஸ்தீனத்தை இசுரேலென மாற்றி, மாபெரும் துரோகச் செயலை செய்தும், அந்த மண்ணின் மைந்தர்களை அந்த மண்ணிலேயே அகதிகளாக அல்லல்பட வைத்தும், அடித்து விரட்டியும், குண்டு மழை எய்தி பிஞ்சு பாலஸ்தீனர்களைக் கூட கொன்று குவித்து காடுமிராண்டித்தனம் செய்கிறார்கள் யூதர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களின் இந்த ஈனத்தனமான, கொடுஞ் செயல்களையும், இசுரேல் எனும் திருட்டு நாட்டையும் மனிதநேயம் உள்ள எவரும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

பாலஸ்தீன மக்களை இத்துணை கொடுமைப்படுத்தும் இசுரேலிய யூதர்களை மட்டுமே பார்த்து, சபித்துக் கொண்டிருக்கும் இசுலாமியர்கள், இசுரேல் தவிர்த்து வாழும் யூதர்கள் அல்லது யூதர்களிலேயே சிலர் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதையும், இசுரேலிய யூதர்கள் செய்யும் காட்டுமிராண்டித்தனங்களை ஏற்றுக் கொள்ளாத யூதர்களை பார்க்கத் தவறுவதன் விளைவு, பொத்தாம் பொதுவாய் யூதர்கள் யாவரையும் காட்டு மிராண்டிகளென, மனிதாபிமானமற்றவர்களென குத்திக் குதறுகிறார்கள்.

“இந்த யூதர்களை நான் ஏன் கொன்றேன் என்பதனை ஒரு நாள் நீங்கள் உணர்வீர்கள். அப்போது யூதர்கள் கொல்லப்பட்ட வேண்டியவர்களே என்று நீங்களே சொல்வீர்கள்” என்று மனித வடிவில் பிறந்து, தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு இறந்து போன கொடியன் ஹிட்லர் சொன்ன வார்த்தைகளை, இசுலாமிய இளைஞர்கள் சமூக வலைத் தளங்களில் பதிவிடுவதைப் பார்க்கிறபோது, அவ்வளவு எரிச்சல்களை மனது அடைந்துவிடுகிறது. ஒரு இனத்தை அழித்து அதன் மூலம் தனது நாற்காலியை அமைத்துக் கொண்ட ஹிட்லர் தனது தவறை மறைக்க, தான் செய்தது சரியென வாதிட இப்படியொரு வாசகத்தினை சொல்லிச் சென்றுள்ளான். சரி அந்த நேரத்தில் யூதர்களில் சிலர் ஏதேனும் தவறுகளில் ஈடுபட்டிருக்கலாம், அதற்காக குறிப்பிட்ட, தவறு செய்தவர்களைத்தான் தண்டித்திருக்க வேண்டுமே ஒழிய ஒரு இனத்தையே அழிக்கத் துடித்திருப்பதன் பின்னணியில் எவ்வளவோ குருதித் தாகம் மறைந்துள்ளது.

பாலஸ்தீனத்தில் யூதர்கள் செய்யும் அட்டகாசங்களை அம்பலப்படுத்துகிறோம் என்ற பேரில், இசுலாமியர்கள் இன்று ஹிட்லர் போன்ற கொடியவ‌ர்களின் செயல்களை நியாயப்படுத்திக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு அப்பட்டமான, சுயநலப் போக்கான பார்வை. நம்மை பிறர் தீவிரவாதியென பொது அடையாளமிடும்போது கொதிக்கும் நாம், யூதர்களில் சிலர் (பெரும்பாலானோராகக் கூட இருக்கட்டும்) செய்யும் செயல்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த யூத இனத்தையும் கொல்ல வேண்டும், அழிக்க வேண்டும் என்று உணர்ச்சிவயப்படுவதுதான் நமது அறமா?

இந்துத்துவாக்கள் செய்யும் தீவிரவாதங்களுக்காக, இசுலாமிய இன அழிப்பு செயல்களுக்காக, முஸ்லீம்களின் வாழ்வாதரங்களை முடக்கும் செயல்களுக்காக நாம் ஒட்டு மொத்த இந்துக்களையும் நொந்து கொள்ளாமல், இந்து வேறு இந்துத்துவம் வேறு என்பதனை அறிந்து செயல்படுகிறோமே, இதுபோலவே, சிலுவைப் போர்களில் இசுலாமியர்களிடம் தொடர்ச்சியாகத் தோற்றுப் போய் பின்னர் பிரித்தாளுவதில்தான் இசுலாமியர்களை கருவறுக்க முடியும் என திட்டம் தீட்டி, அதெற்கென கருத்தியல் அமைத்து செயல்படும் “சியோனிசவாதிகளுக்கும்” சாமானிய யூதர்களுக்குமான வித்தியாசங்களை நாம் என்று உணரப் போகிறோம்?

எதிர்க்கப்பட வேண்டியது பாசிசவாதிகளும், சியோனிசவாதிகளுமா இல்லை இந்துக்களும், யூதர்களுமா என்கிற கேள்விக்கான தெளிவுகளை நாம் என்று பெறப் போகிறோம்?

சியோனிசவாதிகளின் செயல்களுக்காய் ஒட்டுமொத்த யூதர்களையும் எதிர்ப்பது சரியானதா இல்லை, அந்த யூதர்களிலேயே இசுரேலை எதிர்த்து பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் மனிதர்களை அரவணைத்து பெரும்பான்மை ஆதரவைத் தகவமைத்து, எதிரியை சிறு குழுவாக்கப் போகிறோமோ?

இதேபோலத்தான் நாம் எல்லா சமூகத்தினரையும் அணுக வேண்டியுள்ளது. தலித்துகளில் யாரோ சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். அதற்காய் தலித்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று பொதுக் கட்டமைப்பை சொல்லிவிடக் கூடாது. கடந்த ஆகத்து 17-ல் சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கல்வி உரிமை மாநாட்டிற்கு அரசு எவ்வளவோ நெருக்கடிகளையும், தடைகளையும் போட்டது. அத்தனை அரசு வன்மங்களையும் மிக அழகாக அறிவு ரீதியாக எதிர்கொண்டு, மாநாட்டை அமைதியாக நடத்திக் காட்டிய கட்டுக் கோப்பான தலித்துக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

காஸா பகுதியினை சல்லடையாக குண்டுகளால் துளைத்து எடுக்கும் சியோனிச யூதர்களின் கொடுஞ்செயல்களை அனுமதிக்க மாட்டோமென அமெரிக்க வீதிகளில் அங்கு வாழும் யூதர்கள் பேரணி சென்றார்கள்.

யூதர்கள் விடயத்திலும் சரி, இந்துக்கள் விடயத்திலும் சரி ஒரு தவறினைச் செய்யும் இசுலாமியர்கள், ஈழ விடயத்திலும் இதே ஒன்றைத்தான் செய்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் மசூதியை இடிக்கவில்லையென்றோ, அங்குள்ள இசுலாமியர்களை வெளியேற்றவில்லை என்றோ யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் அது விடுதலைப் புலிகளின் தவறுதானே தவிர ஒட்டுமொத்த தமிழினத்தின் தவறில்லை என்கிற புரிதலில் இருந்தும் இசுலாமியர்கள் தவறிச் சென்றுவிட்டனர்.

தவறு என்பது இயல்பு, எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் ஒரே தவறை மீண்டும், மீண்டும் செய்வது இசுலாமியர்களுக்கே உண்டான சாபக்கேடு. வரலாற்றில் பாடம்பெற வேண்டுமே தவிர, மீண்டும் மீண்டும் வரலாற்றுப் பிழைகளை செய்து கொண்டிருக்கக் கூடாது.

நம்மை நோக்கி பொதுச் சமூகம் ஒரு குற்றத்தை வைக்கின்றபோது, அது தவறு என்பதனை அறிவுப் பூர்வமாக விளக்கத் தெரியாமல், ஆத்திரம் பொங்க குரலெழுப்புவதிலேயே நம்மை புரிந்து கொண்ட சிலரையும், நம்மீது தவறான சித்திரத்தை வரைய வைத்துவிடுகின்றோம்.

ஆர்.எஸ்.எஸ் போன்ற மனித விரோதச் சக்திகள் செய்யும் தவறுகளை, தீவிரவாதத் தனங்களை சுட்டும் நாம், அதேவேளை நம் சமூகத்தில் சில இளையோர்கள், சில தான்தோன்றித் தலைவர்களின் தவறான வழிகாட்டுதல்களால் விரும்பத்தகாத‌ தவறுகளை செய்கிறபோது அதனை வெளிப்படையாகவே கண்டிப்பவர்களாக இருக்க வேண்டும். ஆனால் நிலை என்னவாக உள்ளது? அப்படியானவர்களை மலர்மாலை அணிவித்து வரவேற்பவர்களாக இருந்து கொண்டுள்ளோம், வெகு சிலரைத் தவிர.

நம்மில் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். அது மாதிரியான செயல்கள் பாசிஸ்டுகளின் செயல்களுக்கான எதிர்வினைகள் என்றபோதும், தவறு தவறுதான் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அதேசமயம் நம்மில் யாரோ செய்யும் தவறுகளுக்காக பொத்தாம் பொதுவாக ‘இசுலாமியத் தீவிரவாதம்’ என்கிற சொல்லை ஏற்றுக் கொள்ள நம்மால் முடியவே முடியாது எனும் நம்முடைய நிலையிலிருந்துதான் நாம் பிற சமூகத்தில் உள்ளவர்கள் செய்யும் குற்றச் செயல்களை பார்க்க வேண்டும். மாறாக, நமக்கென்று வந்தால் இரத்தம் என்றும், அதுவே பிறருக்கு வந்தால் தக்காளிச் சட்டினி என்றும் சொல்வோமேயானால் நாம் இசுலாமியர்கள் என்று மட்டுமல்ல மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூட தகுதியற்றவர்கள். தவறுகளை ஒப்புக் கொள்கிற மனப்பாங்கு இன்று இசுலாமியர்களுக்கு அதிகத் தேவையாக உள்ளது. வரலாற்றினைப் படித்து சுயபரிசோதனை செய்து கொண்டு, தவறுகளை களைந்து, பார்வைகளைச் சரி செய்து இனியேனும் களமாடுவோமா?

- பழனி ஷஹான்

Pin It