7 தமிழர் விடுதலை - நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி - இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு
உச்சநீதிமன்றம் அண்மையில் வெளியிட்டுள்ள இரண்டு தீர்ப்புகளும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும்.
முதலில் 7 தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் குறிப்பிட வேண்டும். இராஜீவ் கொலையில் நேரடி தொடர்பில்லாத மறைமுக உதவி செய்ததார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் என்ற ஏழு தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்கள்.
இதில் 3 பேர் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக தண்டனைக் குறைப்புக்கு உள்ளானோர். இப்போது அனைவருமே தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள். சிறைவாசிகளை தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்யும் உரிமையை அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு 161ஆவது விதியின் கீழ் வழங்கியுள்ளது. இவர்கள் சி.பி.அய். என்ற மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உள்ளானவர்கள் என்பதால் மாநில அரசு இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய காங்கிரஸ் ஆட்சி கூறி வந்தது.
மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியதோடு அவர்களை விடுதலை செய்ய மாநில அரசு விரும்பினால், அதன்படி முடிவெடுக்கலாம் என்றும் கூறியது. உடனடியாக அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அமைச்சரவையைக் கூட்டி , 7 தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார்.
அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி, தமிழக அரசு முடிவை எதிர்த்து ஒரே நாளில் உச்சநீதிமன்றம் போய் தமிழக அரசுக்கு உரிமையில்லை என்று கூறி தடை வாங்கியது. பிறகு உச்சநீதிமன்ற அமர்வு இது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசு புலனாய்வு செய்த வழக்கில் விடுதலை செய்யும் உரிமை மத்திய அரசுக்கே உண்டு என்று கூறியதோடு, குறிப்பாக இந்த 7 தமிழர் விடுதலை குறித்து வேறு ஒரு அமர்வு விசாரிக்கலாம் என்று கூறி விட்டது.
இதற்காக நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு நியமிக்கப்பட்டது. அது தனது தீர்ப்பில் மாநில அரசு இந்த 7 பேர் விடுதலையை மாநில அரசுக்குரிய 161ஆவது பிரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்யத் தடையில்லை என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை 7 தமிழர் விடுதலைக்கு பரிந்துரைத்து, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்று ஏற்கனவே பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும் ஆளுநர் அதைப் பற்றிக் கவலைப் படாமல் மத்திய அரசின் உத்தரவுப்படி கோப்பைக் கிடப்பில் போட்டுவிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. இப்போது கடந்த மே 9, 2019 அன்று 7 தமிழர் விடுதலைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைப்பதாகக் கூறியபோது பேரறிவாளன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சங்கர சுப்பிரமணியன், பிரபு இராமசுப்பிரமணியன்ஆகியோர் உடனடியாகக் குறுக்கிட்டு, 2014ஆம் ஆண்டிலிருந்து வழக்கு நிலுவையில் இருப்பதால் சிறைவாசிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதை எடுத்துக்காட்டினர்.
இந்த வழக்கு மனுவில் பாதிக்கப்பட்டோரின் கருத்துகளைக் கேட்டு அவர்களும் வழக்கில் இணைக்கப்படாததால் இது சட்டப்படி செல்லத் தக்க மனுவும் அல்ல என்று கூறி வாதிட்டனர். உடனே தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சய் கன்னா ஆகியோரடங்கிய அமர்வு எதிர்ப்பு மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்ததோடு இந்த வழக்கு தொடர்பான அனைத்து சட்ட அம்சங்களையும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டதால், இனி நீதிமன்றத்திடம் கருத்து கேட்க ஏதும் இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்ததோடு, பிரச்சினை மாநில ஆளுநருக்கும் 7 சிறைவாசி களுக்கும் இடையில்தான் இருக்கிறது என்றும் கூறிவிட்டனர். இதற்குப் பிறகும் தமிழக ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பது இப்போது கேள்வியாக எழுந்து நிற்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் : கொலிஜியம் சரியான பார்வை
உச்சநீதிமன்றத்தின் மற்றொரு முக்கிய முடிவு மிகவும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகளைக் கொண்ட ஒரு குழு, நீதிபதிகளைத் தேர்வு செய்து வருகிறது. இந்தக் குழுவுக்கு கொலிஜியம் என்பது பெயர். இந்தக் ‘கொலிஜிய’ முறை நீக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் ஆட்சியே நீதிபதிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்து நீண்டகாலமாக வற்புறுத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் பார்ப்பன உயர்ஜாதிப் பார்வையில் நீதிபதிகள் நியமனம் நடக்கும்போது கொலிஜியம் முறையை எதிர்க்க வேண்டியிருக்கிறது.
நடுவண் ஆட்சி - சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகளைத் தேர்வு செய்தால் அதை ஆதரிக்கவே வேண்டும். இதுவே பல நேரங்களில் தலைக்கீழாக நடப்பதும் உண்டு. மோடி ஆட்சி பதவிக்கு வந்தவுடன் ‘கொலிஜியம்’ தேர்வு முறைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தது. அதை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. நீதிபதிகள் நியமனங்களில் மோடி ஆட்சி வழக்கம்போல் தனது ‘இந்துத்துவ’ கண்ணோட்டத்தில் செயல்பட்டு வந்ததால் பல நேரங்களில் உச்சநீதிமன்றத்துக்கும் நடுவண் அரசுக்கும் முரண்பாடுகள் வெடித்து வருகின்றன. இதற்கு பல சான்றுகளைப் பட்டியலிட முடியும்.
இப்போது உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 31 நீதிபதிகள் பதவிகளையும் முழுமையாக நிரப்பிட முடிவு செய்த கொலிஜியம், நான்கு நீதிபதிகள் பெயர்ப் பட்டியலை மத்தியக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருதா போஸ், கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். போபண்ணா ஆகிய இரு நீதிபதிகளைக்க கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பட்டியலை ஏற்க முடியாது என்று மோடி ஆட்சி திருப்பி அனுப்பிவிட்டது.
மோடி ஆட்சி இதற்குக் கூறிய காரணம் இந்த நீதிபதிகளின் மாநிலங்களைச் சார்ந்தவர்கள் ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்கள் என்பதாகும். கொலிஜியம் இதை ஏற்க மறுத்து மீண்டும் அதே இரண்டு நீதிபதிகள் பட்டியலை இவர்கள் ‘நேர்மையானவர்கள் திறமையானவர்கள்’ என்று கூறி மீண்டும் நடுவண் ஆட்சிக்கு அனுப்பி வைத்திருக் கிறது. அத்துடன் மேலும் இரண்டு கூடுதல் நீதிபதி களையும் பரிந்துரைத்துள்ளது.
ஒருவர் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியான பி.ஆர். கவாய். இவர் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சீனியாரிட்டியில் 4ஆவது இடத்தில் இருந்தாலும் இவரைத் தேர்வு செய்வதற்கான காரணம் ‘தலித்’ சமூகத்திலிருந்து வந்துள்ள நீதிபதி என்று கூறியுள்ள கொலிஜியம், உச்சநீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றதற்குப் பிறகு தலித் பிரநிதித்துவமே இல்லை என்பதை ‘கொலிஜியம்’ சுட்டிக்காட்டுகிறது. பி.ஆர். கவாய் நீதியாக்கப் பட்டால் 2025 மே 13 முதல் அவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக முடியும் என்றும் கொலிஜியம் கூறியிருக்கிறது.
பரிந்துரை செய்யப்பட்டுள்ள மற்றொரு நீதிபதி ஹிமாச்சல மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சூர்யகாந்த். இவர் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. “சீனியாரிட்டி இல்லை; மாநில பிரதிநிதித் துவம் பாதிக்கப்படுகிறது” என்பது நடுவண் ஆட்சியின் வாதமாக இருக்கும்போது அவற்றைப் புறந்தள்ளி சமூகநீதிப் பார்வையை முன்னிறுத்து கிறது கொலிஜியம் “இந்தப் பரிந்துரைகள் வழியாக அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதி மன்றங்களிலும் பட்டியல் / பழங்குடியினர் - மைனாரிட்டியினர் - பிற்படுத்தப்பட்டேர் - பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை இயன்ற அளவு தந்தாக வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்தப் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் கூறியிருக் கிறது.
மூன்று சீனியர் நீதிபதிகளைத் தாண்டி நான்காவது இடத்தில் உள்ள ஒரு தலித் நீதிபதியை உச்சநீதி மன்றத்துக்குத் தேர்வு செய்திருக்கிறோம் என்றால் மூன்று மூத்த நீதிபதிகளும் திறமையற்றவர்கள் என்பது அர்த்தமல்ல. மாறாக ‘தலித்’ பிரதிநிதித்துவம் உச்சநீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றும் கொலிஜியம் தெரிவித்துள்ள கருத்து பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும். சமூக நீதியை நுணுக்கமாக ஆராய வேண்டியதன் அவசியத்தை கொலிஜியம் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதையே இது உணர்த்துகிறது.
பதவி உயர்வில் இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு
உச்சநீதிமன்றம் கடந்த மே 10, 2019 அன்று பட்டியலின - பழங்குடியினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் சரியான சட்டமே என்ற மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பையும் வழங்கியிருக்கிறது. இந்த நோக்கத் துக்காக கருநாடக மாநில அரசு கெண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் யு.யு. லலித் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த சட்டத்தினால் ஏனைய பிரிவினரின் பணி மூப்பு அடிப்படையிலான பதவி உயர்வும் தகுதி திறமையும் பாதிக்கப்படு கிறது என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
“அரசு நிர்வாக அமைப்பில் உரிய முடிவு எடுக்கக்கூடிய இடத்தில் பட்டியல் - பழங்குடியினப் பிரிவினருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியாக வேண்டும். அது தான் சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களும் சமம் என்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் உள்ளார்ந்து பொதிந்து நிற்கும் அர்த்தம்” என்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார்.
(“. Establishing the position of the SCs and STs as worthy participants in the affairs of governance is intrinsic to an equal citizenship.”)
மேலும் அதே நீதிபதி மற்றொரு முக்கிய கருத்தையும் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
“சமமான வாய்ப்புகள் என்ற கோட்பாட்டுக்கு இடஒதுக்கீடு கொள்கை (எதிரானதோ) அல்லது அதிலிருந்து விலகி நிற்பதோ அல்ல; மாறாக, அது வலிமையான அர்த்த முள்ள உண்மையான சமத்துவத்தை அமுலாக்குவதற்கான கொள்கை. எப்படி என்றால், பிறப்பு வழியாக கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தில் அப்படி பிறப்பு வழியில் நிர்ண யிக்கப்பட்ட சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நேர் செய்வதற்கான கொள்கை தான் இட ஒதுக்கீடு.”
(“Reservation are not an exception to the rule of equality of opportunity. They are rather the true fulfilment of effective and substative equality by accounting for the structural conditions into which people are born”.)
- என்று நீதிபதி கூறியிருக்கிறார். பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி திறமை பாதிக்கப்படுகிறது என்ற வாதத்துக்கும் நீதிபதி சரியான பதிலை தீர்ப்பில் வழங்கியிருக்கிறார்.
“நிர்வாகத் திறமை என்பது ஒருவர் பணியமர்த்தப்படும்போதோ அல்லது பதவியுயர்வு பெறும் போதோ தீர்மானிக்கப்படுவது அல்ல; அவரது செயல்பாடுகளுக்குப் பிறகே முடிவு செய்யப்பட வேண்டியதாகும். ஒருவரைத் தேர்வு செய்யும் தொடக்க நிலையிலேயே அவரது நிர்வாகத் திறமையை முடிச்சுப் போட்டுவிடக் கூடாது.”
(“Administrative efficiency is an outcome of the actions taken by officials after they are appointed or promoted. It is not tied to the selection method itself.”)
- என்று அமர்வு சார்பில் தீர்ப்பு எழுதிய நீதிபதி சந்திரசூட் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஆக நீதிபதிகள் நியமனம் பதவி உயர்வில் இடஒதுக்கீடு - 7 தமிழர் விடுதலைக்கான தடை நீக்கம் - என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்புகளும் அறிவிப்புகளும் வரவேற்றுப் பாராட்டக் கூடியவை.