முதலில் ஒரு சிறு கதை.

உங்களுடைய முன்னோர்கள் ஓர் ஊரில் நன்றாக வாழ்ந்தனர். பின்பு விலங்குகளின் சாணத்தையும் மூத்திரத்தையும் உடம்பில் பூசிக்கொள்ளும் கூட்டம் அந்த ஊருக்கு வந்து வஞ்சகமாக உங்கள் முன்னோர்களை அடிமையாக்கி அதனால் நீங்கள் தற்பொழுது அதே ஊரில் ஒதுக்குப்புறத்தில் சுகாதாரமற்ற சூழலில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளீர்கள்.

brahminஉங்களைப் போன்றே உங்களின் சொந்தங்களும் தனித் தனி வீடுகளில் ஒதுக்குப்புறமாக உள்ளனர். விலங்குகளின் சாணத்தையும் மூத்திரத்தையும் உடம்பில் பூசிக்கொள்ளும் கூட்டமும் அவர்களுக்கு ஒத்து ஊதும் கூட்டமும் ஊரின் நடுவில் நல்ல பங்களா வீடுகளில் வசித்து வருகின்றனர். உங்களுக்கும் அப்படி வசதியுடன் வாழ வேண்டும் என்ற ஆசை. ஆனால் உங்களைப் பார்த்தாலே விரட்டும்படி ஊரில் உள்ளவர்களிடம் சொல்லியுள்ளது அந்தக் கூட்டம். நொந்தபடி வாழ்க்கை நடத்திய உங்களுக்கு வெளியூரில் இருந்து வந்த ஒருவர் உதவி செய்கிறார். அதனாலும் உங்களுக்கு சாதகமான சூழல் தற்செயலாக அந்த ஊரில் நடைபெற்றதாலும், ஊரிலேயே உள்ள சிலர் அந்தக் கூட்டத்தின் ஆட்டத்திற்கு முடிவு கட்டுவதாக இறங்கியதாலும் நீங்கள் படிப்படியாக உயர்வு பெற்று நீங்களும் ஊரின் நடுவே வேறு தெருவில் வீடு கட்டுகின்றீர்கள். உங்கள் பிள்ளைகள் மற்றும் உங்களின் பொருளாதாரம் அந்த ஊரின் தலைவருக்கு தேவைப்படுவதால் உங்களுக்கு மரியாதை மேலும் உயர்கிறது. ஆனாலும் இன்னும் உங்களுக்கு விலங்குகளின் சாணத்தையும் மூத்திரத்தையும் உடம்பில் பூசிக்கொள்ளும் கூட்டம் வசிக்கும் தெருவில் நுழைய உரிமை இல்லை.

நிலைமை இப்படி இருக்க திடீரென்று உங்களை வழியில் பார்க்கும் ஒருவர் தன் நண்பருக்கு அறிமுகப்படுத்துகிறார். நீங்கள் ஒதுக்குப்புறமாக வாழ வஞ்சிக்கப்பட்ட கதையை சொல்லி அவருக்கு விளக்குகின்றார். வேறு ஒன்றும் உங்களைப்பற்றி தவறாக சொல்லவில்லை.

தற்பொழுது நீங்கள் உண்மையிலேயே மனசாட்சி உள்ளவராகவும், நேர்மை உள்ள நபராகவும் இருக்கும் நிலையில் என்ன சொல்லியிருப்பீர்கள்? “ ஆம் அய்யா. நான் மோசமாக பாதிக்கப்பட்டு தற்பொழுது நல்ல நிலையில் உள்ளேன். ஆனாலும் இன்னும் எனக்கு அந்த கூட்டம் வசிக்கும் தெருவில் நுழைய உரிமை இல்லை. அதனால் தாழ்வில்லை. நானாவது தற்பொழுது ஊருக்குள் வந்து விட்டேன். இன்னும் நம் சகோதரர்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் நிலையில் உள்ளனர். நாமெல்லாம் சேர்ந்து அவர்களையும் அரவணைத்து ஊருக்குள் கொண்டு வந்து பழைய நிலைமையில் வாழ வழி செய்ய வேண்டும்" என்றுதானே சொல்லியிருப்பீர்கள்.

ஆனால் நீங்கள், “டேய் யாரைப் பார்த்து ஒதுக்குப்புறமாக வாழ்ந்தவன்னு சொல்றே? நான் யார் தெரியுமா? இந்த ஊருக்கே ராஜாடா” என வெடித்து மேற்படி சொன்னவரை ஊர் தலைவரிடத்தில் கொண்டுபோய் நிறுத்தி இவன் நான் ஒதுக்குப் புறத்தில் வாழ்ந்தவன் எனச் சொல்லி அவமானப்படுத்திவிட்டான். இவனை தண்டிக்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள்.

எனவே சொன்னவர் திகைக்கின்றார். தான் தவறு ஏதும் இழைக்கவில்லை எனக் கூறிய போதும் தலைவருக்கு உங்கள் பணம் தேவைப்படுவதால் சொன்னவரை கண்டிக்கின்றார். அதோடு விடாமல், உங்களை மேலும் திருப்திபடுத்த, நீங்கள் ஒன்றும் ஒதுக்குப்புறமாக வாழ்பவர் போன்றவர் இல்லை என்று வேறு சொல்கிறார். உங்கள் சண்டையில் அவர்கள் எங்கே வந்தார்கள் என்ற கேள்விக்கெல்லாம் இடம் இல்லை.

ஆக , நீங்கள் ஒரு மோசமான சந்தர்ப்பவாதியாகவும் கல் நெஞ்சக்காரராகவும் இருந்தால் மட்டுமே இவ்வாறு சொல்லி இருக்க வேண்டும் இல்லையா? நீங்களாவது பரவாயில்லை . அந்தத் தலைவரின் செய்கையை என்ன சொல்வது? உங்களை திருப்திப்படுத்த ஒதுக்குப்புறமாக வாழ நிர்பந்திக்கப்பட்ட அந்த ஒன்றுமறியா மக்களை அவமானப்படுத்திய செயலை என்ன சொல்வது? ஒதுக்குப் புறமாக அவர்கள் வாழ்கின்றார்களா? அல்லது அவ்வாறு வாழுமாறு வஞ்சிக்கப்பட்டார்களா? அவர்களை நல்ல முறையில் வாழ வைக்க வேண்டிய கடமை உள்ளவரே இவ்வாறு கூறினால்?

மத்திய பாடத்திட்டம் -9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்பகுதியில் நாடார்களை இழிவு படுத்திவிட்டார்கள் என அவர்கள் கூப்பாடு போட்டதும் அதற்கு செல்வி ஜெயலலிதா விளக்கம் அளித்ததும் இதே போல்தான்.

மேற்கண்ட பாடத்திட்டத்தில் தொடர்புடைய பகுதியை அப்படியே கீழே தருகிறேன்.

Caste Conflict and Dress Change

Though there were no formal sumptuary laws as in Europe, India had its own strict social codes of food and dress. The caste system clearly defined what subordinate and dominant caste Hindus should wear, eat, etc., and these codes had the force of law. Changes in clothing styles that threatened these norms therefore often created violent social reactions.

In May 1822, women of the Shanar caste were attacked by upper-caste Nairs in public places in the southern princely state of Travancore, for wearing a cloth across their upper bodies. Over subsequent decades, a violent conflict over dress codes ensued.

The Shanars (also called Nadars) were a community of toddy tappers who migrated to southern Travancore to work under Nair landlords. As they were considered a 'subordinate caste', they were prohibited from using umbrellas and wearing shoes or golden ornaments. Men and women were also expected to follow the local custom of never covering their upper bodies before the upper castes.

Under the influence of Christian missions, Shanar women converts began in the 1820s to wear tailored blouses and cloths to cover themselves like the upper castes. Soon Nairs, one of the upper castes of the region, attacked these women in public places and tore off their upper cloths. Complaints were also filed in court against this dress change, especially since Shanars were also refusing to render free labour for the upper castes.

At first, the Government of Travancore issued a proclamation in 1829 ordering Shanar women 'to abstain in future from covering the upper parts of the body.' But this did not prevent Shanar Christian women, and even Shanar Hindus, from adopting the blouse and upper cloth.

The abolition of slavery in Travancore in 1855 led to even more frustration among the upper castes who felt they were losing control. In October 1859, riots broke out as Shanar women were attacked in the marketplace and stripped of their upper cloths. Houses were looted and chapels burned. Finally, the government issued another proclamation permitting Shanar women, whether Christian or Hindu, to wear a jacket, or cover their upper bodies 'in any manner whatever, but not like the women of high caste'.

மேற்கண்ட பகுதியில் நாடார்கள் எங்கே இழிவுபடுத்தப்பட்டார்கள்? நாடார் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமையை மறுத்த திருவிதாங்கூர் அரசனும் பார்ப்பனிய சமூகமும்தான் இழிவானவர்கள்; நாடார்கள் அல்ல.

ஒருவன் தவறு செய்து பிடிபட்டுவிட்டான் என்றால் அவமானப்படவேண்டியவர் யார்? வறு செய்தவனா? அல்லது அதனால் பாதிக்கப்பட்டவனா? பிடிபட்ட திருடன் அவமானமானப்பட வேண்டுமா ? பொருளை இழந்தவன் அவமானப்பட வேண்டுமா?

இங்கு அவமானம் யாருக்கு? இழிவாக நடத்தப்பட்ட நாடார்களுக்கா? அல்லது நாடார்களை அவ்வாறு இழிவாக நடத்திய மன்னர்களுக்கும் அந்த சமுதாயத்திற்குமா?

நிச்சயமாக இழிவு நாடார்களுக்கு இல்லை. இழிவு பார்ப்பனியத்திற்கும் அதற்கு துணை போன மன்னர்களுக்கும்தான்.

அப்படியானால் நாடார்கள், அவர்களை இழிவுபடுத்திய சாதியப் படிநிலையை எதிர்க்காமல் வெறும் வரலாற்றை எதிர்ப்பதன் காரணம் என்ன? மிக எளிது. பொருளை இழந்தவன் திருடனாக மாறினால் எப்படி திருட்டை நியாயப்படுத்துவானோ அதேபோல்தான். முன்பு நாடார்களுக்கு தாங்கள் சக மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்பொழுது தாங்கள் மிதிப்பதற்கு மனிதர்கள் வேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது. இவர்களுக்குத் தேவை சாதியப் படிநிலையில் ஓர் ஏற்றம்; அவ்வளவே. மற்றபடி சாதி அப்படியே இருக்க வேண்டும். எனவேதான் ‘ஆண்ட பரம்பரைக்’ கனவு காண்கின்றார்கள்.

இந்த 'சேர , சோழ , பாண்டியர்களின் வழித் தோன்றல்’களின் பெண்களுக்குத்தான் முலை வரி விதிக்கப்பட்டது; கள் இறக்கும் வேலை இன்னபிற கடைநிலை வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டது; அனைத்திற்கும் மேலாக பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கியதும் இவர்களைத்தான். இதையெல்லாம் செய்த சாதிய சமூகம் கேலவமாகத் தெரியவில்லை இவர்களின் கண்களுக்கு. இந்த மேற்கண்ட வரலாறு 'ஆண்ட பரம்பரை' கனவுகளுக்கு இடைஞ்சலாக இருப்பதும், அதை 9-ஆம் வகுப்பு மாணவன் படிப்பதும்தான் இவர்களை எரிச்சலைடையச் செய்கிறது. எனவே தான் வரலாற்றை மறுக்க, மறைக்க முயல்கிறார்கள்.

மேலும் இந்த விஷயத்தில், மேற்கண்ட வரலாற்றை நீக்க வேண்டும் என செயலலிதா விடுத்த அறிக்கைதான் அதைவிட மோசம். முதலைமைச்சரின் அந்த அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

P.R. No. 681 Date: 16.11.2012
PRESS RELEASE

Text of the D.O. letter dated 16.11.2012 addressed by Selvi J Jayalalithaa, Hon’ble Chief Minister of Tamil Nadu to Dr. Manmohan Singh, Hon’ble Prime Minister of India is reproduced below :-

“I would like to draw your kind attention to an appeal made by the Nadar Community in Tamil Nadu to remove objectionable references in the Social Studies book prescribed for Class IX in the CBSE schools. The textbook published by the National Council of Educational Research and Training, New Delhi, in Chapter VIII deals with “Clothing: A Social History”. In this Chapter in the sub-heading “Transformation in Colonial India”, a reference is made to “Caste Conflict and Dress Change” in para 4.1 in page 168, wherein many derogatory statement have been made about the Nadar community. Contrary to the information given in the text, the Nadars are the original inhabitants of the Kanyakumari District. The Kumari District is what remains of the sunken Kumari Continent which is the cradle of Tamil Civilisation. This is corroborated by the Tholkappiam and Silappathikaram literatures. Two famous Tamil poets, namely, Tholkappiar and Athanakottu Asan were born in this district. Moreover, the said text has neglected the struggles of Aiyya Vaikundar in the “Upper Cloth Revolt” and also his social reforms. The Nadars are said to be descendants of those who ruled the Cheran, Cholan and Pandyan Kingdoms. The traditions followed by the Nelamaikkarars (Nadans) and the existence of the ruins beneath the Teri palmrya forests of Tiruchendur and the Pandyan capital city of Korkai, where the Nadar population is predominant, suggest they could very well be the heirs of the Early Pandyas. Two inscriptions at Kallidaikurichi suggest that in medieval times, the Nadars served as administrators and accountants for both the Chera and Pandya Kingdoms. Thus, the Nadar community is not a lower caste as mentioned in the CBSE book. Rather, they have been rulers of South India at one point of time. The social and economical development achieved by the Nadars over the years is commendable. Their success in the fields of education and business can be attributed to their hard work and determination. Great leaders including Shri.K.Kamaraj belonged to this community and their contribution to Society is immeasurable. Representations have been made to me by various associations belonging to the Nadar community condemning the inclusion of such objectionable references about their community. The incorrect details given in the textbook are very misleading and may leave a wrong impression in the minds of the students about the said community. May I, therefore, request you to intervene in the matter and advise the concerned Ministry to take immediate action to remove the topic “Caste Conflict and Dress Change” from Chapter VIII of the IX Std. Social Studies CBSE Text Book published by the National Council of Educational Research and Training, New Delhi”

Issued by : Director, Information & Public Relations, Chennai – 9.
Date : 16.11.2012.

செல்வி.ஜெயலலிதா தனது மேற்கண்ட அறிக்கையில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் 9-ஆம் வகுப்பு ‘சோசியல் சயன்ஸ்’ பகுதியில் ஆட்சேபத்திற்குரிய பகுதிகள் இருப்பதாகவும், அதில் நாடார் சமூகத்தைப் பற்றிய அவதூறான அறிவிக்கைகள் இருப்பதாகவும் அதை மாண்புமிகு பிரதமர் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விழைவதாகவும் தெரிவிக்கிறார்.

மேலும் மேற்கண்ட பாடப்பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு மாறாக நாடார் சமூகம் தமிழ்நாட்டின் பூர்வீகக் குடிகள் எனவும், அவர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதில் உள்ள வரலாற்று உண்மை பற்றிய கவலையை விட அந்த அறிக்கையின் மற்ற செய்திகள்தான் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளன. அவர் தனது அறிக்கையில் நாடார் சமூக மக்கள் பண்டைய தமிழ் நாட்டில் நிர்வாகிகளாகவும், கணக்காளர்களாகவும் பணிபுரிந்து இருப்பதாகவும், அவர்கள் குறித்த கல்வெட்டுச் செய்திகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டு, இவ்வாறு நாடார் சமூகம் தமிழகதிற்குப் பல்வேறு பங்களிப்பை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நமக்கு இதுவரையிலும் பெரிதாக ஆட்சேபனை இல்லை. ஆனால் இதன்பின் தான் விசயமே உள்ளது.

செயலலிதா தனது மேற்கண்ட அறிக்கையில் “எனவே நாடார் சமூகம் ஒன்றும் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளதைப்போல 'தாழ்ந்த சாதி அல்ல’ எனக் கூறியுள்ளார். மேலும் மேற்கண்ட விஷயங்களைப் படிக்கும் மாணவ சமூகத்தின் மனதில் ஒரு தவறான எண்ணம் படியும் என்பதால் அதை முற்றிலும் நீக்க வேண்டும் என கோரியுள்ளார்.

ஆக, 'தாழ்ந்த சாதி’ போன்று குறிப்பிடப்படுவதே ஆட்சேபத்திற்கு உரியது, கேவலமானது என்பதை தமிழகத்தின் முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். நாடார்களை உயர்த்த வேண்டும் என்றால் அவர்களை சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் எனப் புகழ்ந்தால் மட்டும் போதாது. அவர்கள் ஒன்றும் தாழ்ந்த சாதி அல்ல எனவும் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் விஷயம் சரியாய் சென்று சேரும்.

மேற்கண்ட பாடத் திட்டத்திலாவது “ they were considered a 'subordinate caste' என்ற வார்த்தைப் பிரயோகம் இருந்தது. ஆனால் சமூக நீதி காத்த வீராங்கனையின் அறிக்கையில் Thus, the Nadar community is not a lower caste” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்பொழுதுள்ள சாதீயப் படி நிலையில் தலித் மக்கள் கடை நிலையில் தள்ளப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர். எனவே lower caste என்ற வார்த்தை பிரயோகம் சாதீயப் படிநிலையில் கடைநிலையில் தள்ளப்பட்ட தலித் மக்களை குறிக்கும் என்பதே உண்மை.
ஆக தமிழகத்தின் முதல்வரின் அறிக்கைப்படி ‘ lower caste ’ என்பது தலித் மக்களை குறிக்கின்றது.

அரசியல் சட்டம் மற்றும் அரசின் பல திட்டங்களிலும் ‘lower caste’ என்ற வார்த்தைப் பிரயோகம் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள், பின் தங்கிய மக்கள் என்ற வார்த்தைப்பிரயோகமே இருக்கிறது. ஆனால் பார்ப்பனியத்தில் ஊறிப்போன ஜெயலலிதாவின் அறிக்கை ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களை ’கீழ் சாதி’ என்றே அழைக்கிறது. மேலும் அவர்களோடு மற்ற ஒரு சாதியை ஒப்பிடக் கூடாது என்றும் அதை நீக்க வேண்டும் என்றும் 2012 –லும் தமிழக முதல்வர் ஒருவரால் இந்த நாட்டின் பிரதமருக்கு இப்படி ஒரு கடிதத்தை எழுத முடிகின்றது. இதில் வெட்கப்பட வேண்டியது பொது மக்கள்தான். இந்த சாதிய பொது சமூகம் இன்னும் நாகரீகமற்ற கூட்டமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை மெய்ப்பிக்க இதற்கு மேல் என்ன சான்று வேண்டும்?

ஒருவனின் சாதியின்படியே அவனது தகுதியை நிலை நிறுத்தும் இந்த கேடு கெட்ட நாட்டில் சாதிப் படிநிலையின் கடைநிலையில் தள்ளப்பட்ட மக்கள் அனைத்து விதமான இன்னல்களுக்கும் மிக எளிதாக ஆளாகின்றனர்.

இந்த புவிப்பரப்பு இதுவரை கண்ட அற்புதமான மானுடவியலாளர்களில் ஒருவரும் தலைசிறந்த புரட்சியாளருமான ‘பாபா சாகேப்’ பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பங்களிப்பை மிக எளிதாக இந்த நன்றி கெட்ட சமுதாயம் புறந்தள்ளிவிட முடிகின்றது என்றால் சாதியின் பலத்திற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

ஒரு நாகரிக சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனின் சுதந்திரமும் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு தனிமனிதனின் மான அவமானங்களைக் கூட அவன் சார்ந்த சாதியே தீர்மானிக்கிறது. சாதிப் படிநிலையில் கடை நிலையில் தள்ளப்பட்ட மக்களுக்கு அவர்களின் சுதந்திரம், சுகாதாரம், விருப்பு, வெறுப்பு முதலியனவற்றை தீர்மானிக்கும் பொறுப்பை சாதி எடுத்துக்கொள்கிறது. இவை அனைவருக்கும் பொதுவானவை அல்ல; சாதிக்கு சாதி வேறுபடுகிறது. ஒரு சாதியினருக்கு அவமானகரமாக விளங்கும் ஒரு செயல் மற்ற ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது கட்டாயத் தொழிலாக திணிக்கப்படுகிறது. கவுரவம் மிக்கதாக, மாண்பு மிக்கதாக கருதப்படுவை எல்லாம் கடை நிலையில் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இல்லை. மநு தர்மமானது சட்டத்தின் மூலமே வெளிப்படையாக செயல்முறைப்படுத்தப்படுகிறது. இந்த வஞ்சிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் செய்வது எல்லாம் அசிங்கமானது; அவமானகரமானது அல்லது அவமானகரமானதும் அசிங்கமானதும் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கானது.

ஒரு நாகரிக சமுதாயம் எண்ணிப் பார்ப்பதர்க்கே அஞ்சும் ‘கையால் மலம் அள்ளும் தொழில்' இந்தப் ’புண்ணிய பூமி’யில் வெகு எளிதாக ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்த செயலானது எவ்வித குற்ற உணர்வும் இன்றி பொது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால் இச்சமூகம் எவ்வளவு கேடுகெட்ட சமூகமாக இருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த நாகரிகமில்லாத சமூகத்தில்தான் ஒரு குறிப்பிட்ட மக்களுடன் தொடர்பு கொள்வது என்பது அவமானம் என கற்பிக்கப்படுகிறது. எனவே ஒருவனை அவமானப்படுத்த வேண்டும் என்றால் அவனை ஏதாவது ஒரு விதத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் தொடர்பு படுத்திவிட்டால் போதும். வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை.

புரட்சியாளர் அம்பேத்கர் இந்த சாதியின் தோற்றத்தை விளக்கும் போது இரண்டு சொற்களை குறிப்பிடுகின்றார். “தொழிலில் பிரிவு’ ( Division of labour) மற்றும் ’தொழிலாளர்களிடையே பிரிவு’ (‘Division among labourers ‘)

ஆரியர் கூட்டம் என்பது ஒரு நாடோடிக் கூட்டம். அவர்கள் பொதுவாக அறியப்படும் முறையில் (நேருக்கு நேர் ) போர் செய்வது இல்லை. இரவில் கொள்ளையடிப்பது மட்டுமே அவர்களது முறையாக இருந்தது. (’லைட்னிங் ரைட்ஸ்’) . எனவே தீயை கடவுளாகக் கருதிய கூட்டம் ஆரியர் கூட்டம். தீயைப் புகழ்ந்தும் அதை வேண்டியும் அவர்கள் யாகங்கள் வேள்விகள் நடத்தினர். ரிக் வேத்த்தில் இதற்கான குறிப்புகள் உள்ளன. இவ்வாறு கொள்ளையடிக்கும் பொழுது ஆண்கள் மட்டுமே வந்தனர். மேற்கண்டவாறு அவர்கள் ஒரு பகுதியை கைப்பற்றியவுடன் சண்டையில்
சரணடைந்தவர்கள் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டனர். சரணடையாதவர்கள் காடுகளில் சென்று தனியான வாழ்க்கை முறை ஏற்படுத்திக்கொண்டனர். சரணடைய மறுத்தவர்கள் அந்தப்பகுதிக்கு வெளியே துரத்தப்பட்டனர்.

இவ்வாறு கொள்ளையடிப்பதன் மூலம் தாங்கள் கைப்பற்றிய பகுதியை நிர்வகிப்பதில் அவர்களுக்கு சிக்கல் இருந்தது. ஏனென்றால் அவர்கள் எண்ணிக்கையில் சிறியவர்களாகவும் அவர்கள் கைப்பற்றிய பகுதி அளவில் பெரியதாகவும் இருந்தது. எனவே நிர்வாக வசதிக்காக அவர்களுக்குளாகவே அவர்கள் தங்கள் வேலையைப் பகிர்ந்து கொண்டனர். அதுவே “ தொழிலில் பிரிவு’.

அது கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டது.

புரோகித்த்தொழில் செய்தல் (இதைச் செய்தவன் பிராமணன் எனப்பட்டான்)

போர்த் தொழில் செய்தல்; கைப்பற்றிய பகுதியை தக்க வைத்தல். ( இதைச் செய்தவன் சத்திரியர் எனப்பட்டான்)

வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை தருவித்தல்(இவன் வைசியன் எனப்பட்டான்)

மேற்கண்ட மூவரும் இரு பிறப்பாளர்கள் எனப்பட்டனர். பூணூல் அணியும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உண்டு. அதிலும் கர்பகிரகத்திற்குச் செல்லும் உரிமை பார்ப்பானுக்கு மட்டுமே உண்டு. மேற்கண்டவை போக அடிமைத்தொழில் செய்யவும் உடல் உழைப்பிற்கும் ஆட்கள் தேவைப்பட்டனர். சண்டையில் சரணடைந்தவர்கள் அடிமைத் தொழில் செய்யப் பணிக்கப்பட்டனர். இவர்கள் சூத்திரர்கள் (வைப்பட்டிக்கு பிறந்தவர்கள் அல்லது வேசி மக்கள்) எனப்பட்டனர். சரணடைய மறுத்தவர்கள் மீண்டும் அப்பகுதிக்குள் சேர்க்கப்பட்டு கடை நிலைத் தொழில் செய்ய பணிக்கப்பட்டனர்.

சூத்தரனுக்கு பொருள் சேர்த்தல், சொத்துகள் வைத்திருத்தல், நகை அணிதல் போன்ற அனைத்து தனி மனித உரிமைகளும் சட்டப்படியே தடை செய்யப்பட்டன. பெண்கள் உடைமைப் பொருளாகக் கருதப்பட்டதால் அவர்களும் ஆரியர்களின் உடைமையாக ஆக்கப்பட்டனர். தங்களின் இன விருத்திக்கு கைப்பற்றிய பகுதியில் உள்ள பெண்களை பயன்படுத்திய ஆரியர் கூட்டம், அப்பகுதி ஆண்களை சூத்திரர்கள் (வைப்பாட்டியின் குழந்தைகள்) என்றது. எனவே தான் பார்ப்பன சாதியில் பெண்களின் நிலை சூத்திரர்களுக்கு ஒப்பாக இருந்தது. பெண்களின் அடிமை நிலை அப்பொழுது தொடங்கியது. பெண்களின் பாலியல் சுதந்திரம் முதலில் மறுக்கப்பட்டது. இனத்தூய்மைக்கு பெண்களின் சுதந்திரம் முதலில் பலியிடப்பட்டது. பெண்கள் தன் இனத்தை உற்பத்தி செய்யும் வெறும் கருவிகளாகவே பார்க்கப்பட்டனர். இனத்தூய்மை பெரிதும் மதிக்கப்பட்டது. பிற்காலத்தில் அடிமைத்தொழில் செய்த சூத்திரர்களிடம் பிரிவினை உண்டாகியது. இது ’தொழிலாளர்களிடையே பிரிவு’ எனப்பட்டது.

தொழிலின் அடிப்படையில் பிரிந்த ஆரியர்களில் பிராமணர்களுக்கும் , ஷத்திரியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஷத்திரியர்கள் வீழ்த்தப்பட்டனர். உபநயனம் செய்யும் உரிமை பார்ப்பனர்களுக்கே இருந்த்து. எனவே அவர்கள் மற்ற இரு பிரிவுகளுக்கு உபநயனம் செய்ய மறுத்தனர். பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை கைவிடத் தயாராக இல்லாததால் அவர்கள் ’இனத்தூய்மை’க்காக கதவடைப்பு கொள்கையை கடைப்பிடிக்கத் தொடங்கினர். அகமண முறை கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட்டது. இவ்வாறு ஒரு சாரார் தங்களுக்கு உள்ளாக கதவை அடைத்துக் கொண்டனர். பிறர் அவர்களுக்கு எதிராக கதவு அடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டனர். பார்ப்பனர்களுக்கு இருந்த அதிகாரம், செல்வாக்கு போன்றவை மற்ற சாதிகளை அவர்கள் போல செய்யத் தூண்டியது. இந்த ‘போலச் செய்தல்’ மூலம் தனி தனிச் சாதிகளும் கதவடைப்பு கொள்கையை பின்பற்றத் தொடங்கின.

சூத்திரர்கள் செய்த தொழிலுக்கு ஏற்ப பிரிவுகளும் பின்னர் அவற்றில் வேறு வேறு உட்பிரிவுகளும் தோன்றின. இவை எல்லாம் முதலில் செய்யும் தொழிலின் அடிப்படையில் தோன்றினாலும், பின்னர் ஏற்பட்ட கதவடைப்பு கொள்கையின் விளைவால் தனித் தனிச் சாதியாக மாற்றம் பெற்றன. எனவே சாதிகள் பிறப்பின் அடிப்படையில் நிலை பெறத் தொடங்கின.

எனவே தற்பொழுது உள்ள தேவர், நாடார், வன்னியர், வெள்ளாள கவுண்டர், நாயுடு, ரெட்டி, முதலியார், நாட்டுக்கோட்டை செட்டி, பிள்ளை, கோனார் முதலியனவும் இன்ன பிற 'ஆண்ட பரம்பரை’ கனவில் உள்ள மற்ற சாதியினரும் வருணாசிரம தருமத்தின் படி கடை நிலையில் உள்ள சூத்திர (வேசி மக்கள்) சாதியினரே. இவர்கள் யாவரும் தற்பொழுதும் நடைமுறையில் உள்ள சமூகப் படிநிலையில் ஷத்திரியரோ வைசியரோ அல்ல. இவர்கள் சூத்திரர்களே. இந்த சூத்திரர்கள்தான் (வேசி மக்கள்) தற்பொழுது மீண்டும் ’கதவடைப்பு கொள்கை’ யை கையில் எடுத்துள்ளனர். தற்பொழுது நிகழும் ‘கவுரவக்’(!!!) கொலைகள் எனப்படும் இந்த கேடுகெட்ட செயல்கள் சாதி வெறியால் நிகழ்கிறது. தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டிக்கொள்ள இத்தகு இரு வழிகளை பின்பற்றுகின்றனர்.

1) மேல் சாதியினர் என நம்பப்படுபனவற்றோடு தங்களை தொடர்புபடுத்துவது . இவர்களுக்கு 'ஆண்ட பரம்பரை’ மற்றும் ‘ஷத்திரியர்’ போன்று போதை தருவது வேறு எதுவும் இல்லை. மேற்கண்ட சொற்களுடன் தங்களை தொடர்பு படுத்துதல் மற்றும் சிங்கம், புலி, சிறுத்தை இன்ன பிற கொடிய காட்டு மிருகங்களுடன் தொடர்பு படுத்துவது போன்றவற்றில் மனவியல் சுய இன்பம் பெறுகின்றனர். இவை மட்டும் இவர்களுக்கு போதுமானதாக இல்லை. மற்றொரு முறையை கையாளுகின்றனர்.

2) தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து இருந்து முழுமையாக விலகுதல். இந்த முறையில் அவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தவும் முடிகிறது, அதன் மூலம் தங்களை மேலானவர்களாக காட்டிக்கொள்ளவும் முடிகிறது.

1946 ஆம் ஆண்டு வரை ’அனுலோம’ த் திருமணம் செல்லாது. (பார்பன சாதியைச் சேர்ந்த ஆண் சூத்திரப் பெண்ணை மணப்பது). பார்ப்பனனை திருமணம் செய்து அவன் இறந்தபின் அவன் சொத்துகளுக்கு உரிமை கொண்டாடிய அவனது ’காப்பு’ சாதியை சேர்ந்த மனைவியும் அவளது வாரிசுகளும் தொடர்ந்த

Appeal No.33 of 1939
Swayampakula Subbaramayya and others.
Versus
Swayampakula Venkatasubbamma and others

என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் Mr. Justice Pandrang Row and Mr. Justice Somayya, XJ. என்ற நீதிபதிகள் தங்களது 5th February, 1941 தேதியிட்ட தீர்ப்பில் மேற்கண்ட திருமணம் சட்டப்படி செல்லாது எனவும், அவள் மனைவி அல்ல எனவும், நிரந்தர வைப்பாட்டி ( continuously held concubine ) எனவும் தீர்ப்பு அளித்தனர். வசிஸ்ட்டர் கூறுவதாக நீதிபதிகள் கீழ்க்கண்டவாறு தங்கள் தீர்ப்பில் தெரிவித்து, அதன்படியும் இன்ன பிற வேத சுலோகங்களை மேற்கோள் காட்டியும் தீர்ப்பு வழங்கினர்.

Vasishta says: “A Sudra wife is only for conjugal felicity and not for religious duties.”

வசிஸ்ட்டர் கூறுகின்றார்: ஒரு சூத்திர மனைவி தாம்பத்திய உறவிற்கு மட்டுமே; மதக் கடமைகள் செய்வதற்கு அல்ல. (Anandasrama Edition 1904, Part II, page 734).

As translated in, (Journal portion)2;

“ By the term dharmapatni the Sudra wife is excluded because of the absence of her companionship in religious duties.”

அன்ந்தாஸ்ரமா பதிப்பு 1094, பகுதி – 2 பக்கம் 134.

"தர்மபத்னி என்ற சொல்லில் இருந்து சூத்திர மனைவி விலக்கப்படுகின்றாள். ஏனெனில் அவள் மதக் கடமையாற்றுவதில் அவளுடைய பங்கு இல்லை”

"Viswarupa who is an earlier commentator than Vignaneswara also gives the same meaning to the terms “aurasa son” and ‘Dharmapatni’:

“Lawfully wedded wife-a wife of equal caste …

விக்னேஸ்வரவிற்கு மூத்த வர்ணனையாளரான விஸ்வரூபாவும் ’அசுரனின் மகன்’ மற்றும் 'தர்மபத்தினி' ஆகிய பதங்களுக்கு இதே விளக்கத்தை அளிக்கின்றார்.

“சட்டப்படியான மனைவி என்பவர்- சமமான சாதியைச் சேர்ந்த மனைவி ......"

ஆக இந்து சட்டத்தின்படி, நீதிமன்ற உத்திரவின்படி இருபிறப்பாளர்கள் (பூணூல் அணியும் உரிமை பெற்றவர்கள்) என்பது ஒரு பிரிவு, இவர்கள் தவிர மற்ற அனைவரும் அதாவது ‘சூத்திரர்கள்' என்பது ஒரு பிரிவு.

இதுதான் சட்ட நிலை. இது ஏதோ பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்காரும் உருவாக்கிய நிலை அல்ல என்பதை அறிந்துகொள்ள வேண்டும். 'சூத்திரர்’கள் என்ற பதத்தில் இருபிறப்பாளர்கள் (பூணூல் அணியும் உரிமை பெற்றவர்கள்) தவிர மற்ற அனைவரும் உள்ளடங்குவர். இதுவே தேவர், நாடார், வன்னியர், வெள்ளாள கவுண்டர், நாயுடு, ரெட்டி, முதலியார், நாட்டுக்கோட்டை செட்டி, பிள்ளை, கோனார் போன்ற சூத்திரர்களின் சட்ட ரீதியான நிலை. இவர்கள் இடைநிலை சாதி என்ற பதத்தைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். அதாவது, தற்பொழுது இரு சாதி ரீதியான அடுக்கு முறைகள் நடைமுறையில் உள்ளன.

ஒன்று மநு தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு தற்பொழுதும் நடைமுறையில் உள்ள
பிராமண
சத்திரிய
வைசிய
வேசி மக்கள்
என்ற பிரிவுகள்.

மற்றொன்று முன்னதில் உள்ள ’மேலிருந்து கீழான முறை’யை ஒழிக்க புரட்சியாளர் அம்பேத்கர் செய்த முயற்சியின் விளைவால் உருவான, இதர வகுப்பினர்---- பிற்படுத்தப்பட்டவர்- மிகவும் பிற்படுத்தப்பட்டவர்- பட்டியல் வகுப்பினர் என்ற 'கிடைமட்ட' முறை.

இதில் இரண்டாம் முறையில் நடுவில் உள்ள சூத்திரர்கள் முதல் முறையில் காணப்படும் நடுவில் உள்ளவர்களாக தங்களைத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவுதான் இந்த 'சத்திரிய' கனவுகள்; 'ஆண்ட பரம்பரை’ பித்தம் எல்லாம்.

மேற்கண்ட உண்மை நிலையை பள்ளிப் பாடத்தில் சொல்லித் தராததன் விளைவு இன்று ‘சாதி அரசியலாக’ வெட்கமின்றி உலாவுகிறது, ஆளும் கனவில்!

- செ.சரவணன்

Pin It